மலையாள தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. பள்ளியில் படிக்கும்போது மோகினி ஆட்டம் மூலம் பிரபலம் ஆனவருக்கு டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. `செம்பட்டு’ என்ற சீரியலில் நடித்ததன் மூலம் டிவி நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து மலையாளிகளின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிய ஆர்யா பார்வதி, மேடை, கலை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார். ஆர்யா பார்வதி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தன் தாயின் வயிற்றில் சாய்ந்தபடி ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை ஆர்யா பார்வதி, ``எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வரப்போகிறார். என் தாய் கர்ப்பமாக இருக்கிறார். 23 வயதுக்குப் பிறகு பெரிய அக்காவாக ஆகப்போகிறேன். அக்கா மட்டும் அல்ல, அம்மா ரோலையும் ஏற்றெடுக்கத் தயாராகிவிட்டேன். சீக்கிரம் வா என் குட்டி குழந்தையே" எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பல சீரியல் நடிகைகளும், நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்திப் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
நடிகை ஆர்யா பார்வதியின் தாய் தீப்தி சங்கர், 47 வயது ஆன நிலையில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். கர்ப்பமாக இருப்பதை தன்னிடம் கூற தன் அம்மாவும், அப்பாவும் ஆரம்பத்தில் தயங்கியதாகவும், கர்ப்பத்தை மறைக்க முடியாது என்பதால் தன்னிடம் தயக்கத்துடன் கூறியதாகவும் ஆர்யா பார்வதி தெரிவித்திருந்தார்.
மேலும், ’வாழ்வின் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளேன். இதற்காக வெட்கப்படத் தேவையில்லை என்பதை உணர்ந்து புதிய உறவை வரவேற்கத் தயாராகிவிட்டேன்’ எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதி தனக்கு தங்கை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் நடிகை ஆர்யா பார்வதி. ``எனக்கு தங்கை பிறந்துள்ளாள், 23 வயதில் நான் அக்கா ஆகியுள்ளேன். தாயும் சேயும் நலம்" எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன் தங்கை குறித்து அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவுகளைப் போட்டு வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் நடிகை ஆர்யா பார்வதி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "அம்மாவின் கர்ப்பம் குறித்து நான் அறிவித்த பிறகும், குழந்தை பிறந்த பிறகும் பலரும் பாசிட்டிவ்வான மெசேஜ்கள் அனுப்புகிறீர்கள். அனைவருக்கும் நன்றி.

நீங்கள் அனுப்பிய வாழ்த்து மெசேஜ்களை நான் என் அம்மாவிடமும் அப்பாவிடமும் காட்டுவேன். என் தங்கைக்குப் படிக்கத் தெரிந்தால், அந்த மெசேஜ்களைக் கண்டு அவளும் மகிழ்ச்சி அடைவாள். தங்கை சற்று வளர்ந்த பிறகு அவளது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்கிறேன். இப்போது போட்டோ எடுக்கும் அளவுக்கு நேரம் வரவில்லை. `மை லிட்டில் மீ’ என்ற இன்ஸ்டாகிராம் பேஜில் இருந்து என் தங்கைக்கு ஒரு கிஃப்ட் வந்துள்ளது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.