சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அவங்கல்லாம் அப்பவே அப்படி!

நீதிக்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
நீதிக்கதை

‘ஆத்தி... புள்ள இன்னும்ல காக்கா ஓட்டுது!’ என நெனச்சிக்கிட்டு, “ஏம் ப்ரூட்னி கண்ணு...அக்காவை எழுப்பிவிட்டுட்டு உன் வீட்டுக்குப் போயிருக்கலாம்ல?”

ஓ.பி.எஸ் கொளுத்திப்போட்ட ‘பேச்சிமுத்து நீதிக்கதை’தானே இப்போ தமிழக பொலிடிக்கல் பொடிமாஸ் டிரெண்ட்! இன்னும் சில அரசியல்வாதிகளுக்கு நாம நீதிக்கதைகளை அவங்க சார்பா எழுதி வைப்போம். யாரு அவங்கன்னு கதையைப் படிச்சிட்டுக் கண்டுபிடிங்க பார்ப்போம்!

நீதிக்கதை 1

ஒரு கிராமத்துல ‘ப்ரூட் நீ’ங்கிற சிறுவன் தன் பெற்றோரோடு வசித்து வந்தான். எப்போதும் ஊரில் உள்ள மக்களிடம் சிரித்தபடி வணக்கம் வைத்து பவ்யமாகப் பேசுவதையும், ஊரில் யார் வீட்டிலாவது பால், அரிசி பருப்பு மளிகை சாமான் இல்லைனா, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ சிவகுமார் மாதிரி மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சிட்டே பக்கத்து ஊருக்கு ஓடிப்போய் பொட்டலம்கட்டி வாங்கி வந்து கொடுக்குறதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான். அதுக்கு சன்மானமாய் கடலை பர்பி கொடுத்தால் போதும் குதூகலமாகிவிடுவான். இப்படி ஊரார் மெச்ச நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு இருந்தப்போ ஒருநாள் மட்ட மத்தியானத்துல பக்கத்து வீட்டுக்காரம்மா அவங்க வீட்டு முற்றத்துல நெல்லு காயப்போட்டிருந்தாங்க. ‘நம்ம ப்ரூட்னிதான் நல்ல பையனாச்சே. அவனைக் காக்கா ஓட்டச் சொல்லிட்டு செத்த நேரம் கண்ணயரலாம்’னு ப்ரூட்னிகிட்ட குச்சியைக் கொடுத்தாங்க. “சரிங்க... ஆனா எனக்கு பர்பி தரணும்!” என்றான். “ஒரு மணி நேரத்துக்கு ஒரு பர்பி வாங்கித் தர்றேன் போதுமா?”ன்னு சொன்னதும் சந்தோஷமா தலையாட்டிட்டு குச்சியை வாங்கிட்டு முற்றத்துல உட்கார்ந்துட்டான் நம்ம ப்ரூட்னி.

அவங்கல்லாம் அப்பவே அப்படி!

அந்த அம்மா வீட்டுக்குள்ள போயி அசதில தூங்கிட்டாங்க. திடீர்னு சாமக்கோழி கூவி முழிப்பு தட்டி எந்திரிச்சுப் பார்த்தா கடிகாரத்துல மணி நடுச்சாமம் 2 மணியைக் காட்டுது. ‘ஆஹா...நெல்லைக் காயப் போட்டோமே அப்படியே விட்டுட்டு வந்துட் டோமே!’ன்னு நெனச்சிட்டு வாசலுக்கு ஓடி வந்து பார்த்தா அங்கே ப்ரூட்னி தூங்காம குச்சியைப் பிடிச்சபடி பனியில உட்கார்ந்தி ருந்தான்.

‘ஆத்தி... புள்ள இன்னும்ல காக்கா ஓட்டுது!’ என நெனச்சிக்கிட்டு, “ஏம் ப்ரூட்னி கண்ணு...அக்காவை எழுப்பிவிட்டுட்டு உன் வீட்டுக்குப் போயிருக்கலாம்ல?”ன்னு கேட்டாங்க. அதுக்கு ப்ரூட்னி அறிவா இப்படிச் சொன்னானாம்.

