கட்டுரைகள்
Published:Updated:

மிச்சத்த பார்ட்-2ல பாத்துக்கலாம்!

மிச்சத்த பார்ட்-2ல பாத்துக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிச்சத்த பார்ட்-2ல பாத்துக்கலாம்!

திடீர்நாடுன்னு ஒரு நாடு. அந்த நாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நீங்க மன்னராகுறீங்க. மக்களும் உங்கள ஏத்துக்குறாங்க. புதுமாடலா பலவிதமான திட்டங்கள் கொண்டு வந்து அசர வைக்குறீங்க.

நம் வாழ்க்கையில் சினிமாக்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. நம்மால் செய்ய முடியாத விஷயங்களை நமது நாயகர்கள் திரையில் செய்துகாட்டும்போது கைதட்டிக் கொண்டாடி மகிழ்வோம். அப்படிப்பட்ட சினிமாவையும் நமது ஊர் அரசியலையும் தனியாகப் பிரிக்க முடியாது. நமக்குப் பிடித்த சினிமாவில் நடிக்க இன்றைய அரசியல்வாதிகளிடம் அவர்களது ஸ்டைலில் கதை சொன்னால் எப்படியிருக்கும்? இவை வரலாற்றுப் படங்கள் இல்லை. ஏனெனில் நமது அரசியல்வாதிகள் ஒவ்வொருவருமே வாழும் வரலாறுதானே.

ஸ்டாலின் - வாபஸ் நாயகன்
ஸ்டாலின் - வாபஸ் நாயகன்

ஸ்டாலின் - வாபஸ் நாயகன்

திடீர்நாடுன்னு ஒரு நாடு. அந்த நாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நீங்க மன்னராகுறீங்க. மக்களும் உங்கள ஏத்துக்குறாங்க. புதுமாடலா பலவிதமான திட்டங்கள் கொண்டு வந்து அசர வைக்குறீங்க. உங்க தளபதிகள் உங்களுக்கு ஏகப்பட்ட குடைச்சலைக் கொடுத்தாலும் எல்லாத்தையும் நேரம்காலம் பாக்காம, தூக்கத்தைத் தொலைச்சு சூப்பரா சமாளிக்கிறீங்க. கதை நல்லா போய்க்கிட்டிருக்கும்போது ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம். அதாவது, மன்னராகுறதுக்கு முன்னாடி ஒரு சட்டத்தை விமர்சிச்ச நீங்களே, மன்னரானதும் அதே சட்டத்தை அவசர அவசரமா அமல்படுத்துறீங்க. அங்க ஒரு பிரேக் விட்டு ஆடியன்ஸோட பி.பி ஏத்துறோம். இடைவேளை முடிஞ்சதும் அந்த சட்டத்த வாபஸ் வாங்கி மக்கள் பக்கம் நிக்குறீங்க. அதுக்கு மக்கள் எல்லாரும் சேர்ந்து விழா எடுக்குறாங்க. உங்க சாம்ராஜ்ஜியத்தில் இருக்கிற எதிரிகளை சமாளிக்கிறதுதான் உங்க வேலைன்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போது, வடக்கேயிருந்து ரவிலோஷன்னு ஒரு வில்லன் வந்து உங்களுக்குக் குடைச்சல் மேல் குடைச்சல் கொடுக்கிறாரு.

அடுத்து என்னாகும்னு யோசிக்கும்போது ‘மிச்சத்த பார்ட் 2-ல பார்த்துக்கலாம்’னு முடிக்கிறோம்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்: ரெண்டுல ஒன்ன தொடு
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்: ரெண்டுல ஒன்ன தொடு

