`மக்கள் தோழன்' தக்ஷன் விஜய் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் கபளிஹரம். இந்தப் படம் ஜூன் 17 ரிலீஸ் ஆகி வெற்றிகரமா ஓடிக்கிட்டுருக்க விஷயம், டிக்கெட் வாங்குறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் தெரிஞ்சது.

சரி படத்துக்குள்ள போவோம். ஒரு மருத்துவர மூணு பேரு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செஞ்சு கொலை பண்ணிடுறாங்க. அதை விசாரிக்க வர ஹீரோ முருகவேல், அட் எ டைம்ல அந்த மூணு பேரையும் போலீஸ் ஜீப்புக்குள்ள உட்காந்துட்டே என்கவுன்ட்டர் பண்றார். 'அடேங்கப்பா... இன்ட்ரோ சீன்லயே 'ஆரம்பிக்கலாங்களா?'ன்னு ஆரம்பிக்கிறாரே'ன்னு தியேட்டர்ல இருக்க மொத்த கூட்டமும், அதாவது தூங்கிட்டிருந்த ரெண்டு பேரோட சேர்த்து ஏழு பேரும் எழுந்து உட்கார்றாங்க.
அடுத்து படம் கதைக்குள்ள போகுது. கிருஷ்ணகிரி மாவட்டத்துல அடிக்கடி லாரியோட சேர்த்து, டிரைவரும் லாரில இருக்கற சரக்கும் காணாம போகுது. இதை பண்றவங்களை மட்டும் ஹீரோ கண்டுபிடிச்சு கொல்றாரா, இல்ல அவங்களோட சேர்ந்து தியேட்டர்ல இருக்கிற எங்க ஏழு பேரையும் கொல்றாராங்கிறதுதான் படத்தோட க்ளைமாக்ஸ். முதல் கொலை நடக்குற இடத்துக்கு ராத்திரி போற ஹீரோ, தடயங்களைத் தேடுறார். இருட்டுல எதுவும் கிடைக்காதனால, ஏமாற்றத்தோட போலீஸ் ஸ்டேஷனுக்குத் திரும்பி, தீவிர யோசனைல இறங்குறார். அப்பதான் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார்.
"நாம ராத்திரி போயிருக்கோம். அதான் ஒண்ணும் தெரியல. பகல்ல போவோம்"ன்னு சொல்லிட்டு, அதேமாதிரி தூங்கி எழுந்து டிபன் சாப்பிட்டுவிட்டு சாவகாசமா காலையில தேடப் போறார். பகல்ல சூரிய வெளிச்சம் இருக்குது. அதனால தடயங்கள் ஈசியா ஹீரோ கண்ணுக்குத் தெரியுது. "வாவ்... செம்ம இன்வஸ்டிகேஷன் க்ரைம் திரில்லர் போலீஸ் ஸ்டோரி ஆப் இன்டர்போல் கதையா இருக்கும் போலயே"ன்னு ஆப்பரேட்டரே ஒரு தடவை கைத்தட்டினார்.
கட் பண்ணா போலீஸ் உயர் அதிகாரி முன்னாடி நிக்கிறார் ஹீரோ. "சார்... இவங்க தனியாளு இல்ல. இவங்க ஒரு கேங்க். நாம நெனைக்கிற மாதிரி இவுங்க சாதாரணமான கில்லர்ஸ் இல்ல சார். கரெக்ட்டா ப்ளான் பண்ணி கொலை பண்ற டேஞ்சரஸ் க்ரிமினல்ஸ்"ன்னு இதுவரைக்கும் எந்த போலீஸ் படத்துலயுமே வராத ஒரு வசனத்தை ஹீரோ பேசுறார். அடுத்து ஒரு கொலை நடக்குது. இந்தத் தடவை கரெக்டா சூரிய வெளிச்சம் இருக்க பகல் நேரமா பாத்து கொலை நடக்குற இடத்துக்குப் போறார்.
தமிழ்ல எடுக்கப்படுற போலீஸ் சினிமாவுக்கு மொத்தமே 14 டயலாக்கும், ஏழு சீனும்தான். 'கபளிஹரம்' ஷூட்டுக்கு போலீஸ் யூனிஃபார்ம் வாடகைக்கு எடுக்கும்போதே அந்த 14 டயலாக்கையும் ஏழு சீனையும் சேர்த்தே வாடகைக்கு எடுத்துட்டாங்க போல. உதாரணம் சொன்னா, ஒரு இருட்டு அறைல ஒரு ரவுண்ட் டேபிள்ல போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னாடி, ஒரு பெரிய திரைல பிபிடிய ஓடவிட்டு பேச ஆரம்பிக்கிறார் ஹிரோ. "சார்... மொத்தமா இந்த மாசம் மட்டும் கிருஷ்ணகிரில 10 லாரி காணாம போயிருக்கு. அதோட சேர்த்து டிரைவர், க்ளீனரையும் காணோம். எனக்கென்னமோ இவுங்க தமிழ்நாட்டு ஆளுக மாதிரி தெர்ல சார். கொலைகாரங்களோட ஆயுதம், கொலை செய்யற கொடூரமான முறை எல்லாம் பார்த்தா நார்த் இந்தியாவில இருந்துதான் வந்துருக்காங்கனு சந்தேகமா இருக்கு சார்"ன்னு சொல்றார்.
