சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!

இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!

இதுதவிர ஈஸி சமையல் வீடியோக்கள், ஒரேநாளில் கார்-பைக் ஓட்டுவது எப்படி?

ப்பல்லாம் ஈமு கோழி, எம்.எல்.எம் கம்பெனி மாதிரி யாரைப் பார்த்தாலும் ‘யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறேன், ப்ராங்க் பண்ணுறேன்’னு தினுசா திரியிறாங்க. யூடியூபை வெச்சு நம்ம பசங்க பண்ற அட்ராசிட்டிகளைப் பார்ப்போமா?

ப்ராங்க் பக்கீஸ்:

ப்பாவி ஆடு ஒன்றை வெச்சு செய்யும் ப்ராங்க் ஷோக்களை மேற்கத்திய நாடுகளிலிருந்து காப்பியடிப்பதுகூடப் பரவாயில்லை. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ப்ராங்க் என்ற பேரில் பண்ணுவதெல்லாம் ‘யார்டா நீங்க’ ரகம்! அதிலும் ஊரடங்கு காலத்தில் வேலை போய் சம்பளம் போய், மரியாதை போய், ரோட்டில் நடந்துகொண்டிருப்பவரிடம் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படித்துறை பாண்டி கணக்காக டோக்கன் போட்டுப் பணம் கேட்டு, அவர்கள் அழாத குறையாக ரோட்டில் உட்கார்ந்து புலம்புவதைப் பார்த்து வட்டியெல்லாம் கேட்டு டெர்ரர் கூட்டுகிறார்கள்.‘என்னணே நீ... இப்டியாண்ணே ஏமாறுவே... அட போண்ணே!’ என்று ஆறுதல் சொல்லி ‘ஃபன் பண்றோம்’ என கேமரா முன்னால் அவரையே சொல்ல வைக்கிறார்கள். அவரிடம் இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணச் சொல்லாதது மட்டும்தான் ஆறுதல். நல்லா பண்றீங்கய்யா ஃபன்னு!

இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!

இப்ப அதில் அடுத்த லெவலுக்கே போய்ட்டாங்க சிலர். டாய்லெட்டுக்குள்ளே போய் டார்ச்சர் கொடுப்பது, மெடிக்கல் ஷாப்பில் வயிற்றுவலியோடு நிற்பவரை வெறுப்பேற்றுவது என எல்லை மீறுகிறார்கள். ‘Be my valentine’ என ஓப்பனாக லவ் ப்ரொபோஸ் செய்து நெளிய வைக்கிறார்கள். சில ப்ராங்ஸ்டர்களிடம் போன் போட்டுக் கேட்டால், “அண்ணே அம்புட்டும் ஸ்கிரிப்ட்டுணே... ஆத்தா சத்தியமா நம்புங்க... ஆனா அடி மட்டும் நிஜம்!” என ஸ்கிரிப்ட்டையே நிஜம்போலக் காட்டி அடிவாங்குவதாகச் சொல்கிறார்கள். ஆக, இவர்கள் எல்லோருக்கும் சொல்லுவதெல்லாம் ஒன்றுதான். விழிப்புணர்வுக்காகக் கண்டுபிடித்த ப்ராங்க் என்ற நல்ல விஷயத்தை இப்படி அடுத்தவர்களின் பிரைவசியை அசிங்கப்படுத்திக் கேவலப்படுத்திப் பார்க்கிறவங்களையும் பதற வைக்காதீங்கய்யா என்பதுதான்!

20ஸ் கிட்ஸ் நீங்க என்ன ப்ராங்க் பண்ணி ஏப்ரல் ஃபூல் கொண்டாடுறீங்க, ‘மேல பாரு வெள்ளைக் காக்கா, கீழ பாரு பூரான்’னு நம்ப வைக்க நாங்க பட்ட பாடு இருக்கே... ‘தில்லுவாலே புச்சுடேனுக்கா... ஓ’ மொமன்ட்தான்!

இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!

