தமிழ்ல வந்த ரோபோட்டிக்ஸ் பத்தின படங்கள்ல மிகவும் முக்கியமான படம் 'எந்திரன்'. ஏன், அது ஒண்ணுதான் தமிழ்ல வந்து பிரபலமான ஒரே ரோபோட் படமும் கூட. அதுக்குத்தான் ஏற்கெனவே பார்ட்-2 வந்துடுச்சே... இனி எப்படி பார்ட்-2 எழுதுவீங்கன்னு கேட்டா, பார்ட்-2 வுக்கு பார்ட் 2 எழுதுவோம். அதாவது இப்போ பாக்கப் போறது 3.0.
எந்திரன் படத்தோட முதல் வெர்சன் மட்டும்தான் கொஞ்சமே கொஞ்சம் சயின்ஸ் பிக்சன் அல்லது சயின்ஸ் பிக்சன் மாதிரி. மத்தபடி அதோட இரண்டாம் பாகம் சயின்ஸ் பிக்சன்ல எல்லாம் வராது. சுத்தி வளைக்காம சொன்னா '2.0' ஒரு பேய்ப்படம். அவ்ளோதான். வழக்கமா ஊருக்குள்ள 100 ரூபாய் எந்திரத்தைக் (தாயத்தை) கட்டி, பேய் ஓட்டுவாங்க. இதுல எந்திரனை வச்சு பக்ஷிராஜன்கிறவரோட பேயை ஓட்டியிருப்பாங்க. ரொம்ப சிம்பிள்.
தலைச்சன் புள்ள மண்டையோட்டை எடுத்து, நடு ராத்திரில சுடுகாட்டுல உக்கார்ந்து மந்திரிச்சுப் பேய் ஓட்டினா அதுக்கு ஆகுற செலவு 100 ரூபா. இதே எந்திரன் மாதிரி ரோபோவை வச்சு ஓட்டினா அதுக்கு ஆகுற செலவு சில நூறு கோடிகள். சரி. அது இருக்கட்டும்.

இப்போ 3.0வுல என்ன செய்யப்போறோம்னா எந்திரனை வச்சு ஏலியன்களை ஓட்டப் போறோம். ஏலியனே இல்லையேடா அதை ஏன் ஓட்டுறீங்கன்னு கேக்கலாம். பெரிய பெரிய ஹாலிவுட் படங்கள்ல எல்லாம் பார்த்திருப்பீங்க. அங்க நிறைய நிறைய சூப்பர் ஹீரோக்கள் இருக்காங்க. உலகத்துக்கு எப்பவெல்லாம் அழிவு வருதோ அப்பவெல்லாம் அவுங்க வந்து காப்பாத்துவாங்க. உண்மையைச் சொன்னா, அந்த மாதிரி சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறதாலதான் அங்க உலகத்தை அழிக்கிறதுக்கும் வில்லன்கள் உருவாகிட்டே இருக்காங்க. இந்தி சினிமாவுக்கு ஒரு 'க்ரிஷ்'. தெலுங்கு சினிமாவுக்கு ஒரு பாலகிருஷ்ணா. மத்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் ஸ்பெஷல் பவர் வேணும். ஆனா, நம்ம பவர் ஸ்டார் பாலகிருஷ்ணா ஸ்பெஷல் பவர் இல்லாமயே பாஞ்சு வர்ற ரயில் வண்டிய அலேக்கா தூக்கிப் பந்தாடுவார்.
