சினிமா
Published:Updated:

காலம் (உரு)மாறிப் போச்சு!

காலம் (உரு)மாறிப் போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
News
காலம் (உரு)மாறிப் போச்சு!

காலையில் 6 மணிக்கு எழுந்து டப்பா சாதம் கட்டி அரக்க பரக்கக் கிளம்பும் அவசரம் இப்போதெல்லாம் இல்லை. காரணம், ஆபீஸே உருமாறி இருக்கிறது

உருமாறிய கொரோனா ஏற்கெனவே தமிழர்களைச் சுத்தவிட்டு சுண்ணாம்பு அடித்துக்கொண்டிருக்கும் இந்த அகால வேளையில் நடிகர்-கம்-அரசியல்வாதி கமல்ஹாசன், ‘விரைவில் உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் காண்பீர்கள்!’ என்று சொல்லி கிலி கூட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழர்கள் கண்ட உருமாறிய விஷயங்கள் என்னென்ன என டிரைலர் ஓட்டிப் பார்க்கலாமா?

முதலில் உருமாறிய நாள்கள்

2019 வரை எப்படில்லாம் வாழ்ந்திருக்கோம்னு ரீவைண்ட் பண்ணுங்க. நல்லா இருந்துச்சா..? அப்போ யானையில இருந்து இறங்குங்க!

வருஷத்தில் முக்காவாசி நாள் லாக்டௌனில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்ததால் பலரும் ‘இன்னைக்கு என்ன கிழமை?’ என்று காலண்டர் பார்த்துத்தான் தெரிந்துகொள்கின்றனர். ‘இந்த ஆண்டு அமோகமாக இருக்கும்’ என்று ஆரூடம் சொன்னதையெல்லாம் வாட்ஸப்பில் ஃபார்வர்டு செய்து கலாய்க்கிறது ஒரு கோஷ்டி. இந்தக் கஷ்டகாலத்திலும் கடகத்துக்கு என்ன சொல்றான், மிதுனத்துக்கு பிரச்னையில்லையே என்று பேப்பர்களில் ராசிபலன் பார்க்கிற, தொலைக்காட்சிகளில் அடிக்கிற கலரில் சட்டை போட்டு ஜோசியர் சொல்லும் ராசிபலன்களைக் கேட்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்யுது! நீதான் வீட்டைத் தாண்டி வெளியவே போகலையே, வடக்கே சூலம் இருந்தா என்ன, தெற்கே மூலம் இருந்தா என்ன?

காலையில் 6 மணிக்கு எழுந்து டப்பா சாதம் கட்டி அரக்க பரக்கக் கிளம்பும் அவசரம் இப்போதெல்லாம் இல்லை. காரணம், ஆபீஸே உருமாறி இருக்கிறது. ‘யாராச்சும் இருக்கீங்களா பயமாக்கீது!’ என தனுஷ் போல் கேட்கும் சூழல்.

இரவு முழுக்க ட்விட்டர் ஸ்பேஸில் உலாத்திக் கொண்டிருந்துவிட்டு காலையில் 10 மணிக்குத்தான் பள்ளியெழுச்சி கொள்கிறார்கள் டெக்னாலஜியில் ஊறவைத்த தமிழர்கள். ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ கொடுத்தாலும் கொடுத்தார்கள்... பாதிப் பேர் பிரேக்ஃபாஸ்ட்டை மறந்து ‘ப்ரண்ச்’ சாப்பிடப் பழகிக்கொண்டார்கள். அரை நிஜாரில் உட்கார்ந்துகொண்டு வசதியாய் ஆபீஸ் மீட்டிங்கை கூகுளில் மீட்டுகிறார்கள். மனைவி, ‘தூள்’ பரவை முனியம்மாவாய் மாறி, ‘இதைத்தான் ஆபீஸ்ல போயி இவ்ளோ நாள் கிழிச்சியா நீயி?’ எனப் பார்வையாலே நொடித்துக்கொள்வதும், முக்கியமான அசைன்மென்ட்டில் இருக்கும்போது குழந்தைகள் அவன் தோளில் ஏறி சர்க்கஸ் விளையாடுவதும், கால் கழுவிவிடச் சொல்லி அடம்பிடிப்பதும் வேடிக்கையான வாடிக்கையாகி விட்டது.

ஒரு குண்டாஞ்சோற்றை உள்ளே கவிழ்த்துவிட்டு மட்ட மத்தியானம் தூங்கி எழும்போது எட்டு மணி. ‘இது இரவா... காலையா?’ என அந்த நாளே உருமாறிக் குழப்புகிறது. லூப்பில் மாட்டிக்கொண்டதைப் போல ஒரே சம்பவங்கள் அடுத்தடுத்த நாள்கள் அப்படியே நிகழ்கின்றன. எல்லாமே டைம்லாப்ஸ் ஷாட்டைப்போல கடகடவென ஓடுகின்றன. கடாயில் கரண்டி கிண்டும் ஃப்ரைடு ரைஸ் கணக்காக எல்லோரையும் புரட்டிப் போட்டுப் பந்தாடுகிறது காலம்.

