சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“அவைத் தலைவர்னா என்ன ப்ரோ?”

ஜாக்குலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாக்குலின்

அப்படியொரு செய்தியை நியூஸ் பேப்பர்ல பார்த்தேன். ஆனா, அந்த நிறுவனத்துடைய பெயர் ஞாபகம் இல்லையே.

“கேளுங்க ப்ரோ. தெரிஞ்ச கேள்விக்குப் பதில் சொல்றேன்” என்றபடி தயாரானார், இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்.

“அரசியல் தவிர வேற எதுவா இருந்தாலும் கேளுங்க ஜி. ஏன்னா, எனக்குத் தேவையான அளவுக்குத்தான் அரசியல் தெரியும்” என ஆரம்பித்தார், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகை ஜாக்குலின்.

“அரசியல் தொடர்பான கேள்விகள்னா நான் பதில் சொல்லிடுவேன். மற்ற கேள்விகளுக்குத் தெரிஞ்சா சொல்றேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க” என்று ஆயத்தமானார், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோகுல இந்திரா.

“கார் ஓட்டிக்கிட்டு இருக்கேன். சிக்னல் விட்டுவிட்டு இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க கேள்வி கேளுங்க ப்ரோ’’ என ரெடியானார், நடிகர் கருணாகரன்.

செப்டம்பர் மாதம் 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரண்டு தமிழ் நடிகைகள் யார், யார்?

ஜாக்குலின்,  ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜாக்குலின், ஜி.வி.பிரகாஷ் குமார்

சரியான பதில்: குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன்

ஜி.வி.பிரகாஷ் குமார்: “குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன்.”

ஜாக்குலின்: “ஒருத்தர் குஷ்பூ மேம். இது எப்படித் தெரியும்னா, டிடி அக்கா அவங்களுக்கு விஷ் பண்ணி ஸ்டேட்டஸ் வெச்சிருந்தாங்க; அதைப் பார்த்தேன். இன்னொருத்தர் ரம்யா கிருஷ்ணன் மேடமா?”

கோகுல இந்திரா: “நிஜமா தெரியலையேங்க.”

கருணாகரன்: சிறிது நேரம் யோசித்த பிறகு, “யாருன்னு தெரியலையே ப்ரோ” என்றவரிடம் பதிலைச் சொன்னதும், “அட ஆமா. ட்விட்டர்ல நிறைய பேர் அவங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு இருந்ததைப் பார்த்தேன். அவங்களுக்கு 50 வயசு ஆகிடுச்சா? நீங்க 50 வயசுன்னு சொன்னதும் நான் ரொம்ப சீனியர் ஹீரோயின்ஸ் பற்றி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.”

‘இ‌னி‌ இந்தியாவில் பைக்‌ விற்பனை இல்லை’ என உற்பத்தியை நிறுத்திய பைக் நிறுவனம்‌ எது?

சரியான பதில்: ஹார்லி டேவிட்சன்

ஜி.வி.பிரகாஷ் குமார்: “ஹார்லி டேவிட்சன்.”

ஜாக்குலின்: “நான் தினமும் ஷூட்டிங் போற வழியில நுங்கம்பாக்கத்துக்குப் பக்கத்தில் இருக்கிற ஹார்லி டேவிட்சன் பைக் ஷோரூமைப் பார்த்திருக்கேன். அது கொஞ்ச நாளா மூடியிருக்கு. அது ஏன் இத்தனை நாளா மூடியிருக்குன்னு தெரியாமல் இருந்தேன். இப்போ நீங்க இந்தக் கேள்வியைக் கேட்டதுக்கு அப்புறம்தான், அது ஏன் மூடியிருக்குன்னு தெரியுது.”

கோகுல இந்திரா: “அப்படியொரு செய்தியை நியூஸ் பேப்பர்ல பார்த்தேன். ஆனா, அந்த நிறுவனத்துடைய பெயர் ஞாபகம் இல்லையே. இந்தியாவில் இல்லைனா அப்போ அது நிச்சயமா வெளிநாட்டு நிறுவனம்தான்.”

