கட்டுரைகள்
Published:Updated:

கொரோனா - தமிழனின் டைரி குறிப்புகள்

தமிழனின் டைரி குறிப்புகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழனின் டைரி குறிப்புகள்

லாக்டௌன் அறிவித்த அந்த நொடியில் சூப்பர் மார்க்கெட்டில் ஆரம்பித்து தெருமுக்கு அண்ணாச்சி கடை வரை பர்ச்சேஸ் என்ற பெயரில் கட்டி ஏறியது யாரு...

ந்த முழுநாடே கொரோனாவோடு போராடிக் கொண்டிருக்கும்போது ஊரடங்கு நாள்களில் தமிழன் செய்த, அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை.

முதல் லாக்டௌனை, ‘கரகாட்டக்காரன்’ படத்தில் ராமராஜனின் துண்டை பத்திரமாக ட்ரங்க் பெட்டிக்குள் வைத்து மூடும் கனகாவின் லாகவத்தோடு கையாண்டவன் தமிழன். தற்போது Unlock3-ல் வனிதா விஜயகுமாரின் ஜூம் இன்டர்வியூபோல அசால்ட்டாய் டீல் செய்யக் கற்றுக்கொண்டுள்ளான். ‘நியூ நார்மல்’ வாழ்க்கைமுறையில் கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்ட தமிழன் எப்படி இப்படி மாறினான் என, கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா?

முன் ஜாக்கிரதை அலப்பறைஸ்:

லாக்டௌன் அறிவித்த அந்த நொடியில் சூப்பர் மார்க்கெட்டில் ஆரம்பித்து தெருமுக்கு அண்ணாச்சி கடை வரை பர்ச்சேஸ் என்ற பெயரில் கட்டி ஏறியது யாரு... நம்ம பயதேன்! காபித்தூளில் ஆரம்பித்து சானிட்டைசர் வரை பண்டல்பண்டலாய் வாங்கி மார்க்கெட்டில் தட்டுப்பாட்டையே உண்டுபண்ணினான்.

மாஸ்க் அணியாமல் வெளியே போக மாட்டான். சாக்பீஸ் கிழித்த வட்டத்துக்குள் நின்று பொறுப்பாய் பொருள்கள் வாங்கினான். ஆனால், ஊருக்குக் கூட்டம் கூட்டமாய் பஸ்ஸில் ஃபுட்போர்டு அடித்தோ, உருளைக் கிழங்கு லாரியில் உட்கார்ந்தோ போய் கொரோனாவைப் பரப்பினான்.

கொரோனா லாக்டௌன்
கொரோனா லாக்டௌன்

வாரத்தில் ஆறு நாள்கள் அம்பியாய் இருந்தவன், ஞாயிறுகளில் அந்நியனாய் மாறி கூட்டம் கூட்டமாய் மீன் மார்க்கெட்டையும் கோழிக் கடைகளையும் முற்றுகையிட்டு கொரோனாவுக்கு நலங்கு வைத்தான். இதனாலேயே இன்றுவரை ‘தளர்வுகளற்ற ஊரடங்கு’, ‘ஊரடங்குக்குள் ஊரடங்கு’ என்ற புதுப்புது வார்த்தைப் பிரயோகங்களை அரசு கண்டுபிடிக்க உதவினான்.

OTT அலப்பறைஸ்:

‘வீட்டிலேயே இரு... விழிப்புடன் இரு’ என்று சொன்னதை அப்படியே செய்துகாட்டினான். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட பத்து OTT தளங்களை மறக்காமல் நண்பர்களிடம் பாஸ்வேர்டு வாங்கி, கண்விழித்துப் படம் பார்த்தான். ஓசிக் குடிபோல ஓசி ஓடிடி!

ஆபீஸ் அலப்பறைஸ்:

ஆரம்பத்தில் WFH போகும்முன் அத்தனை பெருமைப்பட்டுக்கொண்டான். ‘நாம பார்க்குற வேலைய நம்ம புள்ளகுட்டிங்க பார்க்கப்போகுது’ எனக் குதூகலத்தோடு மடிக்கணிணியைத் திறந்தான். ஜூம் மீட்டிங்கில், பாஸ் உட்கார்ந்து கொண்டு மூன்று மணி நேரம் பாடம் எடுத்தபோது உச்சந்தலை வரை வியர்த்தது.

