Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு - நாட்டாமை 2: 'ஐ.நா.வும் உன்னை அழைக்கும்' - 2 ஷிப்டு, 24x7 தீர்ப்புகள் கிடைக்கும்!

நாட்டாமை - 2

பசுபதி தன்னோட நாட்டாமைப் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, பின்னணில பிரிவுபச்சார பாட்டு ஒலிக்க மாட்டுவண்டில ஏறிப் போறார். டிரிபிள் ஆக்ட் கிராபிக்ஸ் செலவு அதிகம்னால அவரைக் கொஞ்சம் கழட்டி விடுறோம். அதே சமயம், அவர் போறத வெச்சு மக்களை அழுது கதற வைக்கிறோம்.

Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு - நாட்டாமை 2: 'ஐ.நா.வும் உன்னை அழைக்கும்' - 2 ஷிப்டு, 24x7 தீர்ப்புகள் கிடைக்கும்!

பசுபதி தன்னோட நாட்டாமைப் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, பின்னணில பிரிவுபச்சார பாட்டு ஒலிக்க மாட்டுவண்டில ஏறிப் போறார். டிரிபிள் ஆக்ட் கிராபிக்ஸ் செலவு அதிகம்னால அவரைக் கொஞ்சம் கழட்டி விடுறோம். அதே சமயம், அவர் போறத வெச்சு மக்களை அழுது கதற வைக்கிறோம்.

நாட்டாமை - 2
தமிழ் சினிவாவுல உருவாகி ஹிட்டடிச்ச ட்ரெண்டகள்ல இந்தத் தீர்ப்புச் சொல்லுற பெரிய மனுசன் ட்ரெண்டும் முக்கியமானது. அரசமரத்துக்குக் கீழ பிள்ளையார் இருப்பாரோ இல்லையோ ஆனா ஊருக்குள்ள ஒரு பிரச்னை வந்தா உடனே ஒரு சொம்போட ஆலமரத்துக்குக் கீழ ஆஜர் ஆகிடணும்னு மட்டும் எல்லார் மனசுலயும் பதிவாகியிருந்துச்சு. அந்த அளவுக்குத் தீர்ப்பு வெறி முற்றிப் போன ஒரு பொற்காலம் தமிழ் சினிமாவுல இருந்துச்சு. ஐநா சபைக்கு முன்னாடியும் கூட ஆலமரம் ஒண்ணு நட்டு வைக்கணும்னு தமிழ் சினிமா இயக்குநர்கள் எல்லாம் கோரிக்கை மனு அனுப்பினாங்க. இவ்ளோ ஏன், ரஷ்யா - உக்ரைன் பிரச்னையைக் கூட நம்ம நாட்டாமைட்ட கொண்டு வந்துருந்தா, கண்டிப்பா போர் வரைக்கும் வர விட்டிருக்க மாட்டாரு. 'நீதி, நேர்மை எல்லாம் ஒண்ணுதாண்டா'ன்னு புதின்கே கிளாஸ் எடுத்திருப்பார்.

தமிழ் சினிமாவுல இப்ப இப்படியெல்லாம் பஞ்சாயத்து பண்ணுற ஆட்களைக் காட்டுறது இல்ல. ஆனா, சீரியல்கள்ல இன்னமும் ஆலமரமும் அழகான சொம்பும் பெரிய மீசையும் வச்சிருக்கிற நாட்டாமைகள் தீர்ப்புச் சொல்லிட்டுத்தான் இருக்காங்க. இதையெல்லாம் மனசுல வச்சு, நம்ம வாழ்க்கைல இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த ட்ரெண்டிங் வரிசைல ஒரு படத்துக்காவது இரண்டாம் பாகம் எடுக்கணும்னு முடிவு செஞ்சோம். அதனால் இந்த வாரம் நாம எடுக்கப் போறது 'நாட்டாமை - 2'.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2