நாம போன ஜென்மத்துல செஞ்ச பாவத்தால நமக்கு சூப்பர் ஹீரோன்னு யாரும் இல்ல. அதனால நம்ம ஊர்ல உலகம் அழியுற அளவுக்கு ஆபத்துகள் இதுவரைக்கும் இல்ல. ஆனா, எப்ப நம்மகிட்ட சிட்டின்னு ஒரு அதி நவீன சூப்பர் ரோபோட் உருவாச்சோ அப்பவே நமக்கும் தலைவலி ஆரம்பிச்சிடுச்சு. சிட்டி வர்றதுக்கு முன்னாடி எத்தனையோ சிட்டுக் குருவிகள் செத்துப் போயிருந்தாலும் கூட அதைத் தட்டிக் கேட்க பக்ஷிராஜன் வரல. சிட்டி ரோபோ வந்த அப்புறம்தான் அவரோட ஆன்மாவிற்கே உயிர் வந்திருக்கு. அந்த மாதிரிதான் சிட்டி 3.0 உருவானதும் ஏலியன்களும் ஏக்டிவேட் ஆகிட்டாங்க. இதெல்லாம் பட்டாம்பூச்சி விளைவுமாதிரி தான். அல்லது டாவோ மாதிரி. ஒரு பெரிய வெளிச்சம் உருவாச்சுன்னா அதே அளவுக்கு ஒரு இருட்டும் உருவாகியேதான் தீரும். வெளிச்சம் இல்லாம இருட்டும் இருக்க முடியாது. சரி இப்போ எதுக்கு இந்தத் தத்துவம்ன்னா ஒரு ஃப்ளோவுல வந்ததாலயும், சிட்டி அதிகமாகப் பஞ்ச் டயலாக் பேச மாட்டான்கிறதாலயும், தலைவர் படம்ன்னா பஞ்ச் டயலாக் சொல்லியே ஆகணும்கிறதாலயும் தான்.

சரி. ஒரு மாலை இளவெயில் நேரம் என்னாச்சுன்னா உலக நாடுகளோட தலைவர்கள் எல்லாம் திடீர்னு மாயமாக மறைஞ்சு போயிடறாங்க. எங்க போனாங்க, யார் கடத்தினாங்கன்னு ஒன்னுமே தெரியலை. இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டுமே இருக்காங்க. எப்படி ஒரே நாள்ல எல்லா நாடுகளோட தலைவர்களும் மறைஞ்சு போயிட்டாங்கன்னு உலகமே பயங்கர டென்சனா இருக்கும் போது ஏலியன்கள்கிட்ட இருந்து ஒரு செய்தி வருது. அவங்க பேசறப்ப, அந்தந்த ஊருக்கு ஏத்த மாதிரி அவங்கவங்க மொழியில வானத்துலயே சப்டைட்டில்ஸ் ஓடுது.
“உங்க தலைவர்களை நாங்கதான் கடத்திட்டுப் போயிருக்கோம். அவுங்களை வச்சு என்ன செய்யுறதுன்னு தெரியலை. சொல்லப்போனா, உங்ககிட்ட என்ன டிமாண்ட் பண்ணுறதுன்னு கூடத் தெரியலை. கடத்தினது கடத்தியாச்சு. இது ஒரு போர் மாதிரிதான். உங்க தலைவர்களை உங்களால் காப்பாத்த முடிஞ்சா நாங்க உங்களுக்கு அடிமை. இல்லைன்னா நீங்க எங்களுக்கு அடிமை. எங்களுக்கு அடிமையாகிட்டா எப்ப வேணா பூமிக்கு வந்து மனுசங்களைப் பிடிச்சுட்டுப் போய் எண்ணெய் சட்டில போட்டு வறுப்போம். ஓ. சாரி. இதெதோ நரகத்தைப் பத்தி பாட்டி சொல்ற கதை மாதிரி இருக்கு.
எங்ககிட்ட தோத்துட்டா பூமி முழுக்க எங்களோட கட்டுப்பாட்டில் வந்துடும். எங்க கிரகத்துல உருவாகுற குப்பையை முழுக்க இங்க கொட்டுவோம். அங்க எதெல்லாம் ஆபத்தான விஷயங்களா இருக்கோ அதெல்லாம் உங்களை வச்சு ஆராய்ச்சி செய்வோம். மொத்தத்துல பூமியை ஒரு சுடுகாடாகப் பயன்படுத்துவோம். ஒருவேளை உங்களால உங்க தலைவர்களை மீட்க முடிஞ்சா உங்க கிரகத்துக்கு எப்பவும் திரும்ப வர மாட்டோம். இதுக்கெல்லாம் 48 மணி நேரம்தான் டைம்.”

