சினிமா
தொடர்கள்
Published:Updated:

கிடா வெட்டு காது குத்து

கிடா வெட்டு  காது குத்து
பிரீமியம் ஸ்டோரி
News
கிடா வெட்டு காது குத்து

மதுரை மக்கள் எல்லோரும் பட்டாக்கத்தியில்தான் பல் விலக்குவார்கள், பெட்ரோலில் தான் வாய் கொப்பளிப்பார்கள் எனும் அளவுக்கு அரிவாளும் கத்தியுமாக ரத்தக்களரியாகக் காட்சிப்படுத்திவிட்டது இந்தத் தமிழ் சினிமா.

தனாலேயே, மற்ற மாவட்ட மக்கள் “மதுரைக்காரங்க எல்லோரும் கொலை வெறியோடு நாக்கைத் துருத்திக்கொண்டு அலைவார்கள். அசந்த நேரத்தில் கொரவளையைக் கடிப்பார்கள்” என பயந்து போய்த் திரிகிறார்கள். ஆனால், சத்தியமாக அது உண்மையல்ல. மற்ற ஊர்களில் எப்படியோ அப்படியேதான் மதுரையின் குற்ற விகிதாச்சாரமும். வேண்டு மானால், கறிக்கடை, இளநீர்க் கடைகளில் அரிவாள், கத்தியோடு சிலரைப் பார்க்கலாம். சொல்லப் போனால், மற்ற எல்லா ஊர் மக்களைவிடச் சிரிப்பும் களிப்புமாக வாழ்பவர்கள் மதுரைக்காரர்கள்தான்.

கல்யாண வீடு ஆரம்பித்து கிடாவெட்டு, காதுகுத்து, கருமாதி வீடு வரை எங்கும் ஜாலியும் கேலியும்தான். தெரிந்து கொள்ளுங்கள், மதுரையில் வெட்டு, குத்து என்றால் அது இந்தக் கிடாவெட்டும் காதுகுத்தும்தான்.

கிடா வெட்டு  காது குத்து

திருவிளையாடற்புராணத்தில் கடவுள் சிவனே பல்வேறு அவதாரங்களை எடுத்து, பாண்டிய மன்னனோடும் மக்களோடும் மதுரையில் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக இருக்கிறது. குறும்பு செய்வதற்குத் தமிழகத்தில் இத்தனை ஊர்கள் இருக்கும்போது, சிவன் மதுரையைத் தேர்வு செய்யக் காரணமே மதுரை மக்களின் நகைச்சுவை உணர்வுக்காகத்தான் என்பார்கள். ஆமாம், எந்தளவு அலர்ட்டாக இருப்பார்களோ, அந்தளவுக்கு வெளாட்டாகவும் இருப்பவர்கள் மதுரைவாசிகள்!

இன்றும், ஊருக்குள் ஒரு காலிச் சுவரைப் பார்த்தால் அங்கு எதையாவது போஸ்டர் அடித்து ஒட்டிவிடுவது மதுரை மக்களின் மரபு. வருஷம் முழுக்க வைகையே வத்திப்போய் இருந்தாலும், `சுனாமியில் சும்மிங்கை போடும் தலைமையே’ போஸ்டர்களுக்கு குறைச்சலே இருக்காது! “தமிழகத்தின் செல்லப்புள்ளையே” என அஜித்தைக் கைக்குழந்தையாக மாற்றுவது, `தமிழினம் வாழ, தல நீங்க வாங்க ஆள’ என, கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் அஜித்தைக் கைகுலுக்க விடுவது, `தின விஜய்’ என நியூஸ் பேப்பர் டைப்பிலேயே போஸ்டர் அடித்து அலறவிடுவதென, காலம் கடந்து கற்பனைக்குதிரையைத் தட்டிவிடுவார்கள் மதுரை மக்கள். இவ்வளவு ஏன், உதயநிதிக்கு `மூன்றாம் கலைஞரே’ என முதன்முறையாக போஸ்டர் அடித்தது யாரு, பூராம் நம்ம பயதேன்! அதை அவங்க சீரியஸா பண்ணினாலும், நமக்குச் சிரிப்பு வருதா இல்லையா..?!

தி.மு.க-வில் தென்மண்டலத்தலைவராக மு.க.அழகிரி இருந்தபோது, அஞ்சாநெஞ்சரின் விழுதுகள் வைத்த விளம்பரங்களைப் பார்த்து மக்கள் என்றைக்குமே சீரியஸாக எடுத்துக் கொண்டதில்லை. வாய் விட்டுச் சிரித்து நோய் விட்டு வாழ்ந்தார்கள். `புறநானுற்றுப் புலியே’, `சிலப்பதிகாரத்து சிங்கமே’, `திருக்குறளின் திமிங்கலமே’ என இலக்கியத்தையும் இயற்கையையும் மிக்ஸ் பண்ணி சியர்ஸ் அடிப்பார்கள் இந்த அஞ்சாநெஞ்சரின் விழுதுகள். அதிலும், `லிங்கா’ கெட்டப்பில் அழகிரியைப் போட்டு `பறக்காஸ்’ போஸ்டர் அடித்ததெல்லாம் அல்டிமேட் லெவல். உலகப்புகழ் பெற்ற ‘காவிரிய வச்சுக்கோ, அம்மாவைத் தா...’ போஸ்டர் அடித்ததே மதுரைக்காரர் கிரம்மர் சுரேஷ்தான். அதைப் பார்த்து மக்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கண் கலங்கினார்களே தவிர, ஃபீலிங்காகிக் கண் கலங்கவில்லை. எப்படியோ மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் போதும் என அவரும் விதவிதமான வாசகங்களுடன் 16 பிட் போஸ்டர்களை ஒட்டிக் கொண்டே இருந்தார்.

