Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு - `சூர்யவம்சம் 2': ஒரே பாட்டுல பணக்காரன் ஆகலாம், ஏழையாக முடியாதா?

சூர்யவம்சம் 2

இந்த வாரம் இனிப்பா ஏதாவது செய்யலாமேன்னு பாயாசம் குடிச்சிட்டே யோசிச்சப்ப, அட பாயாசத்தை வெச்சே பாயாசம் போட்டற்லாமேன்னு தோணிச்சு. "சின்ராசு எட்றா வண்டிய..."ன்னு 'சூர்யவம்சம் 2' எடுக்க கிளம்பிட்டோம்.

Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு - `சூர்யவம்சம் 2': ஒரே பாட்டுல பணக்காரன் ஆகலாம், ஏழையாக முடியாதா?

இந்த வாரம் இனிப்பா ஏதாவது செய்யலாமேன்னு பாயாசம் குடிச்சிட்டே யோசிச்சப்ப, அட பாயாசத்தை வெச்சே பாயாசம் போட்டற்லாமேன்னு தோணிச்சு. "சின்ராசு எட்றா வண்டிய..."ன்னு 'சூர்யவம்சம் 2' எடுக்க கிளம்பிட்டோம்.

சூர்யவம்சம் 2

மிகப்பெரிய அரண்மனை மாதிரியான பழங்கால வீடு ஒண்ணு அப்படியே ஃப்ரேமுக்குள்ள வருது. வீட்டோட மிகப்பெரிய வாசல்ல ஒரு பெரிய அண்டா வைக்கப்பட்டு அதுல பாயாசம் தயாராகிட்டு இருக்கு. மிகப்பெரிய அண்டான்னா ஒரு அஞ்சாயிரம் லிட்டர் பிடிக்கிற அளவுக்கு மிகப் பிரமாண்டமான அண்டா அது. எதுக்காக இத்தனை பெரிய பாத்திரத்துல பாயாசத்தைத் தயாரிச்சுட்டு இருக்காங்க? அப்படி என்ன விசேஷம்? கல்யாணம் எதுவும் நடக்குதான்னு ஆச்சர்யமா பார்த்துட்டு இருக்கும் போது, அடுப்புல எரியற தீயை அப்படியே கிராபிக்ஸ் மாத்தி 'சூர்யவம்சம்-2' ன்னு டைட்டில் போடுறோம். (கண்டிப்பா அந்த 'லா... லா... லா' மியூசிக் இருக்கு!)

ஆமா, இந்த வாரம் நாம எடுக்கப் போறது 'பாயாசவம்சம்-2' தான். சாரி. 'சூர்யவம்சம்-2'. பொதுவா ஒரு படம் அது வெளிவந்த காலகட்டங்கள்ல பிரபலமாக இருந்திருக்கலாம். மிகப்பெரிய வெற்றியைக் கூட அடைஞ்சிருக்கலாம். ஆனா, இந்த மீம்ஸ், ரீல்ஸ் காலத்துல கூட இன்னும் குறையாமல் கன்டென்ட் குடுத்துட்டே இருக்கிற எவர்க்ரீன் படங்கள்ல 'சூர்யவம்சம்' முக்கியமான படம்.

ஒரு பாட்டுல பணக்காரனா ஆகுறது, என் குடும்பத்துல எல்லோரும் வந்தாச்சுன்னு சொல்லி சின்ராசுவை அவமானப்படுத்தறது, உலகம் எவ்ளோ வேகமா சுத்துது பாத்தீங்களா, பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரண்ட், இட்லி உப்புமான்னு இன்னமும் சோஷியல் மீடியாவுக்குப் புதுப் படங்களுக்கு நிகரான மீம்ஸ் மெட்டீரியல் குடோனா 'சூர்யவம்சம்' படம் இன்னும் முன்னணிலதான் இருக்கு.