காலம் (உரு)மாறிப் போச்சு!

உருமாறிய சினிமா

தியேட்டரில் போய் கூட்டத்தோடு கூட்டமாய் குதூகலமாய்க் குத்தவைத்துப் படம் பார்க்கும் திருவிழாவெல்லாம் நடந்து மாமாங்கம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவும் ஓடிடி தளத்துக்குத் தாவப் பழகிவிட்டது. ‘கடைசியாய் நான் பார்த்த இங்கிலீஷ் படம் ஜுராசிக் பார்க்’ என்ற நிலை மாறி, ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரீஸ் பார்க்கப் பழகிக்கொண்டார்கள் தமிழர்கள்.

பிறமொழிப் படங்கள் என்றால் ஒவ்வாமை என்ற நிலைமாறி பகத் பாசிலுக்கும் நவாஜுதீனுக்கும் ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு மாறிப்போனார்கள். ஓசியில் பாஸ்வேர்டு கிடைத்தால் ஒருநாளைக்கு 5 படம்கூட பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எத்தனை விஜய், அஜித் ரசிகர்கள் இந்த லாக்டௌன் காலத்தில் பகத் பாசில், ஷாருக் ரசிகர் ஆனார்கள் என்ற வெள்ளை அறிக்கையை அரசாங்கம் வெளியிட வேண்டும்.

உருமாறிய ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமைகள் என்றால் பீச், அப்படியே ஹோட்டல் டின்னர், ஈசிஆர் ரைடு, பாண்டிச்சேரிப் பயணம், ஷாப்பிங் மால் விசிட் என்று திக்குத்தெரியாமல் திரிந்தவர்கள் எல்லாம் இப்போது ஞாயிற்றுக்கிழமை என்ற பிரக்ஞையே இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து வெறித் தனமாய் டிவி பார்க் கிறார்கள் அல்லது மோட்டு வளையை வெறித்துப் பார்க்கிறார்கள். ஆனாலும் ரத்தத்தில் ஊறிப்போன கவுச்சி வெறி மட்டும் கறிக்கடை களையும் மீன்கடைகளையும் தேடச் சொல்கிறது. சனி, ஞாயிறில் முழு அடைப்பு என்றால், வெள்ளிக் கிழமையையே க்யூவில் நின்று உருமாறிய ஞாயிற்றுக்கிழமையாக்கிவிடுகிறார்கள்.

உருமாறிய அரசியல் ஜோதிடர்கள்

அரசியலில் ஆரூடம் சொல்லி மீடியா அட்டென்ஷன் பெற்றவர்களையெல்லாம் வெச்சு செஞ்சது இந்த ஆண்டு.

எதார்த்த ஜோதிடர் ஷெல்வீயை பதார்த்த ஜோதிடராக்கினார் ரஜினி. இருக்காதா பின்னே ‘ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ராஜாஜி ஜாதகம்... அவர் வரவில்லை என்றால் நான் ஜோதிடத்தை விட்டே வெளியே போய்க்கிறேன்!” என்றெல்லாம் ஏக்கர் கணக்கில் அள்ளிவிட்ட மெய் மெய்யப்பனைப் பொய் பொய்யப்பனாக்கியது ரஜினியின் அரசியல் வாபஸ். அதற்கும் சமாளிப்பு ஸ்டேட்மென்ட் விட்டு டிரெண்ட் ஆக்கினார் ஷெல்வீ.

“ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் ஜாதகத்திலேயே இல்லை! நல்லா சோழி உருட்டிப் பார்த்தாச்சு...” என மேடைக்கு மேடை முழங்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஹெச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும்... இவர்கள் சொன்னதை நம்பி, எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், வேலுமணி, விஜயபாஸ்கர் வரை பிரசாரத்தில் ஸ்டாலினைப் பேசி பல்பு வாங்கினர்.

ஸ்டாலினுக்கு முதல்வராகும் யோகம் இருக்கிறதா என்று ஆருடம் பார்த்த ஹெச். சார், தன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டுபோய் தனக்கு கவுன்சிலர் ஆகும் யோகமாவது இருக்கிறதா என்று பார்த்திருக்கலாம். சாரணர் தேர்தலில்கூட பல்பு வாங்கிய மகான் அல்லவா!

