Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2-ல யாரு நீலாம்பரி, யாரு வசுந்தரா? வெல்கம் டு தனியப்பாவின் `தனிவர்ஸ்'!

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2

இந்த வாரம் சீக்குவல் எடுக்கறோம்னு 'படையப்பா'வை டார்ச்சர் பண்ணலாம்னு முடிவாச்சு. அதுலயே கிரானைட் பத்தியெல்லாம் வர்றப்ப, இப்ப கொஞ்சம் அட்வான்ஸா போலாமேன்னு கிரிப்டோ கரன்சி, மெட்டாவர்ஸ் மாதிரி தனிவர்ஸ்னு 'படையப்பா'வை டெக்னோ படமா மாத்தியாச்சு!

Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2-ல யாரு நீலாம்பரி, யாரு வசுந்தரா? வெல்கம் டு தனியப்பாவின் `தனிவர்ஸ்'!

இந்த வாரம் சீக்குவல் எடுக்கறோம்னு 'படையப்பா'வை டார்ச்சர் பண்ணலாம்னு முடிவாச்சு. அதுலயே கிரானைட் பத்தியெல்லாம் வர்றப்ப, இப்ப கொஞ்சம் அட்வான்ஸா போலாமேன்னு கிரிப்டோ கரன்சி, மெட்டாவர்ஸ் மாதிரி தனிவர்ஸ்னு 'படையப்பா'வை டெக்னோ படமா மாத்தியாச்சு!

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
படையப்பாவுக்கு ரெண்டாவது பார்ட் எடுத்தே ஆகணும்னு யோசிச்சுட்டு இருந்தப்பதான் அந்தப் படத்தோட கடைசில வில்லியான நீலாம்பரி துப்பாக்கியால தன்னைத் தானே சுட்டுக்கிட்டு இறந்து போனது ஞாபகம் வந்துச்சு. வில்லன் இறந்துட்டதுக்கு அப்புறம் எப்படி இரண்டாம் பாகத்தை எடுக்க முடியும்னு திருதிருன்னு முழிச்சுட்டு இருந்தப்பத் தான் நீலாம்பரியோட உடலை கடைசில யாரும் எரிக்கவோ, புதைக்கவோ செய்யலைன்னு தலைக்கு மேல ஒரு டியூப்லைட் எரிஞ்சுச்சு.

அப்போ என்ன பண்றோம்னா... நீலாம்பரி இறந்துட்டதா நினைச்சுட்டு படையப்பா நீலாம்பரியோட கண்களை மூடிட்டு, ஒரு பன்ச் பேசிட்டு நகர்ந்து போனதும் நீலாம்பரி டக்குனு கண்ணைத் திறந்து பார்க்கிறாங்க. அங்க டொய்ங்ன்னு ஒரு மியூசிக் போட்டு 'படையப்பா-2' ன்னு டைட்டில் போட்டு படத்தை ஸ்டார்ட் பண்றோம்.

ஆனாலும் கூட, இந்தப் படத்துல படையப்பாவுக்கு வயசாகி, பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் செஞ்சு முடிச்சிருப்பார். உன்னை எப்படியாச்சும் அடைஞ்சே தீருவேன்னு நீலாம்பரி விட்ட சவாலோட வீரியத்துக்கு இந்தக் கதை நல்லா இருக்காது. இதையெல்லாம் யோசிச்சுப் பாக்குற நீலாம்பரி அடுத்த பிறவியிலாச்சும் உன்னை அடைஞ்சே தீருவேன்னு மறுபடி ஒரு தடவை சொல்லிட்டு கண்ணை மூடி இறந்து போறாங்க.

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2

25 வருடங்களுக்குப் பிறகுன்னு ஒரு டைட்டில் திரையில் தோன்றி மறைய...

அமெரிக்காவில் இருந்து பூமிகான்னு ஒரு பொண்ணு ஸ்டைலாக வந்து இறங்குறாங்க. அவுங்க யார்னு இப்போ சொல்லப் போறதில்லை. ஆனா, படையப்பாவுல இத்தனை ஸ்டைலா அமெரிக்காவுல பந்தாவா வந்து இறங்கினது நீலாம்பரிங்கிறதால இவுங்க நீலாம்பரியாகக் கூட இருக்கலாம்.

