உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

தமிழ் சினிமான்னா சும்மாவா?

தமிழ் சினிமான்னா சும்மாவா?
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் சினிமான்னா சும்மாவா?

தமிழ் சினிமான்னா சும்மாவா?

ஹாலிவுட் படங்களில் ராட்சத உருவம் ஒண்ணு கண் முன்னாடி வந்து ‘சடார்’னு நின்னு பயமுறுத்துறது, வில்லன் கழுத்துல ‘சதக்’னு கத்தியைச் செருகுறது மாதிரி புல்லரிக்கிற சீன்கள் நிறையவே இருக்கும். தமிழ் சினிமா மட்டும் என்ன தக்காளித்தொக்கா? இதைவிட பயங்கரமான காட்சிகளையெல்லாம் பார்த்துப் பார்த்து களைச்சவிங்கப்பூ நாங்க...

•  நாயகன் ரொம்ப சாந்தமானவர்னு நினைச்சுகிட்டு இருந்த நாயகி, ஒரு மழைநாள் ராத்திரியில் நாயகன் எங்கேயோ போறதைப் பார்த்து ஃபாலோ பண்ணுவாங்க. அவர்  பெரிய அட்டெம்ப்டை அசால்ட்டா முடிச்சுட்டு மூக்கில் ரத்தத்தோடு வந்துகொண்டிருப்பார். பின்னணியில் இடி இடிக்க, கண்ணாமுழி வெளியே வந்த மாதிரி விழித்து நம்மையும் பயமுறுத்தும் அந்த ஹீரோயின். அதுக்கு அவரே பரவாயில்லையேம்மா!

தமிழ் சினிமான்னா சும்மாவா?

• ஹீரோவுக்கே தெரியாமல் அவரது வீட்டிற்குள் நுழைந்த கதாநாயகி, அடுப்படிக்குச் சென்று சமைத்து வைக்க, அதனை ஹீரோவின் அம்மாவோ, பாட்டியோ பரிமாறியபிறகு ‘சாப்பாடு பிரமாதம், இதை சமைச்ச கைக்கு தங்க வளையல்தான் போடணும்’னு கதாநாயகன் புகழ, அப்போ உண்மையைப் போட்டு உடைப்பார்கள். அதனைக் கதாநாயகி மறைந்திருந்து கவனித்துப் பூரித்துப்போய், அங்கிருந்து டூயட் தொடங்கும்!

• ஹீரோவின் அப்பாவையோ, அம்மாவையோ வில்லன் கும்பலைச் சேர்ந்த ஆட்கள் சரமாரியாகத் தாக்கிவிட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் குத்துயிரும், குலையுயிருமாக துடித்தபடி கிடக்கும் காட்சியில் அன்று மட்டும் ஹீரோ சாவகாசமாக தள்ளுவண்டியில் வறுத்தகடலை வாங்கித் தின்றுவிட்டு லேட்டாக வருவார். பார்த்ததும் பதறிப்போய் ஆஸ்பத்திரிக்குக்கூட தூக்கிப்போகாமல் மடியில் போட்டு ஹீரோ அழும்போது அவரது அம்மா ஏதோ சொல்லவருவார். அதற்குள் தலை தொங்கி உயிர் போய்விடும். ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போடா பரதேசினு சொல்ல வந்திருக்குமோ?

• ஹீரோ எவ்வளவு பெரிய தறுதலையாக இருந்தாலும் சரி. (அவர் ஹீரோவாச்சே!) ஊரே காறித் துப்பினாலும், அப்பா தினமும் தண்டச்சோறு எனக் கரித்துக்கொட்டினாலும் ஹீரோவின் அம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் நிறைய சோறுபோட்டு அழுதுகொண்டே ஊட்டி விடுவார். அம்மான்னா சும்மா இல்லடா...!

• ஹீரோ எவ்வளவு பெரிய அப்பாவிக் கைப்புள்ளையாக இருந்தாலும் சரி. தன் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது காதலியையோ யாராவது வம்பிழுத்தால், கைகளில் நாக்குப்பூச்சி தெறிக்க வில்லன்களை வெறித்தனமாக அடித்து நொறுக்கி தக்காளிச் சட்னியைப் பார்க்காமல் விட மாட்டார்!

• இதையெல்லாம்விட தான் வளர்க்கும் நாய், பூனை, குரங்கு என எதையாச்சும் வில்லன் கொன்றுவிட்டால் அதற்காகவே அவனை வருசக்கணக்கில் ப்ளான் போட்டு அட்டாக் செய்யும் யுத்திகள் அந்தக் காலத்திலேயே நம் ஊர் சினிமாவில் உண்டு. ப்ளூ கிராஸுக்கே ரோல் மாடல்டா நாங்க!

•   அண்ணன் தம்பிங்கன்னாலே எதிர்த்த வீட்டில் இருந்தாலும் முறைச்சுக்கிட்டே இருப்பாய்ங்க. ஃப்ளாஸ்பேக்ல ஊரே வேடிக்கை பார்க்கும்போது ரெண்டுபேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுப் பஞ்சாயத்தாகி, அந்த வீட்டு மர நிழல் இந்த வீட்டுக்கு வந்தாலே அருவாளை எடுப்பாய்ங்க. அதே அண்ணனுக்கு ஓர் ஆபத்துனா தம்பிக்கு ரத்தம் கொதிக்கும். சத்தியமா புல்லரிக்கிது டாவ்வ்வ்!

- விக்கி