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்: ரெண்டுல ஒன்ன தொடு

நம்ம படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். துரோகம், தர்மயுத்தம், துவம்சம்னு பல கட்டங்களா கதை பயணிக்கும். சாதாரண ஆளா இருந்து சாகசம் பண்ணி அப்றமா சண்டை போட்டுப் பிரியப் போற ரெண்டு பேரும் கைகோத்தபடி சிரிச்சிக்கிட்டே நடந்துவர்றது தான் ஓப்பனிங் சீன். ஆனா க்ளைமாக்ஸ் வேற மாதிரி இருக்கும். இதுக்கு நடுவுல சின்னதா ஒரு வில்லி ரோல் உண்டு. படையப்பா நீலாம்பரி, பொன்னியின் செல்வன் நந்தினி அளவுக்கு கற்பனை பண்ண வேணாம். நடுவுலயே வந்து நடுவுலயே காணாமப் போய்டுற அந்த கேரக்டர்தான் படத்துக்கு டர்னிங் பாய்ன்ட். ரெண்டு பேரும் முரண்பட்டு நிற்கிற இடத்துல இடைவேளை விடுறோம். செகண்ட் ஹாஃப் முழுக்க ஒரே பரபர சீன்ஸ்தான். மாறி மாறி சண்ட போட்டு ஆராய்ச்சிமணி, அரசவை விசாரணைன்னு அலைஞ்சு முடிவில யார் கை ஓங்குதுன்னு க்ளைமாக்ஸ்ல தான் உங்களுக்கே தெரிய வரும். நீங்கதான் ஹீரோன்னு நீங்க நம்பின மாதிரியே மக்களும் நம்ப ஆரம்பிக்கும்போது உங்களுக்குக்கும் மேல ஒருத்தர் இருக்கார்னு பார்ட் 2-க்கு லீட் வைக்கிறோம்.

அண்ணாமலை -  பேசிக்கலி வாட்ச் மெக்கானிக்
அண்ணாமலை - பேசிக்கலி வாட்ச் மெக்கானிக்

அண்ணாமலை - பேசிக்கலி வாட்ச் மெக்கானிக்

ரசிகர்களோட பல்ஸ் தெரிஞ்சு டெக்னோ த்ரில்லர் + பொலிட்டிகல் காமெடி மூவி எடுக்கப்போறோம். பேசிக்கலி நீங்க ஒரு வாட்ச் மெக்கானிக். கூடவே இசை ஆர்வலர், ஆடியோ இன்ஜினீயர்னு மல்ட்டிகெட்டப் ரோல் பண்ணுறீங்க. அரசியல் கலந்த படம்ங்கிறதால படம் ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஃபைல் வெளியிடுறீங்க. அதுக்காக எக்செல் ஷீட், பவர்பாயிண்ட்னு டெக்னாலஜில அப்டேட் ஆகிட்டே இருக்கீங்க. அப்றம் அது பற்றி திரும்பப் பேசவே மாட்டீங்க. ஏன்னா உங்களுக்கும் அது தெரியாது. எதிரிகள் யார்னு சரியா புரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே உங்க கூட்டாளிகளையே எதிரிகளாப் பாக்குறீங்க. இதுல உங்களுக்கு சேரலாதன் அப்டினு ஒரு AI நண்பர் வர்றாரு. அவர் யார் என்னன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனா, அவர்தான் வாட்ச்ல இருந்து வாடகை வரைக்கும் உங்களுக்கு எல்லாமே! ‘என்னடா இது’ன்னு ஆடியன்ஸ் எல்லாரும் சீட் நுனில வந்து உக்காரும்போது திடீர்னு நீங்க சைலன்ட் ஆகி திக்குமுக்காட வைக்கிறீங்க. படம் முடிஞ்சதா, முடியலையா, பார்ட் 2 இருக்குதான்னு மண்டய பிச்சுக்கிட்டு இருக்கும்போது ரிவர்ஸ்ல போய் ‘பார்ட் 0-வில் பார்க்கலாம்’னு வித்தியாசமா எண்ட் கார்டு போடுறோம்.

