உலகின் மிகக்குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ள தென் கொரியாவில், குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு மாதம் ரூ. 62 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தென் கொரியா, உலகளவில் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில், அந்த நாட்டில் ஒரு பெண்ணின் சராசரி குழந்தை எண்ணிக்கையானது, 0.78 ஆக இருந்தது. இது, அதற்கு முந்தைய 2021-ம் ஆண்டின் விகிதமான 0.81 என்பதைவிட குறைவாகும். பொதுவாக, மக்கள் தொகையை நிலையானதாக வைத்திருக்கத் தேவைப்படும் பிறப்பு எண்ணிக்கை விகிதம் 2.1 ஆகும்.

கடினமான பணிச்சூழல், நிலையான வேலைவாய்ப்பு இல்லாதது, முறையான வீட்டுவசதியின்மை, கல்விச் செலவுகள் மற்றும் பாலின சமத்துவமின்மை போன்றவை, மக்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் காரணிகள்; அவற்றைத் தடுக்க உரிய வழிமுறைகளை அரசு முன்னெடுக்க வேண்டுமென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டி வந்தனர்.
இதையடுத்து, குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, கடந்த சில ஆண்டுகளாகவே தென் கொரிய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைபெறும் தாய்மார்களுக்கு சலுகைகள், மருத்துவ வசதிகளை அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தற்போது குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மேலும் சில அறிவிப்புகளை தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிதிஉதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பின்படி , ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ. 62 ஆயிரமும் (ஒரு மில்லியன் வோன்), இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ. 31 ஆயிரமும் (500,000 வோன்) நிதி உதவியாக, வரும் 2024-ம் ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இது 2022-ம் ஆண்டில் முறையே ரூ. 43 ஆயிரம் மற்றும் ரூ. 21 ஆயிரம் என்று இருந்தது.

இதுதவிர, கல்வி நிதிச்சுமையைக் குறைக்கவும் அரசு நிதி உதவிகளை வழங்குகிறது. அதன்படி, ஆரம்பப்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகளுக்கான மருத்துவச் செலவினங்கள், குழந்தையின்மை சிகிச்சைக்கான செலவுகள், குழந்தை காப்பகச் சேவைகள் உள்ளிட்டவற்றையும் தென் கொரிய அரசே வழங்கும்.
இதனிடையே, குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்த, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கு கட்டாய ராணுவப் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். வீட்டு வேலைச்சுமையைக் குறைக்க வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை குறைந்தபட்ச ஊதியத்திற்கு வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற யோசனைகளை தென் கொரிய அரசியல்வாதிகள் முன்வைத்துள்ளனர்.