தென் கொரியாவில், அருங்காட்சியகம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழம் மாடலை, பார்வையாளராக வந்த மாணவர் ஒருவர் எடுத்து சாப்பிட்டது பேசுபொருளான நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தென் கொரியாவைச் சேர்ந்த மொரிசியோ கேட்டலன் எனும் கலைஞர், அவ்வப்போது கலை சார்ந்த படைப்புகளைக் கொண்டு கண்காட்சிகளை நடத்துவது வழக்கம். அதுபோன்று சமீபத்தில் சியோல் நகரில் உள்ள லீயம் கலை அருங்காட்சியகத்தில் கண்காட்சியை நடத்தியுள்ளார். இதில், வித்தியாசமான கலைப்பொருளாக வாழைப்பழம் ஒன்று சுவரில் டேப் போட்டு ஒட்டி, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்தப் படைப்பிற்கு ‘காமெடியன்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர்.
கண்காட்சியை பார்வையிட வந்த பார்வையாளர்களில் ஒருவரான கலைக்கல்லூரி மாணவர் நோ ஹியூன்-சூ (Noh Huyn-soo) என்பவர், கிராஃப்ட் வாழைப்பழத்தை பார்வையிட்டதோடு, அதனை எடுத்துச் சாப்பிடவும் செய்துள்ளார். அத்துடன் நிற்காமல், சாப்பிட்ட வாழைப்பழத்தின் தோலை மீண்டும் அதே இடத்தில் வைத்து, டேப் போட்டு ஒட்டிவிட்டுச் சென்றார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர். அந்த மாணவரோ, காலையில் சாப்பிடாமல் வந்ததால் மிகவும் பசித்ததாகவும், அதனால் வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டதாகவும் கூறியதோடு, `கண்காட்சியில் டேப் போட்டு ஒட்டி வைத்திருப்பவை சாப்பிடுவதற்கு இல்லையா?' என்று அப்பாவியாகக் கேள்வி கேட்டுள்ளார்.

இதனிடையே, கல்லூரி மாணவர் ஆர்ட்வொர்க் வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டதையும், தோலை அங்கேயே ஒட்டி வைத்ததையும் அவரின் நண்பர் ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டு, `ஒரு கலைப்படைப்பை சேதப்படுத்துவது மற்றொரு கலைப்படைப்பாகவும் இருக்கலாம்' என்று கமென்ட் செய்துள்ளார்.
இது குறித்து, கண்காட்சி நடத்தும் கேட்லன் கூறுகையில், ``வாழைப்பழ படைப்பை பார்வையாளர் ஒருவர் சாப்பிட்டதில் பிரச்னை இல்லை. இதற்காக நாங்கள் அவரிடம் எவ்வித நஷ்டஈடும் கேட்கப் போவதில்லை. பார்வையாளர்கள் அல்லது பணியாளர்கள் கலைப்படைப்பை சாப்பிடுவதோ, சேதப்படுத்துவதோ இது முதல் முறையல்ல. அது மட்டுமன்றி பழமும் இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். இதற்கு முன்பு, 2019-ம் ஆண்டிலும் இதுபோன்ற கலைப்படைப்பை ரூ. 98 லட்சத்துக்கு விற்ற பின்பு, டேவிட் என்பவர் சுவரில் இருந்து இழுத்து சேதப்படுத்த முயற்சி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாணவரின் செயலுக்குக் கலவையான விமர்சனங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். `சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்திற்கு இவ்வளவு விலையா?' எனவும், `பசித்ததால் சாப்பிட்டிருக்கிறார்; இதில் தவறேதும் இல்லை' எனவும், `என்ன இருந்தாலும், அதுவொரு கலைப் படைப்பு. கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும்போது அதை சாப்பிட்டிருக்கக் கூடாது' என்றும் கமெண்ட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.