Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு: பூவே உனக்காக - 2: `ஒரு செடில ஒரு தடவைதான் பூ பூக்கும்' ராஜாவும், 2கே கிட்ஸும்!

ரெண்டாவது ரவுண்டு: பூவே உனக்காக - 2

இந்த வாரம் 90ஸ் கிட்ஸை அட்டாக் பண்ணலாம்னு அவங்க ஃபேவரைட்டான 'பூவே உனக்காக' பக்கம் ஒதுங்கியிருக்கோம். இது காதல் எப்படியெல்லாம் மாறிட்டு இருக்குங்கறதுக்கான விழிப்புணர்வு பதிவு மட்டுமே! அட, அப்படின்னு நினைச்சுட்டாவது படிங்க!

Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு: பூவே உனக்காக - 2: `ஒரு செடில ஒரு தடவைதான் பூ பூக்கும்' ராஜாவும், 2கே கிட்ஸும்!

இந்த வாரம் 90ஸ் கிட்ஸை அட்டாக் பண்ணலாம்னு அவங்க ஃபேவரைட்டான 'பூவே உனக்காக' பக்கம் ஒதுங்கியிருக்கோம். இது காதல் எப்படியெல்லாம் மாறிட்டு இருக்குங்கறதுக்கான விழிப்புணர்வு பதிவு மட்டுமே! அட, அப்படின்னு நினைச்சுட்டாவது படிங்க!

ரெண்டாவது ரவுண்டு: பூவே உனக்காக - 2
தமிழ் சினிமாவின் சில்வர் ஜூப்ளி, கோல்டன் ஜூப்ளி, டைமண்ட் ஜூப்ளி, ப்ளாட்டினம் ஜூப்ளின்னு மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் படங்கள் வரிசையில் 1996-ம் வருசம் வந்த 'பூவே உனக்காக' எப்பவும் டாப் டென் இடத்துல வந்துடும். இன்னும் பல வருசங்களானாலும் அந்தப் படம் நிச்சயமாக டாப் டென்ல இருந்து வெளிய போகவே போகாது. '90ஸ் கிட்ஸ்'ன்னு அழைக்கப்படுற 90களின் குழந்தைகளுக்கு காதல் குறித்தும், அதோட புனிதத்தன்மை குறித்தும் அவுங்க மனசுல உருவாகியிருக்கும், உருவாக்கப்பட்டிருக்கும் மிகைப்படுத்தல்களுக்கு 'பூவே உனக்காக' மாதிரியான படங்களுக்கு மிகப்பெரிய இடம் இருக்கத்தான் செய்யுது.
பூவே உனக்காக - 2
பூவே உனக்காக - 2

அந்தக் காலத்துல வந்த பெரும்பாலான படங்கள்ல ஒரு கைல வெடிகுண்டைக் கடிச்சுத் துப்பிட்டே இன்னொரு கைல ஏரோப்ளேன் ஓட்டிட்டு இருக்கிற ஹீரோக்கள் கூட காதலைச் சொல்ல ரொம்பவே பயந்துட்டு இருந்தாங்க. ஏன்னா, காதலைச் சொல்றதுங்கிறது கரண்டு கம்பியை உடம்பு முழுக்க சுத்திட்டு சுட்சு போட்டு செக் பண்ணுறதை விடவும் கஷ்டமான விஷயமாகத்தான் எல்லா படங்கள்லயும் காட்டிட்டு இருந்தாங்க. அதைப் பார்த்து வளர்ந்த அந்த 90களின் குழந்தைகளும் காதல்ன்னா எதோ ஏலியன் உலகத்து பீலீங் போலன்னு பொண்ணுங்களைப் பார்த்தாவே பயந்து நடுங்கிட்டு இருந்தாங்க. உண்மையைச் சொல்லப்போனா தன் கூடவே சரிபாதியாக இருந்துட்டு இருக்கிற பொண்ணுங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதும் அவுங்களைப் பத்திப் புரிஞ்சுக்கிறதும்தான் அடிப்படையான அறிவுள்ள மனுசன் செய்யக் கூடியது. அது கூடத் தெரியாம பொண்ணுங்க கூடப் பேசாம இருக்கிறதுதான் ஒழுக்கம்னு எல்லாம் அரைகுறைப் புரிதலோடதான் ஒரு ஜெனரேசனே உருவாச்சு. அப்படி உருவான ஒரு ஜெனரேசன்ல வந்த 'பூவே உனக்காக' ராஜாவை வச்சு இப்போ 2022ல 'பூவே உனக்காக-2' எடுக்கப் போறோம். எடுக்கலாமா?