இந்தியாவுலயே மிகவும் புகழ்பெற்ற ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரான தனியப்பாவோட சொந்தக்காரப் பொண்ணுதான் இவுங்க. 'என் வழி தனி வழி'ன்னு படையப்பாவுல பன்ச் டயலாக் பேசினதால அடுத்த பிறவியில் அவர் பேரே ’தனியப்பா’ன்னு வச்சுடறாங்க. அதுவுமில்லாம படையப்பா படத்துல அவரைச் சுத்தி ஒரு படையே இருக்கும். அதனால் படையப்பா. இதுல அவர் 90ஸ் கிட்ஸ்ங்கறதாலயும், அந்த சிங்கங்கள் இன்னும் பெரும்பாலும் சிங்கிள்தாங்கறதாலயும் படையப்பா இந்தப் படத்துல தனியப்பாவா படம் காட்டுறார்.

சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்து கிரிப்டோ மைனர், கிரிப்டோ இன்வெஸ்டர், கிரிப்டோ ட்ரேடர்னு முன்னேறிட்டார்ன்னு 'வெற்றிக் கொடி கட்டு' பாட்டை ரி-மிக்ஸ் பண்ணி இன்ட்ரோ சாங்க் ஆக்கறோம். இப்படிப் பல முகம் வைத்திருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் இன்வெஸ்டர்தான் நம்ம ஹீரோவான தனியப்பா. ’தனிகாயின்’ன்னு ஒரு காயினை உருவாக்கி அது பிட்காயினை விடவும் ஃபேமஸாக கிரிப்டோ உலகத்தில் இயங்கிட்டு இருக்கு. நாளுக்கு நாள் தனியப்பாவோட சொத்து மதிப்பு உயர்ந்துட்டே போகுது. எலான் மஸ்க் எல்லாம் கெஸ்ட் ரோல்ல வந்து தனியப்பாகிட்ட கடன் வாங்கிட்டு போறார். நாசா மிஷனுக்குத் தனியப்பாதான் ஸ்பான்ஸர். அடுத்த ராஜமௌலி படத்துக்கும் அவர்தான் தயாரிப்பாளர்.

இதுக்கு இடையில அவர் கம்பனியில் வேலை பார்த்துட்டு இருந்த காவியான்னு ஒரு பொண்ணு தனியாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஒண்ணை ஆரம்பிக்கப் போறதாகச் சொல்லிட்டு கம்பெனியை விட்டு வெளியே போயிடுது.

அந்தப் பொண்ணு போன சில நாள்களுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் ஒரு பட்ஜெட் போடுறாங்க. அதுல கிரிப்டோ கரன்சிகளுக்கு 30% வரி போடுவோம்னு புது ரூல் கொண்டுவராங்க. எப்படியோ வரி போட்டுட்டாங்க. வரி போட்டாச்சுன்னாவே அது அங்கீகரிக்கப்பட்ட சொத்தாக மாறிடும்னு தனியப்பா சந்தோஷப்படுறார்.
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2

ஆனால், அவுங்க அதுக்குப் பதிலா இன்னும் கூடுதலா சில வரிகளைப் போடுறாங்க.

அதாவது, சொத்தே இல்லாத ஒரு சொத்துக்கு 30% வரி போடுறதோட மட்டும் இல்லாம, அப்படி அங்கீகரிக்க முடியாத ஒரு சொத்தை வச்சிருக்கிறதுக்காக 20% வரி விதிக்கிறாங்க. அது போக, வரி விதிச்சும் கூட லீகலாக ஒத்துக் கொள்ள முடியாத சொத்துக்களின் மேல எக்ஸ்ட்ராவாக 15% வரி விதிக்கிறாங்க. இதைத் தாண்டி, இப்படிக் கண்ணுக்குத் தெரியாத ஒண்ணை காசுன்னு ஒத்துக்கவா, ஒத்துக்க வேண்டாமான்னு கவர்மென்ட்ட குழப்பிவிட்டதுக்காக ‘எங்ககிட்டயே வேலை வாங்குறியா?’ன்னு தனியா ஸ்பெஷல் வரி ஒண்ணும் போடுறாங்க. மொத்தமாகக் கூட்டி, அதுக்கு ஜி.எஸ்.டி 18% பர்சன்ட் போட்டுப் பார்த்தா 99% வரி கட்ட வேண்டியதாக இருக்கு. இன்னும் ஒரு பர்சன்ட் மிச்சம் இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்கும் போது கிரிப்டோவை அங்கீகரிக்கவா வேண்டாமான்னு முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். அதுக்கு நாட்டில் இருக்கிற கிரிப்டோ இன்வெஸ்டர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு பர்சன்ட் கிரிப்டோ பேலன்சை கவர்மெண்ட்டுக்கு கொடுக்கணும்னு மொத்தமா ரவுண்டு ஆப் பண்ணிடறாங்க.