‘இந்தக் கருமத்தத்தைத்தான் ஆபீஸ்ல ஒட்டிக்கிட்டு திரிஞ்சியாக்கும்?’ என வீட்டிலும் கொஞ்சம் டேமேஜ் பண்ண, குழம்பிப்போனான். நடுவே டார்கெட்டும் சேர்ந்துகொள்ள பல்லை நறநறவெனக் கடித்துக்கொண்டு வேலை பார்த்தான். ‘ஆபீஸே தேவலைல மச்சி!’ என்று சாட் செய்து ஆறுதல்பட்டுக்கொண்டான்.

கொரோனா லாக்டௌன்
கொரோனா லாக்டௌன்

ஜூம் மீட்டிங் போய்க்கொண்டிருக்கும்போது கீரை ஆய்ந்து கொடுக்காததற்காக மனைவியிடம் லைவில் திட்டு வாங்கிப் பொங்கி எழுந்தான். ஆனால், இந்த முழுநாடும் போராட வேண்டியது கொரோனாவுடன்தான், மனைவியோடு அல்ல என்பதை உணர்ந்து சைலன்ட் ஆனான்.

ஸ்கூல் அலப்பறைஸ்:

ஆரம்பத்தில் சாதுவாய், இருந்த குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் வால்முளைத்த வானரங்களாய் மாற, அவன் ‘சேது’வாய் மாறினான். ஸ்கூல் தொறந்தாதான் விடிவு எனக் கடவுளிடம் ஸ்கூல் திறக்க வேண்டிக்கொண்டான். வேண்டுதல் பாதி பலித்தது. ஆன்லைன் க்ளாஸ் திறக்கப்பட இன்ஸ்டன்ட் இடியாப்ப மாவாய் மாறிப்போனது அவனின் செல்போன்.

வாட்ஸப்பில் அட்டெண்டன்ஸ், கூகுள் க்ளாஸ் ரூமில் வகுப்பு என எல்லாம் முடிந்ததும், ஒரு டீச்சர் மறக்காமல் ஸ்கூல் பீஸையும் ஆன்லைனில் கட்டச் சொல்லிக் கடுப்பேத்துவார்.

டிவி அலப்பறைஸ்:

ஆரம்பத்தில் ஆர்வத்தோடு நியூஸ் சேனல்களைப் பார்த்தான். நாள்கள் செல்லச் செல்ல பிரேக்கிங் நியூஸ் பூராவும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா உச்சம் தொட்ட கதையையே சொல்ல வயிற்றில் உருண்டை ஒன்று உருள ஆரம்பித்தது.

பழைய சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை தூசு தட்டி எல்லா சேனல்களும் ஒளிபரப்ப, போகிறபோக்கில், ‘சிவகார்த்திகேயன்... மிமிக்ரி ஃபீல்டுல உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு!’ என தாடி பாலாஜி பாராட்டும் கொடுமையையும், நட்சத்திரக் கலைவிழாவில் எஸ்.எஸ்.சந்திரன் டான்ஸ் ஆடுவதையும் காட்டி அவனுக்கு சாவு பயத்தைக் காட்ட ஆரம்பித்தார்கள்.

சொந்த பந்த அலப்பறைஸ்:

‘எனக்கும் தொண்டையக் கவ்வுது... உனக்கும் கவ்வுது. அப்போ கொரோனாதானே ஜெஸி?’ என்று கேட்காத குறையாக நண்பர்கள் அழிச்சாட்டியம் அதிகமானது. பெருசுகள் சொல்லும் மருத்துவங்களுக்கு பரிசோதனை எலி ஆனான்.

ஜூம் கல்யாணம், ஜூம் வளைகாப்பு என வாட்ஸப்பில் வந்த லிங்க்கை ஓப்பன் பண்ணி நெக்குருகி ஆசீர்வாதம் செய்தான். நாளொன்றுக்கு நாலு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணச் சொல்லி நெருங்கிய வட்டமே டார்ச்சர் செய்ய, ‘டே காசி, நீயுமாடா?’ என சுப்ரமண்யபுரம் சசிக்குமாராய் மாறிப்போனான்.ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ‘நாமளும் ஒண்ணு ஆரம்பிச்சிடலாமா?’ என்ற விபரீத யோசனையிலும் அலைகிறான்.