சூர்யவம்சம் 2
சூர்யவம்சம் 2

எதெல்லாம் இன்னும் எவர்க்ரீனா இருக்கோ அதுல இருந்தே பார்ட்-2 வைத் துவங்கலாம்னு எங்களோட பதினேழு பேர் கொண்ட குழுவுல ஒரு வாக்கெடுப்பு நடத்தினோம். அதுல பதினெட்டு பேர் 'பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரண்ட்'தான் இன்னும் ஞாபகம் இருக்குன்னு சொன்னதால படத்தோட டைட்டில் கார்டுலயே பாயாச அண்டாவை வச்சு படத்தை ஆரம்பிச்சாச்சு. இனி அண்டாக்குள்ள... சாரி... கதைக்குள்ள குதிச்சுட வேண்டியதுதான்.

பாயாசத்தை வச்சு என்னத்த கதை எழுதுறனுன்னு எல்லாம் குழம்பக் கூடாது. வாங்க, ஃபன் பண்றோம். டைட்டில் கார்டெல்லாம் முடிஞ்சு கதை ஆரம்பிக்குது. எதுக்கு யானைக் கூட்டத்தை விருந்துக்குக் கூப்பிட்டு பாயாசத்தால அதுங்க வயித்தை நிரப்பி அனுப்புற அளவுக்கு இத்தனை லிட்டர் பாயாசம்னு பெரிய வீட்டுக்கு வெளியே நிக்கற ஒரு சைடு ஆக்டர் கேக்குறார்.

சக்திவேல் ஐயா குடும்பமும் சின்ராசு குடும்பமும் இணையக் காரணமா இருந்ததே இந்தப் பாயாசம்தான். அதனால்தான் ஒவ்வொரு வருசமும் இவுங்க பாயாச தினம் கொண்டாடுறாங்க. அந்த நாள் ஊர்ல இருக்கிற எல்லோருமே பாயாசம்தான் குடுச்சாகணும். அது அந்த ஊரோட எழுதப்படாத விதியாகவே இருந்துட்டு இருக்கு. அந்த ஊர்ல யார் வீட்டுல பாயாசம் காய்ச்சினாலும் அதுக்கு சக்திவேல் ஐயா குடும்பமதான் ஸ்பான்ஸர் பண்ணுவாங்க. பாசமான குடும்பமா இல்ல பாயாசமான குடும்பமான்னு தெரியாமயே ஊர் மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க. இப்படியெல்லாம் ஒரு பெருசு சொல்ல சொல்ல, திரும்ப நாம லா... லா... லா மியூசிக் போடறோம்.

சூர்யவம்சம் 2
சூர்யவம்சம் 2

இந்தச் சமயத்துல சின்ராசுவோட அப்பா சக்திவேல் ரெடிமேட் பாயாசம் உருவாக்குற கம்பெனி ஒண்ணைத் தொடங்குறார். தன்னோட பேரன் பேர்ல உருவாகுற அந்த கம்பெனியை எதிர்காலத்துல அவரோட பேரனே வந்து நிர்வகிச்சு உலகத்துலயே மிகப்பெரிய பாயாசக் கம்பெனியா அதை கொண்டுவரணும்னு விரும்புறார்.

”பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரண்ட்”ன்னு தாத்தாவுக்குப் பாயாசம் கொடுத்து குடும்பத்தை இணைச்ச அந்தக் குட்டிப் பையன் இப்போ வெளிநாட்டுல இருந்து படிச்சு முடிச்சுட்டு இந்தியாவுக்கு வர்றான். அவனுக்கு ஒரு தனி இன்ட்ரோ சாங்க், ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல... (ஃபாரின்ல படிச்சவன்ல!)

பேரன் வந்ததும் தன்னோட பாயாச கம்பெனியை அவன்கிட்ட ஒப்படைச்சுட்டு தினமும் ஒரு லிட்டர் பாயாசம் குடிச்சுட்டு ஹாயா சந்தோசமா இருக்கலாம்னு காத்திருக்கார் சக்திவேல். படத்துல ட்விஸ்ட்டே வரலையேன்னு எல்லோரும் கடுப்பாகி தம் அடிக்கக் கிளம்பற அந்த நேரத்துல, ஒரு பெரிய ட்விஸ்ட் ஒண்ணு வருது.