டக்குன்னு வானத்துலயே ஒரு கடிகார டிஸ்ப்ளே ஆக்டிவேட் ஆயிடுது. டைம் அதுல குறைஞ்சிட்டே இருக்கு. அந்த டிஸ்ப்ளேவுல ஏலியன் கிரகத்துல நடக்குற ஐபிஎல் விளம்பரம்லாம் அப்பப்ப ஓடுது. அவங்க ஊர் ஸ்டார் கிரிக்கெட்டர்ஸ் எல்லாம் ஷூ, செருப்பு, வாட்ச், கேட்ஜெட்ஸ் விக்கறாங்க. உலகம் அழியறதைக் காட்டிலும் இதைத்தான் நம்ம மக்களாலயும் இங்க இருக்கற கார்ப்பரேட்ஸ்னாலயும் தாங்கிக்க முடியல.
எனிவே, ஏலியன்ஸ்ட்ட இருந்து இப்படி ஒரு தகவலைக் கேட்டதும் மொத்த உலகமும் பயத்துல அலறுது. எல்லா அறிவியல் அறிஞர்களும் ஆளாளுக்கு ஒரு ஐடியாவைத் தூக்கிட்டு அங்குட்டும் இங்குட்டும் ஓடுறாங்க. ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் எல்லாம் உலகத்தைக் காப்பாத்த வருவாங்கன்னு ஹாலிவுட் ரசிகர்கள் எல்லாம் காத்துட்டு இருக்காங்க. அப்போ இந்த ஆபத்துல இருந்து காப்பாத்த சிட்டியால மட்டும்தான் முடியும்னு அடிச்சுச் சொல்றார் வசீகரன்.
உலகத் தலைவர்கள் எல்லோரும் கடத்தப்பட்டதால் தற்காலிகாமாக உருவாகியிருந்த தலைவர்கள் மாநாட்டில் ஏலியன்கள்கிட்ட இருந்து தலைவர்களை மீட்டு வரக் கூடிய பொறுப்பை சிட்டிகிட்ட ஒப்படைக்கிறாங்க.
இதுவரைக்கும் ஹாலிவுட்ல வந்த எல்லா ஏலியன் படங்களையும் 4K க்வாலிட்டில சிட்டி மைண்டல் ஏத்திவிடுறாங்க. அதை வச்சு ஏலியன்கள் எந்தச் சந்துல ஒளிஞ்சுட்டு இருப்பாங்கன்னு சிட்டிக்குத் தெரிஞ்சுடுது.
(கேமியோ ரோல்ல, இடையில நம்ம டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஒரு சீனுக்கு வந்துட்டு தனக்கே தெரியாத 'மல்ட்டிவெர்ஸ்' ரகசியங்களை சிட்டிகிட்ட கேட்டு தெரிஞ்சிட்டு போறார். இதுக்கு எப்படியும் தியேட்டர்ல விசில் பறக்கும்.)

பூமில இருந்து ஏலியன்கள் இருக்கிற கிரகத்தை சிட்டி கண்டுபிடிச்சுடுது. அப்புறம் அந்த கிரகத்துக்குப் போக ஸ்பெஷல் ராக்கெட்டை எலான் மஸ்க் உருவாக்கிக் குடுக்க அடுத்த ஒரு மணி நேரத்துல சிட்டியும் சிட்டியோட சில குட்டிகளும் ஏலியன்களோட உலகத்துல இருக்காங்க.
சிட்டி 3.0 வுக்கு இருக்கிற லேட்டஸ்ட் அப்டேட்டுக்குப் பேரு கமீல்யன் அப்டேட். அதாவது பச்சோந்தி அப்டேட். அந்த அப்டேட்டின் மூலமாக சிட்டியால எந்த உருவத்துக்கும் மாறிட முடியும். கூடுவிட்டுக் கூடு பாய முடியும். இல்ல. அது வேண்டாம். அது நாம 4.0-ல சேர்த்துக்குவோம். இப்போதைக்கு பச்சோந்தி அப்டேட் மட்டும் குடுப்போம்.
