Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு 3: அந்நியன் vs அந்நியன்; இந்தியன் தாத்தா தெரியும், இந்த அந்நியன் தாத்தா தெரியுமா?

அந்நியன் 2

முன் குறிப்பு: எல்லாம் ஒரு தமாசுக்குத்தான் மக்களே! சிரிச்சிட்டு இந்தக் கட்டுரையை க்ளோஸ் பண்ணிடுங்க (முக்கியமா, படிச்சிட்டு!). 'அந்நியன்' ஒரு மகத்தான மாஸ், கிளாஸ் கலவையான கமர்ஷியல் சினிமா. அதுக்கு ஒரு பார்ட் 2 எடுத்தா எப்படியிருக்கும்?

Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு 3: அந்நியன் vs அந்நியன்; இந்தியன் தாத்தா தெரியும், இந்த அந்நியன் தாத்தா தெரியுமா?

முன் குறிப்பு: எல்லாம் ஒரு தமாசுக்குத்தான் மக்களே! சிரிச்சிட்டு இந்தக் கட்டுரையை க்ளோஸ் பண்ணிடுங்க (முக்கியமா, படிச்சிட்டு!). 'அந்நியன்' ஒரு மகத்தான மாஸ், கிளாஸ் கலவையான கமர்ஷியல் சினிமா. அதுக்கு ஒரு பார்ட் 2 எடுத்தா எப்படியிருக்கும்?

அந்நியன் 2
அஞ்சு பைசா திருடினா தப்பான்னு கேட்டு, ஆயிரம் பேர் அஞ்சு பைசா திருடினா தப்பான்னு மெரட்டி, கடைசியா அஞ்சு லட்சம் பேர் அஞ்சு பைசா திருடினா தப்பான்னு கேட்டு, அதை கால்குலேட்டர் இல்லாம கணக்குப் போட்டுச் சொல்லுன்னு சொல்லி, அடிச்சே கொலை செஞ்ச 'அந்நியன்' இப்போ எங்க இருக்கார்னு யாருக்கும் தெரியாது. 'அந்நியன்.காம்' வெப்சைட்கூட பராமரிப்பு இல்லாம இப்பவெல்லாம் கம்ப்ளெய்ன்ட் பதிவு பண்ண முடியாத நிலைமையில இருக்காம். முதல்வர் புகழேந்தியோட 'புகார்ப் பெட்டி'யும் கேட்பாரற்றுக் கிடக்காம். அதனால நாட்டுல 'ஜென்டில்மேன்'களும் கம்மியாயிட்டாங்க.

சரி, நம்ம கதைக்கு வருவோம். அம்பிதான் அந்நியனாக மாறி அடிதடில இறங்கி மக்களைத் திருத்தினார்னு சொல்லி அவரை மனநல மருத்துவமனைல சேர்த்துச் சரி பண்ணினதா 'அந்நியன்' பார்ட் ஒண்ணை முடிச்சிருப்பாங்க.

அந்நியனே திருந்திட்டானே இனி எப்படி அந்நியன் பார்ட்-2 எடுக்கப் போறோம்னா, அந்நியன் வந்து அநியாயத்தைத் தட்டிக் கேட்டு கிட்டத்தட்ட 17 வருசம் ஆகிடுச்சு. இந்தப் பதினேழு வருசத்துல எத்தனையோ தப்புகள், ஏமாத்து வேலைகளை எல்லாம் தினம் தினம் நாம கடந்துதான் வந்துட்டு இருக்கோம்.

