தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள குலதெய்வக் கோயிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா தம்பதி சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் உள்ள மேல வழுத்துார் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில், இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலாகும். திருமணமத்திற்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இக்கோயிலுக்கு ஒன்றாக வந்து பொங்கல் வைத்து வழிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் இன்று இருவரும் மீண்டும் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். நயன்தாரா வந்திருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கோயில் முன்பு திரண்டனர். பாதுகாப்பிற்காக ஆண், பெண் போலீஸார் நிறுத்தப்பட்டனர். கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்வீட் ரவி என்பவர் இருவரும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.

கோயில் பூசாரி, ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார். அப்போது நீண்ட நேரம் கும்பிட்டபடி நயன்தாரா மனமுருகி வேண்டிக்கொண்டார். அப்போது தன் கணவர் விக்னேஷ் சிவன் காதில் ஏதோ கிசு கிசுத்து கொண்டே இருந்தார். கோயில் வளாகத்தில் இருந்த நொண்டி கருப்பு, முனியாண்டவர், மதுரைவீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபம் காட்டப்பட்டது.
இருவரும் ஒன்றாக கும்பிட்டு திருநீர், குங்குமம் பூசிக் கொண்டனர். கோயிலுக்குள் ஏராளமானோர் வர முயன்றதால் கோயில் வெளிக்கதவை பூட்டி விட்டனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி கும்பிடுவதைப் பலரும் வீடியோ எடுத்தனர். நயன்தாராவை பார்த்தவர்கள் ரொம்ப சிம்பிளாக வந்திருப்பதாகப் பேசிக்கொண்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் நயன்தாராவுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

இது குறித்து உடனிருந்தவர்களிடம் பேசினோம், ``திருமணத்திற்கு முன்பு குலதெய்வக் கோயிலுக்கு வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் பொங்கல் வைத்தனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வழிப்பட்டனர். இதையடுத்து கணவன், மனைவி சண்டை சச்சரவின்றி வாழ்வதற்கான சிறப்பு பெற்ற ஸ்தலமான ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும் வழிப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதைத் தொடர்ந்து நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்குத் தாயானார். அப்போதே எல்லாம் நல்லபடியாக முடிந்த பின்னர் மீண்டும் குலதெய்வக் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதாக இருவரும் வேண்டிக் கொண்டனர்.

விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. தற்போது விக்னேஷ் சிவன் தன் அடுத்த படத்துக்கான வேலைகளில் மூழ்கினார். விரைவில் அது குறித்து முறையான அறிவிப்பு வெளி வரவிருக்கிறது.
அதற்கு முன்பாக, 'தங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும்' என்பதற்காக குலதெய்வக் கோயிலுக்கு வந்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு ஊருக்குத் திரும்பிச் சென்றதாகத் தெரிவித்தனர்.