சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

அரசியல் வெடிகள் அதிர வைக்குமா?

அரசியல் வெடிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அரசியல் வெடிகள்

நகைச்சுவை

ஒவ்வொரு தீபாவளிக்கும் டிரெண்டுக்கு ஏற்றாற்போல் புதுவிதப் பட்டாசுகள் ரிலீஸாகும். தற்போது அரசியல்தான் தமிழகத்தில் டிரெண்டு என்பதால், அரசியல் வெடிகள் சில ரிலீஸாகியிருக்கின்றன. ஆன்மிக அரசியல் மாதிரி, இது பட்டாசு அரசியல் எம் வாக்காளர் பெருமக்களே..!

மோடி வெடி
மோடி வெடி

மோடி வெடி

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே தயார் செய்யப்பட்ட ராக்கெட் வெடி இது. எப்போதும் ஆகாயத்தில்தான் உலவித்திரியும். பற்றவைத்துவிட்டு, பக்கத்திலேயே பத்து மணி நேரம் உட்கார்ந்திருந்தாலும் இது வெடிக்காது. ஆனால், கேமராவை நீட்டினால் போதும்... உற்சாகமாக உயரப் பறந்து வெடிக்கும். வடமாநிலங்களில் முதலைகளை விரட்ட, இந்த வெடியை உபயோகப்படுத்திவருகிறார்கள்.

ஸ்டாலின் வெடி
ஸ்டாலின் வெடி

ஸ்டாலின் வெடி

து கொஞ்சம் பழைய வெடிதான். இருந்தாலும், மீண்டும் மார்க்கெட்டுக்குப் புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இந்த வெடி பெரும்பாலான நேரங்களில் வெடிக்காமல் வெளிநடப்பு செய்துவிடும். மற்ற நேரங்களில் காது கிழிய வெடிக்கும். இதை இரவு நேரங்களில் வெடிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது. `முடியட்டும், விடியட்டும்!’ என சூரியன் உதயமாகும்வரை காத்திருந்து கொளுத்துங்கள்.

வைகோ வெடி
வைகோ வெடி

வைகோ வெடி

ற்றவைத்த இடத்தில் வெடிக்காமல், சம்பந்தமில்லாத இடத்துக்குப் பாய்ந்து சென்று வெடிக்கும் வெடி இது. கிரேக்க, எத்தியோப்பிய, ரோமானியத் தொழில்நுட்பத்தில் தயாரான இது, வெரி டேஞ்சரஸான வெடி! அடிக்கடி, பற்றவைத்த ஆளின் பாக்கெட்டுக்குள்ளேயே புகுந்துவிடும்.

எடப்பாடி வெடி
எடப்பாடி வெடி

எடப்பாடி வெடி

ந்த தீபாவளியின் தினுசான வெடி இதுதான். பற்றவைத்தால் பாம்புவெடியைப்போல டேபிளுக்குக் கீழே பாய்ந்து, தவழ்ந்து, ஊர்ந்து போய் வெடிக்கும். இந்த வெடி சூறாவளியில் சிக்கினாலும் பறந்து போகாது; வெள்ளத்தில் மாட்டினாலும் நமத்துப்போகாது. இது `புஸ் ஆகிடும்’ என நினைத்த பல பேர் முன்பு, தீப்பொறியாகக் கக்கி `மாஸ்’ காட்டியிருக்கிறது. `இன்னும் மூணு மாசத்துல இந்த வெடி நமத்துப் போயிடும்’ என்று எதிர்க் கடைக்காரர் மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக்கொண்டேயிருப்பார். அப்படி ஒன்றும் நடப்பது மாதிரியே தெரியவில்லை. முக்கியமான விஷயம், டெல்லி ஊதுவத்தியில் கொளுத்தினால் மட்டுமே இது வெடிக்கும்.

ராமதாஸ் வெடி
ராமதாஸ் வெடி

ராமதாஸ் வெடி

ந்த வெடி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக வெடிக்கும். குடிசை இல்லாத ஏரியாக்களில் வெடிக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், குடிசைக்கும் கியாரன்டி இல்லை; வெடிக்கும் உங்களுக்கும் கியாரன்டி இல்லை. இந்த வெடியின் மருத்துவம், மகத்துவம் என்னவென்றால் இதிலிருந்து புகையே வராது. புகை நமக்குப் பகை.

ஜெயக்குமார் வெடி
ஜெயக்குமார் வெடி

ஜெயக்குமார் வெடி

மெயின்ரோட்டில் மட்டுமே வைத்து வெடிக்க வேண்டிய விசித்திர வெடி இது. இந்த வெடிக்கு ஊதுவத்தியெல்லாம் தேவையில்லை. அருகில் சென்று மைக்கை நீட்டினால் போதும், உச்சஸ்தாயியில் உருண்டு புரண்டு வெடிக்கும்.

