
இதெல்லாம் பாவம் மை சன்!

தமிழ் சினிமா இயக்குநர்களின் தேடல் வெறி சமயங்களில் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக மாறிவிடுவதும் உண்டு. நாம் மரியாதையோடு பார்த்து வியந்த பல ஆளுமைகளை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்தளவு கேவலப்படுத்தியும் உள்ளார்கள். அதற்குக் காரணம் அந்தப் பிரபலங்களின் சினிமா ஆசையா, அல்லது இயக்குநர்களின் திட்டமிட்ட பழிவாங்கலா என்பது தெரியவில்லை... அப்படி யாரைக் கேவலப்படுத்திட்டாங்கன்னு கேட்குறீங்களா..? இந்தா பார்த்துக்கோங்க!
ஹைப்பி்ச்சில் பாட்டுப்பாடும் பிரபல பின்னணிப் பாடகரான மாணிக்கம் விநாயகம், மக்களுக்குப் பல நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார். பக்திப்பழம்போல பொது நிகழ்ச்சிகளில் காட்சி தருவார். சும்மா விட்டாரா நம்ம மிஷ்கின்? `யுத்தம்செய்' படத்தில் வக்கிரமான செக்ஸ்வெறியராக இவரைக் காட்டி இருந்தார். கடைசி சீனில் பட்டாப்பட்டி டவுசரோடு கண்களைக் குருடாக்கி அலைய விட்டதெல்லாம் ஓவரோ ஓவர்.

தூய தமிழில் பேசுவதன்மூலம் பலரின் அபிமானத்தைப் பெற்றவர் பழ.கருப்பையா. மூத்த அரசியல்வாதியான அவர், ஆரம்பத்தில் காங்கிரஸிலிருந்து பின்பு திமுக, மதிமுக என்று ரவுண்டடித்துவிட்டு கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றி கடைசி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்டார். மனதில் உள்ளதைப் பட்டென்று பேசிவிடும் நேர்மையாளர். இவர் மீது இயக்குநர் வசந்தபாலனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. `அங்காடித்தெரு' படத்தில் தொழிலாளர்களை வாட்டி வதைக்கும் முதலாளியாகக் காட்டியிருப்பார். அது மட்டுமல்லாமல் விளம்பரத்தில் நடிக்க வரும் நடிகையிடம் ஜொள்ளு விடும் பெருசாக காட்டியிருப்பார். மேடையில் அவர் பேசிய தமிழால் கிடைத்த பெருமை, இந்தப் படத்தில் இவரின் கேரக்டரால் கொஞ்சம் `டல்' ஆனது!

மணிரத்னம் 25 வருடங்களுக்கு முன்பு எடுத்த `அக்னிநட்சத்திரம்' ரொம்ப ஃபேமஸான படம். பார்த்தவர்களின் கண்களைக் கூச வைத்த படம். (ஒளிப்பதிவு அப்படி) அந்தப் படத்தில் கொடூரமான வில்லனாக ஒரு பெரியவரைக் காட்டியிருப்பார்கள். அவர் பெயர் ஜி.உமாபதி. சென்னை ஆனந்த் தியேட்டர் உரிமையாளரான அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால படத்துல வர்ற மாதிரி கதர் ஜிப்பா, வேட்டியோடு எப்பவும் ரொம்ப எளிமையாக இருப்பார். அவ்வளவு நல்ல மனிதருக்கு படத்தில் நல்ல கேரக்டர் ரோல் கொடுத்திருக்கலாம். மணிரத்னத்துக்கு அவர்மேல என்ன ஆத்திரமோ தெரியவில்லை, படத்தில் கொடூர வில்லன் ரோல் கொடுத்து அவர் மீதிருந்த மரியாதையை காலி செய்தார். ‘போதும்பா நீங்களும் உங்க சினிமாவும்' என்று அந்தப் படத்திற்குப் பின் வேறு எந்தப் படத்திலும் நடிக்க மறுத்துவிட்டார் உமாபதி.

சென்னையில் புகழ்பெற்ற கமலா தியேட்டர் உரிமையாளரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராகவும் நீண்டகாலம் பொறுப்பு வகித்து, `அறப்பணி செம்மல்' என்று புகழப்பட்டவர் மறைந்த வி.என்.சிதம்பரம். துரைதயாநிதி தயாரித்த `தூங்காநகரம்' படத்தில், ரகசிய கேமிரா மூலம் டிரெஸ்சிங் ரூமில் பெண்களைப் பார்த்து ரசிக்கும் ஜவுளிக்கடை முதலாளியாக நடித்திருப்பார். ஆன்மிகச்செம்மலை, சபலச்செம்மலாகக் காட்டியாது மட்டுமல்லாமல் கிளைமாக்ஸில் கொடூரமாகக் கொன்று அசிங்கப்படுத்தினார்கள்.

