கேரளாவில், தனக்கு 17 வயது என்று கூறி இன்ஸ்டாகிராமில் 22 வயது வாலிபரை, நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் காதலித்து வந்துள்ளார். அத்துடன், வீட்டை விட்டு ஓடி வந்த அந்தப் பெண்ணை நேரில் பார்த்த வாலிபர், 50 வயது பெண் என்பதை அறிந்து ஏமாற்றத்துக்குள்ளானார்.
முகம் பார்க்காமல் காதலிப்பது என்பதெல்லாம் 90 கிட்ஸ் காலத்து சங்கதி என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து, சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்திற்கும் இது பொருந்துகிறது. இதில் பல சுவாரஸ்யங்களும், பல நேரங்களில் ஏமாற்றமும் ஏற்படுவதுண்டு. கேரளாவில் அப்படித்தான், இன்ஸ்டாகிராமில் முகம் பார்க்காமல் காதலித்துவிட்டு, நேரில் காதலியைப் பார்த்தபோது காதலன் அதிர்ச்சியடைந்து அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்தக் காதலனுக்கு வயது 22; மலப்புரம் மாவட்டம் காளிகாவு பகுதியைச் சேர்ந்தவர். இவருடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான கோழிக்கோட்டைச் சேர்ந்த பெண், தனக்கு 17 வயது என்று கூறியுள்ளார். நாளடைவில் இருவரும் காதல்வயப்பட்டனர். முகம் பார்க்காமலேயே இருவரும் சாட்டிங் செய்து தங்களது காதலை வளர்த்தனர்.
திடீரென ஒருநாள், தன் காதலனைப் பார்க்கும் ஆவல் காதலிக்கு ஏற்பட்டது. இதை காதலனிடம் தெரிவிக்க, அவரோ தன்னால் உடனடியாக வர முடியாத சூழ்நிலை என்று தெரிவித்துள்ளார். `அதனாலென்ன, உங்களைப் பார்க்க நானே வருகிறேன்' என்று காதலி தெரிவித்துள்ளார். ஆர்வமிகுதியில் இதற்கு காதலன் சம்மதித்து, தனது லொகோஷனை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.
அதன் பின்னர் தனது 'இன்ஸ்டாகிராம்' காதலியின் வருகைக்காக காதலன் தனது வீட்டில் காத்திருக்க, குறித்த நேரத்தில் 50 வயது பெண் ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் யாரென்று விசாரித்தபோதுதான், 17 வயது என்று கூறிய இன்ஸ்டா காதலி என்பது தெரிந்தது. அவரைப் பார்த்து அதிர்ந்து போன காதலன், என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்; ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்று அழத் தொடங்கினார்.
தன்னைப் பார்க்க வந்த இன்ஸ்டா காதலிக்கு வயது 50; அவர் நான்கு பிள்ளைகளின் தாய் என்பதும் வாலிபருக்குத் தெரிந்தது. காதல் கைகூடவில்லை என்பதை அறிந்த காதலன், அந்தப் பெண்ணை சொந்த ஊருக்குப் போகச் சொல்ல, அவரோ மறுத்துவிட்டார். "நாம் ஒன்றாக வாழ வேண்டுமென்றுதான் பெட்டி, படுக்கையுடன் வந்துள்ளேன்' என்று கூறி அங்கேயே இருக்க, அந்த வாலிபருடன் சேர்ந்து அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து, காளிகாவு போலீசாருக்கு வாலிபரின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். போலீசார், அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சு நடத்தி, அந்தப் பெண்ணுக்கு தகுந்த ஆலோசனை வழங்கினர். இதனிடையே, நான்கு குழந்தைகளின் தாய் காணாமல் போனது குறித்து, அவர் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இரு தரப்பினரையும் நேரில் அழைத்துப் பேசிய போலீசார், கடைசியில் அந்தப் பெண்ணை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். ஒருவழியாக தப்பித்தோம் என்று, வாலிபரின் குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர். இச்சம்பவம், கேரளாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.