
கபாலி செஞ்சுருவான்!
‘கபாலி’ படத்துக்கு ஆதரவாக, எதிராகக் கம்பு சுற்றியவர்கள் இப்போதுதான் ரெஸ்ட் எடுக்கக் கிளம்பினார்கள். அதற்குள் அதே கூட்டணியில் அடுத்த படம் தயாரிப்பது நான்தான் என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் தனுஷ். ஓய்ந்து, தளர்ந்து போன போராளிகள் ஓவர்நைட்டில் புரட்சி மோடுக்கு மாறிவிட்டார்கள். இந்தச் சிலம்பச் சுற்றல்கள் ஒருபக்கம் என்றால், ‘இது முழுக்க முழுக்க ரஜினி படமா இருக்கணும்’, ‘இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா இருக்கணும்’ என அவரவரின் ரசிகர்கள் ப்ரே செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இது எது மாதிரியும் இல்லாமல் அது தனுஷ் படமாக இருந்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் நினைச்சுதான் பார்ப்போம். பார்ப்போமே!

• மியூஸிக் கண்டிப்பாக ஒல்லி கில்லி அனிருத்துதான். ‘ஆலுமா டோலுமா’ ரேஞ்சில் ஒரு ஓப்பனிங் பாடல் கன்ஃபார்ம். லிரிக்ஸை டி.ஆரிடம் இருந்து கடன் வாங்கிக்கொள்ளலாம். ராப் இசைதான் தற்போதைய ட்ரெண்ட் என்பதால் மூக்கு வழியே மூச்சுகூடப் போகாத அளவிற்கு படபட ராப் பாடல் ஒன்று இருக்கும். அதுபோக ஒரு காதல் பாடல். ‘அதை நான்தான் பாடுவேன்’ என அடம் பிடித்துப் பாடுவார் அனிருத்.
• ‘எதிர் நீச்சல்’ படத்தில் மாரத்தான் ரேஸ், ‘மாரி’யில் புறா ரேஸ் எனத் தொடர்ந்து தான் தயாரிக்கும் படங்களில் தனுஷ் விளையாட்டை ஊக்குவிப்பதால் இதில் ரஜினி ரிட்டையர்ட் ரேஸர் ரோலில் நடிக்கலாம். ஏற்கெனவே காளை ரேஸ், குதிரை ரேஸ் என ஏராளமான போட்டிகளில் ரஜினி வின்னராகி இருக்கும் அனுபவம் இதற்குக் கை கொடுக்கும்.
• கண்டிப்பாக ஒரு ஃப்ரேமிலாவது தன்னடக்க தனுஷ் தலை காட்டுவார். அந்த ஒரு ஃப்ரேமிலும் ‘நான் ரொம்ப சாதாரணமான ஆளுங்க’ என மாமாவுக்குப் போட்டியாய் தன்னடக்க டயலாக் விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். கதையில் அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் எண்டு கார்டில் ஒரு குத்துப்பாட்டுக்கு என்ட்ரி ஆகி முரட்டுக் குத்து குத்துவார்.
• பிரியா ஆனந்த் - நந்திதா, அமலா பால் - சுரபி, சமந்தா - எமி ஜாக்ஸன் என டபுள் ஹீரோயின்கள் சப்ஜெக்ட்களைத் தயாரிப்பது வாடிக்கை என்பதால் இந்தப் படத்திலும் அப்படியான காம்போ இருக்கலாம். ஹீரோயின் ஆலோசனைகூட இருக்கு பாஸ். ராதிகா - ராதிகா ஆப்தே. எப்படி..? காம்பினேஷனே சும்மா அள்ளுதுல!
• ‘கபாலி’யின் மிகப்பெரிய பலமே ரஜினி - ராதிகா ஆப்தே சென்டிமென்ட் காட்சிகள்தான். சும்மாவே சீனுக்கு சீன் சென்டிமென்ட் சொல்லி அழ வைக்கும் தனுஷ் இந்த சான்ஸை விடுவாரா என்ன? அப்பா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட் என எல்லாமே ரெண்டு டீஸ்பூன் அதிகமாக இருக்கும். தனுஷ் குரலில் அம்மா சென்டிமென்ட் பாட்டு கன்ஃபார்ம்.
• இப்போதெல்லாம் டைட்டில் பஞ்சாயத்து ஏதோ சர்வதேசப் பிரச்னை போல அனல் பறக்கிறது. ஆனால் தனுஷ் தயாரிக்கும் படங்களுக்கு அந்தப் பிரச்னையே இல்லை. ஏற்கெனவே நாகேஷ், ரஜினி, கமல், வடிவேலு போன்றவர்களின் புண்ணியத்தில் தன் படங்களுக்குப் பெயர் வைத்திருப்பதால் இந்த முறை தல, தளபதி, சந்தானம் போன்றவர்களின் உதவியோடு டைட்டில் வைக்கவும் வாய்ப்பிருக்கிறது!
- நித்திஷ்