
தல, தளபதி... சில டவுட்ஸ்!
தமிழ்த் திரையுலகத்தையே தம் வசீகர நடிப்பால் கட்டிப்போட்டிருக்கும் தல, தளபதியிடம் ரொம்ப நாளாகக் கேட்கணும்னு மனசுக்குள்ளேயே தேக்கி வெச்சுருந்த சந்தேகங்களைக் கொட்டித் தீர்த்திடலாம். வேற யாருக்கெல்லாம் இதே டவுட்டுகள் இருக்கோ, சேர்ந்து கேட்போம் வாங்க ஃபேன்ஸ்...

* ஆக்ஷன் ஹீரோக்கள்னு பெயர் வாங்கின பாவத்துக்காக, மூஞ்சியை முறுக்கி வெச்சுக்கிட்டு மூச்சுவிடாம அரைப் பக்கத்துக்கு டயலாக் பேசுறீங்களே... அதையெல்லாம் பேசி முடிச்சதும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி ரெண்டு சொம்புத் தண்ணியை எடுத்து மடக்மடக்குனு குடிப்பீங்களா?
* சிவனேனு ஏதோ வேலையைப் பார்த்தோமா, கஞ்சியைக் குடிச்சோமானு இருக்கும்போது, அடுத்த தெரு முனுசாமியையோ, பக்கத்து டவுன் பால்ராஜையோ எவன் அடிச்சாலும் உங்ககிட்ட வந்து நியாயம் கேட்கிற பொதுமக்களைப் பார்த்து எப்போவாவது கடுப்பாகிக் கத்தியிருக்கீங்களா?
* நீங்க நல்லபுள்ளையாட்டம் நகர்ந்து நகர்ந்து போனாலும் உங்களை விரட்டி விரட்டிக் காதலிச்சுக் கடைசியில் வில்லன் கும்பல்கிட்ட கோத்துவிட்டு அடிவாங்க வெச்சு மூக்குலேயும், இடதுபக்கத்து வாய் ஓரத்திலேயும் ரத்தம் வழியும்போது, ‘அய்யய்யோ...’ னு அழற மாதிரி ஹீரோயின்கள் நடிக்கும்போது செம மெரசல் ஆகியிருக்கீங்களா?
* சொந்த ஊரில் பெரிய ரௌடியாக ஃபார்ம் ஆகிட்டுப் பட்டணத்தில் வந்து, கறிக்கடையில் கறிவெட்டும்போது ரத்தம் தெறிச்சாக்கூட கண்ணை மூடிக்கிற கைப்புள்ளையாகவே பல வருசமா நடிக்கிறீங்களே... உங்களுக்கே இது ஓவர் ஆக்டிங்காத் தெரியலை?
* உங்க நெஞ்சு மேலேயே எதிரி, ஏறி மிதிக்கும்போதுகூட சிரிச்ச முகத்தோட அமைதியா (உள்ளுக்குள்ள கதறுறது வேற விஷயம்) இருந்துட்டு உங்க வீட்டில் இருக்கிற யார் மேலேயோ லைட்டா கை பட்டுட்டாலே அடுத்த சீன்ல பாட்ஷாவாகிப் பட்டையை உரிக்கிறீங்களே? எப்படி பாஸ் இப்படி?
* ஒவ்வொரு படத்துலேயும் உங்க குடும்பத்தில் யாரோ ஒருத்தருக்காகவோ, இல்லை நண்பனோட குடும்பத்துக்காகவோ வாழ்க்கையைப் பூரா அர்ப்பணிச்சு ‘தியாகி’ப்பட்டம் வாங்குறீங்களே... மாசாமாசம் பென்சனாச்சும் கரெக்டா வருதுங்ளா?
* ஊரில் நடக்கும் முக்கால்வாசி அட்டூழியங்களை இன்டர்வெல்லுக்கு முன்புவரை நீங்களே செய்துவிட்டுப் பிறகு யாரோ ஒருவரின் சாவைக்கண்டு மனம் திருந்தி உங்ககூட சேர்ந்து தொழில் பண்ணின பார்ட்னர்ஸோட பிசினஸையே காலி பண்ணி அவங்களை நடுத்தெருவுல நிப்பாட்டுறீங்களே?ஏன்ன்ன்?
* இங்கே ஊரே ஏதோ பிரச்னையால் உயிர்ப் பயத்தோடு ஊசலாடிட்டு இருக்கும்போது, அவங்க தலைவனா ஏத்துக்கிட்ட நீங்க தூங்குறதே தப்பு. இதில் கனவில் கனடாவுக்குப் போய் கதாநாயகிகூட டூயட் ஆடுறதெல்லாம் ஓவர் அழிச்சாட்டியம் தல, தளபதிகளே.
* படத்தில் மட்டும் பல பக்கங்களுக்கு வசனம் பேசிட்டு பொது நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டா வாயைத் திறக்காமலேயே அடக்கி வாசிக்கிறீங்களே தளபதி... ஒய்?
* படத்துலதான் உங்களோட கேரக்டரே புரியாத மாதிரி இருக்குனா பொது இடங்கள்ல உங்களைப் பார்க்கிறதே மாயமா இருக்கு? வீட்டுக்குள்ளேயே இருந்தா போரடிக்காதா தல..?
* ஆமா.. அந்தக் கடல்ல நீச்சலடிக்கிற சுறா டைவ் வித்தையை எங்கே கத்துக்கிட்டீங்க தளபதி?
- விக்கி