வெளிநாட்டுல இருந்து வர்ற சின்ராசுவோட பையனுக்கு கூகுள்ல பெரிய வேலை ஒண்ணு கிடைக்குது. சுந்தர் பிச்சை ஆஃபர் லெட்டர் எல்லாம் ரெடி பண்ணிட்டு காத்திருக்கார். அதனால் சின்ராசு தன்னோட பையன் கூகுள்லதான் போய் வேலை பாக்கணும்னு விரும்புறார். ஆனா, சின்ராசுவோட அப்பாவோ தன்னோட பேரன் பாயாச கம்பெனியை நடத்தணும்னு விரும்புறார்.
சூர்யவம்சம் 2
சூர்யவம்சம் 2

ஒரு கட்டத்துல சின்ராசுவுக்கும் சக்திவேலுவுக்கும் எப்பவும்போல கருத்து வேறுபாடு, சண்டை! 'சூர்யவம்சம்' முதல் பார்ட்ல க்ளைமேக்ஸ் சண்டைல சக்திவேல் ஒரு வசனம் சொல்வார். “என்ற பையனா இருந்தா இப்படி அடி வாங்கிட்டு நிக்க மாட்டான்”னு. இங்க அதையே நாம நமக்குப் பயன்படுத்திக்கிறோம்.

“என்ற பையனா இருந்தா பாயாச கம்பெனியை நடத்த மாட்டான்”னு சின்ராசு கோவத்துல சொல்லிடறார். ஃப்ளாஷ்கட்ல எல்லா நடிகர்களோட ஷாக்கான முகங்களை ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்ல காட்டறோம். அதே கோவத்துல ”என்ற பேரனா இருந்தா கூகுள்ல வேலைக்குப் போக மாட்டான்”னு சக்திவேல் ரிப்ளை பன்ச் சொல்றார்.

பார்ட் ஒண்ணுலதான் தன்னோட பையனுக்கு என்ன வேணும், என்ன பிடிச்சிருக்குன்னு கூடப் புரிஞ்சுக்காம லூசுத் தனமா சக்திவேல் அதிகாரம் பண்ணிட்டு இருந்தார்னா பார்ட்-2 வுலையும் அவர் கேரக்டர்ல எந்த மாற்றமும் இல்லை. அதே கேரக்டரை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து சின்ராசுவும் தன்னோட பையனை ப்ளாக்மெயில் பண்ணுறார்.

இந்த இடத்துல படம் ரொம்ப சோகமா மாறுது. புது பாட்டு ஒண்ணு அதே எஸ்.ஏ.ராஜ்குமார் மியூசிக்ல அழ வைக்கற மாதிரி சோகமா போடறோம். பாயாசத்தால் இணைந்த குடும்பங்கள் அதே பாயாசத்தால் பிரியறாங்க. படம் பாக்குறவங்க எல்லோரோட கண்லயும் தண்ணியை வர வைக்கிறோம்.

சூர்யவம்சம் 2
சூர்யவம்சம் 2

இப்போ வரைக்கும் பணக்காரக் குடும்பமா இருந்த சக்திவேல் - சின்ராசு குடும்பம் இந்தப் பாட்டு முடியுறதுக்குள்ள ஏழைக் குடும்பமா மாறிடுறாங்க. அது எப்படி? ஏங்க... ஒரே பாட்டுல பணக்காரனா ஆகும்போது, ஒரே பாட்டுல ஏழையா மாறிட முடியாதா? இப்படி ஒரே பாட்டுல ஏழையும் ஆக முடியும்னு காட்டி, வாழ்க்கை ஒரு வட்டம்னு மக்களுக்கு எடுத்துச் சொல்றோம். எது எங்கே தோன்றியதோ அது அங்கேயே மறையும்னு எல்லாம் ஸ்க்ரீன்ல ஒருத்தர் வந்து தத்துவம் பேசுறார். 'புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்' டிஸ்க்ளைமர் மாதிரி இதை ரிப்பீட்டடா போட்டு மக்களை அலறவிடுறோம்.