அந்நியன்
அந்நியன்

அந்நியன் முதல் பாகத்துல சின்னச் சின்னத் தப்புகளைச் செஞ்சவங்களைத்தான் அந்நியன் திருத்தினார். குறிப்பா ட்ராபிக்ல நிக்காம போறவங்க, அஞ்சு பைசா திருடுறவங்க, ரயில்வே சாப்பாட்டுல ஊழல் பண்ணுறவங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டு ஒவ்வொருத்தரையா தூக்கினார். கும்பிபாகம், கம்பிபாகம், கபீம்குபாம், குபாம்கபீம்ன்னு எல்லாம் வாய்ல நுழையாத வார்த்தைகளைப் போட்டு வில்லன்களை விட அதைப் பார்த்த மக்களோட கபாலத்தை கபாம்குபாமாக்கித் தொரத்திவிட்டாங்க. அப்போ இந்த டைம் இன்னும் கொஞ்சம் இறங்கிப் போய் பரீட்சைல பிட்டடிக்கிற பசங்களையும், பென்சில திருடுற பசங்களையும் பிடிச்சுத் திருத்துற மாதிரி அடுத்த வெர்சனை எடுத்துட்டுப் போலாம்தான். ஆனா, அதை 'சக்திமான்' பார்த்துப்பாருங்கறதாலயும், அதைவிடவும் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறதாலயும், இன்னும் சின்னப் புள்ளைங்க கூடவே விளையாடிட்டு இருக்க வேண்டாம்னு பெரிய தப்புக்களின் பக்கம் கதையைத் திருப்புறோம்.

கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கு அப்புறம் அம்பி என்னவாக மாறியிருக்கார்னா இந்தியன் தாத்தாவை மாதிரி கிட்டத்தட்ட அந்நியன் தாத்தாவாக மாறியிருக்கார். ரூல்ஸை மீறாத மிக நேர்மையான குடிமகனாகத் தன்னோட வாழ்க்கையைத் தொடர்ந்துட்டு இருக்கார். என்னதான் அவர் ரூல்சை மீறாட்டியும் கூட மத்தவங்க எந்தவிதமான கட்டுப்பாட்டையும் மதிக்காம போறதைப் பார்த்து ரொம்பவும் வருத்தப்பட்டு, வருத்தம் கோபமாகி, கோபம் வெறியாக, வெறி அவருக்குள்ள கொறட்டை விட்டு விட்டத்தைப் பார்த்துத் தூங்கிட்டு இருந்த அந்நியனை உலுக்கி எழுப்புது.

இருபது வருசத்துக்கு அப்புறம் வெளிய வர்ற அந்நியனுக்கு இந்த உலகம் ரொம்பவும் புதுசாகவும் குழப்பமாகவும் இருக்கு. 'கோமாளி' ஜெயம் ரவி மாதிரி குழம்பிப் போறாரு. மக்கள்ல பாதிப் பேரு முகத்துல மாஸ்க்கோடையும், பலபேரு மாஸ்க் இல்லாமையும் சுத்திட்டு இருக்காங்க. மாஸ்க் போடாம சுத்திட்டு இருக்கிற யாரையாச்சும் பிடிச்சுப் பிழிஞ்சு எடுத்து கடாம்குடாம் முறைப்படிக் கொலை செய்வார்னு எல்லாருமே ஆவலாகப் பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, அவர் அதைச் செய்யலை.
அந்நியன் திரைப்பட போட்டோஷூட்
அந்நியன் திரைப்பட போட்டோஷூட்
Photo: Vikatan

பொதுவா வெளியூர்ல கொரோனாகிட்ட இருந்து தப்பிக்க மாஸ்க் போட்டா, நம்ம ஊர்ல போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்கத்தான் மாஸ்க் போடுறோம். நமக்கு நம்ம உயிர் மேல இருக்கிற பயத்தை விடவும் போலீஸ் மேல பயம் அதிகம். எப்படியும் மாஸ்க் போடாத கேங்குல இருந்துதான் ஒரு பீஸைப் பிடிப்பார்னு எதிர்பார்த்துட்டு இருக்கும் போது அம்பி செல்போனுக்கு ஒரு SMS வருது. என்னடான்னு எடுத்துப் பார்த்தா அவரோட பேங்க் அக்கவுண்ட்ல இருந்து 20000 ரூபாய் டெபிட் ஆகியிருக்கு.

”ஐயோ பகவானே, எந்தச் செலவும் செய்யாம காசு காணாம போயிருக்கே”ன்னு அம்பி அழுதுட்டு இருக்கும் போது அதே பழைய கெட்டப்புல அந்நியன் அவர் உடம்புல இருந்து வெளியத் தெரியுறார்.