குறும்படக் குரங்குகள்:

கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போல படம் எடுக்க வேண்டும் எனக் களத்தில் குதித்திருப்பது நல்லதுதான். ஆனால் யூடியூபில் தடுக்கி விழுந்தா ‘தம்ப்’பில் தட்டுப்படும் வார்த்தை... ‘Award winning short film’!`எங்கே? யார்கிட்ட? எப்போ? எப்படி?’ன்னு யாரும் கேட்க மாட்டாங்க. அவங்களும் சொல்ல மாட்டாங்க. ஆனால், அதை நம்பி உள்ளே போனீங்கன்னா ரத்தம் கக்கிச் சாவீங்க. இப்படிப் படம் எடுக்கும் ஒரு இயக்குநரிடம் பேசிய பிறகுதான், கொரியர் அனுப்பிய பில்லையே அவார்டு வின்னிங் ஷார்ட் பிலிம் என பிலிம் காட்டுவதும் ஒரு டிரெண்ட் என்பது விளங்கியது.

இந்த மாதிரி குறும்படங்கள் மில்லியன்களில் லைக் வாங்கிக் குவிக்கின்றன. கமெண்ட்டுகளில் கெட்ட வார்த்தைகளில் படம் பற்றித் திட்டுவதைப் பார்க்க முடிந்தது. ‘சரி.. எப்படி இருக்கு’ என குந்தாங்கூறாக ஒரு ராத்திரி கண்ணுமுழிச்சி அந்தப் படங்களைப் பார்த்தா...ப்ச்ச்ச்! படத்துல அப்படி ‘கல்வி’ போதிச்ச மாதிரியெல்லாம் இல்லை. நடுவுல புள்ளி இல்லாம ‘கல்வி’யைப் போதிச்சமாதிரி இருந்துச்சு!முடியல..!

இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!

பொது அறிவு போக்ரான்ஸ்:

ஐ.ஏ.எஸ்ஸை பார்டரில் தவறவிட்ட ஆசாமி கொல வெறியோட யூடியூப் சேனல் ஆரம்பிச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றன சில ‘அகாதுகா’ பொது அறிவு சேனல்ஸ். அந்த சானல்களில் இருக்கும் சில வீடியோக்கள் , `ஐயோ பயந்து வருது’ என பீதியைக் கிளப்பு கின்றன.‘Jolochip’ எனப்படும் அதிபயங்கரமான, உலகின் மிகக் காரமான சிப்ஸை சாப்பிடுகிறார்கள். இந்த சிப்ஸ் சேலஞ்சால் உலகம் முழுவதும் சிலர் இறந்தும் போயிருக்கிறார்கள் என்பதால், அதை ‘கோஸ்ட் பெப்பர்’ என்றே அழைப்பார்கள். ‘சாவின் விளிம்புவரை உங்களுக்காக ரிஸ்க் எடுக்கிறோம். வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம்! இரண்டு நாள் மெனக்கெட்டு இந்த வெட்டி வேலையைச் செய்திருக்கிறோம். சப்ஸ்கிரைப் பண்ண மறந்துவிட வேண்டாம்’ என்ற குண்டக்க மண்டக்க டேக்லைனோடு வீடியோ ஆக்கும் கொடுமைகள் தனி!

இதுபோன்ற மூளை வீங்கி சானல்களின் முக்கிய விஷயமே கூகுளில் அதிகம் பேர் தேடிய விஷயத்தை வீடியோவாக்குவது.எப்படி டாய்லெட்டில் உட்கார வேண்டும், எப்படித் தூங்க வேண்டும் எனக்கடகடவெனப் பேசும் தமிழ் உச்சரிப்பால் பலர் இந்த வீடியோக்களுக்கு அடிக்ட் ஆகி இருக்கிறார்கள். இவர்களைப் போலவே ‘தே ஜா வூ’, ‘வூ டு’, ‘பீஸ்ட் சேலஞ்ச்’, ‘சுடுகாடு சேலஞ்ச்’ என இஷ்டத்துக்கு ஆவிகளோடு விளையாடும் வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார்கள் சில அனாமதேய சேனல்கள். டைம் டிராவல், கோஸ்ட் ஸ்டோரீஸ், இலுமினாட்டி என புருடா விட்டு லைக்ஸ் அள்ளுகிறார்கள் அந்த ஒரு டஜன் பேர்!

இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!