சீமான் - மூத்தகுடி நவதார்
சீமான் - மூத்தகுடி நவதார்

சீமான் - மூத்தகுடி நவதார்

ஓப்பன் பண்ணுனா வானில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றுது. அது, என்ன வால், எதுக்கான வால், அது என்ன பண்ணப் போகுதுன்னு வாய்ஸ் ஓவர்ல இஷ்டத்துக்கு ஒரு கதைய மெதுவா ஆரம்பிக்கிறோம். மூத்தகுடி மக்களான நவதார், தண்டோரான்னு ஒரு தீவுல வாழ்றாங்க. அங்க பல வளங்கள் மண்டிக்கிடப்பதை அறிஞ்சு ஒரு குழு 60,000 யானை, அரிசி எல்லாத்தையும் ஒரே கப்பல்ல ஏத்திக்கிட்டு ஆட்டையப் போட வருது. யார் எந்தக் குடி, எந்த இனம்னு பாத்த உடனே கண்டுபிடிக்கிற சக்தி உங்களுக்கு இருக்கு. அதனால, உங்கள நவதார் ஆளாக மாற்றி அனுப்புறாங்க. மக்கள அழிக்க அனுப்பப்பட்ட நீங்களே, அந்த மக்களோட சேர்ந்து நொய்தல் படை ஒன்னு ஆரம்பிச்சு அந்த இனத்த பாதுகாக்கப் போராடுறீங்கன்னு கதை தாறுமாறா பயணிக்கும். பறவைகள், ஆமைகள், மரம் செடி கொடிகளோட நவதார்கள் உறவாட வாலை ஒட்ட வைத்தால் போதும். இந்த வால்தான் அந்த வால்னு முதல்ல சொன்ன முடிச்ச அவுக்குறோம். வாவ்னு ஆடியன்ஸ் கைதட்டி அட்வெஞ்சர் படமா, அறிவியல் படமான்னு முடிவு பண்ணுறதுக்குள்ள ப்ளாக் ஹியூமர், க்ரீன் ஹியூமர்னு ஒவ்வொரு கலருக்கும் காமெடி பண்ணுறோம். இடைவேளை வரும்போது ஒரு கையில அந்த இன மக்களையும் இன்னொரு கையில ஆட்டையப் போடுறவங்களையும் புடிச்சு இழுத்து நையப் புடைக்கிறீங்க. யார் பக்கம் நீங்க நிக்குறீங்க, படத்த எங்க முடிக்கிறதுன்னு தெரியாம, ‘க்ளைமாக்ஸ் இல்லாத உலகின் முதல் படம்’னு சொல்லி ஆடியன்ஸ தியேட்டர விட்டு வம்படியா விரட்டி அடிக்கிறோம்.

வானதி சீனிவாசன் -  பில்தானே கேட்டீங்க...
வானதி சீனிவாசன் - பில்தானே கேட்டீங்க...

வானதி சீனிவாசன் - பில்தானே கேட்டீங்க...

சந்தேகமே வேணாம். இது ஒரு வுமன் சென்ட்ரிக் மூவிதான். முழுநேர அரசியல்வாதியா தமிழ்நாட்டின் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் லெட்டர் பேடில் தனி அறிக்கைய தொடர்ந்து வெளியிட்டு பல பிரச்னைகளை சந்திக்குறீங்க. புல்லட் ரயில் கனவு நனவாக்க ரொம்பப் பாடுபடுறீங்க. நடுநடுவே பலவிதமான அரசியல் டெம்ப்ளேட்டுகளை உடைக்குறீங்க. வழக்கமா அரசியல்வாதின்னா வடைதான் சுடுவாங்க. நீங்க கொஞ்சம் வித்தியாசமா ரொட்டி சுடுறீங்க. அந்த வீடியோ வைரலாகி சோஷியல் மீடியால ஸ்டார் மெட்டீரியல் ஆகுறீங்க. உங்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தியாகத்தாலதான் இந்த உலகமே சுழலுதுன்னு நீங்க நம்புறீங்க. ஆடியன்ஸோட சிரிப்புகளுக்கு மத்தியில படம் நல்லாப் போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு சறுக்கல். கணக்குல நீங்க வீக்குனு யாருக்கும் தெரியாத ரகசியம் தெரிஞ்ச ஒருத்தர் உங்கள ஒரு பிரச்னைல மாட்டிவிட, ‘பில் தானே கேட்டீங்க, சீரியல் நம்பர் கேட்டீங்களா?’ன்னு நீங்க பேச உங்க கிராப் சரியுது. இண்டர்வெல்லுக்கு அப்புறமா சரிஞ்ச கிராப்ப எப்படி மேல ஏத்துறீங்க, அதுக்காக என்ன எல்லாம் பண்ணுறீங்க, இதுதான் மிச்சக் கதை. ஆனா, கடைசிவரைக்கும் ஒன்னுமே பண்ணலன்னு ஆடியன்ஸ வெளியவந்து பேச வைக்கிறதுதான் திரைக்கதை.