அந்த அப்டேட்டின்படி ஏலியன்கள் உலகத்துல நுழைஞ்சு ஏலியனாவே மாறி உலகத் தலைவர்கள் எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சுடுது. இங்க இருந்து அவுங்களை எப்படிக் கூட்டிட்டுப் போறதுன்னு பார்த்துட்டு இருக்கும் போதுதான் அங்க ஏலியன்கள் உலகத்தைப் பாதுகாத்துட்டு இருக்கிற ஒரு பெண் ரோபோட்டைச் சந்திக்கிற சந்தர்ப்பம் கிடைக்குது. அவங்க பாக்கறதுக்கு சிட்டியோட எக்ஸ் சனா மாதிரியே இருக்காங்க.
அப்போ அந்த ரோபோட் இன்ஸ்டாகிராம்ல தன்னோட செல்பியைப் போஸ்ட் பண்ணிட்டு இருக்கு.
இதைப் பார்த்த சிட்டி, ”24 மணி நேரமும் இன்ஸ்டாகிராம்ல இருக்கிற பொண்ணும், ஃபேஸ்புக்லயே படுத்துக்கிடக்கிற ஆம்பளையும் உருப்பட்டதா சரித்திரமே கிடையாது”ன்னு பஞ்ச டயலாக் சொல்லுது.
இந்த பஞ்ச் டயலாக்கைக் கேட்டதும் ஏலியன் ரோபோட்டோட வயித்துக்கும் தொண்டைக்கும் இடைல உருவமில்லாத ஒரு உருண்டை உருள ஆரம்பிக்க, பட்டாம்பூச்சி பறந்து, எலக்ட்ரானிக் போர்டு டிசைன்ல ஒரு டூயட் பாட்டு வருது. அனிருத் வாய்ஸ்ல ஹை பிட்ச் ரொமான்டிக் மெலடி குத்து! இந்தப் பாட்டுக்கு மட்டும் 100 கோடி பட்ஜெட். தியேட்டர் அலறுது.
பாட்டு முடிஞ்சதும் க்ளைமேக்ஸ். அதாவது, 48 மணி நேரம் முடிவடைஞ்சுட்டு இருக்கிற சமயத்துல பூமியை அழிக்க ஏலியன்களோட அரசன் தன்னோட படையைத் தயார் செஞ்சுட்டு இருக்கார். பூமில இருக்கிறவங்களுக்கு ஏலியன் உலகத்துல நடந்துட்டு இருக்கிற எதுவும் தெரியலை. சிட்டியை நம்பி மோசம் போயிட்டமேன்னு ரோட்ல நின்னு மக்கள் எல்லாம் அழுதுட்டு இருக்காங்க. புரொபசர் ரமணா வந்து பேசினாதான் மக்கள் அமைதியாவாங்கன்னு எவனோ 90ஸ் கிட்ஸ் கூட்டத்துல கத்த, அவரும் வந்து பேசி மக்களை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்.

ஏலியன்கள் உலகத்துல இருந்து பல்லாயிரக்கணக்கான ஏலியன் ரோபோட்டுகள் கையில் துப்பாக்கியோட பூமியை நோக்கிப் படையெடுக்கிறாங்க. உலகத் தலைவர்களையும் ஒரு விண்வெளிக் கப்பல்ல ஏத்திட்டு பூமிக்கு வர்றாங்க.
பூமியில் அவுங்களை இறக்கிவிட்டுட்டு, ஒவ்வொரு பெரிய நகரத்துக்கு மேலயும் பல்லாயிரக் கணக்கான ஏலியன் ரோபோட்டுகள் மக்கள் கூட்டத்தை நோக்கி இறங்கிவர்றாங்க.
