
தமிழ் சினிமா நன்மைகள்!

சினிமாவின் பாதிப்பால் இளைஞர்கள் வழிதவறி, தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. முற்றிலுமாக இதை மறுத்துவிட முடியாவிட்டாலும், சினிமாவால் ஏற்பட்ட நன்மைகளும் இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதெல்லாம் பெருமையா... கடமை கடமை!
• சீனர்கள் மற்றும் ஜப்பானியர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட போதி தர்மரை மறந்துவிட்ட தமிழ்ச் சமூகத்தின் சட்டை காலரைப் பிடித்து, ‘இவர்தான் போதி தர்மர். அந்தக் காலத்திலயே பிரபலமான சித்த வைத்தியர்’ என நினைவூட்டிய ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை நாம் வசதியாய் மறந்துவிட்டோம். நோக்கு வர்மத்தின் விபரீத விளைவுகளால் படத்தின் பாதியிலேயே அசந்து தூங்கிவிட்ட காரணத்தால், வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. இது மட்டுமா? ஒற்றை இட்லியை வெச்சே கம்யூனிஸத்தைக் கத்துக்கிட்டதும் முருகதாஸ் திரைப்படங்கள் பார்த்துதானே!

• ஆல் ஓவர் த வேர்ல்ட் அஃபன்ஸ் அப்படித்தான் இருப்பாங்க. நாமதான் வெப்பன்ஸ் வெச்சு டீல் பண்ணணும்கிறது ஒருவகை. தாலிகட்டிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரவர் வீட்டிலேயே இருப்போம்கிறது இன்னொரு வகை. இப்படி இளைய சமுதாயத்தைக் காதலை எதிர்க்கும் பெற்றோரை அறவழியில் டீல் பண்ண வெச்சது ‘அலைபாயுதே’ படம்தானே! அதுக்கப்புறம் ரெஜிஸ்டர் மேரேஜ்னாலே அலைபாயுதே ஸ்டைல்னு சொல்ல வெச்சது தனிக்கதை!
• பேருந்துகளில் திரைப் படங்கள் ஒளிபரப்பக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பே இருக்கிறது. இதையும் மீறி, `படத்தைப் போடுங்கய்யா' என நச்சரித்த நம்மை, ‘எங்கேயும் எப்போதும்’ போட்டுக்காட்டி கிலி ஏற்படுத்தி ‘தயவுசெஞ்சு அதை ஆஃப் பண்ணுங்க தலைவா!’ என ட்ராவல்ஸ்காரர்களிடம் சரண்டராகச் செய்தது சினிமாதானே!

• நியூஸ் பேப்பரில் நாம் படிக்கிற முதல் பக்க செய்திக்கும் மூன்றாம் பக்க செய்திக்கும் தொடர்பு இருக்குங்கிற உண்மையை ‘தனி ஒருவன்’ படத்தில் ‘ஜெயம்’ ரவி சொன்னதாலதானே நமக்குத் தெரியும். அதனாலதான இன்னைக்கு ஜியோ அறிவிச்ச அதே நாள், பெட்ரோல் விலை கூடினதையும் கலந்துகட்டி சுடச்சுட மீம்ஸ் போட்டோம். மறந்துட்டீங்களா?
இதுபோன்று இன்னும் ஓராயிரம் பாடங்களையும், விழிப்பு உணர்வுகளையும் மக்களிடத்தில் தந்ததுதான் தமிழ் சினிமா என்றால் அது மிகையாகாது.
- கருப்பு