சினிமா இனிமா கய்ஸ்:

‘நள்ளிரவில் விஷால் செய்த காரியத்தைப் பாருங்கள்!’ என ‘தம்ப்’பில் நடிகர் விஷாலின் போட்டோவோடு வரும் ஐந்து நிமிட வீடியோவில் வெறும் வாய்ஸ் ஓவர்தான் இருக்கும். விஷால் தன் நாய்க்குட்டியோடு வாக்கிங் போன போட்டோவை வைத்துதான் அப்படி வீடியோவாக்கி யிருக்கிறார்கள். ஒற்றை போட்டோவை வைத்து விதவிதமாகப் பேசி இரண்டு லட்சம் வியூஸ் வாங்கியிருப்பார்கள். இதுபோலவே விஜய்யின் சொத்து மதிப்பு, ரஜினிகாந்த்தின் சொத்து மதிப்பு என இஷ்டத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி சில போட்டோஸ்களை மட்டுமே வைத்து வாய்ஸ் ஓவர் கொடுத்து வீடியோவாக்கியிருக்கும் இப்படிப்பட்ட சேனல் 50க்கும் அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தம்ப்பில் இவர்கள் வைக்கும் டைட்டில் எல்லாமே தாறுமாறு ரகம். ‘விஜே சித்துவின் கடைசி வீடியோ’, ‘பட்டப்பகலில் லிப்ட்டுக்குள் நடிகை செய்த காரியத்தைப் பாருங்கள்’, ‘சற்றுமுன் சீரியல் நடிகை ரோஷினி மனநிலை பாதிப்பு- படக்குழுவினர் அதிர்ச்சி!’, ‘சித்ரா ஆன்மாவோடு பேசியபோது’... இப்படி நீள்கின்றன டைட்டில்ஸ். இன்னும் சில டைட்டில்களை எல்லாம் அச்சிலேற்ற முடியாது. திட்டினாலும் நிறைய பேர் பார்க்கிறார்கள் என்பதால் புற்றீசல் போல தினமும் புதுசுபுதுசாய் வருகின்றன. லேட்டஸ்ட்டாய் ஒரு டிரெண்ட் என்னவென்றால், முன்னாள் நடிகை போட்டோவைப் போட்டு ‘அவரின் பரிதாப நிலை’ என, மார்பிங் செய்து வயல் வேலை, கட்டட வேலை, பிச்சை எடுப்பது போன்ற படங்களை வைத்து விடுகிறார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் நடிகை இயற்கை விவசாயம் செய்வதாய் ஒரு பக்கக் கட்டுரையை நீட்டி முழக்கி வாசிக்கிறார்கள். மறக்காமல் லைக், ஷேர், சப்ஸ்கிரைப் பண்ணச் சொல்கிறார்கள். நல்லா இருங்கடா!

சிலர் ‘சித்ரா மரணத்துக்கு நீதி கிடைக்க இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க’ என்று சொல்லி, அதை சாக்காக வைத்து லைக்ஸ் கேட்கிறார்கள். அடேய்களா!

இவர்கள் செய்யும் காரியங்களைப் பார்க்காதீர்கள்!

பொலிட்டிக்கல் பொமேரியன்ஸ்:

பிரபலமான புலனாய்வு இதழ்களின் கண்டெண்ட்டை அப்படியே சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் படங்களைக் காட்டி தங்கள் குரலில் வாசித்துவிடுவதுதான் இவர்களது ஒரே வேலை. பார்ப்பவர்களுக்கு ஏதோ இவர்களே பக்கத்திலிருந்து பார்த்தது போலவும், செம அறிவாளி போலவும் ஒரு தோற்றம் வந்துவிடுவதால் இதையும் அப்பாவிகள் சிலர் சப்ஸ்க்ரைப் பண்ணி ரெகுலராகப் பார்க்கவும் கேட்கவும் செய்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் நெட் பேக் யாருப்பா போட்டுவிடறா எனக் கேட்கத் தோன்றுகிறது.

இதுதவிர ஈஸி சமையல் வீடியோக்கள், ஒரேநாளில் கார்-பைக் ஓட்டுவது எப்படி? போன்ற டேக்லைனில் நூற்றுக்கணக்கான புளிச்சாத வீடியோக்கள் தப்பும் தவறுமாய்க் கொட்டிக்கிடக்கின்றன. பொறுமையாக உட்கார்ந்து பார்த்தால் தலைச்சுற்றலோடு வாந்தியும் வந்துவிடும்போல் இருக்கிறது.