Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு: சிங்கம் - 4: சாதா சுமோ டு ராக்கெட் சுமோ! பாண்டுக்கே டஃப் கொடுக்கும் துரை சிங்கம்!

சிங்கம் - 4

தூத்துக்குடில மளிகைக் கடை வச்சுட்டு அண்டர்கவர் ஆபரேசன்ல இருக்கிற துரை சிங்கத்தைப் பத்தி அமெரிக்க அதிபருக்குத் தெரிஞ்சிருக்கு. அவர்தான் இதுக்கு சரியான ஆள்ன்னு முடிவு பண்றார்.

Published:Updated:

ரெண்டாவது ரவுண்டு: சிங்கம் - 4: சாதா சுமோ டு ராக்கெட் சுமோ! பாண்டுக்கே டஃப் கொடுக்கும் துரை சிங்கம்!

தூத்துக்குடில மளிகைக் கடை வச்சுட்டு அண்டர்கவர் ஆபரேசன்ல இருக்கிற துரை சிங்கத்தைப் பத்தி அமெரிக்க அதிபருக்குத் தெரிஞ்சிருக்கு. அவர்தான் இதுக்கு சரியான ஆள்ன்னு முடிவு பண்றார்.

சிங்கம் - 4

எப்பவுமே சிலர் படம் எடுக்கப் போறதா அறிவிப்பு வெளியிட்டா ரசிகர்களைத் தாண்டி தியேட்டர் உரிமையாளர்களோ இல்ல OTT காரங்களோதான் சந்தோசப்படுவாங்க. ஆனா, ஹரி படம் எடுத்தார்னா டாடா சுமோ கார் கம்பெனிகாரங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க. ஏன்னா, இயக்குநர் ஹரி எடுக்கிற படத்துல கதை எழுதுறதுக்கு ‘அ’ போட்டதும் மொதல்ல நூறு டாடா சுமோ வேணும்னு போட்டுத்தான் கதையவே எழுத ஆரம்பிப்பார். அப்படியே கொஞ்சம் பாம் செலவும் பட்ஜெட்ல சேர்ந்துக்கும். எப்பவுமே நாம ஒரு விஷயத்தைத் தொடர்ச்சியா செஞ்சுட்டே இருக்கோம்னா அதுல நாம எப்படியும் மிகப் பெரிய திறமைசாலியா மாறிடுவோம். அந்த வகைல இத்தனை நாளும் ரோட்டுல ஓட்டிட்டு இருந்த டாடா சுமோவை இனி வானத்தில் பறக்க வைக்கப் போறோம். 'ஆம்பள' பட பேன்ஸ் லைன்ல வாங்க... ஏன்னா, உங்களுக்கு எல்லாம் சீனியர் இவர்!

சிங்கம் - 4
சிங்கம் - 4

இதுக்கெல்லாம் முன்னாடி, இந்த வாரம் என்ன படத்தை வம்புக்கு இழுக்கலாம்னு ஐடியா வர்றதுக்காக 'சும்மா சுர்ருன்னு...' 'எதற்கும் துணிந்தவன்' பாட்டைப் போட்டு இமான் மேஜிக்குக்கு வைப் பண்ணிட்டு இருந்தேன். அப்ப நம்ம காதுல அந்தப் பாட்டோட ஒரு லைன் விழுந்துச்சு. "உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான். சிங்கம் 4-ஆட்டம் வெறப்பா இருப்பான்" - இதைக் கேட்டதும் டக்குன்னு கபாலத்துல கலங்கரை விளக்கமாட்ட லைட் எரிஞ்சுச்சு. 'எட்றா பேனாவானு' பேப்பர் பண்டிலோட உட்கார்ந்தா, ஹரி படம் எப்படி எப்பவும் 4x ஸ்பீட்ல ஓடுமோ அதே மாதிரி 'சிங்கம் 4'-க்கான ஐடியாஸ் அருவியா கொட்டுச்சு. நாம எடுக்க வேண்டிய படம் ‘சிங்கம்-4’ தாண்டானு முழு மனசோட முடிவு எடுத்து, துரைசிங்கத்துக்கு போன் போட்டாச்சு.

'சிங்கம்' வரிசை படங்கள்ல இதுவரைக்கும் உள்நாட்டுல ரவுடித்தனம் செஞ்சுட்டு இருக்கிறவங்களையும், ஆப்பிரிக்காவுல இருந்து போதைப் பொருள் கடத்தறவங்களையும், ஆஸ்திரேலியாவுல இருந்து குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுறவங்களையும் கண்டுபிடிச்சு அடிச்சுத் திருத்தியாச்சு. சிங்கம் 4-ல யாரைத் திருத்தப் போறோம்?