இ-பாஸ் அலப்பறைஸ்:

ஆன்லைனில் ‘எப்படிப் போறே... ஏன் போறே... எதுக்குப் போறே... எப்ப வருவே?’ என்று `புலி’ பட விழாவில் பேசிய டி.ஆர் போல எக்கச்சக்க கேள்விகளை அரசாங்கம் கேட்டாலும் சின்ஸியராய் பதில் சொல்லி ‘ரிஜெக்டட்’ பல்பு வாங்குகிறான் தமிழன். டிராவல் எஜென்ட்டை வைத்து புக் பண்ணினால்கூட ‘ராம்நாட் டு கரூர் கிடைக்கல. அதுக்குப் பதில் கரூர் டு ராம்நாட் டிராவல் புக் பண்ணிட்டேன் சார்! போங்க பார்த்துக்கலாம்! போலீஸ் நிறுத்திக் கேட்டா, அஞ்சாவது படிக்கிறேன்னு விரல் சூப்பிட்டே சொல்லுங்க!’ என்று அவர் புது ரூட்டு சொல்ல... `தில்லுவாலே புச்சுடேனுச்சா... ஓ’ என்று ஒப்பாரி வைத்து அழுகிறான்.

அரசின் அலப்பறைஸ்:

‘இது லட்சுமணக்கோடு... தாண்டப்படாது. நீங்கள் வெளியே போனால் கொரோனா உங்கள் வீட்டுக்குள் வரும்... ஆரோக்கிய சேது செயலியை மறக்காமல் பயன்படுத்துங்கள்’ என்று மோடி பேசியதும் சிலிர்ப்பாயிருந்தது அவனுக்கு!

அவர் முதலில் அவனைக் கைதட்ட வைத்தார். பிறகு விளக்கேற்ற வைத்தார். இந்தியாவோடு சேர்ந்து டிங் டிங் டிகாணாவாகி அவனை மெய் சிலிர்க்க வைத்தார். ஆனால், அவன் வீட்டுவாசலில் கார்ப்பரேஷன்காரர் தகரஷீட் வைத்து அடைத்துவிட்டுப் போனபிறகும் மோடி சொன்ன ஆரோக்கிய சேது செயலியில் ‘நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்’ என்று காட்டியபோதுதான் கொஞ்சம் கடுப்பானான்.

‘ஒன்றிணைவோம் வா!’ என ஸ்டாலின் அங்கிட்டு கூப்பிட... ‘வீட்டிலேயே இரு!’ என எடப்பாடி இங்கிட்டுக் கத்த... ‘செத்த அனத்தாம இருங்கய்யா!’ என்றான் தமிழன். ‘கொரோனா வைரஸ்லாம் நாய்ங்க மாதிரி நாமெல்லாம் வடிவேலு மாதிரி. நம்மைக் கடிச்சா அதுதான் செத்துப்போகும்!’ என்று சொன்ன சயின்டிஸ்ட் செல்லூர் ராஜுவுக்கும் தொற்று வந்தது. குணமாகிவந்த வாயோடு, ‘வைரஸ் டச் பண்ணிட்டுப்போச்சு. டிச் பண்ணல!’ என்றெல்லாம் காமெடி பண்ணிக் கதறவிட்டார். சைடுகேப்பில் ஈ.பி பில் தமிழனின் பி.பியை ஏற்றிவிட்டுப்போனது.

இன்றுவரை சமூகப் பரவல் தமிழகத்தில் இல்லை என்கிறார் எடப்பாடி. ஆனால் தமிழகம் தான் சமூகப் பரவலுக்குள் உள்ளது என்கிறது கொரோனா. இதனால் கபசுரக்குடிநீரை மூன்று வேளையும் குடித்து அல்சர் வந்து இஞ்சி தின்ற குரங்காகிப்போனான் தமிழன்!

கிரிக்கெட் ஸ்கோர்போல ‘இந்தியாவில் இன்னிக்கு மட்டும் எவ்ளோ கேஸு?’ என கேஷுவலாகக் கேட்டு ‘52,000’ என்றதும் ‘ஒரு லட்சம் எப்போ ரீச் ஆகும்?’ என ஷாக் கொடுக்கிறான். கொரோனாவில் வல்லரசாகிடுவோம்டா கண்ணா!