இதனால் தன்னோட மொத்த சொத்தையும் இழந்துட்டு நிஜமான தனியப்பாவா, இன்டர்வெல் பிளாக் 'சிவாஜி'யா வீட்டுக்கு வர்றார் படையப்பா 2.0. வீட்டுல அமெரிக்காவுல இருந்து வந்த அவரோட சொந்தக்காரப் பொண்ணு கால் மேல கால் போட்டு பந்தாவா உட்கார்ந்துட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் அவர் கம்பெனியில் இருந்து வெளியே போன காவியாவும் காத்துட்டு இருக்காங்க.

தன்னோட சொத்துக்களை எல்லாம் இழந்த சோகத்துல வர்ற தனியப்பாவுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் சொல்றாங்க அந்த அமெரிக்க ரிட்டர்ன். காவியா தன்னோட கம்பனியில் உடனே வந்து சேர்ந்துக்கச் சொல்றாங்க. ஏன், கம்பெனியைக் கூட தனியப்பா பேருக்கு எழுதித் தரவும் தயாராக இருக்கிறதாகச் சொல்றாங்க. அதெல்லாம் வேண்டாம்னு மறுத்துடறார் தனியப்பா. தன்னால இந்த இழப்புல இருந்து மீண்டு வர முடியும்னு சொல்லிட்டு எழுந்து உள்ள போறார். அப்போ பூமிகா இன்ஸ்டாகிராம்ல ஒரு போட்டோ அப்லோடு பண்ணிட்டு இருக்காங்க. அதைப்பார்த்த தனியப்பாவுக்கு பன்ச் சொல்லியே ஆகணும்னு தோணுது. அவர் மனசுக்குள்ள எப்பவும் அணையாமல் எரிஞ்சுட்டே இருக்கிற பன்ச் டயலாக் ஃபேக்டரி ஏற்கெனவே ஒரு டஜன் பன்ச் டயலாக்குகளை தயார் பண்ணி வச்சிருக்கு.

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
“24 மணி நேரம் இன்ஸ்டாகிராம்ல இருக்கிற பொண்ணும், ஃபேஸ்புக்லயே படுத்துக் கிடக்கற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது”ன்னு சொல்றார்.

இதைக் கேட்ட பூமிகா, ”அப்படிப் பார்த்தா ஃபேஸ்புக் ஓனர் மார்க் கூடத்தான் எந்நேரம் ஃபேஸ்புக்லயும், இன்ஸ்டாகிராம்லயும் இருக்கார். அவர் சொத்து மதிப்பு உனக்குத் தெரியுமா? சும்மா ஏதோ அட்வைஸ் பண்ணனும்னு இப்படி ஒளறிட்டு இருக்கக் கூடாது! இப்பல்லாம் யூடியூப், இன்ஸ்டாகிராம்ல ஃபேமஸா இருக்கிறவங்க லட்சத்துல சம்பாதிக்கிறாங்க” ன்னு சொல்றாங்க.

பூமிகா சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. சோஷியல் மீடியாவை முழுக்க முழுக்க நம்பி அதுல வருமானம் பார்த்தே பல பேர் நல்லா சௌகர்யமாக வாழ்றாங்க. இதை யோசிச்சுப் பார்த்த தனியப்பா, ’இவ நீலாம்பரியா இல்ல வசுந்த்ராவா?’ன்னு குழம்பிட்டே அங்க இருந்த காவியாவைப் பாக்கிறார்.

“தனியப்பா, நீ என் கம்பெனியோட தனியாள் படையப்பா. நீ வந்து சேர்ந்துடு. உனக்காகவே இந்தப் பிறவி எடுத்து வந்திருக்கேன். ஏழேழு ஜென்மத்திலும் நான் உனக்கு மனைவியாக இருக்க விரும்புறேன். என் சொல்படி கேட்டா உன் பிரச்னைகள் எல்லாம் இப்பவே தீர்ந்திடும். வா. வந்து என்னோட ஆன்லைன் ரம்மி கேம்ஸ் நடத்துற கம்பனில வந்து சேர்ந்துடு. ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கான ரூபாய்கள் கொட்டுற ஒரு தொழில் இது. உன் கட்டுப்பாட்டில் கம்பெனியும், என் கட்டுப்பாட்டில் நீயும் வந்துட்டா உலகத்தையே நாம விலைக்கு வாங்கிடலாம். வா தனியப்பா. வந்துடு. உனக்கு என்னை விட்டா வேற நாதியில்லை!”