ஊர்ல இருக்கிற பெரிய மனுசங்க, பணக்காரங்க, நீதிபதிகள் எல்லாருமே நம்ம நாட்டாமை மேல பயபக்தியா இருந்தாங்கன்னு ஏற்கெனவே நாம பார்த்திருக்கோம். 'நாட்டாமை' படத்தோட க்ளைமேக்ஸ்ல தான் தவறான தீர்ப்புச் சொல்லிட்டோமேன்னு குற்ற உணர்வுல சண்முகம் இறந்துடுவார். அதுக்கு அப்புறம் அவரோட தம்பிக்கு நாட்டாமை பதவி வரும். அப்புறம் அவுங்க எப்பவும் சந்தோசமா வாழ்ந்தாங்கன்னு படத்தை முடிச்சிருப்பாங்க.

அந்த ஊரோட நாட்டாமையாகப் பசுபதி வந்ததுல இருந்து 'நாட்டாமை - 2' ஆரம்பிக்குது. சண்முகத்துக்கு எப்படி உள்ளூர் தொழிலதிபர்கள் எல்லாம் மரியாதை கொடுத்தாங்களோ அதவிட பசுபதிக்கு மரியாதை கூடுதலாகக் கிடைக்குது. ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க், அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் கூட பசுபதியோட தீர்ப்பை மதிச்சு ட்வீட் போடுறாங்க. அந்த அளவுக்கு அவரோட செல்வாக்கு இருக்கு. ஒரு தடவை இந்தியாவுக்குப் பயணம் வந்த ஐநா சபைத் தலைவர் கூட ஆலமரத்துக்கு அடியில் உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லிட்டு இருக்கிற பசுபதியைப் பார்த்து “வாட் எ மேன் அண்ட் வாட் எ ஜஸ்டிஸ்”ன்னு பேட்டி குடுக்கிறார். அவரை எப்படியாச்சும் உலக நீதிமன்றத்தோட தலைமை நீதிபதியாக உக்கார வச்சுட்டா பலநாட்டுப் பிரச்னைகளுக்கும் எளிய முறைல தீர்வு கண்டுட முடியும்னு சொல்லுறார். ஆனா, நாட்டாமை பசுபதிக்கு தன்னோட ஊரை விட்டு வெளிய வர மனசில்லை. அதனால் அந்த ஆஃபரை மறுத்திடறார். இதுவரைக்கும் பார்த்தது எல்லாம் வெறும் கேரக்டர் ஃபில்டப்புக்காக வர முதல் சில காட்சிகள்தான். இனிமேதான் கதையே ஆரம்பிக்குது.

பசுபதியோட புகழ் உலக அளவுல பரவிட்டு இருக்கு. அதே சமயம் அவருக்கு வயசாகிட்டும் போகுது. ஒரு கட்டத்தில் இனிமேல் தான் நாட்டாமையாகத் தொடர முடியாதுன்னு அவருக்குப் புரிஞ்சுடுது. அடுத்த நாட்டாமையாக யார் வருவாங்கன்னு உலகம் முழுக்க மக்கள் விடிய விடிய பசுபதியோட அப்டேட்டுக்காகக் காத்திருக்காங்க. 'வலிமை' அப்டேட் மாதிரி, எல்லாரும் “நாட்டாமை அப்டேட் ப்ளீஸ்! நாட்டாமை, அப்டேட் ப்ளீஸ்”ன்னு ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்காங்க.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2
இந்தப் படத்துல சரத்குமார் ட்ரிபிள் ஏக்சன்ல வர்றார். பசுபதியாக ஒரு கேரக்டர். அவரோட இரண்டு மகன்களாக இரண்டு கேரக்டர். மூத்த பையனோட பேர் சண்முகம் (தன்னோட அண்ணணோட நினைவா வச்ச பேர்), இன்னொரு பையன் பேர் ஆறுமுகம். அடுத்த நாட்டாமையாகப் பசுபதியோட மூத்த மகன்தான் வருவார்னு எல்லோரும் கிட்டத்தட்ட முடிவு செஞ்சுடறாங்க. ஆனா, மூத்தமகன் சண்முகத்துக்கு இதுல விருப்பம் இல்லை. எப்படி அப்பாவோட சொத்துக்கள் இரண்டு பேருக்கும் சம அளவாகப் பங்கிடப்படுதோ அதே மாதிரிதான் அவரோட பதவியும் சம அளவாகப் பங்கிடப்படணும்னு அதுலயும் நீதி, நேர்மை மோடுல பதில் சொல்லுறார்.

