தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது நினைவிருக்கலாம். முரளி ராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. அரசியல் கட்சிகள் சந்திக்கும் பொதுத் தேர்தல் அளவுக்கு இந்தத் தேர்தலிலும் பணம் விளையாடியதாகப் பேச்சுகள் அடிபட்டன.
கடைசியில் முரளி தலைமையிலான அணி வெற்றியும் பெற்று விட்டது.முரளி தலைவராகவும் துணைத் தலைவர்களாக LYCA தமிழ்க்குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளராக ராதாகிருஷ்ணன், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.செயற்குழுவுக்கு மொத்தம் 26 உறுப்பினர்கள். இந்தப் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் மன்னன் தலைமையிலான அணியில் போட்டியிட்ட நடிகை தேவயாணி அதிகபட்சமாக 642 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இவர் தவிர சக்தி சிதம்பரம், அழகன் தமிழ்மணி, பிரவீன்காந்தி, சித்ரா லட்சுமணன், பி.டி.செல்வக்குமார் உள்ளிட்ட மேலும் சிலர் தேர்வானார்கள்.

தலைவர், செயலாளர், பொருளாளர் அடங்கிய முக்கியப் பதவிகள் அனைத்தையும் முரளி தலைமையிலான அணி பிடித்து விட்ட நிலையில், செயற்குழுவுக்கு எதிரணியிலிருந்து தேர்வான தேவயாணி வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற வரவில்லை. தேர்தல் முடிந்ததும் கூட்டப்பட்ட முதல் செயற்குழுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவரிடமே கேட்கலாமென தொடர்பு கொண்டோம்.
''இதுக்கு முன்னாடி கூட நான் கேயார் சார் அணி சார்பா போட்டியிட்டு ஜெயிச்சிருக்கேன். அப்பெல்லாம் ஜெயிச்ச பின்னாடி சர்டிபிகேட்னு ஒண்ணு தந்த மாதிரி ஞாபகமில்லை. இந்த முறை இந்தத் தேர்தலுக்குன்னே சில நாட்களை ஒதுக்கி வச்சிருந்தேன்.
கமிட்டி உறுப்பினர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்னைக்கு ஏற்கெனவே கமிட் ஆகியிருந்த ஷூட்டிங் இருந்தது. அதனால அதைக் கேன்சல் செய்ய முடியலை. அதுவும் போக, ரிசல்ட் சொல்லப் போறாங்க, அவ்ளோதானே, ஃபோன்ல கேட்டுக்கலாம்னு நினைச்சேன். ஷூட்டிங்கும் அவுட்டோர்ல அதாவது ரொம்ப தூரத்துல நடந்தது.

அதனாலதான் ஜெயிச்சதா அறிவிக்கப்பட்ட பிறகும் கூட அந்த இடத்துக்கு என்னால உடனே கிளம்பி வரமுடியலை. சர்டிஃபிகேட் தர்றாங்கன்னு கேள்விப்பட்டதும், என் சார்பா பிரவீன்காந்தி அதை வாங்கினார்.
அதேபோல தேர்தல் முடிஞ்ச உடனேயே செயற்குழுக் கூட்டம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை. பொதுவா செயற்குழு கூட்டம்னு நடந்தா உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தகவல் தந்து நேர அவகாசம் தந்துதான் நடத்துவாங்க.
இந்தக் கூட்டம் பத்தி எனக்கு அப்படி எந்தவொரு தகவலும் வரலை. அதனால என்னால் கலந்து கொள்ள முடியலை. இனி நடக்கிற கூட்டங்களுக்காச்சும் முன்கூட்டியே தகவல் தந்து நடத்துவாங்கனு நம்பறேன்.
மத்தபடி எதிரணிங்கிற பேச்செல்லாம் தேர்தல் முடிவு வந்ததோடு முடிஞ்சு போச்சு. எந்த அணின்னாலும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்யணும்கிறதுதானே பொதுவான நோக்கமா இருக்க முடியும்? அதனால இனி ஒரே குடும்பமா இருந்து சங்கம் செயல்படும்னு நான் நம்பறேன். நல்லதையே நினைப்போமே'' என்றவரிடம்,
`உங்களுக்குதான் அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறதே' என்றோம்.
``அது என்னுடைய முப்பது வருஷ அனுபவத்துல சக தயாரிப்பாளர்கள் என் மீது வச்சிருந்த நம்பிக்கை ப்ளஸ் அன்பின் வெளிப்பாடு. அந்த அன்புதான் ஓட்டாக கிடைச்சிருக்கு. இன்னொரு விஷயம் சொல்லட்டுமா எனக்குக் கிடைச்சதெல்லாம் ஜென்யூன் அதாவது நேர்மையான வழியில் கிடைச்ச ஓட்டுங்க'' எனச் சிரிக்கிறார்.