காவியா இப்படிச் சொன்னதும் இதுதான் நீலாம்பரியா இருக்கும்னு அவருக்கும் நமக்கும் புரிஞ்சுடுது. தனியப்பா காவியாவைப் பார்த்து தன்னோட ஸ்டைல்ல சிரிக்க, இந்த ட்விஸ்ட்டோட இன்டர்வெல் விடறோம்.

இதுக்கு அப்புறம் பல்வேறு சமயங்கள்ல தனியப்பாவை லவ் டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறாங்க காவியா. தனியப்பாவைக் கவுக்கறதுக்காக காவியா செய்யுற ஒவ்வொரு முயற்சிலயும் காவியா தன் காலைத் தானே வாரிவிட்டுக் குப்புற விழுற மாதிரி ஆகிடுது.

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2

இதே சமயத்துல பூமிகாவோட நெருக்கமாகப் பழகி, பூமிகாவும் தனியப்பாவும் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க. ஆனா, படையப்பாவுல இருந்த மாதிரி பூமிகா பழைய அடக்கமான பொண்ணாக இல்லாமல் தைரியமான, தெளிவான பொண்ணாக இருக்காங்க.

ஒரு தடவை பாம்பைப் பார்த்து அதைப் பிடிக்கப் போற தனியப்பாவைத் தடுத்து நிறுத்தி,

“இப்போ எதுக்குப் பாம்பைக் கைல பிடிக்கிற? இதெல்லாம் வீரம்னு உனக்கு யார் சொல்லிக் குடுத்தது? நூறு பாம்பைப் பிடிச்ச மனுசனவே நூத்தி ஒண்ணாவது பாம்பு கடிச்சு, கோமாவுக்குப் போய் திரும்பிட்டு இருக்கார். இப்போ எதுக்கு வெட்டியா இந்த வீர சாகசமெல்லாம்?” ன்னு சொல்ல தனியப்பா ஸ்தம்பிச்சுப் போய் நின்னுடறார்.

"என் பேரு தனியப்பா"ன்னு ஒரு சாங் போடலாமேன்னு காத்துட்டு இருந்த நம்ம மியூசிக் டைரக்டர் மற்றும் படக்குழு படு அப்செட்!

“பாம்புக்குப் பாலும் முட்டையும் கொடுத்துக் கையெடுத்துக் கும்பிட்ட வசுந்த்ராவா இப்படியெல்லாம் பேசுறா?” ன்னு கேக்க,

“எந்த ஊர்ல பாம்பு பாலும் முட்டையும் கேட்டுச்சு?” அப்படின்னு பூமிகா திரும்பக் கேட்க தனியப்பா வாய்மேல விரலை வச்சுட்டு அமைதியா இருந்துக்கிறார்.

“வசுந்த்ரா இப்படியெல்லாம் பேச மாட்டா. அவ ரொம்ப அமைதியானவ. அடக்கமானவ. அன்பானவ! எனக்கு என்னவோ இது வேற யாரோன்னு தோணுது”ன்னு தனியப்பாவோட மைண்ட்வாய்ஸ் சத்தமாக வெளியவருது.

“அடக்கமா இருக்கிறதுக்கு பொண்ணுங்க என்ன களிமண்ல செஞ்ச பொம்மையா? கொஞ்சம் அறிவாகவும், அவுங்களோட உரிமை என்னன்னும் தெரிஞ்சுட்டு அதைக் கேட்டா அது குத்தமா? இல்ல, நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்டித்தான் ஒருத்தியோட அன்பை நிரூபிச்சாகணுமா? மொதல் பார்ட்ல இருந்த மாதிரியேதான் இருக்கணும்னா அப்புறம் அதையேதான் எடுக்கணும்”னு எல்லாம் பூமிகா பேசுறாங்க.