லட்சக்கணக்கான மக்கள் இருக்கிற இடங்களைச் சுத்திவளைச்சுடறாங்க. இன்னும் சில நிமிடத்துல 48 மணி நேர கெடு முடியுது. கடிகாரம் ஓடிட்டே இருக்கு. பூமியில் இருந்து யாரும் போய் அந்தத் தலைவர்களைக் காப்பாத்தலைன்னா பூமிக்கு அழிவு நிச்சயம்னு எல்லோரும் அழறாங்க. நாம பூமியில் இருந்து அனுப்பின சிட்டி நம்மளை ஏமாத்திடுச்சுன்னு சிட்டி மேல கோபம். #ChittiBetrayed-ன்னு ஹேஷ்டேக் வைரல் டிரெண்டாகுது. அப்படி இருக்கும் போது தனி விமானத்துல சிட்டியும் அவரோட ஏலியன் உலகத்துக் காதலியும் பூமிக்கு வர்றாங்க.
48 மணி நேரத்தோட கடைசி நிமிடம் முடியுது. பூமியின் மக்கள் எல்லோரும் தலை குனிஞ்சு தங்களோட தோல்வியை ஒத்துக்கிட்டு அழிவை ஏத்துக்கத் தயாராகுறாங்க. ஏலியன் உலகத்தோட தலைவன் சத்தமாக ஃபயர்னு கத்துறார். அடுத்த நொடி மக்களைச் சுத்தி வளைச்சிருந்த எல்லா ரோபோட்டுகளும் தங்களோட துப்பாக்கிகளைக் கீழே போட்டுட்டு முட்டிப் போட்டு தங்களை மன்னிச்சிடுங்கன்னு பூமியில் இருக்கிற மக்களைப் பாத்துக் கேட்கிறாங்க.

என்னடா இதுன்னு புரியாம ஏலியன் உலகத்துத் தலைவர் செம்ம டென்சனாக இருக்கும் போது, ஒரு ஃப்ளாஷ்பேக் வருது. அதுல சிட்டியோட ஸ்டைல்ல மயங்குற ஏலியன் உலகத்துப் பாதுகாப்புத் தலைவியான ரோபோட், பூமியைக் காப்பாத்துறதுக்கு உதவ சம்மதிக்கிறாங்க. ஏலியன் உலக மெயின் சாப்ட்வேர்ல பச்சை சிப்பை மாட்டிவிட்டு, எல்லா ரோபோட்டுகளையும் சிட்டியோட கண்ட்ரோலுக்கு கொண்டுவந்து கொடுத்திடறாங்க.
அதனால், சிட்டி கொடுக்கிற கட்டளைகளைத்தான் ஏலியன் உலக ரோபோட்டுகள் செய்ய ஆரம்பிக்குது. இதனால் பூமிக்கு வர இருந்த மிகப்பெரிய ஆபத்து சிட்டி என்கிற சூப்பர் ஸ்டாரோட ஸ்டைல் மூலமாகத் தவிர்க்கப்படுது. மக்கள் ஆராவாரம் செய்றாங்க.
க்ளைமேக்ஸ்ல எப்படியும் பெரிய பைட்டு, கிராபிக்ஸ் செலவு, மக்கள் இறப்புன்னு பூமிக்கு பெரிய சேதாரம் ஆகுமேன்னு பயந்த தலைவர்கள் எல்லாம் இப்ப சிட்டியை ரொம்ப பாராட்டுறாங்க. பேட்மேன்ல இருந்து சக்திமான் வரைக்கும் எல்லாரும் #ChittiTheRealSaviour-ன்னு ஹேஷ்டேக் போடறாங்க. முக்கியமா, படத்தோட புரொடியூசர், க்ளைமேக்ஸ் பட்ஜெட் மிச்சம்ன்னு சந்தோஷப்படறார்.
ஏலியன் உலக அரசன் என்ன ஆனான், அவன் திரும்ப அவனோட ஊருக்குப் போனானா, இல்லை இங்க இருந்து பொட்டிக்கடை வச்சுப் பொழைச்சான்னாங்கிறத எல்லாம் கூடு விட்டுக் கூடு பாயக்கூடிய அப்டேட்டுகளோடு கூடிய சிட்டி வெர்சன் 4.0ல சொல்றோம்.