இன்னொருபுறம் கிரிஜா பதவியில் இருக்கும் தைரியத்தில் எடப்பாடியையே பால்பாக்கெட் டெலிவரி பாய் ஆக்கிய சேகரோ, தி.மு.க ஆட்சி வந்ததும் பம்மிப் பதுங்கும் உருமாறிய பால் பாக்கெட் ஆகியிருக்கிறார். கி.முவில் ஸ்டாலினோடும் உதயநிதியோடும் எடுத்த போட்டோக்களைத் தூசுதட்டி வாழ்த்துப்பா பாடினார். அதுமட்டு மல்ல, முதல் பட்டனைக் கழற்றிவிட்டு முத்திரைப் பேட்டி தட்டும் சிப்ஸ் சேகர், இப்போது திடீர் திராவிடன் ஆகி யிருக்கிறார். என்னடா இது திராவிடத்துக்கு வந்த சோதனை!

‘ஸ்டாலின் வரமாட்டார்ங்கிறதை விடுங்க பாஸ்... தினகரன் வெயிட்டு... அழகிரி மகன் துரை தயாநிதி வெயிட்டோ வெயிட்டு. துரை நிச்சயம் அரசியலுக்கு வருவார். உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார்’ என்றெல்லாம் உருட்டிய குட்டி ஜோதிடர் பாலாஜி ஹாசன், தேர்தல் முடிவுக்குப் பிறகு நம்பரை மாற்றி உருமாறிய பாலாஜி ஹாசனாய் மாறிப்போனார்.

உருமாறிய ஏழைத்தாயின் மகன்

ஆடம்பர ஆடைகள், காளான் உணவுகள், ஆடம்பர விமானம்... இப்போ சென்ட்ரல் விஸ்ட்டா மாளிகை வரை நம் பிரதமர் மோடிகூட உருமாறியிருக்கிறார். தாடையைச் சொறியும் போது தட்டுப்படும் தாடிகூட இப்போது தாகூரைப்போல நெஞ்சுவரை படர்ந்து கிடக்கிறது. போன அலையில் விளக்கேற்றிக் கைதட்டச் சொன்னவர், இந்த அலைக்குக் கண்ணீர் சிந்திக் கதறுகிறார். ஆனாலும் ‘இது ஓவர் ஆக்‌ஷன்’ என்று கலாய்க்கத்தான் செய்கிறார்கள்.

உருமாறிய ‘காளான் பிரியாணி’ காந்தி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் அந்தலை சிந்தலையாகிக் கிடந்த கட்சிக்குள் இருந்தே சீனியர்கள் புகைபோட்டு ராகுல் காந்திக்கு மூச்சு முட்ட வைத்தார்கள். கோபமாகி, ‘இனி நான் காக்கா ஓட்ட மாட்டேன்!’ எனத் தலைமைப் பதவியைக் கழற்றி வீசினார். எல்லோரும் கெஞ்சுவார்கள் என நினைத்தார் போல, கிணற்றில் போட்ட கல்லாக கமுக்கமாக சீனியர்கள் மனதுக்குள் சிரித்துவிட... கோபத்தில், ‘வனவாசம் போறேன்!’ என இமயமலைப் பக்கம் ஒதுங்கினார்.

இரு கோடு தத்துவம் போல மோடி தன் ஆட்சியின் மூலம் தினமும் கண்டெண்ட் கொடுக்க, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆனார் ராகுல். சட்டமன்றத் தேர்தல் பிரசார தமிழக விசிட்டில், தயிர், வெங்காயம், கல் உப்பு என யூடியூப் சமையல் வீடியோவரை இறங்கி அடித்து உட்கட்சிச் சண்டைக்குப் பெயர்போன தமிழ்நாடு காங்கிரஸிலிருந்து 25-க்கு 18 பேரை ஜெயிக்கவும் வைத்திருக்கிறார். ‘கேரளா என்னாச்சு? அசாம் ஏன் போச்சு?’ என்று காளான் பிரியாணி காந்தியைக் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் கொரோனா வந்துவிட, அவர் இப்போது ‘ஜி’யைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உருமாறிய போலீஸ்

போன அலைக்கு டிரோன் வைத்துத் தேரிக்காடு, பொட்டல்காடு, பனங்காடு எனத் துரத்தி துரத்தி லாக்டௌனில் வெளியே வந்தவர்களைப் படம் பிடித்து ஆஸ்கருக்கே டஃப் கொடுத்தது தமிழ்நாடு போலீஸ். இந்த அலையில் கப்சிப்பாகிக் கிடப்பது ஆச்சர்யம்தான். வெளியே சுற்றித்திரிந்தவர்களை லத்தியால் வெளுத்தெடுத்த காக்கிகள், இந்த அலையில், ‘பார்த்து சூதானமா இருங்க!’ என நிப்பாட்டி அட்வைஸ் பண்ணுகிறார்கள். ‘இனிமே நாங்கதான்... ஏ போலீஸு மாஸ்க் போடு!’ என போதையில் சலம்பிய உடன்பிறப்பையே, ‘எல்லாம் எங்க நேரம்!’ என நினைத்துக் கடந்ததெல்லாம் போலீஸ் பாவம்!