படத்தோட ஓப்பனிங் சீன் அழகழகான, வண்ண வண்ணமான பூக்கள் பூத்துக் குலுங்கிட்டு இருக்கிற நர்சரில துவங்குது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அழகான ரோஜா செடிகளை வாங்கிட்டுப் போயிட்டு இருக்காங்க. கூட்டத்துல ஒரு ஜோடி தனியா நின்னு கிஸ் பண்ணிட்டு இருக்காங்க. அதை மறைக்கிற மாதிரி ரெண்டு பூ கிஸ் பண்ற பழங்கால சினிமா ஷாட்டை மட்டும் நாம கேமரால காட்றோம்.

அப்போ ஒரு கார் வந்து நிக்குது. அதுல இருந்து சுமார் 45 வயசு மதிக்கத்தக்க ஒரு இளைஞர்(?) வந்து இறங்குறார். இப்போ அவர் முகத்தைக் காட்டப்போறது இல்லை. படபடன்னு இறங்கி நர்சரிக்குள்ள போய், அங்க இருக்கிற செடிகளை எல்லாம் சுத்திச் சுத்தி வர்றார். சில செடிகளை எடுத்துப் பார்க்கிறார். கொஞ்ச நேரத்துல அவர் நர்சரியில் இருக்கிற எல்லா செடிகளையும் பார்த்துட்டு சேல்ஸ்மேன்கிட்ட போய் ஒரு கேள்வி கேட்கிறார்.

“ஏங்க இந்தச் செடி எத்தனை பூ பூக்கும்?”

“சார் நீங்க செலக்ட் பண்ணியிருக்கிறது புதுசா வந்திருக்கிற ஹைபிரிட் செடி சார். ரொம்ப வேகமாகவும், பெரிய சைசுலயும், அதிகமான பூக்களும் பூக்கக் கூடிய செடி சார் இது. உண்மையாவே நீங்க ரொம்ப லக்கி சார். இது ஒரே ஒரு பீஸ்தான் இருக்கு. அட்டகாசமா, சிறப்பான ஒரு செடியைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க. பில் போட்டுடலாமா சார்?”

பூவே உனக்காக - 2
பூவே உனக்காக - 2

”இல்லைங்க வேண்டாம். நான் வேற செடியைப் பார்த்துட்டு வர்றேனே...”

மறுபடி சில செடிகளைத் தேடுறார்.

“உங்களுக்கு எந்த மாதிரி செடி வேணும்னு சொன்னா நான் ஹெல்ப் பண்ணுவேன்...” எனக் கடைக்காரர் கேட்க...

“ஒரு செடி வேணும் சார். ஒரே ஒரு பூ தான் பூக்கணும். அதுக்கு அப்புறம் அது பூவே பூக்கக் கூடாது... அப்படி ஒரு செடி வேணும் சார்...”

“ஒரு நாளைக்கு ஒரு பூ பூக்கணுமா? அப்படி ஒரு செடியைக் கண்டுபிடிக்கிறது கஷ்டம் சார். ஒருவேளை அப்படியே கண்டுபிடிச்சாலும் ஒரு நாளைக்கு ஒரு பூ தான் பூக்கணும்னு செடிக்கு நாம சொல்லித் தர முடியாது. ஏன் கணக்கு வாத்தியார் வளர்த்திட்டு இருக்கிற செடிக்குக் கூட கணக்கு வராது. அதனால அது கஷ்டமாச்சே சார்... இங்க வர்ற எல்லாருமே நிறையப் பூ பூக்குற செடி வேணும்னுதான் கேப்பாங்க. நீங்கதான் வித்தியாசமா கேக்குறீங்க...”

“இல்லங்க. ஒரு நாளைக்கு ஒரு பூ பூக்க வேண்டாம். மொத்தமாவே அது ஒரு பூ மட்டும்தான் பூக்கணும். ஒரு செடி ஒரு பூ...” இதைக் கேட்டவுடனே அந்த சேல்ஸ்மேன் முகத்துல 'பிக் பாஸ் அல்டிமேட் 24x7' உட்கார்ந்து பாத்த மாதிரியான ஒரு திகில் தெரியுது. அவரோட ஷாக்கான முகத்தை க்ளோசப்ல காட்டிட்டு அது அப்படியே மங்கலாகி, 'பூவே உனக்காக' ஆனந்தம் ஆனந்தம் பாட்டு மியூசிக் லைட்டா கேக்க ஆரம்பிக்குது. அப்போ சிரிச்ச முகத்தோட நம்ம ஹீரோ ராஜா நின்னுட்டு இருக்கார். அங்க போடுறோம் படத்தோட டைட்டிலை 'பூவே உனக்காக - 2'!