பசுபதிக்கும் அந்த ஐடியா பிடிச்சிருக்கு. ஊர் மக்களும் சண்முகத்தோட இந்தப் பெருந்தன்மையை நினைச்சு புல்லரிச்சுப் போயிடறாங்க.

ஒரு கொழுத்த மே மாச மத்தியான வெயில்ல பசுபதி தன்னோட நாட்டாமைப் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, பின்னணில பிரிவுபச்சார பாட்டு ஒலிக்க மாட்டுவண்டில ஏறிப் போறார். கேமரா அவர் போற பாதையையே காட்டிட்டு இருக்கு. தூரத்துல புள்ளியா மறைஞ்சு போற வரைக்கும் ஃபீலிங் பாட்டு போட்டுவிடறோம். (டிரிபிள் ஆக்ட் கிராபிக்ஸ் செலவு அதிகம்னால அவரைக் கொஞ்சம் கழட்டி விடுறோம். அதே சமயம், அவர் போறத வெச்சு மக்களை அழுது கதற வைக்கிறோம்.)

அந்த நாள்ல இருந்து அந்த ஊருக்கு ரெண்டு நாட்டாமைகள் உருவாகிடறாங்க. ஊருக்குள்ள வர்ற பிரச்னைகளை ஆளுக்குப் பாதியாகப் பிரிச்சுத் தீர்ப்பு சொல்லுறதுன்னு ஒரு உடன்படிக்கைல கையெழுத்துப் போட்டு அதன்படி நடந்துக்கிறதுன்னு முடிவெடுக்கிறாங்க. ஒரே சமயத்துல ரெண்டு பிரச்னைகள் வந்துட்டா என்ன செய்யுறதுன்னு புதுசா ஒரு ஆலமரம் ஒண்ணை வேற ஊர்ல இருந்து பிடுங்கிக் கொண்டு வந்து நடுறாங்க. புது நாட்டாமையோட சொம்பையும் புல்லட்டு பாண்டி ரெகுலரா கப்பு வாங்குற நாச்சியப்பன் பாத்திரக்கடைல ஸ்பெஷலா ஆர்டர் செஞ்சு வாங்கிட்டு வர்றாங்க.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2

அடுத்த நாள் ஊருக்குள்ள ஒரு பிரச்னை வருது. நாட்டாமை பதவியோட பாகப்பிரிவினை முடிஞ்ச பிறகு வர்ற மொதல் கேஸ் இதுதான். இதுக்கு யார் தீர்ப்புச் சொல்லப் போறாங்கன்னு மக்கள் ஆவலாகப் பார்த்துட்டு இருக்காங்க. பட்டு வேட்டி, பட்டுச் சட்டை எல்லாம் போட்டுட்டு ஆறுமுகம் தான் வீட்டை விட்டு வெளிய வர்றார்.

“இந்தப் பிரச்னைக்கு நான்தான் நாட்டாமை. எல்லோரும் புது ஆலமரத்துக்குக் கீழ போய் நில்லுங்க. நான் வரேன்”ன்னு சொல்றார். அந்தப் புது ஆலமரம் நடந்து போற தூரமே இருந்தாலும் மாட்டுவண்டியை வம்படியா எடுத்துட்டு 'நாட்டாமை பாதம் பட்டா' பாட்டு பிஜிஎம்மோட கிளம்பி வர்றார்.