“அக்கா... நீங்க லேட்டா எந்திரிச்சாதானே எனக்கு நிறைய பர்பி கிடைக்கும். மத்தியானம் 2 மணிக்கு காவக் காக்க உட்கார்ந்தேன். இப்ப ராத்திரி 2 மணி. அப்படினா 12 பர்பி நீங்க தரணும். இப்ப கொடுக்குறீங்களா... இல்லை விடியிற வரைக்கும் ஓட்டவா?”ன்னு கேட்டானாம். இதைக்கேட்ட அந்தப் பக்கத்து வீட்டம்மா ப்ரூட்னியோட தியாகத்தையும் பர்பி மேல உள்ள அவனோட வேட்கையையும் ஆச்சர்யமா பார்த்தாங்க. வீட்டுல இருந்த ஒரு பர்பி பாக்கெட்டையே பரிசாக் கொடுத்தாங்க. “நீ பெரிய பர்பியா... சே... பெரிய ஆளா வருவேப்பா!” என வாழ்த்தினாங்களாம்!

இப்படி சின்னவயசுல பர்பிக்காகக் கண்ணு முழிச்சு காக்கா ஓட்டுன நம்ம ‘ப்ரூட் நீ’ குனிஞ்சு பர்பி தேடுனதையும் அதுக்குப் பலனா நாற்காலியே கிடைச்சதும் வரலாறு.

இப்படிப் பழசை மறக்காத உத்தமர்... பண்பாளர் அடுத்த தலைவரா வேண்டுமா அல்லது குறுக்குவழியில் துரோகத்தின் கறைபடிந்த கயவர்கள் தலைமையேற்க வேண்டுமா..? சிந்தித்துச் செயலாற்றுங்க பிளட் ஆப் பிளட்!

ஆமா... அந்த ப்ரூட்நீ யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா..?

*நீதி: தவழ்ந்தது பிழைக்கும்!*

நீதிக்கதை 2

ஒரு ஊருல அய்யாத்துரை என்ற சிறுவன் தன் குடும்பத்தோடு வசித்து வந்தான். ரொம்ப நல்ல குணம் கொண்ட அவனுக்கு ஒரேயொரு குறை. பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்ருவான். இதுக்காகவே ஸ்கூலுக்குக் கிளம்புறப்போ, இன்னிக்கு என்ன பேசணுமோ அதை பேப்பர்ல எழுதி சட்டைப்பாக்கெட்ல வெச்சுட்டுத்தான் கிளம்புவான். ஒருநாள் அவங்க அப்பா சட்டைப் பாக்கெட்ல இருந்த லாண்டரி கணக்கை துண்டுச்சீட்டுக்குப் பதிலா தெரியாம எடுத்துட்டு வந்துட்டான். வாத்தியார் கேட்ட ஒரு கேள்விக்கு,

“ஆக... முழுக்கை சட்டை 6, அரைக்கை சட்டை 5, காஞ்சிபுரம் சேலை 3, பருத்தி சேலை 8!” என பதில் சொல்லி ஒரே அசிங்கமாகப் போய்விட்டதாம்.

அவங்கல்லாம் அப்பவே அப்படி!

மகனின் இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் குணத்தை நினைத்து பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்த அவன் தந்தை ரொம்பவே கவலைப்பட்டாராம். மகனின் இந்தக்குறையைப் போக்க ஒரு யோசனை தோன்றியதாம்... உடனே அய்யாத்துரையை அருகில் அழைத்து, குட்டிக்குட்டியாய் சொலவடைகளும் பழமொழிகளும் சொல்லிக் கொடுத்தாராம்.

“டேய் மகனே... எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் இந்தச் சொல வடைகளைச் சொல்லி எதிராளிகளைக் குழப்பி விடு..! அதாவது கழுவுற மீனுல நழுவுற மீனா இருக்கணும்!” என்றாராம்.

உடனே ஏதோ புரிந்தவனாய் மனசுக்குள், “ஓஹோ நழுவுற மீனுல கழுவுற மீனா இருக்கணுமா... இருந்துட்டாப் போச்சு!” என நினைத்தபடி அப்பா சொல்லிக் கொடுத்த பழமொழிகளை மனப்பாடம் செய்தபடி மறுநாள் பள்ளிக்குப் போனான் அய்யாத்துரை. அன்று மாவட்டக் கல்வி அலுவலர் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்திருந்தார். அவனைப் பார்த்து,

“ஆத்திசூடி சொல்லப்பா!” என்று கேட்டதும்,

“சீனிச்சக்கர சித்தப்பா... ஏட்டில எழுதி நக்கப்பா!” என்றானாம். அய்யாத்துரையின் இந்தப் புதிய ஆத்திசூடியைக் கேட்டதும் ஆச்சர்யப்பட்ட டி.ஈ.ஓ, உடனடியாக அவனை கிளாஸ் லீடராக புரமோட் செய்துவிட்டுக் கிளம்பினாராம்.