”சார்... அப்படியெல்லாம் எந்தச் செடியும் எங்கயும் இல்ல சார்... இருக்காது சார். மோனோகார்பிக் செடிகள்னு சிலது இருக்கு. அதுங்க அதோட வாழ்நாள்ல ஒரு தடவைதான் பூக்கும். ஆனாலும், ஒரு பூ மட்டும் பூக்காது. எடுத்துக்காட்டா வாழை மரத்தைச் சொல்லலாம். ஆனாலும், வாழை மரத்துல வர்ற பூ ஒரே ஒரு சிங்கிள் பூ கிடையாது. அதுல பல பூக்கள் இருக்கும். அதனால நீங்க கேக்குற மாதிரி செடி உலகத்துல எங்கயும் கிடையாது.”

பூவே உனக்காக - 2
பூவே உனக்காக - 2

“நானும் அப்படி ஒரு செடியைத் தாங்க தேடிட்டு இருக்கேன். கிடைக்கவே மாட்டேங்குதே...”

“வருசக் கணக்குல தேடினாலும் கிடைக்காது சார். இந்த ரோஜா செடியை வாங்கிட்டுப் போய் நட்டு வைங்க. விதவிதமான கலர்கள்ல பூக்கும்.”

“இல்லங்க வேண்டாம். எத்தனை வருசம் ஆனாலும் ஒரு செடி ஒரு பூ தான் என்னோட லட்சியம்...”

“அப்படி எத்தனை வருசமாகத் தேடிட்டு இருக்கீங்க..?”

“1996 ஆம் வருசத்துல இருந்து...” ன்னு சொல்லிட்டு ராஜா சிரிக்க, 'பூவே உனக்காக', முதல் பார்ட் கிளைமாக்ஸ்ல அவர் தூக்கிட்டு போன அந்தக் கறுப்பு பேக்கை மறுபடியும் தூக்கி தோள்ல போடறார். அந்த சேல்ஸ் மேன் கையெடுத்துக் கும்பிடறார். பின்னணியில, 'நீ வரும் பாதையில் பூக்களாய்ப் பூத்திருப்பேன்'ன்னு லிரிக்ஸோட பாட்டு ஓடுது.

"அந்த டேப் ரெக்கார்டர எவண்டா திரும்ப திரும்ப போடறது"ன்னு நம்ம 'பிரேமம்' ஜார்ஜ் மலையாளத்துல திட்டிட்டு, எழுந்துபோய் அதை ஆஃப் பண்ணி விடுறார்.

அப்போ அந்த நர்சரிக்கு ஒரு காதல் ஜோடி வர்றாங்க. அந்த ஜோடியையே பார்த்துட்டு இருக்கிற ராஜா முகத்துல ஒரு வெட்கம் கலந்த புன்னகை வருது. அந்தப் பொண்ணு சில செடிகளை எடுத்து அதை வாங்கலாமா இதை வாங்கலாமான்னு கேட்கிறா. அந்தப் பையனும் அந்தப் பூக்களைப் பாக்கிறதா இல்லை அந்தப் பொண்ணைப் பாக்கிறதான்னு தெரியாம தலையாட்டிட்டு இருக்கான். நர்சரில இருந்து சில பூச்செடிகளை வாங்கிட்டு வெளிய வரும்போது நாலஞ்சு கார்கள் வந்து ஒண்ணு மேல ஒண்ணு மோதுற மாதிரி ப்ரேக் பிடிச்சு நிக்க, அதுல இருந்து பத்துப் பதினஞ்சு ரௌடிகள் கைல கத்தி, உருட்டுக் கட்டை எல்லாம் எடுத்துட்டு கோபத்தோட அந்த ஜோடியை நோக்கிப் போறாங்க.