படம் ஆரம்பிக்கும் போதே கார்களை எல்லாம் வானத்தில் பறக்க விடணும்னு முடிவு செஞ்சாச்சு. அதனால் இந்தப் படத்துல நிலத்துல இருக்கிற பொருள்களைத் திருடுறவங்களைப் பத்தி கதை எழுத முடியாது. வானத்துல இருக்கிறதைத் திருடுற ஒரு திருடனைப் பிடிக்கிற கதையாகத்தான் எடுக்கப் போறோம். வானத்துல இருந்து எதைத் திருடுறது? நிலாவைத் திருடலாம்தான். திருடிட்டா இந்தக் காதல் கவிஞர்கள் தொல்லைல இருந்து தப்பிச்சு நிம்மதியா வாழலாம். ஆனா, அது ரொம்பவும் பெரிசா வேற இருக்கு. சயின்ஸ் ஃபிக்ஷன்னா, ஐமேக்ஸ், 3டி-ன்னு பட்ஜெட் வேற எகிறிடும். அதனால் நிலாவை அடுத்த பாகத்துல திருடிக்கலாம். இதுல எதாச்சும் விமான கடத்தல் கும்பலைப் பிடிக்கிற மாதிரி வைக்கலாமா? ஆனா, ஏற்கெனவே விமானத்தைக் கடத்துற கும்பல்களை நம்ம கேப்டன் சேதுபதி தொடங்கி பல்வேறு ஹீரோக்கள் காப்பாத்திட்டாங்க. நம்ம துரை சிங்கம் கொஞ்சம் வெயிட்டான ஆளு. அவர் டீல் பண்ணுற அளவுக்கு வெயிட்டான மேட்டரை வச்சாதான் நல்லா இருக்கும்.

சிங்கம் - 4
சிங்கம் - 4

அதனால செயற்கைக் கோளைத் திருடுற திருடனைப் பிடிக்கிற போலீசாக நம்ம துரை சிங்கம் களம் இறங்கப் போறார். அதுக்காக ஜீரோ கிராவிட்டி உட்பட தனிப் பயிற்களையும் கூட அவர் எடுத்துட்டு இருக்கார். என்னதான் செவ்வாய்க்கு ராக்கெட் விடுற அளவுக்கு அவருக்கு அறிவு இருந்தாலும் கூட இன்னமும் அண்டர்கவர் ஆபீசராகத்தான் இருக்கார். தன்னோட ஊர்ல இன்னும் நாலஞ்சு சூப்பர் மார்கெட் எல்லாம் கட்டி கல்லாவுல உட்கார்ந்துட்டு வியாபாரம் செஞ்சுட்டு இருக்கார்.

அந்தச் சமயத்துல ஒரு மிகப் பெரிய திருட்டு ஒண்ணு நடக்குது. அதைப் பத்தி உலகமே பரபரப்பா பேசிட்டு இருக்காங்க. உலகத்துல மிகவும் அதி புத்திசாலிகள் நிறைந்த உளவு அமைப்பாகச் சொல்லப்படுற மொசாட் கூட கண்டுபிடிக்க முடியாத திருட்டாக அதைப் பத்தி பில்ட் அப் பண்ணுறாங்க. அது என்ன திருட்டுனா, கொஞ்ச நாள் முன்னாடி அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்னு ஒண்ணை அனுப்பியிருந்தாங்க. அதை யாரோ திருடிடறாங்க. அது எங்க போச்சு எப்படி மாயமா மறைஞ்சு போச்சுன்னு யாருக்குமே ஒண்ணும் புரியல.

இதைக் கண்டுபிடிக்க ஒரே ஒருத்தரால தான் முடியும்னு ஜோ பைடன் சொல்றார். ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்னா, அதே பேருல இருக்கற ஜேம்ஸ் பாண்டாதான் இருக்கும்னு எல்லாரும் ஆர்வமா வெயிட் பண்றாங்க. ஜேம்ஸ் பாண்ட் விஷயம் கேள்விப்பட்டு தன்னோட ஆஸ்டன் மார்ட்டின் காருக்கு பெட்ரோல் அடிக்க பங்குக்கே கிளம்பிட்டார்.

ஆனா, அப்பதான் ஒரு ட்விஸ்ட். ஆமா... தூத்துக்குடில மளிகைக் கடை வச்சுட்டு அண்டர்கவர் ஆபரேசன்ல இருக்கிற துரை சிங்கத்தைப் பத்தி அமெரிக்க அதிபருக்குத் தெரிஞ்சிருக்கு. அவர்தான் இதுக்கு சரியான ஆள்ன்னு முடிவு பண்றார். அடுத்த நொடி, துரை சிங்கம் போனுக்கு ஒரு மெசேஜ் வர, அடுத்த ஷாட்ல துரை சிங்கம் தலைமையில ஒரு இண்டர்நேஷனல் போலீஸ் குழு ஜேம்ஸ் வெப் டெலஸ்கோபைத் தேடிப் போறாங்க.