சரி. பாட்டு முடிஞ்சுது. இப்போ ஊருக்கெல்லாம் பாயாசம் வச்சு கொடுத்துட்டு இருந்த சக்திவேல் தனக்காக ஒரு டம்ளர் பாயாசம் கூட கிடைக்காத ஏழ்மை நிலைக்கு வந்துடறார். அந்தப் பக்கம் சின்ராசுவோட பஸ்ஸு கம்பெனிலயும் பெரிய வருமானம் இல்லை. காட்டன் மில்லும் நஷ்டத்துல ஓடுது. கலெக்டர் அம்மாவும் ரிட்டர்யர்ட் ஆகிடறாங்க. எல்லோர்கிட்டவும் இப்ப மொபைல் போன் இருக்கிறதால பஸ்ஸுல படம் பார்க்க யாரும் வர்றதில்லை. பொள்ளாச்சி டு புளியம்பட்டி டிக்கெட்டே எட்டு ரூவா ஆயிட்டதாலயும், பெட்ரோல் விலை ஜாஸ்தி ஆயிட்டதாலயும் மக்கள் வீட்டை விட்டே வெளியே வர்றது இல்ல. அதனால் அதிகமான கூட்டமும் இல்லாம ட்ரைவரும் கண்டக்டரும் மட்டும் பஸ்ஸை எடுத்துட்டு குறுக்கும் மறுக்கும் ஓட்டிட்டு இருக்காங்க. பெரிய நஷ்டம் வருது.

அப்பதான் நம்ம கலெக்டர் அம்மாவுக்கு ஒரு செம ஐடியா வருது. இப்போ மறுபடி அந்த 'நட்சத்திர ஜன்னலை' பாட்டை ரீமிக்ஸ் பண்ணி பணக்காரன் ஆகிடலாம்னு ஐடியா குடுக்கிறாங்க. ஆனா, சென்னை வந்து மியூசிக் டைரக்டர்களைப் பார்க்கிற அளவுக்கு அவுங்ககிட்ட அப்போ காசு இல்லைன்னு நினைச்சு ரொம்ப வருந்துறாங்க.

இந்த டைம்ல சின்ராசுவோட பையன் ஒரு இன்டர்வியூவுக்காக பெங்களுரு போறான். அந்த இன்டர்வியூவுல செலக்ட் ஆகாமல் ரொம்ப விரக்தியா ஆஃபீஸ்ல இருந்து வெளிய வர்றான். அங்க ஒரு டாஸ்மாக் சாங்க். ரொம்ப டான்ஸ் ஆடினதுல செம்மயா பசிக்குது. ஒரு ஹோட்டலுக்குப் போய் ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கான். எடுத்தவுடனேயே பாயாச டம்ளரைக் கொண்டு வந்து வைக்கிறாங்க. கடுமையா கோபமடையுற சின்ராசுவோடு பையன் தன்னையும் மீறி அந்தப் பாயாச டம்ளரை நோக்கிப் பேச ஆரம்பிக்கிறான்.