மொரட்டுத் தனமாக இருக்கிற ரௌடி ஒருத்தன் அந்தப் பொண்ணைப் பிடிச்சு இழுக்க, இன்னொரு ரௌடி அந்தப் பையனைக் குத்த கத்தியைப் பின்னாடி இழுக்கிறான். அடுத்த ஷாட்ல அந்த ரௌடி பக்கத்துல இருந்த கடையோட கண்ணாடிச் சுவரை உடைச்சுட்டுப் போய் விழுறான். அங்க வெறித்தனமான மாஸ் மியூசிக் பின்னணில ஒலிக்க, கையை முறுக்கிட்டு நம்ம ராஜா நின்னுட்டு இருக்கார். கையில ஒரு வெள்ளி காப்பு பளபளக்குது. "உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு ரகசியம். நான் அடிப்படையில் ஒரு பாக்ஸர். என் பன்ச்ல ஒரு புரொபஷனல் அப்ரோச் தெரிஞ்சிருக்கணுமே"ன்னு கௌதம் மேனன் ஹீரோ மாதிரி மைண்ட் வாய்ஸ்ல சொல்றார். டேப் ரெக்கார்டர்ல, 'எப்போதெல்லாம் தர்மம் அழிகிறதோ...'ன்னு 'சுக்ரன்' பட பிஜிஎம் சம்பந்தமில்லாம ஓடுது.

பூவே உனக்காக - 2
பூவே உனக்காக - 2
சடச் சடன்னு ரௌடிக் கூட்டத்தைத் தொம்சம் பண்ணி, நாலஞ்சு கண்ணாடிகளை உடைச்சு, அவுங்க வந்த கார்களை நொறுக்கி, கடைசில அந்தக் காதலனையும் காதலியையும் காப்பாத்தி தன்னோட கார்லயே ஏத்திட்டு கிளம்புறார். அங்க 'அர்ஜுனரு வில்லு' பாட்டை அனிருத்த வெச்சு ரீமிக்ஸ் பண்றோம்.

போற வழியில் அவங்களோட காதல் கதையைக் கேட்கிறார். அவுங்களோட பெற்றோர்கள்தான் இவங்க காதலுக்கு எதிரா நிக்கிறதாகச் சொல்றாங்க. அது போக இது மாதிரி தன்னோட சில நண்பர்கள் கூட இப்படியான சிக்கலில் இருக்கிறதாகவும் சொல்றாங்க. இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடனடியாகச் சரி செஞ்சே ஆகணும்னு ஒரு முடிவுக்கு வர்றார் ராஜா. ஊர்ல இருக்கிற காதலர்களை எல்லாம் சேர்த்து வைக்கிற சேவை மையத்தைத் துவங்கலாம்னு முடிவெடுக்கிறார். ஆல்ரெடி 'ஷாஜகான்' இந்தத் துறைல களமிறங்கி இப்போ காதலர்களைச் சேர்த்து வைக்கிற கம்பெனி நடத்திட்டு இருக்கார். அவரோட உதவியையும் கேட்டு அந்தக் கம்பெனில முதலீடு செஞ்சு கார்பரேட் கம்பெனியாக மாத்தி உலகெங்கும் இருக்கிற காதலர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கலாம்னு முடிவு செய்யுறார். 'சர்கார்' பட 'சிஇஒ இன் தி ஹவுஸ்' பாட்டு கார்லயே ப்ளேயாகுது.

அடுத்த நாள் உலக காதலர்களே ஒன்று கூடுங்கள்னு இவங்களோட 'ஒற்றைப் பூ ஷாஜகான் காதல் கம்பெனி'யோட விளம்பரம் எல்லா நியூஸ் பேப்பர், டிவி, யூடியூப்னு கலக்கலாக வெளிவருது. காதல் தொடர்பான அனைத்துவிதமான பிரச்னைகளும் சிறப்பாக முடித்து வைக்கப்படும்னு சொல்றாங்க. இந்த விளம்பரங்களைப் பார்த்துட்டு சில காதலர்கள் அவங்களோட கம்பெனியை நாடி வர்றாங்க.

முதல் முதலாக வந்த அப்ளிகேசனை எடுத்து அந்தப் பையனையும் பொண்ணையும் நேர்ல வந்து அவுங்களோட பிரச்னைகளைச் சொல்லச் சொல்றாங்க. ஒரு பையன் மட்டும் வர்றான்.

“நீங்க மட்டும் வர்றீங்க. உங்க லவ்வர் எங்க? வீட்டுல பிரச்னையா? அவுங்களைப் பிடிச்சு அடைச்சு வச்சுட்டாங்களா?”ன்னு பரபரப்பாக ராஜா கேட்கிறார்.