அடுத்த அரை மணி நேரத்துல ஒரு இருட்டு ரூம்ல இருந்து ஒரு குரல் அலறிட்டு இருக்கிற சத்தம் கேக்குது. சத்தத்தோட டெசிபெல் கூடிட்டே போய், உச்சபட்சமான அலறல்ல சுருள் சுருளா முடி தெரிய அப்படியே லைட் ஆன் ஆகுது. ஒரு சேர்ல ஒரு வடக்கத்து ஆளைக் கட்டிப் போட்டுட்டு எதிர்ல அந்நியன் நின்னுட்டு இருக்கார்.

”நீதான அம்பி பேங்க் அக்கவுண்ட்ல இருந்து பணத்தைத் திருடின. எத்தனை பேர் இப்படிக் கிளம்பியிருக்கீங்க?”

“சார்... இதைத் திருட்டுன்னு சொல்லி திருட்டுக் கலையைக் கேவலப்படுத்தாதே சார். கார்டு மேல இருக்கிற பதினாறு நம்பர் சொல்லு சார்னு சொன்னா உடனடியா கடகடன்னு எடுத்து ஒப்பிக்கிறாங்க சார். நான் அதை வச்சுத்தான் பொழப்பு ஓட்டுது. நீயே யோசிங்க சார். இது மேல என் தப்பு என்ன இருக்கு? என் மனசுல தோணுற நம்பரை போன்லே போடுது. அதை ஒருத்தர் எடுக்குது. இந்த மாதிரி பேங்குலே இருந்து மேனேஜர் பேசுது, பதினாறு நம்பர் சொல்லு சார்னு சொன்னா எந்த பேங்கு எந்த மேனேஜர்னு கூடக் கேக்காம நம்பர் குடுக்குது. இது எப்படி சார் ஏமாத்து வேலை, திருட்டு வேலை ஆகும்? எனக்கி தமிழ்ல தெரிஞ்ச வார்த்தையே பதினாறு நம்பர் சொல்லு சார்தான். அதையும் நம்பி ஒருத்தரு நம்பர் குடுக்குதுன்னு முழுப் பழியையும் என் மேல போடுறது நாயம் இல்லே சார். நீ என்னைப் பாராட்டனும் சார். தமிழ்நாட்டுல எத்தனையோ பேர் இன்ஜினியரிங் படிச்சுட்டு வேலை இல்லாம சுத்துது. ஆனா, நான் வெறும் பதினாறு நம்பர் சொல்லு சார் மட்டும் கத்துட்டு லட்சத்துல சம்பாதிக்குது. இங்க இப்படிக் கூட வாய்ப்பு இருக்குன்னு நாலு பேருக்கு நான் உதாரணமா இருக்கு சார். சும்மா வேலை இல்லைன்னு சொல்லாம இப்படி நாலு நம்பருக்கு கால் போட்டு ஒரு நாளுக்கு ஒரு ஆள் நம்பர் குடுத்தா கூட மாசத்துல லட்சத்துல சம்பாதிக்குது சார். இதெல்லாம் சுய தொழில் சார். நீ எப்படி சார் இதைத் தப்பு சொல்லலம்? வந்தாரே வால வைக்கு தமிழ்நாட்டுல இப்படி எல்லாம் இருட்டு ரூம்லே அடச்சு வக்கிது சார் நீ... நீ அந்நியன் சார். தமிழன் அல்லே...”

அந்நியன் 2
அந்நியன் 2

“ஆமா. நான் அந்நியன் தான். இப்படி ஊரை ஏமாத்திப் பொழைக்கிறியே உனக்கு இது அநியாயமா தெரியல?”

