சினிமாவைப் பொறுத்தவரை எடுத்த மாத்திரத்தில் வெற்றியை அடைந்து விட முடியாது. அதற்காக அதிகம் போராட வேண்டி இருக்கும். கூட்டத்தில் ஒருவராக, நூறு பேரில் ஒருவராக, பத்து பேரில் ஒருவராக எனப் பல கட்டங்களையும், போட்டிகளையும் மனம் தளராமல் தாண்டி வருபவர்களுக்கே வெற்றி கிடைக்கும்.

அப்படி, நியூஸ் ரீடர், தொகுப்பாளராகத் தன் பயணத்தை ஆரம்பித்து, `கல்யாணம் முதல் காதல் வரை' என்ற சீரியலில் அறிமுகமாகி, பின்னர் ’மேயாத மான்’, ’மான்ஸ்டர்’, ’கடைக்குட்டி சிங்கம்’, ’திருச்சிற்றம்பலம்’ எனப் பல படங்களில் நடித்து திரைத்துறையில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரியா பவானிசங்கர்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை பிரியா பவானிசங்கர் பேட்டி காணும் பழைய வீடியோவை யாரோ ஒருவர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த பிரியா பவானிசங்கர், தான் எதிர்கொண்ட பிரச்னைகளில் இருந்து மக்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக நான்கு விஷயங்களைக் கூறி, இந்தக் வீடியோவை மீண்டும் வெளிக்கொண்டு வந்தவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
அதில், ``நான் மிகவும் சுவாரசியமான பயணத்தை மேற்கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. சிலர் உங்களின் தோற்றம் மற்றும் உடலமைப்பை வைத்து காயப்படுத்தலாம். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்கள் வரையறுக்க அனுமதிக்காதீர்கள்.
அழகுக்கு என எந்த வரையறையும் இல்லை. ஒரு நடிகர் தன்னுடைய ஸ்கின் கேர், வாழ்க்கை முறைக்காக அதிகம் செலவு செய்கிறார். இதனை கல்லூரி பயிலும் பெண்ணால் செய்ய முடியாது. இந்த வித்தியாசத்தை நீங்கள் இவ்வீடியோவில் பார்க்க முடியும். எனவே உங்களுக்கு முகத்தில் கருமை ஏற்பட்டாலும் (tan), உங்களுக்குச் சிறந்த சருமம் இல்லை, சிறந்த வடிவம் இல்லை என்றாலும் பரவாயில்லை.
இன்ஸ்டாகிராம் படங்களைப் பார்த்து மயங்காதீர்கள். இன்று என்னை அலங்கரிக்க 10 பேர் கொண்ட குழு உள்ளது. உங்கள் வாழ்க்கையை முழுமையாக, வீடியோவில் உள்ள பெண்ணைப் போல வாழுங்கள்.
’காசு வந்தா காக்கா கூட கலராகிடும்’ என்று சிலர் சொல்வார்கள். காசு தானாக தேடி வீட்டுக்கு வராது. நீங்கள் உலகத்துடன் போராடி நீங்கள் விரும்புவதைப் பெற வேண்டும். நீங்கள் அதைப் பெறும்போது, அதை வைத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கிறீர்கள். இதில், கலர் ஆக வேண்டும் என்று கட்டாயம் எல்லாம் இல்லை.
அன்று என்னை எப்படி பார்த்தீர்களோ அப்படியே தான் இப்பொழுதும் பார்க்கிறீர்கள், ஐ லவ் யூ @rajvel.rs...
சோ, பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ், இது போன்ற நபரைக் கண்டால், அந்த நபரை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்’’ என ஹார்ட் எமோஜியுடன் முடித்துள்ளார்.
பிரியா பவானிசங்கரின் இந்தப் பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்ற நிலையில் வைரலாகி வருகிறது.