அய்யாத்துரை அன்றிலிருந்து பூனைமேல் மதிலாக இல்லாமல், யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னேவாக வாழ ஆரம்பித்துவிட்டானாம்.

அப்படிச் சொலவடையாகவே மாறிய அய்யாத்துரை யார் தெரியுமா? முன்பு அப்பா படித்த ஸ்கூலில் இன்று ஹெட் மாஸ்டர். நான் தான் உட்கார்வேன் என அடம்பிடித்து ‘அன்அப்போஸ்ட்’ ஆக அந்த ஹெட்மாஸ்டர் சீட்டில் உட்கார்ந்த பெருமைக்குச் சொந்தக்காரர்.

*நீதி: சித்திரமும் நாப்பழக்கம்; செந்தமிழும் கைப்பழக்கம்!*

நீதிக்கதை 3

ஒரு கிராமத்தில் பாண்டி என்ற சிறுவன் தன் பெற்றோரோடும் உற்றார் உறவினரோடும் வசித்துவந்தான். ஒருமுறை காட்டுக்குள் தேனெடுக்கப் போனபோது அங்கு ஒருவர் முக்காடிட்டு தியானம் செய்வதைப் பார்த்தான். ஆச்சர்யப்பட்ட பாண்டி, “அய்யா... இந்த நட்டநடுக் காட்டுக்குள்ள தனியா இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க? பயமா இல்லையா?” என்று கேட்டானாம். அதற்கு அந்த முனிவர் “நான் ஏன் இங்கே இருக்கேன்னு ஒருகாலத்துல உனக்கே புரியும் மகனே!” என்று சொல்லி ஆழ்ந்த தியானத்தைத் தொடர்ந்தாராம். அவர் இருந்த இடத்திலிருந்த புலித்தோலை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்த பாண்டி நேராக ஊர்ப் பஞ்சாயத்தார்களிடம் போய் இப்படிச் சொன்னானாம்.

அவங்கல்லாம் அப்பவே அப்படி!

“அய்யா... நான் காட்டுக்குப் போனபோது ஒரு புலியைப் பார்த்தேன். என்னைக் கடிக்க வந்த புலியை நான் சண்டையிட்டுக் கொன்றுவிட்டேன். இதோ அதற்கு அடையாளமாக புலியின் தோலைக் கொண்டு வந்திருக்கிறேன். புலியை அடித்ததால் இன்றுமுதல் என்னைப் புலிப்பாண்டின்னு ஊர் சார்பா பட்டம் கொடுக்கணும். அப்புறம் ஒரு வீடும் தோப்பும், போய்வர சாரட் வண்டியும் கொடுக்கணும்!” என்றானாம். இதைக்கேட்ட அந்தப் பஞ்சாயத்துக்கூட்டத்தில் இருந்த ஊர்ப்பெரியவர் அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்தபடி சரிந்து விழுந்தாராம்.

சில நாள்களில் ஊருக்குள் ‘புலிப்பாண்டி பாசறை’ என்ற ஒன்றை ஆரம்பித்து, தான் வேட்டையாடிய கதைகளை ஏற்ற இறக்கங்களோடு ஊர்மொளக்கொட்டு திண்ணையில் பேச ஆரம்பித்தானாம் புலிப்பாண்டி.

*நீதி: கேட்குறவன் கேனையனா இருந்தா கேட்பரீஸ் சாக்லேட் கசக்குதுன்னு சொன்னா நம்புறவன் துப்பிடுவானாம்!*

நீதிக்கதை 4

ஒரு ஊரில் மணி என்ற சிறுவன் இருந்தான். அந்த ஊரின் செல்லப்பிள்ளை. அவன் அக்கினி வெயிலில் நடந்துபோனால் ஊரே குடை பிடிக்கும். அந்த அளவுக்கு அவன்மீது ஊரார் பாசம் வைத்திருந்தார்கள். சமயத்தில் அவனுக்கே ‘ஏன் இவ்வளவு பாசம் காட்டுறாய்ங்க?’ எனக் குழம்பிவிடுவான். இப்படி ஊராருக்குச் செல்லப்பிள்ளை ஆனால், அவன் அப்பா சொல் பேச்சுக் கேட்கும் கிளிப்பிள்ளையாக வாழ்ந்தான்.

