
படித்துறை பாண்டிகள்!

‘படியில் பயணம் நொடியில் மரணம்’, ‘படியில் தொங்கு, ஊதுவாங்க சங்கு’ என க்ரியேட்டிவாக மிரட்டினாலும் நம்ம பசங்க கேட்கப் போவதில்லை. அதனால், நம் நாட்டின் நலன் கருதி, பசங்க படிக்கட்டில் பயணம் செய்யாமல் தடுக்க என்ன செய்யலாம் என பஸ் ஸ்டாண்டில் பஞ்சுமிட்டாய் சாப்பிட்டுக்கொண்டு யோசித்ததில்...
• ‘இனிப் பேருந்தில் வலதுபுறம் இருக்கும் இருக்கைகளில்தான் பெண்கள் அமரணும்’னு ரூல்ஸ் போட்டால் போதும். அப்பாலிக்கா பசங்க படியில் தொங்கவே மாட்டாங்க. ஜன்னல் வழியா ஏறியாச்சும் பஸ்ஸுக்குள்ள வந்து நின்னுடுவாங்க. ஏம்பா... நான் சரியாத்தானே பேசிட்டு இருக்கேன்.
• இல்லைனா, பஸ்ஸின் வாசலையே வலதுபக்கமா மாத்திடலாம். அப்பவும் படியில் தொங்கிட்டு வந்து லந்து கொடுக்கிறவங்களை எதிரில் வரும் வண்டி கூட்டிட்டுப் போயிடும்.
• பஸ்ஸுக்குள்ளே சின்னதா டி.வி வெச்சு ‘தல-தளபதி’ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அரசே ஒளிபரப்பலாம். கைதட்டவும் கலாய்க்கவும் படியில் தொங்குற குரூப் உள்ளே, உள்ளேன் ஐயா சொல்லும். கண்டிப்பா சொல்லும்.

• பஸ்ஸின் இரண்டு வாசல்களிலும் கிரீஸை அப்பி வைக்கலாம். அதுவும் கறுப்பு கலர் கிரீஸாக இருந்தால் இன்னும் நலம். கிரீஸ் கறை ஒட்டும்னு படியில் யாரும் தொங்கிட்டு வர மாட்டாங்க. கறை நல்லது!
• பஸ்ஸின் உள்ளே கைப்பிடிகளில் ஆண்ட்ராய்டு மொபைல் சார்ஜர்களைத் தொங்கவிடலாம். இல்லைனா பஸ் நடுவில் மட்டும் வேலை செய்ற மாதிரி இலவச வைஃபை சேவை தொடங்கலாம். மகிழ்ச்சி!
• பஸ்ஸின் இடதுபுறத்து முதல் ஜன்னலோர சீட்டிலும், படிக்கு அருகில் இருக்கும் ஜன்னலோர சீட்டுகளிலும் வெற்றிலை குதப்பும் பாட்டிகளை அமரவைக்கலாம். எங்கே நம் மூஞ்சியில் பாட்டி சிவப்பு பெயின்ட் அடித்துவிடுமோ என பயந்து படியில் தொங்கத் தயங்குவார்கள்.
• எல்லா டிரைவர்களுக்கும் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’, ‘நீட் ஃபார் ஸ்பீட்’ போன்ற சாவடி ரேஸிங், சேஸிங் படங்களைத் திரையிடலாம். அதுக்கப்புறம் பஸ் படியில் இல்லை, பஸ்ஸிலேயே பயணம் செய்ய மாட்டார்கள் படித்துறை படவாக்கள்!
- ப.சூரியராஜ்