சினிமா
Published:Updated:

சிரித்தாலே இனிக்கும்!

சிரித்தாலே இனிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிரித்தாலே இனிக்கும்!

நாலு பேருக்கு நல்லதுன்னா நாப்பதஞ்சு வருஷம் கொண்டாடலாம் தப்பேயில்லை.

கமல் சினிமாவுக்கு வந்து 61 ஆண்டுகள்... ரஜினி சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவு! இந்த சுபயோக சுபதினத்தில் இருவர் நடித்த கேரக்டர்களும் சமூக இடைவெளியுடன் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் எனச் சிந்தித்தோம். அந்தக் களேபர கற்பனை...

‘ஹே ராம்’ சாகேத் ராம் : என்ன ரஜினி ராகவேந்திரா, வழக்கமா 50 வருஷம் ஆனதைத்தான் எல்லாரும் கொண்டாடுவாங்க. நீங்க பாட்டுக்குத் திடீர்னு 45 வருஷமானதைக் கொண்டாட ஆரம்பிச்சிட்டீங்க?

ரஜினி ராகவேந்திரா : ஹாஹாஹா, இப்படி திடீர்னு கேட்டீங்கன்னா எனக்குத் தலை சுத்தும். அதாவது திசைகள் நாலு, பஞ்சபூதம் அஞ்சு. இந்த ரெண்டும் சந்திக்கிற இடம்தான் 45ன்னு இமயமலையில 540 வருஷமா வாழும் பாபா ஜி, 450 வருஷமா வாழ்ற ஜூனியர் பாபாஜிக்குச் சொன்னப்போ நான் கேட்டேன். அதான் சும்மா விடவே கூடாதுன்னு கொண்டாட ஆரம்பிச்சிட்டேன். ஹாஹாஹா, சமாளிக்குற துக்குள்ள தலை சுத்துதுப்பா!

சிரித்தாலே இனிக்கும்!

சிட்டி ரோபோ : ரொட்டேட் யுவர் ஹெட்ஸ். பொய் சொல்றார். ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்துல அரோகரா போட்டுட்டார். அதனால அடுத்தடுத்து புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் 2020ன்னு வரிசையா கருத்து கேட்கிறாங்க. தன்னைச் சுத்தி இருக்கிறது நல்ல ஆராவா கெட்ட ஆராவான்னு ஹெட் ரொட்டேட் ஆகி, வேற யாரும் எதையும் கேக்கிறதுக்கு முன்னால 45 இயர்ஸ் கொண்டாட ஆரம்பிச்சிட்டாரு.

வேலு நாயக்கர் : நாலு பேருக்கு நல்லதுன்னா நாப்பதஞ்சு வருஷம் கொண்டாடலாம் தப்பேயில்லை. உங்க 45 வருஷத்துக்கு 4,5 வரியில ஒரு கவிதை சொல்லவா?

வசீகரன் : ந்நோ, அது மட்டும் வேணாம். அப்புறம் சிட்டி தன்னைத்தானே டிஸ்மாண்டில் பண்ணிக்கும். ஆமா நான் 45 வருஷம் கொண்டாடினது இருக்கட்டும். நீங்க என்ன 61?

‘தசாவதாரம்’ விஞ்ஞானி கோவிந்தன் : அறுபதும் இல்லாம எழுபதும் இல்லாம மய்யத்தில 61 கொண்டாடலாம்னு முடிவு பண்ணினேன்னு சொன்னா நல்லாருக்கும். ஆனா அது காரணமில்லை. நீங்கபாட்டுக்கு சம்பந்தமில்லாம ரஜினி 45ன்னு கொண்டாட ஆரம்பிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்?

(வேலுநாயக்கர் இடுப்பைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கிறார்)

வசூல்ராஜா : ஆ ஊன்னா இடுப்பைப் பிடிச்சுட்டு அழ ஆரம்பிச்சிடறீங்களே வேலுநாயக்கரே, நானே சமாளிக்கிறேன். நீங்க ஆறிலிருந்து அறுபது வரை கொண்டாடினீங்கன்னா நான் அதைவிட ஒண்ணு கூடுதலாக் கொண்டாடுவேன். அதான் 61. மாமனார் காலிங் மாமூ புரிஞ்சா இதுவும் புரியும்!

‘அன்பே சிவம்’ நல்லசிவம் : தோழர்... வலதும் வேண்டாம் இடதும் வேண்டாம்னு மய்யத்தில நான் நின்னு ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனா என்னை முன்னால அனுப்பிச்சு நீங்க ‘96’ ராம் மாதிரி அதே இடத்தில நிக்கிறீங்க. ஆமா எலெக்‌ஷனுக்கு உங்களுக்கு என்ன பிளான்?

அருணாசலம் : என்ன பிளான்னா கொரோனால்லாம் சரியாகிடுச்சுன்னா அப்படியே இமயமலை போய் மூலிகை டீ சாப்பிட்டு, ரிஷிகேஷ், காசி- நைஸ் ஸ்பிரிச்சுவல் பிளேஸ், ஹாஹாஹா அதை விசிட் பண்ணி பாசிட்டிவ் வைப்ரேஷன் ஏத்திட்டு... அதே வைப்ரேஷன்ல அப்படியே தமிழ்நாடு வந்து லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்ணலாம்னு பிளான். ஹாஹாஹா!

