உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

சென்ஸிபிள் மேட்டர்!

சென்ஸிபிள் மேட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சென்ஸிபிள் மேட்டர்!

சென்ஸிபிள் மேட்டர்!

மிழ் சினிமா ரசிகர்களின் கண்ணியம் காத்துவரும் சென்சார் போர்ட் கமிட்டி, மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தால் என்னவெல்லாம் நடக்குமென ஒரு கற்பனை கலாட்டா...

சென்ஸிபிள் மேட்டர்!

•  ஹிட் அடித்த திரைப்படங்களின் பெயரை, அதற்கு சிறிதும் தொடர்பில்லாத கதைகொண்ட படங்களுக்குப் பயன்படுத்தி விளம்பரப்படுத்துவதை சென்சார் போர்டு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக படத்தின் தலைப்பை முடிவெடுத்த பின்னரே, படக்கதையைப் பற்றிய டிஸ்கஷனில் ஈடுபட கோலிவுட் இயக்குநர்கள் முடிவெடுத்துள்ளனர்.

• தென் தமிழகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களில், ரசிகைகள் நெளியும் விதத்தில் நாயகர்கள் தொடைக்கு மேல் கைலி கட்டுகின்றனர். இம்மாதிரியான காட்சிகள் இனி படத்தில் இடம்பெற்றால் ‘ஏ’ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு பரிசீலித்து வருகிறது. இயக்குநர் முத்தையா உள்ளிட்டோர் இனி தங்கள் நாயகர்களுக்கு ஜீன் மாட்டிவிட்டு கிராமத்துப் புழுதியில் நடமாடவிட ஆலோசித்து வருகின்றனர்.

• தற்போதைய பேய்ப் பட ட்ரெண்டில் பேய்கள் அதிகமாக துன்புறுத்தப்படுவதாகவும், பேய்களை காமெடியாகக் காண்பிப்பதாலும், அவற்றின் மீதான பயமும், மரியாதையும் குறைந்து வருவதாக சென்சார் போர்டு கவலை தெரிவித்துள்ளது. எனவே இனி ‘இப்படத்தில் பேய்கள் துன்புறுத்தப்படவில்லை. பேய்களை இழிவாகச் சித்தரிக்கும் காட்சிகள் இல்லை’ எனத் தடையில்லாச் சான்றிதழ் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்ஸிபிள் மேட்டர்!

• ஒரிஜினல் படங்களைவிட தரம் குறைவாக ரீமேக் செய்யும் திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க சென்சார் போர்டு மறுத்துள்ளது. இதனால் அப்படங்களை தமிழில் ரீமேக் செய்யும்போது அதே கதையை எடுக்க மாட்டேன் என இயக்குநர் சூடம் ஏற்றி சத்தியம் செய்த பின்னரே அனுமதி அளிக்கப்போவதாகவும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

• சிரிப்பே வராத மொக்கை காமெடிக் காட்சிகளின்போது, திரைப்படக் குழுவினர் ‘நம்புங்கய்யா... இது எங்க அம்மா சத்தியமா காமெடிதான்யா’ என்ற வாசகத்தை எழுதிப்போட வேண்டுமென சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.

• திரைப்படத் தலைப்பு தமிழில்தான் உள்ளது என்பதை நிரூபிக்க, தொல்காப்பியம், சீவக சிந்தாமணி போன்ற பழங்காலத் தமிழ் நூல்களில் அந்த வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரிவிலக்கு கிடையாது என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது அலுவலகத்தில் தமிழ் இலக்கியம் படித்த பட்டதாரிகள் ஐந்து பேரைப் பணியில் அமர்த்தியுள்ளார்.

• கவர்ச்சியான பாடல்களில் ஆடும் நாயகிகளின் அங்கங்களுக்கு வானவில் கலர் அடித்து, ரசிகர்களின் கண்ணியம் காத்துவருகிறது சென்சார் போர்ட். இனி இம்மாதிரியான காட்சிகளைப் படம்பிடிக்கும்போதே, கேமராவில் டால்டாவை சிறிதளவு கொட்டிவிட்டு காட்சிகளில் வானவில் கலர் தெரியும்படியாக படம்பிடிக்க வேண்டும் என சென்சார் போர்டு எக்குத்தப்பாய் பரிந்துரைத்து வருவதாகவும் புருடா செய்திகள் தெரிவிக்கின்றன!

- கருப்பு