உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

`மார்க்'கபந்து!

`மார்க்'கபந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
`மார்க்'கபந்து!

`மார்க்'கபந்து!

மாண்புமிகு மார்க் அவர்கள் ஃபேஸ்புக்கைக் கண்டுபிடிச்சதே நம் ஆட்களின் பழக்கவழக்கங்களை வெச்சுத்தான்னு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? லாக் இன் பண்ணினா...

டேக்: ஏதாவது சின்னதாய் வாய்க்கால் தகராறு ஏற்பட்டாலோ, ஏதாவது யூகத்தில் எக்குத்தப்பாய்ச் சொல்லி மாட்டிக்கொண்டாலோ, இவன்தான் சொன்னான் என யாராவது ஒரு அப்பாவியைக் கோத்துவிட்டு அவன் பாவமாய் விழிப்பதைப் பார்த்து ரசிப்போமே... அந்தச் சின்னப்புள்ளத்தனமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவானதுதான் இந்த டேக் ஆப்ஷன். #பங்காளி சூனியம்!

கமென்ட்: ‘என்னய்யா மாப்ளே... கண்டும் காணாமலும் போய்க்கிட்டு இருக்கே. ஊரில் இருந்து எப்போ வந்தே? அப்படியே போனா எப்படி? வந்து கையை நனைச்சுட்டுப் போறது...!’ என ஊரில் இம்சை கொடுக்கும் சொந்தக்காரர்களிடம் பின்னாலேயே திரிந்து, அந்த ஐடியாவை காப்பிரைட் வாங்கி ஃபேஸ்புக்கில் புகுத்தியதுதான் கமென்ட் ஆப்ஷன். சும்மா எட்டிப்பார்த்து லைக் மட்டும் போட்டால் எப்படி பாஸ்? நீங்க உள்ளே வந்து உட்கார்ந்துட்டுப் போனால்தானே உங்க ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற ஃபிகர்களும் நம்ம பக்கத்தையும் எட்டிப் பார்க்கும். #பொதுநல விரும்பி.

`மார்க்'கபந்து!

குரூப்: நேரடியாக மோதி வெறுப்பேற்ற முடியாதவர்கள் அடுத்த லெவலுக்குப் போய் கொடூரமாக எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. மொக்கைப் பக்கிகளாக உலாவும் ஒரு குரூப்பில் கோத்துவிட்டால் போதும். மேட்டர் ஓவர். இனிமேல் எல்லாத்தையும் அவங்க பார்த்துப்பாங்க #அழாத மாதிரியே எவ்வளவு நாள் நடிக்கிறது?

நோட்டிஃபிகேஷன்: ‘கம்பெனிக்குள் புதுசா ஒருத்தன் நுழையறான் சார்’ என நமக்கு அப்டேட்டாகத் தகவல் சொல்லும் வாட்ச்மேன்தான் இந்த நோட்டிஃபிகேஷன் ஆப்ஷன். ‘புதுசா ஒரு பொண்ணு ரிக்வெஸ்ட் கொடுத்துருக்கு’னு அப்பப்போ ஃபேக் ஐ.டி-யைப் பார்த்து வழிந்தபடி நோட்டிஃபிகேஷன் பக்கி காட்டினாலும் நாம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். #இவன் கொஞ்சம் அப்பிடி இப்பிடி!

ஈவென்ட்: பிறந்தநாளை முன்னாலேயே நினைவுபடுத்தி, ‘அண்ணே அந்த ட்ரீட்டு...’ எனக் கேட்கும் பக்கிகளிடமிருந்து மார்க் அண்ணாச்சி கண்டுபிடித்ததுதான் இது. #எலே தப்பிக்க பாக்கே!

சாட்: `ரெண்டு பேர் மட்டும் பேசணும்... நாள்பூரா பேசணும்... யாருக்கும் தெரியாமல் பேசணும்!'னு நாம கேட்டா `அதுக்கு நீ லாட்ஜ்ல ரூம் போட்டுதான் பேசணும்!'னு சந்தானம் சொல்றதைப்போல கண்டுபிடிச்சதுதான் இந்த உள்டப்பி!  புதிதாக அறிமுகமான ஃபேக் ஐ.டி-யிடம் கருகக் கருகக் கடலை வறுத்தாலும், பால்யகால நண்பனிடம் வகைதொகையில்லாமல் வாங்கிக் கட்டிக்கொண்டாலும் எல்லாப் பஞ்சாயத்தும் நாலு சுவருக்குள்ளே கமுக்கமாய் முடிந்துவிடும் ரகசிய அறை இந்த சாட் பாக்ஸ். எல்லாப் பெண் ஐ.டி-களுக்கும் வரிசையாக ‘ஹாய்’ சொன்னதுமுதல் கூடைகூடையாக ஸ்டிக்கர்களைக் கொட்டியது வரை எல்லா சம்பவமும் நம் ஃபேஸ்புக் படியைத் தாண்டாது. #சிதம்பர ரகசியம்!

ஆக்டிவிட்டி லாக்: முந்தாநாள் சரக்கைப் போட்டு வீட்டுக்கதையை எல்லாம் ஒப்பித்துவிட்டு ‘இந்த விஷயம் இம்மியளவு வெளியில் கசிஞ்சாலும் அண்ணனை உயிரோட பார்க்க முடியாதுடா...’ எனச் சொன்ன விஷயத்தை அடுத்தநாள் பக்கத்து ஊர்க்காரர் போன் செய்து கேட்பாரே... அந்த மாதிரி சுயநினைவு இல்லாதப்போ நாம லைக் பண்ணின அடல்ட்ஸ் ஒன்லி போட்டோக்களையும்கூடக் காட்டி ‘சூதானமா இருடா கைப்புள்ள...’ என நம்மை எச்சரிக்கும் எமர்ஜென்ஸி ஆப்ஷன் இது. #அந்த பேக்கரி மேட்டர்...

ஆன் திஸ் டே:
`போன வருஷம் இதே நாள்லதான் தாத்தாவுக்கு தெவசம்'னு எள்ளுருண்டை சாப்பிட்டவங்கதானே நாம! ‘வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் போஸ்ட்டை ஷேர் பண்ணிக்கிட்டு இருந்தோம்’னு அப்பப்போ நம்மளோட கடந்தகாலத்தை நினைவுபடுத்தி வெட்கப்படவைக்கும் ஆல்பம் இது. ‘எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்’னு கண்ணாடி முன்னாடி நின்னு ஆர்ம்ஸைப் பார்த்துக்கலாம். #நினைவோ ஒரு பறவை!

- விக்கி