சூர்யவம்சம் 2
சூர்யவம்சம் 2

“உன்னாலதான் எல்லாம் போச்சு. நானும் என் குடும்பமும் பிரியுறதுக்கு நீதான் காரணம். உன்னை என் வாழ்க்கையில் பாக்கவே கூடாதுன்னு நினைச்சேன்”னு திட்ட ஆரம்பிக்கிறான். அங்க இருந்து வெளிய போலாம்னு பார்க்கிறான். ஆனா, பசி ரொம்பவும் இருந்ததால் பாயாச டம்ளரை ஒதுக்கி வச்சுட்டு, “என்ற குடும்பத்துல உனக்கு இடம் இல்லை. கூட்டு, பொறியல், சாம்பார், ரசம்னு என்ற குடும்பத்துல எல்லோரும் வந்தாச்சு”ன்னு சொல்லிட்டு மற்ற அயிட்டங்களை அள்ளி சாப்பிடறான். பாயாச டம்ளரை மட்டும் தனி ஷாட்டா முதல் பார்ட்ல சின்ராசைக் காட்டின மாதிரி காட்டி, அதுக்கு ஒரு சோக மியூசிக் போடுறோம். 'பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரண்டு'ன்னு பார்ட்-1 ல சொன்ன டயலாக்கையும் இடைல சொருகிவிடுறோம். பாக்குறவங்க பாயாசத்தோட இந்த நிலையை நினைச்சு அழுதுட்டு இருக்காங்க.

அது சரி. சின்ராசுவோட பையனுக்குதான் ஆல்ரெடி கூகுள்ல வேலை கிடைச்சுடுச்சுன்னு முன்னாடி சொன்னோமே? அப்புறம் எதுக்கு இன்டர்வியூவுக்கு எல்லாம் வர்றான்னு இப்போதான் எனக்கே தோணுது. சரி. ஒண்ணு பண்ணுவோம். அந்த ஒரே பாட்டுல ஏழை ஆனாங்க இல்லையா, அதே பாட்ல ஒரு சீனை சேர்த்துப்போம். அதுல சின்ராசு பையன் ஆஃபர்க்குப் பதில் சொல்ல லேட் ஆனதால, சின்ராசுவோட முறைப்பொண்ணு கௌரியோட பையனுக்கு அந்த வேலை போயிடுது. ஏன்னா, கௌரி இப்ப சாதாரண கௌரி இல்ல. அவங்கதான் அகிலாண்டேஸ்வரி அம்மாவாச்சே! சுந்தர் பிச்சை கிட்டயே பேசி தன் பையனுக்கு வேலையை லாக் பண்ணிடறாங்க. பண்ணிட்டு சின்ராசுக்கே போன் பண்ணி சீரியல் வில்லி மாதிரி சிரிக்கிறாங்க.

சரி, திரும்ப சின்ராசு பையன்ட்ட வருவோம். அப்போ ஒரு ரொமாண்டிக் மியூசிக் வருது. ஒரு கை அந்தப் பாயாச டம்ளரை எடுக்குது. அப்புறம் அப்படியே அந்தப் பொண்ணோட அழகான முகத்த க்ளோசப்ல காட்டி ஹீரோயினை அறிமுகம் செய்யுறோம். ஏது செகண்ட் ஆஃப்ல ஹீரோயினான்னு நீங்க கேட்கலாம். படம் இன்னும் அடுத்தடுத்த பார்ட் வரும்ங்கறதால திஸ் இஸ் ஜஸ்ட் தி பிகினிங்.

“ஏன் பாயாசத்தை வச்சுட்டீங்க? பிடிக்காதா?” அப்படின்னு ஹீரோயின் கேட்க,

“நாம யாரை அதிகமா விரும்புறமோ அதைத்தான் அதிகமா வெறுப்போம்னு கீதை சொல்லியிருக்கு...” சின்ராசு பையன் சொல்றான்.

“இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசுறீங்க? பாயாசம் பிடிக்காதான்னு தானே கேட்டேன்..?”

“அதுக்கான பதில்தான் இது.”

சூர்யவம்சம் 2
சூர்யவம்சம் 2

“ஒண்ணும் புரியலை. சரி. சீக்கிரமா உங்க ஃப்ளாஷ்பேக்க சொல்லுங்க. சும்மா கட் ஷாட்டா ஃபாஸ்ட் ஃபார்வேர்டுல சொன்னா போதும். இடையில பாட்டு எல்லாம் வேண்டாம். ஏன்னா நாம அல்ரெடி க்ளைமேக்ஸை நெருங்கிட்டோம்.”