“எது சார் அநியாயம்? நான் இதுக்கு வரி கட்டுது சார். இங்க பாரு சார். ஒவ்வொரு வருசமும் நான் சம்பாதிச்ச பணத்துக்கு வருமான வரி கட்டுது சார். நீ இப்போ என் கழுத்துல வச்சிருக்கிற கத்தியைக் கூட நான் கட்டுற டேக்ஸ்ல வர்ற பணத்தை லோனாகக் குடுத்துத் தான் உருவாக்கியிருக்கலாம். நீ பயன்படுத்துற ஒவ்வொரு பொருள்லயும் என் காசு இருக்கு சார். இப்போ சொல்லு சார். நான் பண்ணது தப்பா?”

”டேக்ஸ் கட்டினா நீ செஞ்ச தப்பு சரின்னு ஆகிடுமா?” ன்னு கேட்டுட்டு அவன் கழுத்துல கத்தியால ஒரு தடவை கீறிவிடுறார். கொஞ்ச நேரத்துல துடிதுடிச்சு இறந்து போவான்னு நம்பிக்கையோட இந்தக் கொலைக்கு கத்திகுபாம்னு பேர் எழுதி வைக்க அட்டையத் துழாவுறார். ஆனா, அவரோட கைல இருந்து ரத்தம் வடிய ஆரம்பிச்சு கை ரொம்பவும் வலிக்குது.

இதைப் பார்த்த அந்தத் திருடன், “சார், நீ என்னைக் கொல்ல நினைச்சு உன் கையைக் குத்திடுச்சு. முகத்துக்கு முன்னாடி தொங்கிட்டு இருக்கிற முடியை எடுத்துப் பின்னாடி விட்டுட்டு நல்லா பார்த்துக் கீறு சார். நீயெல்லாம் நாட்டைத் திருத்தி...”ன்னு சொல்லி சிரிக்கிறான்.

அவன் கழுத்துன்னு நினைச்சுட்டு தன்னோட கையைக் கீறிட்டோம்னு அப்போ தான் நம்ம அந்நியனுக்கு உண்மை வெளங்குது. உடனே தலையில் இருந்த முடியை இழுத்துப் பின்னாடி போட்டுட்டு மறுபடி கழுத்தைக் கீறிவிடுறார்.

“என்ன இருந்தாலும் நான் டேக்ஸ் கட்டிருக்குது சார். டேக்ஸ் கட்டினா அது இல்லீகல் இல்ல சார். நீ தப்புப் பண்ணுது சார்”ன்னு சொல்லிட்டு இறந்து போயிடறார்.

அந்நியன் 2
அந்நியன் 2
அந்நியன் அங்க இருந்து வீட்டுக்கு வர்றார். வர்ற வழியில அவருக்கே குழப்பம் அதிகமாகுது. 'நீ செய்யறது தப்புதான். ஆனா அதுக்கு டேக்ஸ் கட்டணும்னு' அரசாங்கம் சொல்றது, காதலர் தினத்தப்ப, சிலர் சொல்ற 'I love you, but as a friend' மாதிரி குழுப்பமா இருக்கேன்னு அந்நியன் தவிக்கிறார். இப்போ ஒரு விஷயம் சட்டத்துக்குப் புறம்பானதுன்னா அதுக்கு டேக்ஸ் வாங்கக் கூடாது. டேக்ஸ் வாங்கினா அது சட்டத்துக்கு உட்பட்ட விஷயமாகத்தான் நாம எடுத்துக்கணும்.

என்னதான் திருடன்னாலும் அவன் டேக்ஸ் கட்டிருக்கான். அப்ப அவன் திருட்டு நியாயமாகிடுச்சு. அப்ப நியாயமான ஒருத்தனை அந்நியன் கொன்னுருக்கான். அப்படின்னா ரூல்சை தீவிரமாக மதிக்கிற அம்பிக்குள்ள இருந்து இன்னொரு அந்நியன் வெளிய வர்றான். அந்த அந்நியன் என்ன செய்யப் போறான்னா, தான் செஞ்ச தொழிலுக்கு நியாயமாக டேக்ஸ் கட்டி வாழ்ந்த ஒருத்தரைக் கொலை செஞ்ச இன்னொரு அந்நியனைத் தேடி அவனைக் கொல்லுறதுதான் தன்னோட லட்சியம்னு முடிவு செய்யுறான்.