மக்களும் அசால்ட் கிடையாதுப்பே. அவர்களின் இயல்பான பேச்சில்கூட நகைச்சுவை இழையோடும். “கண்டக்டர், இன்னும் பேலன்ஸ் வரலை” எனத் தலையைச் சொறிந்தால், “ரெண்டு காலையும் அகட்டி வெச்சி, கம்பியைக் கப்புன்னு பிடிச்சு நில்லுங்க. பேலன்ஸ் வந்துரும்” என காமெடிக் கதகளி ஆடுவார்கள் கண்டக்டர்களும். இவ்வளவு ஏன், கைப்புள்ள, வீரபாகு, தீப்பொறி திருமுகம், டெலக்ஸ் பாண்டியன், வக்கீல் வண்டு முருகன், கபாலிகான், ஏட்டு ஏகாம்பரம் என்று வடிவேலு ஏற்று நடித்த சாகாவரம் பெற்ற அத்தனை கேரக்டர்களையும் மதுரையில் மொத்தமாக இப்போதும் பார்க்கலாம். படித்துறைப் பாண்டி ஏதாவதொரு தெருவில் நின்றுகொண்டு மொத்த மதுரையையும் குத்தகைக்கு எடுத்ததாக டோக்கன் போட்டுக் கொண்டிருப்பார். சூனா பானா ‘கெளம்பு... கெளம்பு... போ போ..’ ஏதாவதொரு பஞ்சாயத்தைக் கலைத்துக்கொண்டிருப்பார்.

கிடா வெட்டு  காது குத்து

இன்றும் மதுரையில் ஏதாவதொரு இடத்தில் மக்களை மகிழ்ச்சிப்படுத்த பாட்டும் கூத்தும், பட்டிமன்றமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கடலைமிட்டாயும் கம்மர்கட்டையும் வாங்கிக் கொண்டு மக்களும் பட்டிமன்றத்துக்குக் கிளம்பி விடுவார்கள். கு.ஞானசம்பந்தன் தலைமையில் நகைச்சுவை மன்றம் 25 வருடங்களுக்கு மேலாக மதுரையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மிமிக்ரி, ஸ்டாண்டப் காமெடி, நடிப்பு என்று குட்டிக்குட்டியாய் வைகையின் புயல் அடிக்கும். அதில் அறிமுகமான எத்தனையோ பேர் இன்று தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் நடித்துத் தமிழகத்தையே சிரிக்கவைத்துக்கொண்டி ருக்கிறார்கள். இப்படி, தமிழ்நாட்டையே வயிறுவலிக்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் மதுரை மக்களை, வயிற்றிலேயே கத்தியை விட்டுக் கிண்டுவார்கள் எனப் படம் காட்டுவதெல்லாம் ரொம்பத் தப்புண்ணே!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் மதுரை வந்து விட்டால் உற்சாகமாகிவிடுவார், அவர் பேச்சில் பகடி கபடி விளையாடும். ஒருமுறை மதுரை வந்த அவரிடம் `நாளிதழ் செய்தியாளர்களிடமிருந்து வார இதழ் செய்தியாளர்களைப் பிரித்துப் பார்க்கிறார்கள்’ என்று சில செய்தியாளர்கள் முறையிட்டபோது, ‘ஆமாம், வார இதழைப் பிரித்துத்தானே பார்க்கணும்’ என்று செமத்தியாகக் கலாய்த்திருக்கிறார்.

கிடா வெட்டு  காது குத்து

மற்ற மாவட்டங்களில் சீரியஸானவர்களாகப் பார்க்கப்படும் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும்கூட மதுரைக்கு வந்தால் காமெடி மோடுக்குப் போய்விடுவார்கள். அதன் உச்சம், அமைச்சர் செல்லூர் ராஜு. ஜெயலலிதா இருந்தபோது செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும் நடத்திய பிரமாண்ட பூஜைகள், காவடிகள் எல்லாம் இப்போது நினைத்தாலும் குபீர் சிரிப்பைக் கிளப்பும். “இந்தச் சிரிப்பலை மதுரையோடு நின்றுவிடக் கூடாது. உலக மக்கள் அனைவரும் சிரித்து மகிழ வேண்டும்” என்ற இலக்கோடு செல்லூர் ராஜு செயல்படுத்திய திட்டம்தான் தெர்மாகோல் மூலம் வைகை ஆறு ஆவியாகாமல் மூடும் மெகா திட்டம். அதன் மூலம் ஒரேநாளில், ஐன்ஸ்டைன், ஐசக் நியூட்டன் வரிசையில் தானும் இணைந்தார். அவரால்தான் இத்தனை நாள், சட்னிக்கும் கிட்னிக்கும் மட்டும் ஃபேமஸாய் இருந்த மதுரை, சிட்னியாக ஃபேமஸ் ஆனது!

ஆன்மிகத்தையும் நகைச்சுவையாக வெளிப்படுத்தும் மதுரை ஆதினமும் மதுரை மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். கடந்த காலங்களில் மதுரை ஆதீனம் பேசியதை மீண்டும் படித்தீர்கள் என்றால் கெக்கே பெக்கே என்று சிரித்துக்கொண்டே இருப்பீர்கள். ஆமாம், மதுரை கலவர பூமி இல்லை; கலாய் பூமி!