அரசியல்
அலசல்
Published:Updated:

“அடுத்து ஆரஞ்சு கலர்ல அஞ்சாயிரம் ரூபா நோட்டு அடிப்போம்!”

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

சுவிஸ் வங்கி அக்கவுன்ட்டைவிட... இந்தியாவுல இருக்குற குடும்பப் பெண்களோட கடுகு டப்பாலதான் அளவுக்கதிகமான கறுப்புப் பணம் இருக்குறதா எங்களுக்கு ரகசியத் தகவல் வந்துச்சு.

பத்து ரூபாய் காயின் செல்லுமா, செல்லாதா என மக்கள் குழம்பிப் புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில், ‘புழக்கத்தில் இல்லாத’ ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாகக் கூறி ஓவர் நைட்டில் 1,000, 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி, அதை ஈடுகட்டுவதற்குக் கொண்டுவந்த புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கும் முழுக்கு போட்டிருக்கிறார். ‘இதெல்லாம் எதுக்காகச் செய்யுறீங்க மோடி ஜி?’ என்ற மக்களின் சந்தேகங்களை அவர்கள் சார்பாக நாம் கேள்வியாக முன்வைத்தோம்...

“நமஸ்தே மோடி ஜி... நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன். இப்ப ஏன் 2,000 ரூபா நோட்டைத் தடை பண்ணுனீங்க?”

“எல்லாம் கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்கத்தான்...”

“எதே..?”

“இல்லை... ‘எல்லா கறுப்புப் பணத்தையும் ஒழிக்கத்தான்’னு சொல்ல வந்தேன். (மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டேனா... இதுக்குத்தான் டெலிபிராம்ப்டர் இல்லாம வெளியில பேசுறதே இல்லை).

“ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி 500, 1,000 ரூபா நோட்டுகளைத் தடை பண்ணினப்பவும் இதையேதானே ஜி சொன்னீங்க... அப்போ கறுப்புப் பணம் ஒழியலையா?”

“அது வந்து... வந்து... நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும். நாங்க `டீமானிடைசேஷன்’ அறிவிச்சது ராத்திரி நேரத்துல. அந்த கும்மிருட்டுல எப்படி எங்களால `கறுப்பு’ பணத்தைக் கண்டுபிடிக்க முடியும்... சோ... முழுசா எங்களால கறுப்புப் பணத்தை ‘ஒளிக்க’ முடியலை... சாரி, ஒழிக்க முடியலை!”

“டீமானிடைசேஷன் கொண்டுவந்தப்ப, `வெறும் 50 நாள்கள் மட்டும் டைம் கொடுங்க. கறுப்புப் பணத்தை மீட்டுட்டு, டிசம்பர் 30-ம் தேதிக்குள்ள எல்லா நிலைமையையும் சரியாக்கிடுறேன். அதுக்கப்புறமும் ஏதாச்சும் தப்பு இருந்தா என்னைத் தீயில போட்டு எரிச்சாலும் பரவாயில்லை; நாட்டுக்காக உசுரைக்கூட விடுறேன்’னு வீர வசனம்லாம் பேசுனீங்களே ஜி?”

“ஹாஹா... இப்படில்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு ஏத்திப்புட்டேன். தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி வரியையும் 18% உயர்த்திப்புட்டேன். அவ்ளோ காசு கொடுத்து என் உருவ பொம்மையைக்கூட யாராலயும் எரிக்க முடியாதுல்ல... அப்புறம் ஒரு சின்ன திருத்தம்... டிசம்பர் 30-ம் தேதின்னுதான் சொன்னேன். எந்த வருஷம்னு சொல்லலையே... ஹிஹிஹி...”

“நீங்க உஷாருதான் ஜி. ஆனா, எனக்கொண்ணு புரியலை. சுவிஸ் பேங்க்லதான ரூ.80 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை இந்திய பணக்காரங்களும் அரசியல்வாதிங்களும் பதுக்கியிருக்காங்கன்னு சொன்னீங்க... ஆனா, இங்கே எதுக்குப் பண மதிப்பிழப்பு பண்ணுனீங்க?”

“இதுவும் நம்மோட ‘துல்லியத் தாக்குதல்’கள்ல ஒண்ணுதான் தம்பி. அதாவது, சுவிஸ் வங்கி அக்கவுன்ட்டைவிட... இந்தியாவுல இருக்குற குடும்பப் பெண்களோட கடுகு டப்பாலதான் அளவுக்கதிகமான கறுப்புப் பணம் இருக்குறதா எங்களுக்கு ரகசியத் தகவல் வந்துச்சு. அதனாலதான் அந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தோம்.’’