தெருவுல இறங்கினதும், பாதி தூரம் வரைக்கும் ரோட்டுல போற வர்றவங்கள எல்லாம் வாலன்டியரா கூப்பிட்டு வணக்கம் வச்சுட்டுப் பந்தாவா போயிட்டு இருக்கார்.

பாதி வழி போனதும் பேக்ரவுண்ட்ல ஓடிட்டு இருந்த பாட்டு சட்டுன்னு நின்னு போகுது. வண்டிக்குப் பின்னாடி வந்துட்டு இருந்த சண்முகத்தோட மனைவி சத்தமா ஆறுமுகத்தைத் திட்டுறாங்க.

“பதவிலதான் ஆளுக்குப் பாதி. ஆனா, இந்தப் பாட்டு அவருக்கு மட்டும்தான் சொந்தம். இதுல எல்லாம் சொந்தம் கொண்டாட அக்ரீமெண்ட்ல கையெழுத்துப் போடலை”ன்னு சொல்ல, பாத்துட்டு இருக்கிற மக்கள்ல இருந்து எழுதிட்டு இருக்கிற நான் வரைக்கும் ஷாக்காகுறோம்.

அங்க துவங்குது நாட்டாமை குடும்பத்தோட சரிவு.

தீர்ப்புச் சொல்லப் போன சின்ன நாட்டாமை கோபத்தோட வீட்டுக்கே திரும்பி வர்றார். வீட்டுல பெரிய நாட்டாமை சண்முகம் தன்னோட மனைவியைத் திட்டிட்டு இருக்கார். உள்ள வர்ற ஆறுமுகம், “நான் பதவி வேணும்னு உங்ககிட்ட கேட்டேனா? நீங்களா பதவியைக் கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு இப்போ பாட்டு போடலைன்னா மக்களுக்கு நம்ம மேல மரியாதை வருமா? நீங்க வேணா பழைய நாட்டாமை படத்தை இந்த பில்டப் மியூசிக் இல்லாம ஒருதடவை பாருங்க. சிரிப்பை அடக்கவே முடியாது. பதவி குடுக்கிற மாதிரி குடுத்து என்னை அவமானப்படுத்தப் பாக்குறீங்களா?”ன்னு கோபமாகக் கத்துறார்.

”அதுக்காக உங்களுக்கு அந்த உரிமையைக் குடுக்க முடியாது தம்பி... வேணும்னா நாம கோர்ட்டுக்குப் போலாம். அங்க வச்சு பைசல் பண்ணிக்குவோம்...”ன்னு சண்முகத்தோட மனைவி சொல்றாங்க.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2

தன்னோட வீட்டுல எப்பவுமே ஒரு வேலையும் செய்யாம, நாட்டாமை பெருமைகளை மட்டும் பேசிட்டு இருக்கிறதுக்காக கூடவே இருக்கிற அந்தக் கணக்குப் பிள்ளை கேரக்டர், “ஊருக்குள்ள ஒரு பிரச்னைன்னா நாட்டாமைகிட்ட போவோம். அந்த நாட்டாமைக்கே ஒரு பிரச்னைன்னா எங்க போறதுன்னு” அழறார்.

”'சொல்லாததெல்லாம் பொய்' அந்த நிகழ்ச்சிக்கு போன் போடு. அங்க போனா ஒரு தீர்ப்புக் கிடைக்கும். அவுங்களும் நம்ம மாதிரி நாட்டாமைதான்”ன்னு ஆறுமுகத்தோட மனைவி சொல்றாங்க.