இங்க ஆரம்பிக்குது படத்தோட ட்விஸ்ட். ஏன் கதையே இதுதான். அந்நியன் முதல் பாகத்துல அம்பிக்குள்ள இருந்து ரெமோ, அந்நியன்னு ரெண்டு பேர் வந்தாங்க. ஆனா, இந்த அந்நியன் பார்ட் 2ல அம்பிக்குள்ள இருந்து ரெண்டு அந்நியன் வர்றாங்க. இதுல பிரச்னை என்னன்னா ஒரு அந்நியன் தப்பைத் தட்டிக்கேட்கப் போறார். இன்னொரு அந்நியன் தப்பைத் தட்டிக் கேட்க போலீஸ், கோர்ட்டு எல்லாம் இருக்கும் போது எப்படித் தனி மனுசன் தப்பைத் தட்டிக் கேக்கலாம், கொலை செய்யலாம்னு முதல் அந்நியனுக்கு எதிரா நின்னு அவனைக் கொலை செய்யணும்னு வெளிய வர்றார். கொழப்பமா இருக்குல்ல? அதுதான் கதையே!

ஒரு கட்டத்துல அம்பியோட உடம்புல அந்நியன் நம்பர் ஒண்ணும் அந்நியன் நம்பர் 2ம் மாறி மாறிச் சண்டை போட்டுக்குறாங்க. முதல் பார்ட்ல வந்த ரொமோ - அந்நியன் ஃபைட்டு மாதிரி. ரொம்பவும் கோபமடையுற அந்நியன் நம்பர் 1 தனக்கு இடைஞ்சலாக இருக்கிற அந்நியன் நம்பர் 2-வைக் கொலை செய்ய நினைச்சு அவரைக் கடத்த முயற்சி பண்றார். ரொம்பவும் குழப்பமா இருக்குல்ல. எனக்கே அப்படித்தான் இருக்கு. ஆனா. இதை டிகோட் பண்றோம்னு குறைஞ்சது 10 யூடியூப் சேனலாவது பிரேக்டௌன்னு என்னத்தையாவது பேசுவாங்க. அதைப் பார்த்து நாம கதையை புரிஞ்சிக்கலாம்.
Vikram, Anniyan
Vikram, Anniyan

அம்பியின் உடம்புல இருக்கிற அந்நியன் நம்பர் 1 அதே உடம்புல இருக்கிற அந்நியன் நம்பர் 2 வைக் கடத்தி ஒரு அறையில் அடைச்சு வைக்கிறார். அதாவது அம்பி தன்னைத்தானே ஒரு அறையில் அடைச்சுக்கிறார். திடீர்னு அந்நியன் 1 வெளில வந்து அந்நியன் 2 வைக் கொலை செய்ய ஒரு கத்தியை எடுத்து குத்த அம்பியின் கழுத்தில் கத்தி இறங்குது.

பார்த்துட்டு இருக்கிற எல்லோருக்கும் படுபயங்கரமா டென்சன் ஆக, அடுத்த சீன்ல அம்பி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கார். அப்புறம் வழக்கம் போல மனநல மருத்துவமனை எல்லாம் போய் சரியாகி வர்றார். இனி மறுபடியும் அந்நியன் பார்ட்- 3 வருமான்னு மக்கள் நினைச்சுக் கூடப் பார்க்கமுடியாம எழுந்து வெளிய வர்றாங்க. அங்க முடியுது படம்!

தியேட்டர்ல ஆர்வமா படம் பார்த்த ஒருத்தர், "வாணி போஜன் வர சீன்லாம் 'மகான்' படத்துல இருந்து தூக்கிட்டாங்க. இதை நம்ம 'அந்நியன்'தாம்ப்பா தட்டிக் கேட்கணும்"னு கூட்டத்துல கத்தறார். அதுவரைக்கும் நடந்து வெளியே வந்துட்டு இருந்த மக்கள் எல்லாம் தெறிச்சு ஓட ஆரம்பிக்கிறாங்க!