
மக்க கலங்குதப்பா!
நம்ம பொதுமக்கள் இந்த நாட்டில் வாழுறதுக்குள்ள எம்புட்டு அலைக்கழிப்புகளைத் தாங்கி அசராம நிற்கிறாய்ங்கனு பார்ப்போமா? பாவம் பாஸ் பொதுமக்கள்!

• செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாக்களில் போட்டு லைக் வாங்குவதற்காகவே ஊர்சுற்றிப் பார்க்கும் சாக்கில் அவுட்டிங் கிளம்பும் நம் மக்களின் மனநிலை புரியாமல் இங்கே செல்ஃபி எடுக்கக் கூடாது, கேமராவைக் கொண்டுசெல்லக் கூடாது என எடக்கு மடக்காக விதிமுறைகளை சுற்றுவட்டாரச் சுவர்களிலெல்லாம் எழுதிவைத்து இம்சைகள் செய்வார்கள்.

• சனிக்கிழமை கோழி காணாமல் போனதுக்காகப் பக்கத்து வீட்டுக்காரன் மேல் வளர்ப்புப் பிராணிகளைத் திருடுதல், வாயில்லா ஜீவனை வறுத்துத் தின்னுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாலும் வாய்தாவையே வருசக்கணக்காக இழுத்து, வீட்டில் மிச்சமிருக்கும் ஆடு, மாடுகளையும் சேர்த்து விற்று வக்கீலுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் அவலம் இங்கேதான் நிகழும்.
• காந்தி ஜெயந்தி அன்னிக்குதான் கடைக்கு லீவ் விடுவீங்கனு முதல்நாளே வாங்கி வைக்கிறது மூளையில் ரிமைண்டர் செட் ஆகிடும். ஆனால், சுதந்திர தினம், குடியரசு தினம், மாரியம்மன் கோயிலில் கூல் ஊத்துற தினம்னு வருசத்துல இத்தனை நாட்கள் கடையை அடைச்சா, அரசாங்கத்துக்குக் கப்பம் கட்டாமல் குடிமக்களுக்குக் கை அரிக்குமே மாண்புமிகுக்களே.
• வெளியூருக்குப் போவதற்கு செவ்வாய்க்கிழமை ரயிலில் டிக்கெட் புக் செய்தாலும் வெய்ட்டிங் லிஸ்ட்டில் 476-வது ஆளாக நம் பெயரைக் காட்டும் இந்த ரயில்வே வெப்சைட்டில் கோளாறு ஏதாவது இருக்குமோ? லட்சக்கணக்கில் வாகனங்கள் தெருத்தெருவாய்த் திரிந்துகொண்டிருந்தாலும் இவிங்க பூராம் நாம போற அன்னிக்கேதான் பாளையங்கோட்டைக்குப் போகனுமா?
• கார்ப்பரேஷன் குழாயில் தண்ணி வரலைனு புகார் கொடுத்தால், ஏன் தண்ணி வரலை என நம்மிடமே திருப்பிக் கேட்கும் நிர்வாகத்தைப் பார்த்து வாயடைத்துப் போய், போன ஆட்டோவிலேயே ரிட்டர்ன் டிக்கெட் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வரும் துயரச்சம்பவம் நம் ஊரில்தான் நடக்கும்.
• காற்று வருவதற்கும், போகும்போதும் வரும்போதும் பராக்கு பார்த்துக்கொண்டே பயணிப்பதற்கும் வாகாக வைக்கப்பட்ட நம்ம ஊர் பேருந்து ஜன்னல்களை மழைநேரங்களில் மூடினாலும்கூட இடுக்கு வழியாக ஒழுகி ஆளையே நனைத்து நடுங்க வைத்துவிடும். இதுக்கு முழுசா நனைஞ்சு பொடிநடையாகவே வீட்டுக்குப் போயிருப்போமே.
இன்னும் எத்தனை எத்தனையோ இன்னல்களை இந்த அரசாங்கம் இடுப்பில் செருகிப் பதறவிட்டாலும் அத்தனையையும் அசால்ட்டாக உதறிப் போட்டுவிட்டு வாழும் எம் மக்களுக்கு ஆழ்ந்த வாழ்த்துகள்..!
- விக்கி