இதையெல்லாம் பார்த்துட்டு இருக்கிற சண்முகம், ”இல்லடா தம்பி. இவ சொன்னா சொல்லிட்டுப் போகட்டும். எனக்கு என் தம்பிதான் முக்கியம். நாட்டாமை படத்தோட பேக்ரவுண்ட் மியூசிக் முழுக்க நீ யூஸ் பண்ணிக்க. நான் புது மியூசிக் போட்டுக்கிறேன். அதுக்கான அக்ரிமென்ட் இதுதான்”னு ஒரு டாக்குமெண்டை ஆறுமுகம் கிட்ட நீட்டுறார்.

சின்ன நாட்டாமை ஆறுமுகம் வெற்றிச் சிரிப்போட அந்த டாக்குமெண்டை வாங்கி அண்ணியைப் பார்த்து ஒரு கேலிச் சிரிப்புச் சிரிக்கிறார். சரி. போய் அந்தப் பஞ்சாயத்தைத் தீர்த்து வைக்கலாம்னு திரும்பிப் போறார். அதுக்குள்ள பஞ்சாயத்துக்கு வந்தவங்களே தங்களுக்குள்ள பேசி சமாதானம் ஆகிடறாங்க. நாட்டமை தனக்கு வந்த மொதல் கேசும் இப்படி போயிடுச்சேன்னு அதே பாட்டை சோக மியூசிக்கா மாத்திப் போட்டுட்டு வீட்டுக்கு வர்றார்.

அடுத்த நாளும் இன்னொரு பிரச்னை வருது. வழக்கம் போலவே சின்னவருக்கு அலாட்டாகுது. ப்ளூ டூத் ஸ்பீக்கர் ஒண்ணு வாங்கி மாட்டு வண்டில நாலு மூலைக்கும் மாட்டிவிட்டுட்டு, ” அலெக்ஸா ப்ளே நாட்டாமை பாதம் பட்டா...”ன்னு அதே பாட்டைப் போட்டுட்டு பஞ்சாயத்துக்குப் போறார்.

புது ஆலமரத்துக்குக் கீழ பஞ்சாயத்து கூடியிருக்கு. என்ன பிரச்னைன்னு விசாரிக்கிறார். இரண்டு பக்க நியாயங்களையும் கேட்டுட்டுத் தீர்ப்புச் சொல்லலாம்னு நினைக்கும் போது, பக்கத்து ஆலமரத்துல இருந்து அனிருத் மியூசிக் ரீமிக்ஸ்ல, “நாட்டாமை பாதம் பட்டா...” பாட்டு வருது. அதைக் கேட்டவுடனே இந்தப் பஞ்சாயத்துல இருக்கிற எல்லா மக்களும் அங்க ஓடிப் போறாங்க. பழைய மியூசிக்கை விடவும் இது நல்லா இருக்கேன்னு ஃபீல் பண்ணுறாங்க. சண்முகம் அந்த கேசை டீல் பண்ணி தீர்ப்புச் சொல்றார்.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2

ஆறுமுகத்துக் கோபம் வருது. இருந்தாலும் கட்டுப்படுத்திட்டு வீட்டுக்குப் போயிடறார். அவரோட மனைவி என்ன தீர்ப்புச் சொன்னீங்கன்னு கேட்டு நச்சரிக்கிறாங்க. இவர் எதோ சொல்லிச் சமாளிக்கிறார்.

மறுபடி ஒரு வாரம் கழிச்சு வேறொரு பிரச்னை. அதுலயும் சின்ன நாட்டாமைக்குத் தீர்ப்புச் சொல்லுற வாய்ப்பு கிடைக்கலை. பெரிய நாட்டாமையான சண்முகம்தான் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறார். மக்கள் மத்தியில் சண்முகத்து மேல மரியாதை கூடுது. அவர்தான் சரியா தீர்ப்பு சொல்லுவார்ன்னு மக்கள் வெளிப்படையாவே பேச ஆரம்பிக்கிறாங்க. சின்னவரான ஆறுமுகம் கேசு எதுவும் கிடைக்காம தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகுறார்.

