கலாய்
Published:Updated:

ஒய் கவுண்டர் இஸ் மகான்?

ஒய் கவுண்டர் இஸ் மகான்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஒய் கவுண்டர் இஸ் மகான்?

ஒய் கவுண்டர் இஸ் மகான்?

ஒய் கவுண்டர் இஸ் மகான்?

காலத்தால் அழியாதது கவுண்டமணியின் வசனங்கள். `ஒய் கவுண்டர் இஸ் மகான்’னு தெரிஞ்சுக்கணுமா? இதோ அவரின் வசனங்களை நீங்களே இப்போ ரீவைண்ட் பண்ணிப்பாருங்க புரியும்! 

• மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...மோட்டார் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை! - மனைவியும் மோட்டாரும் ஒண்ணு. ரெண்டையும் கவனமா ஹேண்டில் பண்ணுங்க இல்லைன்னா வாழ்க்கை ரிப்பேர் ஆகிடும்னு எவ்ளோ அழகா சொல்றார்!

• பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா... இந்த பந்தம் எல்லாம் கொளுத்தக் கூடாதா?- வாழ்க்கைக்குத் தேவை ஆடம்பரம் மட்டும் இல்லை. எளிமையும்தான் எனக் குறிப்பால் உணர்த்துகிறார் கவுண்டர்!

• ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி...போடா! - எவ்வளவு பெரிய ஆளையும் போடா என்றே சொல்வேன் எனப் பொருள் கொள்ளலாம்!

• பொண்ண நீ பார்க்கிறது சரி! பொண்ணு உன்னை பார்த்துடப் போகுது! - பெண்ணியத்துக்கு ஆதரவான குரலாகவும் கரிசனக்குரலாகவும் இதைப் பொருத்திப்பாருங்கள்!

• அய்யோ... இப்போ நா எதையாவது வாங்கணுமே... இந்தத் தெரு என்ன விலைன்னு கேளு! - ரியல் எஸ்டேட் அபரிமிதமான வளர்ச்சி காணப்போவதை அன்றே கண்டு கொண்டார் அண்ணன்.

• நான்லாம் அமெரிக்கால பொறக்க வேண்டியது, என் கெரகம் சைக்கிள் கட வச்சிருக்கேன்! - இந்தியர்களின்  திறமையைப் பற்றியும் அவர்களுக்கான மரியாதையையும் உணர்த்துகிறார்.

• அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! - அரசியலில் எதுவுமே சாதாரணம் எனச் சொல்கிறார்!

• ஏன்டா, எவன கேட்டாலும் மலேசியாவுல இருந்து காசு வருது, சிங்கப்பூர்ல இருந்து காசு வருதுன்னு சொல்றிங்க, அப்ப இந்தியால இருந்த காசெல்லாம் எங்கடா போச்சு?- ஸ்விஸ் பேங்கில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணத்தைப் பற்றி அன்றே சொன்னார் மகான்!

• நாட்டுல இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலடா! - இது ஒரு சிவப்புச் சிந்தனை!

• கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியா இருக்கணும்டா! - ஏழையாக இருந்தாலும் சந்தோஷமாக வாழுங்கடா என்பதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

• காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில எடம் பாக்குறேன்!- அழகான பெண்களை வைத்து காரியம் சாதிப்பவர்கள் அரசியல்வாதிகள் என்று சொல்கிறார்.

• க்ரீஸ் டப்பாவ எப்டி எட்டி ஒதச்ச? - பழி வாங்குவதை காரண காரியங்களோடு திட்டமிட்டு செய்யப்பழகுங்கள் என உணர்த்துகிறார்.

• நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத் தெரியும் ...  நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்..! - தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பதுதான் தன்னடக்கத்தின் முதல் படி என்கிறார்.

• பத்த வச்சிட்டியே பரட்டை. - போட்டுக் கொடுக்கும் ஆட்கள் நம் பக்கத்திலேயே இருப்பார்கள் எனச் சொல்கிறார்.

ஒய் கவுண்டர் இஸ் மகான்?

• சங்கூதுற வயசுல சங்கீதா! - வயதான காலத்தில் கடலை போட வேண்டாம் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்.

• டேய் தகப்பா... - தந்தை சொல் மிக்க மந்திரமில்லை மாயமில்லை. அதனால் டா போட்டு அழைக்கிறார்.

• நாராயணா! இந்தக் கொசுத்தொல்லை தாங்கமுடியலடா! மருந்தடிச்சுக் கொல்லுங்கடா! - டெங்கு கொசு எதிர்காலத்தில் பெரிய அளவில் மனித இனத்தைத் துன்புறுத்தும் என அன்றே சொன்னார் மகான்!

• அய்யோ ராமா! என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் கூட்டுசேர வைக்குற? - எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கும் கட்சிகளின் மைண்ட் வாய்ஸ் இதுதான் என அப்போதே யோசித்திருக்கிறார் கவுண்டர்.

• இப்போ ஆலையில ஓடுற கரும்பில அடிக் கரும்பா இருந்தா என்ன நுனிக்கரும்பா இருந்தா என்ன? நமக்கு வேண்டியது வெல்லம் தானேடா கோமுட்டித்தலையா! - டீம் லீடரா இருந்தா என்ன? டிப்பார்ட்மென்ட் ஹெட்டா இருந்தா என்ன..? நல்ல சம்பளம் கிடைச்சா போதும்டா என்கிறார்.

• சத்திய சோதனை! - உண்மை பேசினால் எப்பவுமே சோதனைதான் வரும் என்று சொல்லியிருக்கிறார்.

• உலகம் உருண்டைனு அமெரிக்காக்காரன் கண்டுபுடிக்கலை. ஐயம் (I am) தான் கண்டுபுடிச்சது. - வாழ்க்கை ஒரு வட்டம்டா என்று சொல்வதற்கு முன் உருண்டை என்று சொன்னவர்தான் மகான்!

- ஆர்.சரண்