ஓ.பி.எஸ் வெடி
ஓ.பி.எஸ் வெடி

ஓ.பி.எஸ் வெடி

ணுகுண்டுக்கு மாற்றாகக் கண்டுபிடிக்கப்பட்ட வெடி இது. ஆனால், எப்போது வெடிக்கும், எப்படி வெடிக்கும் என யாருக்குமே தெரியாது. வெடிக்க வேண்டிய நேரத்திலாவது கரெக்டாக வெடிக்குமா என்றால் அதுவும் தெரியாது. பற்றவைத்ததும் பொறி பொறியெனப் பொறிந்து, தியானநிலைக்குச் சென்றுவிடும். இந்த வெடியின் 2.0 வெர்ஷனான, `ஓ.பி.ஆர்’ எனும் குட்டி வெடி ஒன்றும் புதுவரவாக வந்திருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

சீமான் வெடி
சீமான் வெடி

சீமான் வெடி

மிழர்கள் கொளுத்தினால் மட்டுமே `படபட’வென வெடிக்கும் இந்த வெடி. அதனால், வெடி வாங்கச் செல்கையில், அதற்கான சான்றிதழ்களைக் கொண்டு செல்ல வேண்டியது மிக மிக அவசியம். 40 ஆயிரம் டன் ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலை ஒரு நொடியில் சாய்த்துவிடும் வல்லமைகொண்டது. பார்ப்பதற்கு ஆமை ஓட்டைப்போலத் தோற்றமளிக்கும் இந்த வெடியை, அடைமழையில் பற்றவைத்தால்கூட அணையாது.

டி.டி.வி வெடி
டி.டி.வி வெடி

டி.டி.வி வெடி

ந்த வெடி பாக்கெட்டின் விலை ரொம்பக் குறைவு, வெறும் இருபதே ரூபாய்தான். டோக்கன் போட்டு வாங்கிக்கொள்ளலாம். ஒரு பாக்கெட்டை வாங்கிப் போட்டு வெடிக்க ஆரம்பித்தால், முதல் பத்து வெடிகளுக்கு பத்துத் தெரு தள்ளி இருப்பவர்கள்கூடப் பதற்றத்தில் நெஞ்சைப் பிடிப்பார்கள். பிறகு, போகப் போக `என்ன புஸ்வாணத்துலேருந்து கங்கே வரமாட்டுது’ எனப் பக்கத்து வீட்டுக்காரர்களே கலாய்க்க ஆரம்பித்துவிடுவார்கள். `ஒரு பாக்கெட்டுக்குள்ளே, நாலைஞ்சு ஸ்லீப்பர் செல் வெடி இருக்கும். திடீர்னு வெடிச்சுடும்’ எனக் கடைக்காரர் கண்ணை உருட்டி பயமுறுத்துவார், பயந்துவிடாதீர்கள். பால்னா பொங்கும், பச்சைத்தண்ணி எப்படிப் பொங்கும்கிறேன்?!

கமல் வெடி
கமல் வெடி

கமல் வெடி

ய்யமாக, செங்குத்தாக நிறுத்திப் பற்றவைத்தால் மட்டுமே வெடிக்கும் வெடி இது. இதன் தன்மையைப் புரிந்துகொள்ள, இனி தசம ஆண்டுகள்கூட நமக்குத் தேவைப்படலாம். பற்றவைத்ததும், `டுப்பிச்சுக்கு டுப்பிச்சுக்கு’ என வித்தியாசமான ஓசையோடு வெடிக்கும் இந்த வெடி, `இலுமினாட்டிகள் கண்டுபிடித்த சதி’ என்ற பேச்சும் ஊருக்குள் உலவுகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கலரில், ஒவ்வொரு கெட்டப்பில் விற்பார்கள். குழப்பம் வேண்டாம், எல்லாம் ஒரே வெடிதான்.

ரஜினி வெடி
ரஜினி வெடி

ரஜினி வெடி

'சும்மா சும்மா வெடிச்சுட்டு இருந்தால் நாடே சுடுகாடாகிடும்' என்ற எச்சரிக்கையுடன் விற்கப்படும் மாஸ் வெடி! `இதை வெடித்தால் மாசு ஏற்படாது, மாஸ்தான் ஏற்படும்’ என நீண்ட நாள்களாக அவர்களே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விநோதம் என்னவென்றால், `இந்த வெடி இதுவரை வெடித்ததேயில்லை. சொல்லப்போனால் இது வெடியே இல்லை' எனப் பலருக்கும் இந்த வெடியின் மீதான நம்பிக்கை மங்கிவிட்டது. புதிதாக வந்திருக்கும் மய்ய வெடிகூட இந்த வெடியை ஒரண்டை இழுப்பதால், `சந்தைக்கு வந்த வெடி, சாடை சொல்லிப் பேசுதடி...’ என சோக கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள் இதன் ரசிகர்கள். அடுத்த தீபாவளிக்காவது இந்த வெடியும் சந்தைக்கு வந்துவிடுமென நம்புவோம்!