ராமானுஜ நம்பி : அடியேன் ராமானுஜ நம்பி. ஹரி ஓம் ஹரி ஓம் என்று அனைத்தையும் அறிவோம். ஆனால் நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்பதை மட்டும் அறியோம். சைவத்துக்கும் வைணவத்துக்கும் சமயப்போர். நான் இறந்தபிறகு முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர், முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று ஏகப்பட்ட போர்கள் நடந்துமுடிந்துவிட்டன. ஆனாலும் நீங்கள் சொன்ன போர் வரவில்லையே?

சிரித்தாலே இனிக்கும்!

தசாவதாரம் வில்லன் பிளெட்சர் : யெஸ் ஹி இஸ் ரைட். பயோ வார் உருவாகணும்னு நான் கிருமியைக் கொண்டுவந்து மூக்கில ரத்தம் வந்து, நாக்கில நீலம் வந்து செத்துப் போயிட்டேன். அதுக்குப் பிறகு உண்மையாவே கொரோனா கிருமியே வந்துடுச்சு. ஆனா நீங்க சொன்ன போரும் வரலை, நீங்களும் அரசியலுக்கு வரலை. ஒய் திஸ் கன்ஃப்யூஷன்?

‘காலா’ ரஜினி : விதை யார் வேணும்னாலும் போடலாம். ஆனால் நிலம் எங்கள் உரிமை. கறுப்பு உழைக்கும் மக்களின் நிறம்!

‘தர்பார்’ ரஜினி : நீ வேற ஏன்பா அடிக்கடி வைப்ரேட் ஆகிறே? இப்படி உரிமை, கிரிமைன்னு போராடிக் கிட்டிருந்தா நாடு சுடுகாடு ஆகிடும். இந்தமாதிரி சமூகவிரோதிகள் இந்த மீட்டிங்ல எப்படி ஊடுரு வினாங்க? அப்புறம் மனித உரிமைக் கழகத் தலைவியை மிரட்டின மாதிரி கன்பாயின்ட்ல மிரட்ட வேண்டிவரும் காலா, கொஞ்சம் அமைதியா உக்காருவீங்களா?

கபாலி ரஜினி : நான் அப்படித்தான் எந்தரிப்பேன். காந்தி சட்டையக் கழட்டினதுக்குப் பின்னாலயும் அரசியல் இருக்கு. அம்பேத்கர் கோட் போட்டதுக்குப் பின்னாடியும் அரசியல் இருக்கு. நான் கோட் போட்டு உக்காருவேன் கெத்தா, சும்மா ஸ்டைலா!

உத்தம வில்லன் : நண்பர் ரஜினி, நீங்களே உங்களுக்கு எதிரா ரெண்டு வில்லனை உருவாக்கி வெச்சிருக்கீங்க. பக்கும் பகபக பக்கும் பகபக உத்தம வில்லன்!

16 வயதினிலே சப்பாணி : ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு. அதெல்லாம் ‘சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே’ன்னு பாட்டுப்பாடி மேய்ச்சது நம்ம சிங்காரவேலன். ஆடு வளர்த்து, கோழி வளர்த்து. மரம் வளர்த்தோம். ஆனா இந்தப் பரட்டை ஆதரிக்கிறவரு கொண்டுவந்த திட்டம் சுற்றுச்சூழலையே கெடுக்குது. சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும்!

சிரித்தாலே இனிக்கும்!

பரட்டை ரஜினி : பத்த வெச்சிட்டியே சப்பாணி. ஆமா நம்மாளு மயிலோட விளையாடினதைப் பார்த்தியா? இது எப்டி இருக்கு?

(திடீரென்று உள்ளே நுழைகிறார் ‘வேட்டையாடு விளையாடு’ ராகவன்)

‘வேட்டையாடு விளையாடு’ ராகவன் : ரொம்ப இல்லீகலா இருக்கு. இங்கே கலந்துக்கிட்டவங்க யாருமே இ-பாஸ் வாங்கலைன்னு ராகவன் இன்ஸ்டிங்க்ட் சொல்லுது. அதான் என்கொயரிக்கு வந்தேன். கண்ணை விரிச்சுக்காட்டவா?

வசூல்ராஜா கமல் : காட்டுப்பா, என்ன இவ்ளோ மஞ்சளா இருக்கு, மஞ்சக்காமாலையா? மஞ்சளா இருக்கலாம். ஆனா காவியாத்தான் இருக்கக்கூடாது.

(அப்போது மீட்டிங் ஹாலுக்கு வெளியே ஒரே கூட்டம். ‘சொல்லு காலா சொல்லு காலா’ என்றபடி நான்கைந்து பையன்கள் ராப் பாடி தலைகீழாக ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். சில சீனியர் சிட்டிசன்ஸ் ‘தலீவா அர்சியலுக்கு வா தலீவா’ என்று கோஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மாஸ்க்குக்குள் வேர்த்தபடி மைக் முன் பேசிக்கொண்டிருக்கிறார்.

“லாக் டௌன் இன்னும் அமுலில் இருந்தாலும் ரஜினி 45, கமல் 61 கொண்டாட சில முக்கியமான கேரக்டர்கள் வந்ததா நமக்குத் தகவல் வந்திருக்கு. அவங்க வெளியே வரட்டும்னு நாம காத்துக்கிட்டிருக்கோம். ஒளிப்பதிவாளர் ரஜினிஹாசனுடன் கமல்காந்த்.”

இந்தத் தகவல் கிடைத்ததும் ஒட்டுமொத்த கேரக்டரும் பின்வாசல் வழியாக எஸ்கேப்)