ஓ... இது வசுந்த்ரா வெர்சன் 2 போலன்னு நினைச்சுட்டு இருக்கும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி தற்கொலை செஞ்சுகிட்ட ஒருத்தரைப் பத்தின செய்திகள் வருது. இதை எப்படியாச்சும் தடுத்து நிறுத்தியே ஆகணும்னு தனியப்பாவும் பூமிகாவும் சேர்ந்து திட்டம் போடுறாங்க.

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2

தனியப்பாவோட சொத்துக்கள் மட்டும்தான் அவர்கிட்ட இப்போ இல்லை. ஆனா, அந்த மூளை அப்படியேதான் இருக்கு. அதைவிட, படையப்பா ஒண்ணுல ரொம்ப அமைதியா இருந்த வசுந்த்ரா இப்போ டெரரா மாறி படையப்பாவையே லெப்ட் ரைட் வாங்குறாங்க. இது படையப்பாவா இல்ல படையம்மாவான்னே தெரியாம எல்லோரும் பார்த்துட்டு இருக்காங்க. இப்போ தனியப்பாவுக்கு இருக்கிற 2 சிக்கல்கள் என்னென்ன? மொதல்ல அவர் கோடீஸ்வரர் ஆகனும். அப்புறம் ஆன்லைன் ரம்மி ஆப் நடத்தி எல்லோரையும் அடிமைப்படுத்திட்டு இருக்கிற காவியாவைத் தடுத்தாகணும்.

இந்த ரெண்டையும் ஒரே கல்லுல... இல்ல ஒரே சாஃப்ட்வேர் மூலமாக அடையணும்னு யோசிச்சு, சோஷியல் மீடியா நெட்வொர்க் ஒண்ணை உருவாக்குறார். ’தனிவர்ஸ்’ன்னு அதுக்குப் பேரும் வைக்கிறார். அது உலகம் முழுக்கப் பிரபலம் ஆகுது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட எல்லா சோஷியல் நெட்வொர்க்கும் தனிவர்ஸ் வந்த அப்புறம் மூட்டையைக் கட்டிட்டுப் போக வேண்டியதா ஆகிடுது. காரணம் நம்ம 'தனிவர்ஸ்'ஸோட பிராண்ட் அம்பாசிடர் அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா. ஆமா, சிவா ரயில் நிலையம், சிவா எலக்ட்ரிசிட்டி போர்டு, சிவா கோர்ட்ன்னு எல்லாத்தையும் வெச்சு நடத்தற அதே 'தமிழ்ப் படம்' சிவாதான். அவரும் சிவாஜி தி பாஸும்தான் நம்ம தனியப்பாவுக்கு நிதியுதவி பண்றாங்க. இப்ப அந்த மீதமான சாங்கைப் போட்டு சந்தோஷப்பட்டுக்கிறார் நம்ம மியூசிக் டைரக்டர்.

தனியப்பாவும், பூமிகாவும் உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர்களா மாறிடறாங்க. இதைப் பார்த்த காவியா பயங்கரமான கோபத்துக்கு ஆளாகி, தனியப்பாவைக் கொலை செஞ்சுடணும்னு அவரோட ஆஃபீசுக்கு வர்றாங்க. இந்த முறையும் கைல ஒரு துப்பாக்கி எடுத்துட்டு வர்றாங்க. இது அல்ட்ராமாடர்ன் படமா இருக்கிறதால படையப்பா ஒண்ணுல இருந்த சில விஷயங்களை நம்மால இந்தப் படத்துல சேர்த்துக்க முடியல. முக்கியமா சிவப்புக் கலரைப் பார்த்தா கோபம் வர்ற மாட்டை சேர்க்க முடியல. இருந்தாலும் தனியப்பாவைக் கொல்ல வர்ற காவியாவை அங்க இருக்கிற நாய் தொரத்திவருது.

தனியப்பா நாயைப் பார்த்துக் கை காட்டுறார். அது ஒரு நொடி அப்படியே சிலை மாதிரி நிக்குது. தனியப்பாவோட அழகும் ஸ்டைலும் குறையவே இல்லைன்னு பன்ச் பேசலாம்னு காவியா நினைக்கிறாங்க. ஆனா, அதுக்கு நேரம் கொடுக்காம அந்த நாய் மறுபடியும் காவியாவைத் துரத்த ஆரம்பிக்குது. தனியப்பா மறுபடியும் விரலையும், கையையும் குறுக்கும் மறுக்கும் ஆட்டி மிரட்டிப் பாக்குறார். கடுப்பாகுற நாய் ரெண்டு பேரையும் சேர்த்துத் துரத்துது.