சிங்கம் - 4
சிங்கம் - 4

இத்தனை நாடுகள் கண்காணிச்சுட்டு இருக்கிற டெலஸ்கோப்பை எப்படி ஒருத்தன் திருடிட்டுப் போக முடியும்னு துரைசிங்கம் யோசிச்சுட்டு இருக்கார். ஒருவேளை காவியா நகையை ஒளிச்சு வச்சுட்டு திருடு போயிடுச்சுன்னு சொன்ன மாதிரி இந்த டெலஸ்கோப்பை அமெரிக்காக்காரங்களே யாருக்கும் தெரியாத ஒரு இடத்துல கொண்டு போய் நிறுத்திட்டு எல்லோரையும் ஏமாத்துறாங்களோன்னு கூட யோசிச்சுப் பார்க்கிறார். அப்படியும் எந்தக் க்ளூவும் கிடைக்கல.

ஜேம்ஸ் வெப் போன பாதையில், சோழர்களைத் தேடிப்போன 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி நாமளும் போய்ப் பார்த்தா எதாச்சும் க்ளூ கிடைக்கும்னு சொல்லி அதுக்கு அனுமதி வாங்குறார். துரை சிங்கம் போறதுக்காக தனியா ஒரு ராக்கெட் உருவாக்கித் தர்றதா சொல்றாங்க. ஆனா, அதெல்லாம் வேண்டாம். எங்கிட்ட இருக்கிற டாடா சுமோவே போதும். அதுல போனாதான் ஜாலியா பராக்குப் பார்த்துட்டே போலாம்னு சொல்றார். ஒருவேளை இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கப் போறோம்னா எப்படியும் வில்லன் தன்னோட அடியாட்களை டாடா சுமோவுலதான் அனுப்பிவிடுவான். உலகத்துலயே விண்வெளியில் ஒரு கார் ஃபைட் வச்ச மாதிரியும் இருக்கும். அதனால் நான் என்னோட கார்லயே போய்க்கிறேன்னு சொல்றார்.

விஞ்ஞானிகள் எல்லாம் லீவு எடுத்துட்டு தாங்கள் இத்தனை வருசம் படிச்ச அறிவியல் கோட்பாடுகளை நினைச்சு ரூம் போட்டு அழுறதுக்காகப் போறாங்க. படம் பாக்குறவங்க எல்லாரும் ஜாலியா சீட்டோட நுனிக்கு வந்து எப்படி இந்தக் கார் எல்லாம் வானத்துல பறக்கப் போகுதுன்னு பார்த்துட்டு இருக்காங்க.

ஜேம்ஸ் வெப் செலுத்தப்பட்ட ராக்கெட் ஏவுதளத்துக்கு வர்ற துரை சிங்கம், ரெண்டு பனை மரத்துக்கு நடுவுல பெரிய எலாஸ்டிக் துணியை ரப்பர் பேண்ட் மாதிரி யூஸ் பண்ணி காரை இழுத்து மேல விடச் சொல்றார். 'பாகுபலியைப் போல யோசி'ன்னு பின்னாடி கட்டப்பா வாய்ஸ் கேட்குது. அந்த டெலஸ்கோப்பைத் திருடினவனும் இதே வழியாகத்தான் போயிருக்கணும்னு நினைக்கிறதால வழியில் எதாச்சும் ஆதாரங்கள் கிடைக்குதான்னு பார்த்துட்டே போறார் துரை சிங்கம். கார் பூமியைத் தாண்டி மேல போயிட்டு இருக்கு. அந்த டெலஸ்கோப் நிலை நிறுத்தப்பட்ட இடத்துக்குப் போயிட்டு ஒரு யூ-டர்ன் அடிச்சுத் திரும்பி வர்றார். போற வர்ற வழியில் சில பொருள்கள் அவருக்குக் கிடைக்குது. அது போக ஒரு மிக முக்கியமான ஒரு சீட்டும் கிடைக்குது. அதைப் பார்த்து ஒரு நிமிஷம் ஷாக்காகி அதே வேகத்துல பூமிக்குத் திரும்பிடறார்.

சிங்கம் - 4
சிங்கம் - 4

வில்லனோட அடியாட்கள் துரத்த ஒரு மரண லெவல் ஃபைட் வரும்னு எல்லோரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. பூமிக்குத் திரும்பினதும் நேரா சிசிடிவி ஃபுட்டேஜஸ் இருக்கிற ஒரு ரூமுக்குள்ள போறார். உங்களுக்கு எந்த ஏரியாவுல, எந்த டேட்டுல இருக்கிற ரெக்கார்டுகளைப் பார்க்கணும்னு கேக்குறாங்க.

