
தேனியின் தோனியே... சேலத்து ஷேன் வார்னே...
பண்டிகைகளைக் கொண்டாட மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கிறது. இந்த அன்லாக் சீசனைப் பயன்படுத்தி நம் பிரபலங்கள் இனி எப்படியெல்லாம் `பாதுகாப்பாக’ பண்டிகைகளைக் கொண்டாடலாம் என நம்ம பங்குக்குச் சில ஐடியாக்கள் தரலாமா?
மோடி
‘ஹோம் போபியா’வில் பறக்காமல் சொந்த நாட்டில் இருக்கும் மோடிக்கு இது நல்வாய்ப்பு.

தீபாவளிக்கு ராக்கெட் வெடி... புஸ்வானம் எல்லாம் தேவையே இல்லை. தனக்கெனத் தயாரான 8,458 கோடி ரூபாய் ‘ஏர் இந்தியா ஒன்’ விமானத்தில் பறந்தபடி மக்கள் பணத்தை புஸ்வாணமாக்கலாம். காண்டாகும் ராகுல் காந்தி ட்விட்டரில் பொங்கினால், ‘மக்கள் நலனுக்காகத் தனி மனித இடைவெளியோடு வானத்தில் கொண்டாடுகிறேன்... உனக்கேன் கோபம்? என்னோடு வயலுக்கு வந்தாயா... வேளாண் மசோதா தாக்கல் செய்தாயா? ஹேப்பி திவாளி... பாரத் மாதா கி ஜெ!’ என்று சொல்லலாம். தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம்போல ஸ்பெஷலாய் ‘வான் கி பாத்’ பண்ண வைக்கலாம். சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய் ரெபரன்ஸ் வரிசையில் மணப்பாறை முறுக்கு, இருட்டுக்கடை அல்வா பற்றியும் ‘நிற்பதுவே பறப்பதுவே’ என பாரதியார் பாட்டை உல்ட்டா பண்ணியும் மித்ரோனைப் பேசச் சொல்லி தமிழ்நாடு டச் கொடுக்கலாம்.
ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு. அக்காளுக்கு மாப்பிள்ளை பார்த்த மாதிரியும் ஆச்சு!
ரஜினி
‘நான் எப்போ எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல வருவேன். ஆனா, எப்போ வரணும்னுதான் எனக்குத் தெரியாது!’ - இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும் ரஜினி இந்த அன்லாக்கில் சென்னையிலிருந்து கேளம்பாக்கத்துக்கு தைரியமாக காரில் வாக்கிங் போகலாம். கெடுபிடி இ-பாஸ் இனி இல்லை என்பதால் ஈச்சம்பாக்கத்திலிருந்து கேளம்பாக்கம்வரை ஆயிரம் வாலாக்களைக் கோத்து அமுக்கு டுமுக்கு அமால் டுமால் என பேரப்புள்ளைங்களோடு பண்டிகையைக் கொண்டாடலாம்.

‘இப்போ இல்லாட்டி எப்போ?’ என ஆதி படத்துப் பாட்டுவரி போல அரசியல் போஸ்டர் ஒட்டும் மதுரை ரசிகர்களை கூல் செய்ய ‘அண்ணாத்தே’ பட ஷூட்டிங்கை மாட்டுத்தாவணியிலும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பங்களா செட்டை வண்டியூர் கண்மாயிலும் போடலாம்.
அப்புறமென்ன, ரசிகர்கள் கப்சிப் கருவாட்டு மண்டைதான் போங்க!
விஜய்
‘மாஸ்டர்’ படத்தை அமேசான் பிரைமிடமிருந்து காப்பாற்றி தியேட்டருக்கு வரவைக்கலாம். இந்தத் தளர்வைப் பயன்படுத்தி குட்டி ஸ்டோரி சொல்வதைப்போல குட்டியாய் கட்-அவுட் வைத்துக்கொள்ள, குட்டியாய் மக்கள் மன்ற மீட்டிங் போட, குட்டியாய் தையல் மிஷின் கொடுக்க, குட்டியாய் டூர் போக பர்மிஷன் கேட்கலாம். முடிந்தால் குட்டியாய் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், மறக்காமல் அப்பா சந்திரசேகரை ஹோம் க்வாரன்டீன் பண்ணிய பிறகே குட்டியாய் கட்சியை ஆரம்பிப்பது கட்சிக்கும் விஜய்க்கும் நல்லது!