ஊரை இரண்டாகப் பிரிச்சு ஆளுக்குப் பாதி எடுத்துட்டாதான் தனக்கும் கேசுகள் கிடைக்கும்னு நினைச்சு அதைத் தன்னோட அண்ணன்கிட்ட சொல்றார். ஊரைப் பிரிக்கிறதுல அவருக்கு விருப்பம் இல்ல. இருந்தாலும் நாட்டாமை பரம்பரைல வந்த எல்லோருக்குமே தீர்ப்புச் சொல்லுற வாய்ப்பு கொடுக்கப்படணும்னு ஃபீல் பண்ணுறார்.

”ஊரை ரெண்டாகப் பிரிக்க வேண்டாம்டா தம்பி. நாம நம்ம தொழிலுக்கு ஷிப்ட் மெத்தேடு கொண்டு வந்துடலாம். பகல்ல நடக்குற பிரச்னைகளுக்கு ஒருத்தர் தீர்ப்புச் சொல்லுவோம். நைட்டுல நடக்குற பிரச்னைகளுக்கு இன்னொருத்தர் தீர்ப்புச் சொல்லுவோம். இனிமே நாட்டாமை சர்வீஸ் 24 மணிநேரமும் கிடைக்கும். கணக்கு போய் போஸ்டர் ஒட்டு”ன்னு கணக்குப் பிள்ளைக்கிட்டசொல்ல, ஆறுமுகத்துக்கு அந்த ஐடியா பிடிச்சிருக்கு.

இதுக்கு இடைல படத்தோட வில்லனான பொன்னம்பலம் பெரிய நாட்டாமையான சண்முகத்தை நேர்ல பார்த்து பணம் வாங்கிட்டுப் போறார். அதை ஒளிஞ்சிருந்து பார்த்துடறாங்க ஆறுமுகத்தோட மனைவி.

அடுத்த வாரத்துல இருந்து ஷிப்டி முறைப்படி தீர்ப்புகள் வழங்கப்படும்னு தண்டோரா போடுறாங்க. திங்கள் கிழமை காலை எழுந்ததும் குளிச்சுட்டு, பளீர்னு வெள்ளை வேட்டி, சட்டை எடுத்து மாட்டிட்டு ஆலமரத்துக்கு அடியில் வந்து உக்கார்ந்துடுவார் சின்ன நாட்டாமை ஆறுமுகம். 24*7 தீர்ப்பு வழங்கப்படும்னு போர்டு எல்லாம் போடுறாங்க. பேப்பர்ல, வாட்ஸ்அப்ல, ட்விட்டர்ல எல்லாம் பெய்டு விளம்பரம்கூடக் குடுக்கிறாங்க. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரையிலும் ஆறுமுகம் நாட்டாமை தீர்ப்பு வழங்குவார். அதுக்கு மேல் சண்முகம் நாட்டாமை தீர்ப்பு வழங்குவார்.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2

அடுத்த ஒரு மாசத்துக்குப் பகல்ல ஒரு பிரச்னையுமே நடக்கல. எல்லாப் பிரச்னைகளும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேலதான் நடக்குது. வழக்கம் போல எல்லா தீர்ப்புகளையும் சண்முகமே கொடுக்கிறார். சண்முகத்தோட பேரும் புகழும் நியூயார்க் டைம் ஸ்கொயர் வரைக்கும் பிரபலமாகுது. உலக நாட்டாமைகள் மாநாட்டுல சண்முகத்தைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறாங்க.

இதைப் பார்க்கிற ஆறுமுகத்தோட மனைவிக்கு எரிச்சல் உச்சநிலையை அடையுது. நாட்டாமையாகப் பதவிக்கு வந்ததுல இருந்து இன்னும் ஒரு தீர்ப்பைக் கூடக் குடுக்கலைன்னு கேவலமாகத் தன்னோட கணவனைத் திட்டுறாங்க.