“இல்ல சார். நான் அப்ளிகேசன்ல சொல்லியிருந்த பொண்ணை ப்ரேக்கப் செஞ்சுட்டேன். இப்போ வேற பிரச்னை...”

“என்னது ப்ரேக்கப் செஞ்சுட்டியா? காதலோட வலியும், அதோட பிரிவும் எத்தனை துயரமானதுன்னு எனக்கு தெரியும் தம்பி. இப்போ உனக்குத் தேவை ஆறுதல். மனசைத் தளர விடாத. எந்தத் தப்பான முடிவுக்கும் போயிடக் கூடாது. காதல் ஒரு தடவைதான் வரும். காதல் ஒரு...” அப்படி ஆரம்பிச்சு அஞ்சு நிமிசம் காதலின் அருமை பெருமைகளைப் பேசுறார்.

பூவே உனக்காக - 2
பூவே உனக்காக - 2

இதைச் சொல்லி முடிச்சதும் அந்தப் பையன் கண்ணுல இருந்து கண்ணீர் கொட்டிட்டு இருக்கும்னு நினைச்சு அவனைப் பார்த்தா அவன் கொறட்டை விட்டுத் தூங்கிட்டு இருக்கான். எத்தனை சீரியசாகப் பேசிட்டு இருக்கோம். இவன் தூங்குறானேன்னு கோபம் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திட்டு,

“சரி. இப்போ என்ன பண்ணப்போற..?”

“இன்னொரு பொண்ணைக் காதலிக்கிறேன். என்னை அவ கூட சேர்த்து வைங்க..”

“டேய். காதல் ஒரு தடவைதான்...”

“சார். அறுக்காதீங்க சார். உங்களால முடியுமா முடியாதா..?”

“சரி. அவ எங்க இருக்கா? என்ன பண்ணிட்டு இருக்கா? அவளோட அப்பா அம்மா என்ன செய்றாங்க..?”

“அதெல்லாம் தெரியாது சார். ஃபேஸ்புக்ல பழக்கம். சேர்த்து வைங்க.”

“காதலைச் சொல்லிட்டியா இல்லையா?”

“அது மொதல் சாட்லயே சொல்லிட்டேன் சார். வாட்ஸ்அப் நம்பரும் வாங்கிட்டேன்.”

“அப்போ ரொம்ப வருசமா தெரியுமா அவள?”

“இல்ல சார். இப்போ நீங்க காதலைப் பத்தி நீண்ட உரையாற்றிட்டு இருக்கப்போதான் ஃபேஸ்புக்ல பார்த்தேன். பிடிச்சிருந்துச்சு. உடனே சொல்லிட்டேன்... சேர்த்து வைங்க...”

”டேய்... காதலைச் சொல்லவே பல வருச பழக்கம் வேணுமேடா... எப்படிடா இத்தனை தைரியமாக இருக்கீங்க..?”

”லவ்வச் சொல்றது எல்லாம் ஒரு மேட்டரா சார்... ஒரு நாளைக்குப் பத்துப் பேருக்கு லவ் யூ சொல்றோம். இதுல என்ன பிரச்னை உங்களுக்கு?”

“லவ் ஒரு தடவ தாண்டா வரும்... உங்களுக்கு எப்படி நிமிசத்துக்கு ஒரு லவ் வருது..?”

“சார். லவ்வுல எதுக்கு சார் கஞ்சத்தனம்? நம்மகிட்ட அதிகமா இருக்கு. அதை இன்னொருத்தங்களுக்கு, இல்லாதவங்களுக்குக் குடுக்கிறோம். ஒவ்வொரு நிமிசமும் லவ் பண்ணனும் சார். இந்த வாழ்க்கை காதலுக்கானது சார். ஒரே இடத்துல தேங்கிடக் கூடாது. இதெல்லாம் 90ஸ்ல பிறந்த உங்களுக்குப் புரியாது சார். என் லவ்வை சேர்த்து வைங்க. டாட்!”