``ஐயோ ஜி... நீங்க காஸ் மானியம் தர்றோம்னு சொல்லி, காஸ் சிலிண்டர் விலைய ஏத்துனீங்களே... அதனால விறகு அடுப்புக்கு மாறுனதால புகை படிஞ்சு கறுப்பான நோட்டுங்க ஜி அதெல்லாம்!”

“ஓ மை காட். அப்படியா விஷயம்... மனசெல்லாம் புண்ணா இருக்குது தம்பி. அடுத்த மன் கி பாத்ல மக்கள்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்!”

மோடி
மோடி

“மன்னிப்புக் கேட்குறதுல்லாம் இருக்கட்டும் ஜி. சுவிஸ் பேங்க்லருந்து கறுப்புப் பணத்தை நீங்க மீட்டுத் தருவீங்கங்கிற நம்பிக்கையில, இந்திய மக்கள் எல்லாரும் புதுசா பேங்க் அக்கவுன்ட்டெல்லாம் ஓப்பன் பண்ணினாங்களே... அந்தப் பணத்தை எப்போ போடுவீங்க?”

“ஹாஹாஹா... நான் புதுசா அக்கவுன்ட் ஓப்பன் பண்ணச் சொன்னது உங்களுக்கு 15 லட்சம் போடுறதுக்காக இல்லை. பேங்க்ல நிறைய அமௌன்ட் டெபாசிட் ஆகும்... அதெல்லாத்தையும் வெச்சு நண்பன் அதானிக்கும், நீரவ் மோடிக்கும் கடன் கொடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுபோகலாம்னு பார்த்தேன்.”

“நாடு வளர்ந்துச்சுங்களா?”

“அதெல்லாம் நல்லா வளர்ந்துச்சு... ஆங்.. அவங்க வளர்ந்தாங்க. சிலர் சுருட்டிக்கிட்டு ஓடுனாங்க. அந்தக் கதையெல்லாம் எதுக்கு, விடுங்க... வேற கேள்வி இருந்தா கேளுங்க. எனக்கு ஃபிளைட்டுக்கு நேரமாச்சு.”

“உங்க ஆட்சியிலதான் சுவிஸ் பேங்க்ல இந்தியர்களோட கறுப்புப் பணம் முன்பைவிட 50% அதிகரிச்சுருக்குன்னு எதிர்க்கட்சிக்காரங்க ரிப்போர்ட் காட்டுறாங்களே?”

“அதான், `சுவிஸ் வங்கியில இந்தியர்கள் சேமிச்சு வெச்சுருக்குற எல்லாப் பணமும் கறுப்புப் பணம் இல்லை’னு ஏற்கெனவே எங்க நிதியமைச்சரை வெச்சு பதில் சொல்ல வெச்சுட்டேன்ல... திரும்பவும் ஏன்யா முதல்லருந்து ஆரம்பிக்கிறே?”

“சரி... கறுப்புப் பணத்தை ஒழிக்க கடைசியா என்னதான் பண்ணப்போறீங்க?”

“அடுத்து ஆரஞ்சு கலர்ல அஞ்சாயிரம் ரூபா நோட்டு அச்சடிக்கலாம்னு இருக்கேன். கறுப்புப் பணமே நம்ம பாரதத்துல இருக்கக் கூடாதுன்னுதான், டீமானிடைசேஷன் பண்ணின கையோட, கலர் கோழிக்குஞ்சு மாதிரி புதுப்புது கலர்ல ரூபா நோட்டுகளையெல்லாம் கொண்டுவந்தோம். அதுல கறுப்பு கலரை சேக்கலை. இப்போ இந்தியாவுல `வண்ணப் பணம்’தான் இருக்கே தவிர, கறுப்புப் பணம் இல்லை!”

“கடைசியா ஒரு கேள்வி. எதிர்க்கட்சிக்காரங்க வீடுங்களுக்கெல்லாம் விடுற ஐ.டி., இ.டி ரைடுகளை, வரி ஏய்ப்பு செஞ்சு கறுப்புப் பணத்தை பதுக்குற பெருமுதலாளிங்க வீட்டுப்பக்கம் விடுறதே இல்லையே ஏன் ஜி?”

“போதும் நிறுத்து... தேர்தல் நிதியை நீயா தருவே?”

(பின்குறிப்பு: உண்மையிலேயே பிரதமர் மோடியை பேட்டியெடுக்கத்தான் நினைத்தோம். மோடி ஜிக்கு, `பிரஸ் மீட்’ என்ற வார்த்தையே அலர்ஜி. எனவே, இந்தக் கேள்விக்கு என்ன பதில் தருவார் மோடி என்று கற்பனைப் பேட்டியாக வெளியிட்டிருக்கிறோம். நம்முடைய துன்பங்களையெல்லாம், எப்படி அவர் ஜாலியாக எடுத்துக்கொள்கிறாரோ... அதேபோல இந்தப் பேட்டியையும் வாசகர்கள் ஜாலியாக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!)