உருமாறிய சீமான்

‘சித்தப்பா எடப்பாடியார் ஆட்சியில் குறையொன்றுமில்லை!’ என சைலண்ட் மோடில் திரிந்த சீமான், சமீபத்தில் வைப்ரேஷன் மோடுக்கு மாறிவிட்டார். ஆகாத மாமியா கால்பட்ட குத்தம் கைபட்டா குத்தம் ரேஞ்சுக்கு, ‘அதிகாரிகள் விஷயத்தில் அரசு பழிவாங்கல் போக்கைக் கைவிட வேண்டும்!’, ‘ஊரடங்கை ஒழுங்காக போட வேண்டும்’, ‘மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்’, ‘ஆட்சியை ஒழுங்காக நடத்த வேண்டும்!’, ‘திமுக அரசு ஏமாற்றம் அளிக்கிறது!’ எனப் பத்தாவது நாளிலிருந்தே அனத்த ஆரம்பித்துவிட்டார். செம உருமாற்றம்.

காலம் (உரு)மாறிப் போச்சு!

உருமாறிய தேமுதிக

ஒட்டுமொத்த உருமாற்றப் பட்டியலில் பரிதாபமாய் நிற்பது தேமுதிக கட்சிதான். இருக்கின்ற மேடையிலே ஒரு கட்சியோடு கூட்டணி பேசிக்கொண்டே இன்னொரு கட்சியோடும் கூட்டணி பேச முடியும் என கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டீலிங் பேசியதைப் பார்த்து அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களே அதிர்ச்சியில் பழத்தைத் துப்பிக் கொட்டையை விழுங்கினர்.

‘ஏ படித்துறை!’ என்கிற ரேஞ்சுக்கு பிரேமலதா மீடியாவை டீல் செய்ததெல்லாம் உச்சம். சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் கட்சிகளும், ‘கேட்டை மூடுறா!’ சொல்லிவிட, பரிதாபமாய் நின்றது தேமுதிக. ‘எங்களை யாரும் கூப்பிடலை..!’ என அம்மா பிரேமலதா ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட்டபோதும், ‘எங்ககூட கூட்டணி அமைக்க யாருக்கும் இங்க தகுதியில்லை. எடப்பாடி சேலத்துல தோப்பாரு. ஸ்டாலின் கொளத்தூர்ல தோப்பாரு!’ என விஜய பிரபாகரன்லாம் கெத்தா மாஸா ஸ்டைலாய் சாபம் விட்டதெல்லாம் கொடூரம். யாருமே கடைசிவரை கூப்பிடாமல் போவார்களோ என நினைத்து ‘தனித்துப் போட்டியிடவும் தேமுதிக தயார்!’ எனத் தலைமை அறிவிக்க, ‘ஆளுக்கு எங்கே போவாங்க?’ என அடிமட்ட தேமுதிக தொண்டன் குழம்பித்தான்போனான்.

‘வாங்களேன் கூட்டணி அமைச்சு விளையாடலாம்!’ என டிடிவி கூப்பிட, அலேக்காக வண்டியேறினார்கள். ரிசல்ட்டில் ராங் குத்து ராகவன் குத்து கணக்காகக் குத்துவாங்கி மண்ணைக் கவ்வ, ‘முன்னொரு காலத்துல தேமுதிக-ன்னு ஒரு கட்சி இருந்தாதாவும் அதுக்கு ஓட்டு வங்கின்னு ஒண்ணு இருந்ததாவும் சொல்வாங்க!’ ரேஞ்சுக்கு பரிதாபமாக உருமாறி நிற்கிறது தேமுதிக.

இப்படி அரசியலில் நிறைய்ய்ய்ய உருமாற்றங்கள், தடுமாற்றங்கள். சாணக்கிய ஷா, அப்பாராவ் - சுப்பாராவ், விராலிமலை ஜீசஸ், 11 மணி ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சயின்டிஸ்ட் ராஜுபாய் என உருமாறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களோடு அரசியலைத்தாண்டி புதுப்புது உருமாறிகள் தினமும் கதவைத் தட்டுகிறார்கள். நேற்றுகூட தன் பள்ளிக்கு ஒரு பிரச்னை என்றதும் டக்கென ‘நான் இந்தப் பள்ளியின் ட்ரஸ்டி மட்டுமே!’ என கணநேரத்தில் வழிப்போக்கனாய் உருமாறிய ஒய்.ஜி.மகேந்திராவரை லிஸ்ட் பெருசு.

அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரைகூட ஒரு பக்க அளவில் குட்டியாய் எழுத ஆரம்பித்து, எழுத எழுத சற்றே பெரிதாய் உருமாறியதுதான் தெரியுமோ?