"கொலைகாரங்க ரொம்ப அட்வான்ஸா திங்க் பண்றாங்க சார். ஆள் நடமாட்டாம் இல்லாத இடமா பாத்துதான் கொலை பண்றாங்க"னு ஹீரோ சொல்ல, "பின்ன, அவன் என்ன கோவில் திருவிழால கொலா புட்டா விக்கிறான். கூட்டமா இருக்க இடத்துல பண்ண?"ன்னு முன் சீட்ல இருந்து ஒரு கவுன்ட்டர். யார்ரானு பாத்தா யாருமே இல்ல. அப்பதான் தெரியுது, சீட்டே காண்டாகி கவுன்ட்டர் குடுத்துருக்குனு. இந்தி வில்லன்னுதான் பேரு. நாலு வரி இந்தில பேசுனா அடுத்த நாலு வரி, ஹரி பட வில்லன் மாதிரி, "லேய்... ஆக்கங்கெட்ட கோட்டி... இப்பம் சொல்லுதேன்... கைல சிக்குன தூத்துக்குடி ஹார்பர்ல உன் பொணம் தொங்கும்வே... பாத்துக்குடும்"னு அக்மார்க் தமிழ் வில்லன்கள் மாதிரி திட்ட ஆரம்பிச்சுடுறார்.

சரி வசனங்கள்தான் வாரி விடுதுன்னு பாத்தா, திரைக்கதையும் அநியாயத்துக்கு ப்ரெடிக்டபுளா இருக்கு. இதுவரைக்கும் வந்த மொத்த கோலிவுட் போலீஸ் படங்களையும் பத்து ரூபா ப்ரூட் மிக்சர் ஜூஸ் போட்டு அடிச்சு குடிச்ச மாதிரி ஒரு திரைக்கதைய எழுதி இருக்காங்க. 'மாநகர காவல்', 'ஜெய்ஹிந்த்'ன்னு விஜய்காந்த், அர்ஜுன் காலத்துலயே உயிர்கொல்லி சீன்கள்னு சானிடைசர் போட்டு கை கழுவிவிட்டு, கடுமையான ஜீஎஸ்டி வரி விதிச்சு, பழக்கத்துலருந்து மறைஞ்சு போன சீன்களை எல்லாம், அகழ்வாராய்ச்சி பண்ணி எடுத்துட்டு வந்துருக்காங்க. ஆதிச்சநல்லூர்ல கெடச்சதா இல்ல கீழடில கெடச்சதானு படக்குழுவினர் தெளிவுப்படுத்தணும். ஏன்னா, மேஜர் சுந்தர்ராஜன் சீன் ஒண்ணு எட்டிப் பாத்துச்சு.
மியூசிக் மட்டும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமானது வரையான ஆறுதல் தந்தாலும், எல்லா சிச்சுவேஷனுக்கும் ஒரே மியூசிக்க போட்டாப்ல ஒரு பீல். அதனால், திருப்பதில மொட்டையைத் தேடி அலைஞ்சாப்ல இருக்கு. ஹீரோ இன்ட்ரோ, வில்லன் இன்ட்ரோ, ஹீரோ வில்லன் சேசிங், ஹீரோ கொலையாளிகளை சுடுறதுனு ஒரே மாதிரி மியூசிக் போட்ட மியூசிக் டைரக்டர், ஹீரோ தோசை சுடும்போதும் அதே மியூசிக்க போட்ருவாரோனு பயந்தப்பதான், அதே மியூசிக்ல அரை டம்ளர் தண்ணி, ரெண்டு டீஸ்பூன் சோடா மாவு, தே.கரண்டி உப்பு போட்டு கொஞ்சம் கலக்கிவிட்டு, ரொமான்ட்டிக்கா மாத்திவிட்ருக்கார் மியூசிக் டைரக்டர் கார்த்திக் கிருஷ்ணா.
அந்த ரொமான்டிக் தோசைக்கு மேல மட்டனைத் தூவுனாப்ள, "ஒழுங்கா தோசைக் கூட சுடத் தெரியல. நீங்க எப்புடி ரவுடிகளைச் சுடுவீங்க?"ன்னு ஹீரோயின் ஹீரோவ பாத்து கேக்குறப்ப ஒரு கொட்டாவி சத்தம். 'யார்ரா இது?'னு இப்ப முன் சீட்ட பாக்கல. ஏன்னா கொட்டாவி விட்டதே நான்தான். க்ளைமாக்ஸ்ல ஹீரோ சுட்ட அஞ்சு வில்லன்களையும் சேர்த்தா மொத்தம் 13 பேரை ஹீரோ இந்தப் படத்துல என்கவுன்ட்டர் பண்ணிருக்கார். படம் முடிஞ்சு பக்கத்துல உட்காந்திருந்தவரைத் தட்டிப் பாத்தேன். எழுந்திரிக்கல. அநேகமா, பலி எண்ணிக்கை 13-ஐ தாண்டும்ன்னு நெனைக்கிறேன்.
அப்ப, யார் யார் இந்தப் படத்த பாக்கலாம்னா பாத்தா, `கபளிஹரம்' படக்குழுவினர், அந்தப் படக்குழுவினரோட குடும்பம், அவுங்களுக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், அக்கம்பக்கத்தினர், தியேட்டர் ஆப்பரேட்டர்ன்னு எல்லாரும் பாக்கலாம். "இந்த கேட்டகிரில எல்லாம் நான் வர மாட்டேன்ப்பா... ஏன்னா நான்தான் இந்த படத்தோட ஹீரோ `மக்கள் தோழன்' தக்சன் விஜய்"ன்னு சொன்னீங்கனா, அப்ப `கபளிஹரம்' நீங்கள் கண்டிப்பாகப் பார்த்தே தீர வேண்டிய படம்.