ராஜாவுக்கு இந்த உலகமே சுத்துற மாதிரி இருக்கு. ஒண்ணுமே புரியலை. லவ்வைச் சொல்லவே பல வருசம் ஒத்திகை பார்த்த அந்தக் காலக் காதலர்கள் எங்க, லவ்வைச் சொல்லிட்டுத்தான் பேரைக் கேட்கிற 2k கிட்ஸ்கள் எங்கன்னு 'சூர்யவம்சம்' ராதிகா டெம்ப்ளேட் வெச்சு யோசிச்சுப் பார்க்கிறார். சரி... எது எப்படி இருந்தாலும் காதல் காதல்தானேன்னு ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டுட்டு அவனோட காதலைச் சேர்த்து வைக்கிறதுன்னு முடிவெடுக்கிறார்.
பூவே உனக்காக - 2
பூவே உனக்காக - 2

அவன் லவ் பண்றதா சொல்ற அந்த ஃபேஸ்புக் ஐடி பத்தின விவரங்களைச் சேகரிக்கிறார்.

ஜானுங்கிற அந்த ஐடில போடப்படுற எல்லா போஸ்ட்டுகளுக்கும் ராம்னு ஒருத்தர் ஹார்ட்டின் போட்டுட்டே இருக்கார். இந்தப் பையனும் தொடர்ச்சியா ஹார்ட்டின் விடுறான்.

ஒருகட்டத்துல இந்த ராமுக்கும் நம்ம பையனுக்கும் சண்டை முத்திடுது. ரெண்டு பேரையும் நேர்ல அழைச்சு சமாதானம் செஞ்சு, இந்த ரெண்டு பேர்ல ஒருத்தரோட காதலுக்கு முற்றுப் புள்ளியும், இன்னொருத்தரோட காதலுக்கு தொடக்கப் புள்ளியும் வைக்கணும்னு ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்யுறார் ராஜா. அதோட அந்த ஜானுவையும் எப்படியாச்சும் மீட்டிங்குக்கு வரவச்சுடனும்னு போராடுறார்.

ஒரு காஃபி ஷாப்ல மீட்டிங் நடக்குது. 40 வயசு மதிக்கத்தக்க ஒருத்தர் வந்து தன்னை ராம்னு அறிமுகம் செஞ்சுக்கிறார். இந்தப் பையனும் கொஞ்சம் முறைப்பா தன்னை அறிமுகம் செஞ்சுக்கிறான். ஜானுவைத் தான் தன்னோட ஸ்கூல் டைம்ல இருந்து காதலிச்சதைப் பத்தி ராம் ரொம்ப நேரம் ஃபீலிங்கோட பேசுறார். அவளுக்காகவே தான் இன்னும் கல்யாணம் செய்யாம இருக்கிறதையும், தன்னோட காதல் எத்தனை தூய்மையானதுன்னும் சொல்லி அழறார். இதைக்கேட்ட ராஜாவும் ராமைக் கட்டிப் பிடிச்சு அழறார். 'காதலே... காதலே' பாட்டு காஃபி ஷாப் ஸ்பீக்கர்ல ஓடுது.

“ஒரு செடில ஒரு பூ தான் பூக்கும்...”ன்னு ராஜா சொல்ல, ராம் ரொம்ப எமோசனல் ஆகி ராஜாவைக் கட்டிப்பிடிச்சு சத்தமாக அழறார். அந்த 2K பையன் எதோ ஜுராசிக்பார்க்ல வர்ற டைனோசர்களைப் பாத்த மாதிரி வித்தியாசமா முழிச்சுட்டு இருக்கான்.

”ப்ரோ... இப்போ என்னதான் பிரச்னை? எதுக்கு அழறீங்க?”

“இது காதல். இதெல்லாம் உனக்குப் புரியாதுப்பா...”ன்னு ராம் சொல்லிட்டு மறுபடி ஒரு ரவுண்டு அழறாங்க.

ஜானு வருவாங்களா மாட்டாங்களான்னு எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்காங்க. அப்போ ஃபேஸ்புக் மெசஞ்சர்ல 'I'm on the way!'ன்னு ஜானு ஒரு மெசேஜ் அனுப்பறாங்க.

இப்போ யார் தன்னோட காதலை விட்டுத் தரப் போறாங்கன்னு ராமும், அந்தப் பையனும் ஒருத்தருக்கு ஒருத்தர் பாத்துக்கிறாங்க. இவுங்க விட்டுத்தந்து, காதலைத் தியாகம் செஞ்சு, தியாகிப்பட்டம் வாங்குறது ஒரு பக்கம் இருந்தாலும் உண்மையாவே ஜானு யாரை செலக்ட் செய்யப் போறாங்கன்னு ஒரு டென்சன் உருவாகுது. ஜானுவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையான்னு கூடத் தெரியலை.