காலைல சொம்பு முழுக்கத் தண்ணியோட போய் ஆலமரத்துக்கு அடியில் உக்கார்ந்து போற வர்றவங்களை வேடிக்கை பார்த்துட்டு விரக்தியா வந்துட்டு இருக்கார் ஆறுமுகம். அங்க ஒரு சோகப்பாட்டு ஒண்ணு போடுறொம். ஆலமரத்துத் திண்ணைல காலைக் கீழே போட்டு உக்கார்ந்திருக்கார் ஆறுமுகம். அவர் கொண்டு வந்த சொம்பு ஏற்கெனவே பாசி பிடிச்சுப் போயிருக்கு. “எள்ளு வய பூக்கலையே...” பாட்டைப் போட்டு விடுறோம்.

பாட்டுக்கு இடைல ரெண்டு ஸ்கூல பசங்க சண்டைப் போட்டுட்டே வர்றாங்க. தன் வாழ்க்கைல முதல் முறையாக ஒரு தீர்ப்புச் சொல்லப் போறோம்னு அவங்களைக் கூப்பிடுறார். ஆனா, இவர் கிட்ட வந்ததும் அந்த ரெண்டு பசங்களும் தோள் மேல கையைப் போட்டுட்டு எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையும் இல்லன்னு சொல்லிட்டுச் சிரிக்கிறாங்க.

இடைல ஒரு வழியா பகல்லயே ஒரு பிரச்னை நடக்குது. நாட்டாமைகிட்ட போய் தீர்ப்பு வாங்கிட்டு வரலாம்னு சிலர் ஆறுமுகத்தை பார்க்கக் கிளம்புறாங்க. இடைல வர்ற வில்லன் அந்தக் கும்பலை அடிச்சு விரட்டிவிடுறார். அதனால அந்த கேசும் கிடைக்கலை. வாழ்க்கைல மொதல் போனியே பண்ணாத நாட்டாமைன்னு தன்னோட பேர் கல்வெட்டுல பதியப்படுமோன்னு ரொம்ப வருத்தத்தோட வீட்டுக்கு வர்றார் ஆறுமுகம்.

வீட்டுக்கு வரும் போது வில்லன் பொன்னம்பலம் சண்முகம்கிட்ட பணம் வாங்கிட்டுப் போறதைப் பார்க்கிறார். ஆனால், இவர் பார்த்ததை சண்முகம் கவனிக்கலை.

வில்லனுக்கு எதுக்காகப் பணம் கொடுக்கணும்னு எல்லோரும் குழப்பமாகப் பார்த்துட்டு இருக்காங்க. இதுல ஏதோ சதித்திட்டம் இருக்குன்னு ஆறுமுகம் நினைக்கிறார். சண்முகத்துக்கு மட்டும் கேஸுகள் வர்றதுக்கும் இதுக்கும் எதோ ஒரு தொடர்பு இருக்குன்னு ஆறுமுகம் கண்டுபிடிக்கிறார்.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2

பொன்னம்பலத்தைப் பின் தொடர்ந்து போனா எதாச்சும் தெரியும்னு தோணுது. அவரைப் பின் தொடர்ந்து போறார். அவர் ஊருக்குள்ள சில வீடுகளுக்குப் போய் அடுத்த நாள் நைட்டு டைம்ல பிரச்னை செய்யணும்னு சொல்லிப் பணம் கொடுக்கிறார். அப்படிப் பிரச்னை செஞ்சுட்டு உடனடியாக நைட்டு சண்முகம் நாட்டாமை கிட்ட வந்து தப்பை ஒத்துக்கணும்னு சொல்லுறார். அவங்களும் வழக்கம் போலத்தானேன்னு சொல்லிச் சிரிக்கிறாங்க.

இத்தனை நாளும் தனக்குக் கேசுகள் எதுவும் கிடைக்காமல் போனதுக்குத் தன்னோட அண்ணன்தான் காரணம்னு ஆறுமுகத்துத் தெரிய வர க்ளைமேக்ஸ் நெருங்குது.