நன்கு படிக்கும் அவனிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் மட்டும் இருந்தது. தேர்வுக்கு முந்தைய நாள் பயத்தில் காய்ச்சல் வந்து மறுநாள் பரீட்சைக்கு மட்டும் போக மாட்டான். எல்லோரும் அவனைத் தேட அவன் மட்டும் வீட்டில் பாலைக் காய்ச்சி ஹார்லிக்ஸ் கலந்து குடித்துக்கொண்டிருப்பான். ஏன் பரீட்சைக்குப் போகலை என்று கேட்டால், “எப்படியாச்சும் பாகுபலியா ஆகணும், அலெக்சாண்டர் ஆகணும்... அசோகர் ஆகணும்!” என்பான்.

அவங்கல்லாம் அப்பவே அப்படி!

“பாகுபலியா அப்புறமா ஆகிக்கோ . மொதல்ல பாஸ் ஆகுடா!” என சொந்தக்காரப் பெருசுகள் சொல்லிச் சொல்லி ஓய்ந்துவிட்டனர்.

ஆனாலும் மணி திருந்தியபாடில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் தந்தை அவனுக்காக ஒரு திட்டம் தீட்டினாராம். மறுநாள் காலையில் கண் திறந்து பார்த்தபோது, அவனது வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் வரிசைகட்டி அவன்முன் உட்கார்ந்திருந்தனராம்... எல்லோர் கைகளிலும் ஒருவாரத்துக்கான மூட்டை முடிச்சுகள். அதில் ஒருவாரத்துக்குத் தேவையான ஆடைகளும் சோப்பு சீப்பு கண்ணாடிப் பொருள்களும் இருந்தன.

“எழுந்திருங்க கண்ணா... பல் தேய்ச்சிட்டு வந்து பரீட்சை எழுதுங்க!” என்றனராம். அப்படி வாத்தியார்கள் அடம்பிடித்துப் படித்தவர்தான் இன்று மருத்துவராக மக்கள் தொண்டராக இருக்கிறார்.

நீதி: பயந்தவனுக்கு பார்லிமென்ட்டும் பஞ்சுமெத்தை!

நீதிக்கதை 5

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். என்னது பேரா..? பேரா முக்கியம், கதையைக் கேளுங்கய்யா! தன் தாய்மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தான். கரடுமுரடான சாலைகளைக் கடந்து, தண்ணீர்க் குடத்தைச் சுமந்து தன் அன்னைக்குப் பணிவிடைகள் செய்வதில் அதீத ஆர்வம் காட்டி வந்தான். அப்படி ஒருமுறை ஊர்க்குளத்தில் குடத்தில் தண்ணீர் எடுக்கும்போது குப்புற விழுந்து பாறையில் மண்டை மோதி, மோதி... அவனது தலையில் அடிபட்டுவிட்டதாம். அவனது தாய்ப்பாசத்தைக் கண்டு குளத்தில் கிடந்த முதலையே கண்ணீர் விட்டதாம்.

இப்படித் தாய்ப்பாசத்தில் மக்கள் திலகத்தையே மிஞ்சிய அவனிடம் இரண்டு கெட்ட பழக்கங்கள் இருந்தன. ஒன்று அடிக்கடி ஊர் சுற்றுவது, இரண்டு அப்படிச் சுற்றிவிட்டு வந்து கதைகளாக அள்ளிவிடுவது.

அவங்கல்லாம் அப்பவே அப்படி!

ஒருமுறை அப்படி பக்கத்து ஊர்த் திருவிழாவுக்குப் போனபோது 5 ரூபாய்க்கு போட்டோ எடுக்கும் ஸ்டூடியோ ஒன்று அவன் கண்ணில் பட்டதாம்! காலை முதல் மாலைவரை விதவித பேக்ரவுண்டில் போட்டோ எடுத்துக் கொண்டு ஊரில் வந்து வெவ்வேறு ஊர்களுக்குப் போன கதைகளாக அவன் சொன்னதும், ஊர் மக்கள் கொல்லென்று சிரித்து அவனை அன்றிலிருந்து கேலி செய்ய ஆரம்பித்தனராம்!

*நீதி: ரீல் விடலாம். ஆனா, ஏக்கர் கணக்குல விடக்கூடாது!*

`இவங்க யாருன்னு தெரியணும்னா கீழே பாருங்க...

அவங்கல்லாம் அப்பவே அப்படி!