ராம், ஜானு
ராம், ஜானு

ஜானு எப்படி இருப்பாங்க, எவ்ளோ ஆழகா இருப்பாங்கன்னு ரோட்டையே பார்த்துட்டு இருக்காங்க. அப்போ சர்வர் வந்து ஒரு ஆர்டர் எடுத்துட்டுப் போறார். அவர் போனதும் ஃபேஸ்புக்ல இன்னொரு மெசேஜ் வருது.

“உங்க டேபிள்ல இருக்கிற tissue பேப்பரை விரிச்சுப் படிங்க”ன்னு அதுல இருக்கு.

அந்தப் பேப்பர்ல என்ன இருக்கும்னு எடுத்துப் படிச்சா,

“சாரி. என்னை மன்னிச்சுடுங்க. நான் ஒரு ஃபேக் ஐடி. நான் இங்கதான் வேலை பாக்கிறேன். சும்மா பொழுதுபோகாம ஜானுங்கிற பேர்ல ஐடி உருவாக்கியிருந்தேன். இந்த ரெண்டு பேரும் இப்படி உருகி உருகிக் காதலிச்சிருக்காங்கன்னு நினைச்சுப் பார்க்கும் போது எனக்கே ரொம்ப வருத்தமாக இருந்துச்சு. அதான் உண்மையைச் சொல்லிட்டேன்...”

அந்தக் காகிதத்தை வாங்கிப் படிச்ச ராம், “என் ஜானு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும். அவ நல்லா இருப்பா. ஸ்கூல்ல அவளோட இருந்த அந்த நாள்களே இந்த வாழ்க்கைக்குப் போதும்”ன்னு சொல்லி சிரிப்பும் அழுகையுமா ஒரு எமோசன் காட்டுறார்.

அதைப் படிச்சுப் பார்த்த அந்தப் பையன் கொஞ்சம் கூட அலட்டிக்கலை. “சரி விடுங்க ப்ரோ. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?”ன்னு ராஜாகிட்ட கேட்க,

“அதான் ஃபேக் ஐடின்னு தெரிஞ்சுடுச்சேப்பா. நான் இதுல என்ன ஹெல்ப் பண்ண முடியும்?”

“இல்ல ப்ரோ. இப்போ இன்ஸ்டாகிராம்ல ஒரு பொண்ணுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன். அவங்க கூட என்னைச் சேர்த்து வைப்பீங்களா?”ன்னு கேட்கிறான்.

எதிர்ல இருக்கிற ராமைப் பார்க்கிறார் ராஜா. அவர் ரொம்ப ஃபீலிங்கா இருக்கார்.

“என்னாச்சு ராம்..?”

“இல்ல. அது ஃபேக் ஐடியாகவே இருந்தாலும் பரவால்ல. ஜானுங்கிற பேரை மாத்தாம இருந்தா போதும். இந்த வாழ்நாள் முழுக்க அதுக்கு ஹார்ட்டின் போட்டுட்டே சந்தோசமா வாழ்ந்துடுவேன். அதை மட்டும் மாத்தாம இருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்.”

பூவே உனக்காக - 2
பூவே உனக்காக - 2
இதைப் பார்த்த ராஜா உடனடியாக ஷாஜகானுக்குப் போன் பண்ணுறார். இனிமே நம்ம கம்பெனி பேர், 'ஒற்றைப் பூ ராம் ஷாஜகான் காதல் கம்பெனி'ன்னு மாத்திட்டதாகச் சொல்லி, ராமையும் தன் கம்பெனில பார்ட்டனராகச் சேர்த்துக்கிறார்.

அப்ப பக்கத்து டேபிள்ல இருந்து ஒரு குரல்... "சார் என் பேரு 'இதயம்' முரளி. என் கதையைக் கொஞ்சம் கேட்கறீங்களா?"

அந்த 2k பையன் தலையில அடிச்சுட்டே எழுந்து போறான்.

படம் பாக்க வந்தவங்கள்ல பாதிப்பேர் தியேட்டரோட சுவத்துல தலையை மோதிக்கிறாங்க. இனிமே பூவைப் பாக்கும் போதெல்லாம் இதானடா ஞாபகம் வரும்னு அழுதுட்டே கெளம்பிப் போறாங்க.

"மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்!" பாட்டு கிரெடிட்ஸோட ஓடுது.

அங்க போடுறோம் எண்ட் கார்டு!