அப்போதான் இது நம்ம நாய் இல்ல, தெரு நாய்ன்னு தனியப்பாவுக்குத் தெரியுது. இங்க இருந்து ஸ்டைல் பண்ணிட்டு இருந்தா ஆபத்துன்னு வீட்டுக்குள்ள போறார். அவரைத் தொடர்ந்து காவியாவும் போறாங்க.

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2

வீட்டுக்குள்ள போனதும், “போன ஜென்மத்துலதான் நான் ஏமாந்துட்டேன். இந்த ஜென்மத்துலயாச்சும் உன் கூட சேர்ந்து வாழனும்னு நினைச்சுத்தான் இங்க வந்தேன். அது நடக்கலைன்னா உன்னைச் சுட்டுட்டு நானும் தற்கொலை செஞ்சுக்குவேன்”னு மிரட்டுறாங்க.

இடைல வர்ற பூமிகா காவியாவைப் பார்த்து ஒண்ணு சொல்றாங்க. தனியப்பாவும் பூமிகாவும் சேர்ந்து தயாரிச்சிருக்கிற விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் ஒண்ணுல தனியப்பாவை ஜெயிச்சுட்டா நானே விட்டுத் தர்றேன்னு சொல்லிட்டு அந்த கேமுக்குள்ள காவியாவை அழைச்சுட்டுப் போறாங்க.

அரை மணி நேரம் தனியப்பாவும், காவியாவும் ஆக்ரோசமாக அந்த ரியாலிட்டி வீடியோ கேம் விளையாடுறாங்க. ஒருவேளை இதுல காவியா ஜெயிச்சுட்டா என்னாகுறதுன்னு எல்லோருமே படபடப்பா சீட்டோட நுனியில் உக்கார்ந்து பார்த்துட்டு இருக்காங்க. எது எப்படி இருந்தாலும் ஹீரோதானே கேம்ல ஜெயிப்பார்ங்கிறதால கொஞ்சம் நம்பிக்கையும் இருக்கு.

படம் பார்த்துட்டு இருக்கிறவங்களோட நம்பிக்கையைத் தகர்த்து எறிஞ்சுட்டு காவியா தனியப்பாவை ஜெயிச்சுடறாங்க. தான் சொன்ன மாதிரியே பூமிகா தன்னோட காதலைத் தியாகம் செஞ்சுட வேண்டி வருமேன்னு எல்லோரும் சோகமாகிடறாங்க.

ஆனா, திடீர் திருப்பமா கேம் முடிஞ்சு விர்ச்சுவல் ரியாலிட்டில இருந்து வெளிய வர்ற காவியா, தனியப்பா கிட்டயும் பூமிகாகிட்டயும் மன்னிப்பு கேக்குறாங்க. இவங்களும் மன்னிச்சுட்டோம்னு சொல்லி, தப்புப் பண்ணுறது மனித இயல்புதான். அதைத் திருத்திக்காமயே செத்துடக் கூடாதுன்னு படத்தோட கடைசி பன்சைப் பேசி முடிக்கிறார் தனியப்பா.

ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2
ரெண்டாவது ரவுண்டு: படையப்பா 2

அது சரி. ஒருத்தரைக் கொலை செய்யணும்னு வந்துட்டு கொலை செய்யாம போறதால காவியாவும் கடவுள் தான்னு அன்பே சிவம் ரேஞ்சுக்கு படத்தை முடிக்கிறதுல தப்பு இல்ல. அது எப்படி அவுங்க மனசு மாறினாங்கன்னு சொல்லாம போகக் கூடாதுல்ல. தனியப்பாவும், பூமிகாவும் உருவாக்கியிருக்கிற அந்தப் புதிய ரியாலிட்டி கேம் விளையாடுற எந்த ஒரு மனுசனும் நல்ல மனுசனா உடனே மாறிடுவான். அவனோட கோபம், பொறாமை, பழி வாங்குற எண்ணம் எல்லாமே மொதல் பத்து நிமிசத்துலயே அவுங்க மனசுல இருந்து அழிஞ்சு போயிடும். இதுதான் அதோட கான்செப்ட்.

சரி. இப்படி ஒரு ட்விஸ்ட் வெச்சுப் படத்தை முடிக்க என்ன காரணம்? 'படையப்பா பார்ட் 3' வந்தா பூமி தாங்காதுல்ல. அதனால்தான்!