கடுங்கோபத்தோட வீட்டுக்குப் போறார். சண்முகம் பேப்பர் படிச்சுட்டு இருக்கார்.

“என்னடா தம்பி. இன்னைக்கு எத்தனைத் தீர்ப்புச் சொன்ன?”ன்னு கேக்குறார்.

“ஏன் காசு குடுக்கிற உங்களுக்குத் தெரியாதாக்கும்?”

சண்முகம் ஷாக்காகி ஆறுமுகத்தை உத்துப் பார்க்கிறார்.

பொன்னம்பலம் பின்னாடி தான் போனதையும் காசு குடுத்து பிரச்னை செய்யச் சொல்லி அதுக்குத் தீர்ப்புச் சொல்லிட்டு இருக்கிற அல்ப புத்தியைப் பத்திப் புட்டுப் புட்டு வைக்கிறார்.

அப்போ 'நிறுத்துடா'ன்னு உள்ள இருந்து ஒரு சிங்கக் குரல் கேக்குது.

பசுபதி உள்ள இருந்து வர்றார். ஆமா, ஒரு வழியா ஒருநாள் கால்ஷீட்ல அவரைத் திரும்ப நடிக்க வெச்சாச்சு. “நீ நினைக்கிற மாதிரி சண்முகம் தன்னைத் தானே பிராண்டிங் செய்யணும்னு இதெல்லாம் செய்யல. உனக்கு ஒரு கேசும் கிடைக்கலையேன்னு எத்தனை நாள் அவன் அழுதிருக்கான் தெரியுமா? எதுவுமே கிடைக்க மாட்டேங்குதேன்னுதான் அவனைக் கூப்பிட்டுப் பிரச்னை செய்யச் சொன்னான் உங்க அண்ணன். உனக்கும் நாலஞ்சு கேசு வரணும். நீ கொண்டுப் போற சொம்பு சாய்ங்காலம் வெறும் சொம்பாகத் திரும்பணும்னு தான் அவனும் ஆசைப்பட்டான். அதுக்காகத் தான் காசு கொடுத்துப் பிரச்னை செய்யச் சொன்னான். அவனைப் போய் குத்தம் சொல்லிட்டியேடா..?” ன்னு இருமிட்டே அவர் அழறார்.

நாட்டாமை - 2
நாட்டாமை - 2

சண்முகத்துக்கும் ஆறுமுகத்துக்கும் இப்போ ஒரு உண்மை விளங்குது. எதுக்காகத் தம்பியோட ஷிப்ட்ல பிரச்னை செய்யச் சொன்னா அண்ணனோட ஷிப்ட்ல பிரச்னை செஞ்சான் அந்த வில்லன்னு யோசிக்கிறாங்க. அப்பத்தான் நாட்டாமை குடும்பம் பிரியும். அதன் மூலமாக ஊருக்குள்ள மறுபடியும் வந்துட முடியும்னு வில்லன் போட்ட திட்டத்தைத் தெரிஞ்சுக்கிறாங்க.

சண்முகமும் ஆறுமுகமும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சுக்கிறாங்க. அடுத்த ஷாட்ல வில்லன் பொன்னம்பலத்தை ரெண்டு பேரும் அடிச்சுத் துவைச்சு, இன்னும் ஒரு 2 கி.மி தூரம் அவரை ஊர விட்டுத் தள்ளி வைச்சுட்டதா தீர்ப்புச் சொல்றாங்க. இதை உலகத்துல இருக்கற பிரபலமான நீதிபதிகள் எல்லாம் லைவ் டெலிகாஸ்ட்ல பார்த்துட்டு அந்தத் தீர்ப்பைப் பத்திப் புகழ்ந்து தள்ளுறாங்க. அங்க முடிக்கிறோம் படத்தை!