வீட்டில் இட்லி உப்புமா செஞ்சு அதை ஸ்விக்கி டெலிவரி பாக்ஸில் கமுக்கமாய் எடுத்துவரும் அட்லியை மட்டும் வீட்டுக்குள் விடாமல் இருந்தால் போதும். இந்த தீபாவளி மட்டுமல்ல எந்த தீபாவளியும் சும்மா பட்டாசாய் விஜய்க்கு அள்ளும்!
ஓபிஎஸ் - இபிஎஸ்
சும்மாவே செயற்குழுவில் சோஷியல் டிஸ்டென்ஸிங்கை பங்கம் பண்ணும் அப்பாராவ்-சுப்பாராவ் ரெண்டு பேரையும் சசிகலா வரும்வரை மியூசிக்கல் சேர் விளையாட வைக்கலாம். ‘யார் மனசுல யாரு அவங்களுக்கு என்ன பேரு?’ ரியாலிட்டி ஷோ நடத்தினால் கட்சி நிதி அள்ளும்.

வாரம் ஒரு பொதுக்குழுவைக் கூட்டி தொப்பையில் இருவர் முகங்களையும் பெயின்டால் வரைந்து, கையில் ‘தேனியின் தோனியே!’, ‘சேலத்து ஷேன் வார்னே!’ எனப் பதாகைகள் ஏந்தி தொண்டர்களைக் கூவவைத்தால் கூவத்தூர் தாண்டியும் பவர் காட்டலாம். அவர்களும் பிழைப்பு நடத்தலாம்.
எப்பூடி!
ஜெயக்குமார் - உதயநிதி

தல-தளபதி சண்டை எல்லாம் கெடக்கட்டும். `எண்டெர்டெய்னர்’ யார்னு சண்டை போட்டுக்கொள்ளும் இவங்க ரெண்டு பேரையும் முகக் கவசத்தோடு ஒரே மேடையிலே ஏற்றி ‘நீயா நானா’ பட்டிமன்றம் நடத்தலாம். ‘யார் சாக்லேட் பாய்’, ‘யார் ப்ளே பாய்’ என காரண உதாரணங்களோடு இருவரும் பேசினால், இரண்டு தெய்வங்களும் மாற்றி மாற்றி உண்மை பேசுவதைப் பார்க்கும் தமிழ்நாட்டுக்கே செம என்டெர்டெயின்மென்ட் கிடைக்கும். அவர்களுக்கும் பாரம் குறையும்.
அஜித்
ரொம்ப நாளாகவே தன்னைத் தனிப்படுத்திக் கொண்டு வாழும் அஜித்தை ஐ.நா-வுக்கான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நல்லெண்ணத் தூதராக நியமிக்கலாம்.

கூட்டம் கூடுவதைத் தவிர்க்க மாறுவேடத்தில் இன்னமும் அவர் பிரியாணி சமைப்பதற்கும், உதவிகள் செய்துகொண்டிருப்பதற்கும் இனித் தடைகள் இல்லை. இந்தக் கொரோனாப் பேரிடரிலும் சளைக்காமல் ‘வலிமை அப்டேட்’ கேட்கும் அஜித் ரசிகர்களை மொத்தமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லலாம். ட்விட்டரில் போனி கபூருக்கு டேக் செய்து ‘அப்டேட் சொல்லுய்யா என் சிப்ஸு!’ என லந்தாய்கேட்கும் தல வெறியர்களை உட்காரவைத்து அவர்கள் மனம் திருந்தும்வரை ‘ஆஞ்சநேயா’, ‘ஆழ்வார்’ படங்களை பேக்-டு-பேக் பார்க்க வைக்கலாம்!
வெங்கட்பிரபு கேங்
நியூ நார்மல் லைப்பிலும் பார்ட்டி பண்ணும் இந்த கேங்கை பாண்டிச்சேரியில் ஒரு பிக்பாஸ் ரிசார்ட்டில் க்வாரன்டீன் பண்ணலாம்.

சமூக இடைவெளிக்கு சவால்விடும் இவர்களைப் பார்த்து கொரோனாவே கதறி ஓடிவிடும். ‘யோ கய்ஸ்... கொரோனாவை இப்படியும் ஒழிக்கலாம்!’ என மிர்ச்சி சிவாவை வைத்து 24x7 பிக்பாஸ் வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்து லாபம் பார்க்கலாம்.
ஐடியா இல்லாத பசங்க!