கட்டுரைகள்
Published:Updated:

ராஜ்பவன்... லோக்பவன்... கமலாலயம்!

ரஜினி, சசிகலா, உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி, சசிகலா, உதயநிதி

- ரீல் ப்ரோ

‘தமிழகம் அமைதிப்பூங்கா இல்லை’ என்று ஆளுநர் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ‘அமைதிப்பூங்கா’ என்ற பெயரிலேயே பூங்காக்களை அமைப்பது என்று முடிவெடுத்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். பூங்காக்களை அமைக்கும் பணிகள் குறித்து ஆராய விரைவில் குழுக்கள் அமைக்கப்படுமாம்.

‘ராஜ்பவன் பெயரை மாற்றி லோக்பவன் என்று வைக்கலாமா என்று யோசிக்கிறேன்’ என்று ஒரு பேட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். ‘‘மாற்றுவதாய் இருந்தால் ‘கமலாலயம்’ என்றே வைத்துவிடுங்கள். நீங்கள் இருக்கும் இடத்துக்கு அதுதான் பொருத்தமாக இருக்கும்’’ என்று சனாதன் தாமத சமிதியைச் சேர்ந்தவர்கள் யோசனை கூறியிருக்கிறார்களாம்.

எடப்பாடி பழனிசாமியை மட்டும் அமித்ஷா சந்தித்ததால் தன்னை டெல்லி பா.ஜ.க கைவிட்டதாக அதிருப்தியில் இருக்கிறாராம் ஓ.பன்னீர்செல்வம். ‘அரசியலில் இருந்தே விலகிவிடுகிறேன். தேனியிலும் பெரியகுளத்திலும் சட்டக்கல்லூரிகள் அமைக்கப்போகிறேன்’ என்று தன் சகாக்களிடம் மனம் விட்டுப்பேசியுள்ள பன்னீர், அந்த சட்டக்கல்லூரியில் உள்கட்சி வழக்குகளை நடத்துவது, மேல்முறையீட்டின் நுணுக்கங்கள் குறித்த சர்வதேச அளவிலான சிறப்புப் பாடப்பிரிவுகளையும் உருவாக்கப்போகிறாராம்.

ஸ்டாலின், ஆர்.என்.ரவி, சரத்குமார், கார்த்திக், ஓ.பி.எஸ்., அழகிரி, டி.ராஜேந்தர், இ.பி.எஸ்
ஸ்டாலின், ஆர்.என்.ரவி, சரத்குமார், கார்த்திக், ஓ.பி.எஸ்., அழகிரி, டி.ராஜேந்தர், இ.பி.எஸ்

சமீபத்தில் ஒரு ஆப் வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தபோது ‘‘என் படத்தின் டைட்டில் கொண்ட ஒரே கட்சித்தலைவர் நீங்கள்தான்’’ என்று அண்ணாமலையிடம் உற்சாகமாகச் சொன்னாராம் ரஜினிகாந்த். அருகிலிருந்த வானதி சீனிவாசன், ‘‘ஸ்டாலினை அவங்க கட்சிக்காரங்க ‘தளபதி’ன்னுதான் கூப்பிடறாங்க. அதுவும் நீங்க நடிச்ச படம்தான்” என்று நினைவுபடுத்த, சட்டென்று முகம் மாறிய அண்ணாமலை, “அந்தப் படம் எனக்கு அவ்வளவா பிடிக்காது. ஆனா ‘நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு’ பாடல் வரியைத் தினமும் ஒருமுறையாவது கேட்டுவிடுவேன்’ என்றாராம்.

மோடி அரசுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துநிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இந்தப் போராட்டம் தி.மு.க, அ.தி.மு.க-வினரையே பிரமிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு கோஷ்டியும் குறைந்தபட்சம் மூன்று நபர்களையாவது அழைத்துவர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்.

‘இனி அரசியலில் தனக்குப் பெரிய எதிர்காலமோ நிகழ்காலமோ இருக்கப்போவதில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்ட சசிகலா, தன் பழைய பிசினஸுக்கே திரும்பப்போகிறாராம். ஆனால் வீடியோ கடை இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்பதால் ரகசிய கேமராக்கள், ஒட்டுக்கேட்கும் கருவிகள், துல்லியமாக ரெக்கார்டு செய்யும் சாதனங்களை விற்கும் பிரமாண்ட கடைகளை நடத்தப்போகிறாராம். பா.ஜ.க-காரர்களை அம்பலப்படுத்தும் பா.ஜ.க எதிர்ப்பாளர்கள், பா.ஜ.க-காரர்களை அம்பலப்படுத்தும் பா.ஜ.க ஆதரவாளர்கள் என இருதரப்பினருமே போட்டிபோட்டு வாங்குவார்கள் என்பது சசியின் எண்ணம்.

ரஜினி, சசிகலா, உதயநிதி
ரஜினி, சசிகலா, உதயநிதி

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, விஜய டி.ராஜேந்தரின் இலட்சிய தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது அதிக தொகுதிகள் ஒதுக்கினால் அதை சாமர்த்தியமாக எப்படித் தவிர்ப்பது என்று சரத்குமார், கார்த்திக்,டி.ஆர் ஆகியோர் தங்கள் மூன்றாம் கட்டத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம்.

தான் எம்.ஜி.ஆர் கெட்டப் போட்டதால் கடுப்பாகித் திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் திட்டியதை வெகுவாக ரசித்தாராம் எடப்பாடி பழனிசாமி. அடுத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘நாளை நமதே’ எம்.ஜி.ஆர் கெட்டப்களைப் போட்டு போட்டோஷூட்டும் வீடியோஷூட்டும் செய்து பன்னீரை இன்னும் கடுப்பேற்றவிருக்கிறாராம்.

மோடியின் ‘மனதில் குரல்’, தன் அப்பா ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ வழியில் ‘உங்களில் முதல்வன்’ என்ற பெயரில் தொண்டர்களிடம் வீடியோவில் பேச உதயநிதி முடிவெடுத்துள்ளாராம். சிலநேரங்களில் தன்னால் நேரடியாகப் பங்கேற்க முடியாதபோது ‘சைக்கோ’ படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தனக்கு டூப்பாக நடித்த இளைஞரை வைத்து படப்பிடிப்பு நடத்தவும் திட்டமாம்.

ராஜ்பவன்... லோக்பவன்... கமலாலயம்!

ஆடியோ, வீடியோ சர்ச்சைகளில் தொடர்ச்சியாக மாட்டி வருவதால் தமிழக பா.ஜ.க-வினர் இனி ஸ்மார்ட் போன் பயன்படுத்தக்கூடாது என்று கட்டளையிட முடிவெடுத்திருக்கும் டெல்லி தலைமை, முன்னணித் தலைவர்களுக்கு இரண்டு சாதாரண பட்டன் செல்போன்களை வழங்கவும் முடிவெடுத்துள்ளதாம். ஒரு பட்டன் போன் அவர்கள் பயன்படுத்த, இன்னொரு போன் அவர்களை யார் சந்தித்தாலும், அவர்கள் பாக்கெட்டில் வைக்கவாம்.

(மேற்கண்ட அத்தனை செய்திகளும் 100% கற்பனையே. தப்பித்தவறி ஏதாவது உண்மையானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!)