சின்ராசுவோட பையன் தன்னைப் பத்தியும் தன்னோட குடும்பத்தைப் பத்தியும் விளக்கிட்டு, பாயாசத்தால் பிரிஞ்சு போன பாசக்காரக் குடும்பம்னு சொல்லி முடிக்கிறார்.

அந்தப் பொண்ணு கண்ணை மூடி யோசிக்குது. டக்குனு ஒரு ஐடியா வந்துடுச்சு.

“இப்பவே உங்க ஊருக்குக் கிளம்புங்க. நான் நேரா சென்னை போய் ஒரு மியூசிக் டைரக்டரை மீட் பண்ணி 'நட்சத்திர ஜன்னல்' பாட்டை ரீமிக்ஸ் பண்ணித் தரச் சொல்லிட்டு அங்க வந்துடறேன். கவலைப்படாதீங்க அவரு என் ஃப்ரெண்டுதான். நீங்க பணக்காரனானதும் அவருக்கு சம்பளம் கொடுத்தா போதும்.”

சின்ராசு பையனுக்கு பெரிய நம்பிக்கை வருது.

அடுத்த சீன்ல சின்ராசுவோட பையனும், அந்தப் பெங்களூர் பொண்ணும் சின்ராசுவோட பஸ் கம்பெனி முன்னாடி நிக்குறாங்க. பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு போஸ்டர் ஒட்டியிருக்கு. அதுல தங்களோட பஸ்ல பயணம் செய்யுற எல்லோருக்கும் ஒரு டம்ளர் பாயாசம் இலவசம்னு போட்டிருக்காங்க. இது மிகப்பெரிய சக்சஸ் ஆகுது. ஏன் ஆகுது? ஏன்னா, கடைசி சீட்ல மியூசிக் டைரக்டர் இருக்கார். பாட்டு ரெடின்னு சொல்லி அவர் கண்ணடிக்க, 'நட்சத்திர ஜன்னல்' ரீமிக்ஸ் பாட்டு பஸ்ல ஒலிக்க ஆரம்பிக்குது. அதுதான் நம்ம சக்சஸ் ஃபார்முலா! பார்ட் -1 ல எப்படி டிவி வச்சது மிகப்பெரிய சக்ஸஸ் ஆச்சோ, அந்த மாதிரி பார்ட்-2 ல பாயாசம் மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்குது. முதல் பார்ட்ல ஒதுக்கிவெக்கப்பட்ட சின்ராசு ஜெயிச்ச மாதிரி, இதுல ஒதுக்கி வைக்கப்பட்ட பாயாசம் ஜெயிக்குது.

சூர்யவம்சம் 2
சூர்யவம்சம் 2

பஸ்ல ஏறுறவங்க எல்லோருக்குமே பாயாசம் கொடுத்துட்டே போறாங்க. நிறைய பாயாச டம்ளர்கள், பயணிகள் கூட்டம்... இப்படியே போய் கடைசில இந்தப் பாட்டுலயும் பழையமாதிரி பணக்காரங்களா ஆகிடறாங்க.

இப்போ பஸ் கம்பெனியும் செம்ம லாபத்துல போகுது. பாயாச கம்பெனியோட டேஸ்ட்டும் செம்மயா இருக்கிறதால அந்த வியாபாரமும் பிச்சுக்கிட்டு போகுது. பாட்டு முடியுது. பிரிந்த குடும்பங்கள் இணைஞ்சுடறாங்க. அகல் விளக்கெல்லாம் வெச்சு 'நட்சத்திர ஜன்னலில்...' பாட்டு கன்டினியூ ஆகுது. சக்திவேலும் சின்ராசுவும் மறுபடி கட்டிப் பிடிக்க, சின்ராசுவோட பையனோட காதல், கல்யாணத்துல முடிய 'சுபம்' போடுறோம்!

ஒரு பாட்டை இவ்ளோ தடவையா போட்டு டார்ச்சர் பண்ணுவீங்கன்னு மக்கள் தெறிச்சு ஓடறாங்க.