Published:Updated:

ராங் நம்பர்தான், ராங்கா பேசக்கூடாது!

 ராங் நம்பர்தான், ராங்கா பேசக்கூடாது!
பிரீமியம் ஸ்டோரி
News
ராங் நம்பர்தான், ராங்கா பேசக்கூடாது!

இரும்பிலே முளைத்த இதயத்தில், சிட்டிக்கும் அடித்தது சிறியதொரு ஸ்பார்க்.

கார்த்திக் டயல் செய்ததுபோல, நம் தமிழ் சினிமாவின் வேறு சில கேரக்டர்களும் அவர்களின் முன்னாள் காதலன்/காதலிக்கு டயல் செய்தால்...

போடியில் கோலமாவு விற்கும் கோமதிக்கு, இப்போது சித்தமெல்லாம் சித்தன் மயம். சேகரின் சங்கைக் கடித்துவிட்டு, பால் விளம்பரத்தில் வரும் பசுமாட்டைப் போல் பல்லைக் காட்டிக்கொண்டிருந்த சித்தனை இத்தனை நாளாக கோமதி பார்க்கவே இல்லை. இப்போது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என ராப்பகலாய் ராவியதில் சில தகவல்கள் மட்டும் கிடைத்தன. நம் பிரதமர் கைதட்டச் சொன்ன தினத்தன்று, இரண்டு கை எலும்புகளை எடுத்துத் தட்டியிருக்கிறார் நம் சித்தன். விளக்கு போடச் சொன்ன நாளன்று மறுபடியும் காட்டைக் கொளுத்தியிருக்கிறார். இப்படி அராத்து பிடித்த வேலைகளையெல்லாம் கோத்துப் பார்க்கையில், சித்தன் டிக்டாக்கில் இருப்பது உறுதியாகிவிட்டது. டிஜிட்டல் இந்தியாவாக மாறிவிட்ட நம் நாட்டில், சித்தனுக்கு ஒரு போன் நம்பர் இருக்காதா என்ன? அதைத் தேடி வாங்கி, போன் செய்தால் இருமல் மெசேஜ் முடிந்தபிறகும் `க்ர்ர்ர்’ என ஒரே சத்தம். சிக்னல் பிரச்னையாக இருக்குமென, மாடிப்படியெல்லாம் ஏறி இறங்கி, இறுதியாக டவருக்கு அடியிலேயே சென்று அமர்ந்த பின்னும் வெவ்வேறு அலைவரிசைகளில் வந்த `க்ர்ர்ர்’ மட்டும் மாறவே இல்லை. கடுப்பான கோமதி, `எனக்கு எந்த வார்த்தையும் கேக்கவே இல்ல’ எனச் சொல்ல, `நான் பூமிக்கும் சாமிக்கும் பொதுவான புள்ள’ என அங்கிட்டு இருந்து குரல் வந்திருக்கிறது. பிறகுதான், இவ்வளவு நேரமும் சித்தன் அவர் `க்ர்ர்ர்’ மொழியில் நலம் விசாரித்திருக்கிறார் என்பது மண்டையில் உதித்து, `லாக்டௌன் முடிந்தபிறகு வீட்டுக்கு வா, பலாப்பழம் சாப்பிடலாம்’ என சித்தனை அழைத்தார் கோமதி.

எத்தனையோ எதிரிகளின் குடல், கிட்னிகளைத் திருகிவிட்ட முத்துப்பாண்டியின் வர்மக்கலை விரல்கள், போனை எடுத்து டயல் செய்த எண்கள் தனலெட்சுமியுடையது. `காரப்பொரி செய்வது எப்படி’ வீடியோவை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்த தனம், கால் வந்ததும் வேண்டா வெறுப்பாக போனை எடுத்து `ஹலோ’ என காண்டாமிருகம் போல் கத்த, தனத்தின் குரலைக் கேட்டதும் `செல்லமேய்’ என அலறினார் முத்துப்பாண்டி. பயந்துபோன தனலெட்சுமி போனை கட் செய்ய விரைய, `நீ என் குழந்தைடி, என் குலசாமி போன வெச்சுடாத’ என முத்துப்பாண்டியே பேபி ஜோனுக்கு டோக்கன் போட்டார். `நீயும் என் நாலாவது குழந்தை மாதிரிதான்’ என தனமும் பதில் சொல்ல, `இனி தினமும் பேசலாம் மம்மி’ எனக் கோரிக்கை வைத்துள்ளார் முத்துப்பாண்டி.

 ராங் நம்பர்தான், ராங்கா பேசக்கூடாது!
ராங் நம்பர்தான், ராங்கா பேசக்கூடாது!

இரும்பிலே முளைத்த இதயத்தில், சிட்டிக்கும் அடித்தது சிறியதொரு ஸ்பார்க். உடனே சனாவுக்கு விர்ச்சுவல் கால் செய்தது. ஊரில் உள்ள செல்போனை எல்லாம் புள்ளினங்கால் தாத்தா பிடுங்கிக்கொண்டு போக, அதற்குப் பதில் குட்டி ரோபோவை விற்று லாபம் பார்த்தார் வசி. அதில் ஊரே இப்போது விர்ச்சுவல் கால்தான் பேசுகிறது. அடுப்பில் பாசிட்டிவ் ஆராவைப் பற்றவைத்துக் கபசுரக்குடிநீர் காய்ச்சிக்கொண்டிருந்த சனா, காலை அட்டென்ட் செய்தார். கொஞ்சம் ஸ்பீக்கரை செருமிக்கொண்டு, `ஹாய் சனா. ஐ எம் சிட்டி, ஸ்பீட் ஒன் டெராஹெட்ஸ், மெமரி ஒன் ஜிகாபைட்’ எனப் பல் இளிக்க, மறுமுனையில் `ஹாய் சிட்டி, ஐ எம் ஓமனக்குட்டி. ஸ்பீட் டு டெராஹெட்ஸ், மெமரி டு ஜிகாபைட்’ என சனா ரோபோ பதில் சொல்ல, சிட்டியின் இதயத்துக்குள் சிலிண்டர் வெடித்தது. `அடப்பாவி வசி, இதை முதலேயே செஞ்சிருந்தா, டீக்கடையைத் தீக்கடையாக்கி ஊரைப் போர்க்களமா மாற்றுனதை நிறுத்தியிருக்கலாமே. அற்ப மானிடப்பதர்களே’ என நொந்துபோய் போனை கட் செய்தது.

`ஆட்டோகிராஃப்’ செந்தில், யாருக்குக் கால் செய்வதெனத் தெரியாமல் சீட்டு குலுக்கிப்போட்டார். பிறகு, மலையாளம் டச் விட்டுப்போச்சு என `ப்ரேமம்’ படம் பார்த்துக்கொண்டிருந்தார். அநேகமாக, லத்திகாவுக்குத்தான் கால் செய்வார்போல் தெரிகிறது. அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள். ஓ இது `பாண்டவர் பூமி’ சாங்கோ, ஸாரி பாஸ், ராங் நம்பர்..!