கருணாகரன்: கேள்வியை முடிப்பதற்கு முன்பே... “ஹார்லி டேவிட்சன்.”

தேசியச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட தமிழக பா.ஜ.க தலைவர் யார்?

கோகுல இந்திரா,  கருணாகரன்
கோகுல இந்திரா, கருணாகரன்

சரியான பதில்: ஹெச்.ராஜா

ஜி.வி.பிரகாஷ் குமார்: “ஹெச்.ராஜாதானே?”

ஜாக்குலின்: “எனக்குத் தெரிஞ்ச ஒரே தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மட்டும்தான். அவங்களா?”

கோகுல இந்திரா: “இப்போவாச்சும் அரசியல் பத்திக் கேட்டீங்களே! ஹெச்.ராஜா.”

கருணாகரன்: “ஹெச்.ராஜா.”

நடந்துகொண்டிருக்கும் ஐ.பி.எல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்த வீரர் யார்?

சரியான பதில்: ராகுல் திவேதியா

ஜி.வி.பிரகாஷ் குமார்: “நான் இப்போ ஷூட்டிங்ல பிஸியா இருக்கிறனால மேட்ச் பார்க்கிறதுக்கு நேரம் இல்லை. ஆனால், சமீபத்தில் ராகுல் திவேதியாதான் ஒரே ஓவர்ல 5 சிக்ஸர் அடிச்சார்னு சோஷியல் மீடியாவில் பார்த்தேன்.”

ஜாக்குலின்: “கிரிக்கெட் பார்க்கிற பழக்கம் இருக்கு. அவர் பெயரும் ஞாபகத்துல இருக்கு; ஆனா, சொல்ல முடியலை’’ என்றவர், `அவர் எந்த டீம்னு மட்டும் சொல்லுங்க, நான் பதிலைச் சொல்லிடுறேன்’’ என்றார். டீம் பெயரைச் சொன்னதும் “ராகுல் திவேதியாதானே. எனக்குத் தெரியும் ப்ரோ” என்றார்.

கோகுல இந்திரா: “எனக்கு கிரிக்கெட் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ஆர்வமா பார்ப்பேன், ஆனா, நான் கடந்த ஆறு மாசமா நியூஸைத் தவிர எதுவும் டிவியில பார்க்காததனால எனக்கு அவர் யார்னு தெரியலை. யார்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கிறேன்” என்றவரிடம் பதில் சொன்னதும் “ஓ... ஆமா சோஷியல் மீடியாவுல ஒரு கிரிக்கெட் பிளேயரைப் பத்திதான் பேச்சுன்னு வீட்ல சொல்லிட்டிருந்தாங்க. அது இவர்தானா?”

கருணாகரன்: “ஐபிஎல் முதல் ரெண்டு மேட்ச்தான் பார்த்தேன். அதுக்கப்புறம் பார்க்கிறதுக்கு டைம் கிடைக்கலை. ஆனா, ராஜஸ்தான் டீம் ப்ளேயர் ஒரே ஓவர்ல 5 சிக்ஸ் அடிச்சார்னு கேள்விப்பட்டேன்; பெயர் தெரியலை ப்ரோ.”

அதிமுகவின் அவைத் தலைவர் யார்?

“அவைத் தலைவர்னா என்ன ப்ரோ?”

சரியான பதில்: மதுசூதனன்

ஜி.வி.பிரகாஷ் குமார்: “யாருன்னு தெரியலையே ப்ரோ. பன்னீர் செல்வமா?”

ஜாக்குலின்: “அவைத் தலைவர்னா என்ன ப்ரோ?”

கோகுல இந்திரா: “மதுசூதனன்”

கருணாகரன்: “அச்சச்சோ... டக்குனு அவர் பெயர் ஞாபகம் வரலையே. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்கூட நின்னாரே, ஆங்... மதுசூதனன்.”