சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வர்றார் காமெடி அஜித்!

நமீதா
பிரீமியம் ஸ்டோரி
News
நமீதா

- ரீல் ப்ரோ

மைக் மோகன் நடிக்கவிருக்கும் படத்துக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனை அணுகியிருக்கிறார்கள். ‘மோகன் - பிரியங்கா மோகன்' பெயர்ப்பொருத்தம் காரணமாகவே படம் ஹிட் அடித்துவிடும் என்று சொன்ன காரணத்தைக் கேட்டு மிரண்டுபோனாராம் பிரியங்கா மோகன்.

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆன்டனி வரிசையில் இமானும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஆயத்தமாகிறார். அதுவும் இசையமைப்பாளராகப் புதுப்புது ட்யூன்கள், புதுப்புது ராகங்களை உருவாக்கும் வித்தியாசமான வேடமாம். படத்துக்கு ‘எல்லாமே என் ராசாதான்’ அல்லது ‘ராசாவே உன்னை நம்பி’ என்று டைட்டில் வைக்கத் திட்டமாம்.

பிரியங்கா மோகன் - இமான், நமீதா
பிரியங்கா மோகன் - இமான், நமீதா

மார்க்கெட் இழந்த நடிகர்களை பா.ஜ.க-வில் இணைப்பது வழக்கம்தான். இதற்காகவே ‘நலிந்த கலைஞர்கள் நலம் நாடும் அணி' என்ற ஒன்றை உருவாக்கி நமீதாவை அதற்குத் தலைவராக்க முடிவு செய்திருக்கிறாராம் அண்ணாமலை. மார்க்கெட் இழந்து சீரியல் வாய்ப்பு தேடும் நடிகர்களை டி.வி புரொடக்‌ஷன் ஹவுஸ் வாசலிலேயே ‘வாங்க மச்சான்ஸ், வாங்க' என்று வழிமறிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் நமீதா.

சிம்பு, விஷால், விஷ்ணுவிஷால், அசோக்செல்வன் நால்வரும் இணைந்து கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்க்கும் ஒரு மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, விஷ்ணுவிஷால்,  விஷால், பாண்டியராஜன்
சிம்பு, விஷ்ணுவிஷால், விஷால், பாண்டியராஜன்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முழுக்க பாண்டியர்களை வில்லன்களாகக் காட்டியதால் கோபத்தில் இருக்கும் மதுரைக்காரர்களை கூல் செய்ய அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ நாவலைத் திரைப்படமாக்க முடிவு செய்திருக்கிறாராம் மணிரத்னம். முழுக்க மயிலாடுதுறையில் படமாக்கவிருக்கும் இந்தப் படத்தின் நாயகனாக நடிகர் பாண்டியராஜனை நடிக்கவைத்தால் கண்டிப்பாக இமாலய ஹிட்தான் என்று அடித்துச்சொன்னாராம் சுஹாசினி.

பல வித்தியாசமான பரிசோதனை முயற்சிகளைச் செய்து சலித்துவிட்ட பார்த்திபன் ‘அடுத்து என்ன வித்தியாசமான படம் பண்ணலாம்?' என்று தன் உதவி இயக்குநர்களிடம் ஆலோசித்திருக்கிறார். ‘படம் முழுதும் பேசாத கேரக்டரில் நீங்கள் நடித்தாலே அது தமிழகம் எதிர்பார்க்கும் வித்தியாசமான படமாக இருக்கும்' என்று ஒருமித்த குரலில் சொன்னார்களாம் உ.இ. படத்துக்கு ‘மன் கி பாத் மனதின் குரல்' என்று டைட்டில் வைத்து இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்தால் (டப்பிங் செய்யத் தேவையில்லையே) வரிவிலக்கு கிடைக்கும் என்ற ஆலோசனையில் இருக்கிறாராம் பார்த்திபன்.

பார்த்திபன் - அஜித் - டி.ராஜேந்தர்
பார்த்திபன் - அஜித் - டி.ராஜேந்தர்

மகிழ்திருமேனியின் வழக்கத்துக்கு மாறாக அஜித்தின் ‘விடாமுயற்சி’ முழுநீள நகைச்சுவைப் படமாம். பைக்கை ஸ்டார்ட் செய்யும்போதெல்லாம் ஸ்டார்ட்டிங் டிரபுள் வர, அதையெல்லாம் சமாளித்து சர்வதேச ரேஸில் வெல்வதுடன் அதிக மைலேஜுக்காகவே அஜித் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடிப்பதுதான் கதையாம். ‘ஆழ்வார்’, ‘பரமசிவம்’ படங்களில் பார்த்த காமெடி அஜித்தை மறுபடி பார்க்கலாம் என்கிறார்கள்.

புது இயக்குநர்களுக்குப் போட்டியாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு படம் இயக்க முடிவெடுத்திருக்கும் டி.ராஜேந்தர், தாதா, அப்பாவி என்று இரட்டைவேடங்களில் சயின்ஸ் பிக்‌ஷன் படம் நடிக்கவிருக்கிறாராம். ‘தாதா ஆகணும்டா சோதா’ என்று 9 எழுத்து ராசி டைட்டிலாம். கௌரவ வேடத்தில் நடிக்க சிம்புவை அழைக்க, ‘விஞ்ஞானத்துடன் வீம்பாக விளையாட வேண்டாம்’ என்று கையெடுத்துக் கும்பிட்டாராம் சிம்பு.

(மேற்கண்ட அத்தனை சினிமா செய்திகளும் 100% கற்பனையே. இதில் எது உண்மையானாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!)