“இப்போ ஆல்ரெடி ப்ரி-க்ளைமேக்ஸ் வந்துட்டோம். நீங்க எதாச்சும் ஒரு டேட்டுல போட்டுவிடுங்க. நாம ஜும் பண்ணிப் பார்த்துட்டு வில்லனோட காரைக் கண்டுபிடிச்சுக்கலாம்”னு சொல்றார்.

அந்த ஆபரேட்டருக்கு ஒண்ணும் புரியல.

“எங்க ஊர்ல இப்படித்தாங்க கண்டுபிடிப்போம். விமானத்துல போன வில்லனைக் கூட சிசிடிவி ஃபுட்டேஜ் வச்சு கண்டுபிடிச்சிருக்கோம். நீங்க சும்மா ஓடவிடுங்க நான் பார்த்துக்கிறேன்”ன்னு சொல்லி போட்டுக்காட்டச் சொல்றார். ரெண்டு மூணு க்ளிப்பிங்ஸ் பார்த்துட்டு அதுல கடைசியா வந்த காரை மட்டும் ஜூம் பண்ணச் சொல்லி, நம்பரை நோட் பண்ணிக்கிறார்.

அடுத்த அரை மணி நேரத்துல துரைசிங்கம் இந்தியாவுல இருக்கார். இந்திய கஸ்டம்ஸ் ஆஃபீசராக இருக்கிற தேவாதான் இந்த ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பைத் திருடியிருக்கார்னு தெரியவருது. யார் இந்த தேவா? 'அயன்' படத்துல மிகத் திறமையாக ஸ்மக்லிங் செய்யுறார்னு சொல்லி ஒருத்தரை கஸ்டம்ஸ் ஆஃபீசராக அப்பாயிண்ட் செய்வாங்கள்ல. அவர்தான் தேவா. யமுனாவோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கார்.

கடைசியா தேவாவும் தன்னோட திருட்டை ஒத்துக்கிறார். என்னதான் கஸ்டம்ஸ் அதிகாரியாக இருந்தாலும் இப்படி எதாச்சும் த்ரில்லிங்காகச் செய்யுறது பிடிச்சிருக்கிறதாலதான் உலக நாடுகளோட கண்ல மண்ணைத் தூவிட்டு அந்த டெலஸ்கோப்பைத் திருடி ஒரு இடத்துல வச்சிருக்கிறேன்னு சொல்றார். மொத்த விஞ்ஞானிகளும் தங்களோட வேலையை விட்டுட்டுப் போயிடலாம்னு முடிவு செய்யுறாங்க. ஏன்னா அறிவியலை ஒரு ஊறுகாயாகக் கூட மதிக்காம இத்தனை வீர தீரச் செயல்களைச் செஞ்சுட்டு இருக்கிறதை நினைச்சு அவுங்களுக்கு வருத்தம்.

'அயன்' தேவா
'அயன்' தேவா

இந்த வருத்தங்களைத் தாண்டி இன்னொரு மிகப் பெரிய வருத்தம் அதுக்கு அப்புறமாகத்தான் தெரியவருது. அது என்னன்னா, தேவாவை நாசாவோட செக்யூரிட்டி ஹெட்டா அறிவிச்சுடறாங்க. யாருக்குமே தெரியாம இவ்வளவு பெரிய டெலஸ்கோப்பை திருடினது உள்ளபடியே மிகப்பெரிய சாதனைதான். அதனால அவரோட அறிவு நமக்குத் தேவைப்படும்னு இந்த முடிவு எடுத்ததாகச் சொல்லி படத்தை முடிக்கிறோம்!

பொதுவா 'சிங்கம்' சீரீஸ் படங்கள்ல சத்தம் அதிகமா இருக்கும். வேக வேகமா கார்கள் சீறிப் பாய்ந்து வரும். வில்லன்கள் எல்லாம் விதவிதமான குற்றவாளிகளா இருப்பாங்க. இந்த 'சிங்கம் 4'-ல கொஞ்சம் வித்தியாசம் காட்டலாம்னுதான் வில்லனைப் பத்தியோ ஹீரோயின் பத்தியோ அதிகமாகக் காட்டப் போறது இல்ல. அதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய வீர சாகசமாகத்தான் சாதா சுமோவை ராக்கெட் சுமோவா பறக்கவிட்டிருக்கோம். மக்களையும் தியேட்டர்ல இருந்து தெறிக்கவிடுறோம்!