`உதிரிப்பூக்கள்', `முள்ளும் மலரும்', `ஜானி' போன்ற மென்மையான படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் முப்பது வருடங்களுக்கு முன்பே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன். அவர் பெயரைச் சொல்லும்போதே ஒரு மரியாதை ஏற்படும். அப்படிப்பட்டவரை நடிக்க வேண்டும் என்று கம்பல் பண்ணி அழைத்து வந்து, நடிகர் விஜய் குடும்பத்தையே அழித்த கொடூர வில்லனாக `தெறி' படத்தில் காட்டியிருப்பார் இயக்குநர் அட்லி. அந்தப் படத்தில் அவருக்குக் கொடுக்க வேற கேரக்டரே இல்லையா? அவரை இனி பார்க்கும்போது `உதிரிப்பூக்கள்' நினைவுக்கு வருமா? `தெறி' நினைவுக்கு வருமா?

பட்டிமன்றங்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்று அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் எளிமையாக்கிப் புகழ்பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. `சிவாஜி' படத்தில் `அங்கவை-சங்கவை' பாத்திரத்தை வைத்து மொக்கை வசனத்தைப் பேசி இருப்பார் தமிழ் பண்டிதர் பாப்பையா! அவருக்கு எதிராக பொங்கியெழுந்த ஏகப்பட்ட ஆப்பையாக்கள் பாப்பையாவை சூப்பையாவாக்கிவிட்டார்கள். காரணம் நம்ம இயக்குநர் ஷங்கர். எதிர்வினையைத்தாங்க முடியாமல், ‘`போதும்யா போதும், என்னால முடியலை... இனி சினிமா பக்கமே தலை வெச்சுப் படுக்கமாட்டேன்யா’’ என்று பாப்பையாவை தனக்குத் தானே தீர்ப்பைச் சொல்ல வைத்துவிட்டார்கள்.

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாட்டு மாஸ்டராக வந்து போட்டியாளர்களின் திறமையை வெளிக்கொண்டு வர டிரைனிங் கொடுக்கும் அனந்த வைத்தியநாதன் மீது இயக்குநர் பாலாவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. தலையைப் படிய வாரி, காதில் கடுக்கன், கவச குண்டலங்கள் பாசி மணி மாலை அணிந்து, பட்டு ஜிப்பாவில் ஜொலிஜொலிக்க வலம் வந்த அனந்த வைத்தியநாதனை, ‘அவன் இவன்’ படத்தில் திருட்டுப் பிள்ளைகளைப் பெற்ற திருட்டு அப்பனாக அழுக்கோடு காட்டியிருப்பார் பாலா. படத்தில் அவருக்கு ரெண்டு பொண்டாட்டி வேற. இப்பவும் சூப்பர் சிங்கரில் அவரைப் பார்க்கும்போதெல்லாம் ரெண்டு பொண்டாட்டிகளிடம் அடிவாங்கும் அழுக்கு மூட்டைதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

மதுரையிலிருந்து கிளம்பிய இன்னொரு பட்டிமன்றப் பிரபலம் கு.ஞானசம்பந்தன். பாமரருக்குப் புரியும் வகையில் பட்டிமன்றங்களை நடத்தி மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருபவருக்கு சினிமா ஆசையைக்

காட்டிவிட்டார்கள். தற்போது தொழில் முறை நடிகராகி பிஸியாக நடித்து வருகிறார். சில படங்களில் அவர் கேரக்டர்கள் அனைத்தும் அவர் மீதான மரியாதையைக் காலி செய்துவிடும் போலிருக்கிறது. அதிலும், ‘நிமிர்ந்துநில்’ படத்தில் ரொம்ப ரொம்பக் கேவலமான கேரக்டரைக் கொடுத்திருப்பார்கள். அதையெல்லாம் சகித்துக்கொண்டு சினிமாவில் தொடர்ந்து கம்பு சுற்றுகிறார்.நடித்து வருகிறார்.
கடைசியாக இயக்குநர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்... அதான் சார் மெசேஜ்...
`படம் எடுக்கிறோம்'கிற பெயருல தயாரிப்பாளர் காசை காலி பண்றீங்களோ இல்லையோ, பிரபலமான மனிதர்கள் பல வருடமா சேர்த்து வெச்ச மரியாதையை ஒரே படத்துல காலி பண்ணி சாதனை பண்றீங்க!
- செ.சல்மான்