கலாய்
Published:Updated:

மாறாதய்யா மாறாது!

மாறாதய்யா மாறாது!
பிரீமியம் ஸ்டோரி
News
மாறாதய்யா மாறாது!

மாறாதய்யா மாறாது!

மாறாதய்யா மாறாது!

‘ரோவர் காலேஜ், ஆர்.டி.ஓ ஆபீஸ்லாம் ஏறுங்க ஏறுங்க... வாங்க சார்’ன்னு கூப்பிட்டு அஞ்சு பேரு உட்கார வேண்டிய ஷேர் ஆட்டோவில் பதினஞ்சு பேரைத் திணிச்சி ஏத்துவாய்ங்க.

‘ஏன்ப்பா அதான் டிக்கெட் ஃபுல் ஆகிடுச்சே... வண்டியை எடுக்கலாம்ல..?’

‘சார் இரு சார்... இன்னும் ஒரு டிக்கெட் ஏத்திக்கிறேன்’னு சொல்லிட்டு அந்த டிரைவர் ஸீட்ல பாதியைக் கொடுத்து ஒரு ஆளை உட்கார வைப்பாய்ங்க. பின்னாடி நிக்கிற ஆட்டோவும் அடுத்த ரெண்டு நிமிஷத்துல அங்கதான் போகும்னு நம்மாளுகளுக்கும் தெரியும். ஆனாலும், ஏதோ இதுதான் சொர்க்கத்துக்குப் போகிற கடைசி வண்டி மாதிரி நெரிச்சு இடிச்சுப்பிடிச்சு ஏறி எவன் மடியிலேயாவது உட்காருவாய்ங்க.

யோவ்... நீ இப்படி உட்காந்து வண்டியை ஓட்டினா நெசமாவே நாங்கல்லாம் சொர்க்கத்துக்குத்தான்யா போகணும். நீங்க என்னைக்கு கரெக்டான அளவுக்கு டிக்கெட் ஏத்தி வண்டி ஓட்டுறீங்களோ அன்னைக்கி ராத்திரியே நாடு வல்லரசாகிடுச்சுன்னு அறிவிச்சிடலாம்யா.

ஆம்புலன்ஸுக்கு வழி விடணும்னு பள்ளிக்கூடத்துல படிக்கிற காலத்திலேயே பசங்களுக்குச் சொல்லி கொடுத்துருப்பாய்ங்க. ஆனாலும், நம்ம ஊர்லேயே மிக மிகக் குறைந்த வேகத்துல போற வண்டி எதுன்னு பார்த்தா அது ஆம்புலன்ஸுக்கு முன்னாடிப் போகிற வண்டியாத்தான் இருக்கும். அவங்களைச் சொல்லிக் குத்தமில்லை. குடிச்சுட்டு ஃபுல் மப்புல அவ்ளோ வேகத்திலே தானே போக முடியும்.

ஏன்ய்யா இப்படிக் குடிச்சுட்டு ரோட்டை மறிச்சு அலம்பல் பண்ணிட்டுப் போறீங்க?னு கேட்டால், ‘நாங்க குடித்து விட்டு வண்டி ஓட்டியது யார் குற்றம்? சரக்கு விற்ற அரசாங்கத்தின் குற்றமா? இல்லை.. குடித்திருக்கிறேன் என்று தெரிந்தும் நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு என்னைக் கண்டுகொள்ளாத காவலர்களின் குற்றமா? கூறுங்கள் நண்பா’ன்னு போதையில் கூடத் தெளிவா ‘பராசக்தி’ டயலாக்கை உல்டா பண்ணிப் பேசுவாங்க. இவய்ங்கல்லாம் திருந்தாத வரைக்கும் நாம டல்லரசுதான்!

கட்டப்பா பாகுபலியைக் கொன்றதற்கான மர்மம் விலகினாலும், பெர்முடா முக்கோணக் கடல்பகுதி குறித்த கடைசி ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், உலகின் கடைசி டேபிள் மேட்டை இமான் அண்ணாச்சி விற்று முடித்தாலும், டைம் மெஷின் மூலமாக உலகின் கடைசி நாளுக்குச் சென்றாலும் அங்கும் யாரோ ஒரு மனைவி தனது கணவனுக்குக் காலை டிபனுக்கு உப்புமா தயார் செய்துகொண்டிருப்பதும், யாரோ ஒரு காதலி தன் காதலனிடம் ‘நெட் பேலன்ஸ் முடியப் போகுதுடா. 50 ரூபா டாப்அப் பண்ணி விடு செல்லம்’ என்று கெஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டிருப்பதும்தான் முடிவில்லாதது. இது இரண்டுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டால் அந்த நாளே நாடு வல்லரசு ஆனதாக நாளாக அறிவிக்கப்படும்.

இப்போதைக்கு நாட்டுல பெரும்பாலானவய்ங்களோட வாழ்நாள் கனவு என்னவா இருக்கும்னு பார்த்தால், அமேசான் காட்டில் இருக்கும் அரியவகை மூலிகைகளை விவசாயம் பண்ற அந்த விவசாயி, வாட்ஸ்அப்பில் வதந்தியைக் கிளப்பி வாட்ஸ்அப்பை ‘டை ஷாப்’பாக மாற்றும் அந்த குரூப்பின் அட்மின், பிரவுசிங் சென்டர் கம்ப்யூட்டர் கீ-போர்டுக்கு அடியில் அமுதா போன் நம்பரையும், பஸ்ஸ்டாண்டு ஆண்கள் கழிப்பறையில் குமுதா போன் நம்பரையும் எழுதும் நபர், இவங்களை எல்லாம் ஒரே ஒரு தடவையாவது நேரில் பார்த்திடணும்ங்கிறதுதான். அப்படி நேரில் சந்திச்சுட்டா அன்னைக்கி சாயங்காலமே நாடு வல்லரசாகிருச்சுன்னு நியூஸ் டிக்ளேர் பண்ணிடலாம்.

எது எப்படியோ... நமக்கு நாடு வல்லரசாகணும் அம்புட்டுதேன்!

- சக்திவேல் மருதமுத்து