கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

டேய் எப்புட்ரா?

பிக்பாஸ் கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
பிக்பாஸ் கமல்

தூங்கி எந்திரிச்சி பார்த்தா, பாசமலர் படம் ஓட்டி, ‘எங்களுக்குள்ளே பேசித் தீர்த்துக்கிட்டோம். கட்சித்தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிச்சிட்டோம்!'னு மிக்சர் தின்னுட்டே பயாஸ்கோப் ஓட்டுறாங்க.

``டேய்.... எப்புட்ரா!’’ அந்தக் குட்டிப்பையனின் எக்ஸ்பிரஷன்தான் இப்போது சோஷியல் மீடியா டிரெண்ட். சமீபத்தில் யாரெல்லாம் அப்படி என்னை ‘எப்புட்ரா’ சொல்ல வைத்தார்கள் என ஓசி டீ குடித்தபடி யோசித்துப்பார்த்தேன். டக்கென மனக்கண்ணில் வந்துபோனவர்கள் இவர்கள்தான்...

டேய் எப்புட்ரா?

பிக்பாஸ் கமல்

பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னவர்களுக்கு உலகநாயகன் போட்ட ஒற்றை ட்வீட் இப்போது வரை விம்மி விக்கல் வர வைத்திருக்கிறது என்றால் அது எத்தகைய சிறப்பு வாய்ந்தது. சிந்திப்பீரே உலகத்தீரே..!

‘பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். தனித்தனியே நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா. மனமே தருகிறேன். ஏந்திக்கொள்க’ என்றதெல்லாம் வெறித்தனத்தின் உச்சமன்றோ? கமல் போட்ட ட்வீட்டைப் படித்து நான் என் பிறந்தநாளையே மறந்துவிட்டேன். ஆமென்!

போதாதற்கு பிக்பாஸுக்கு நீவீர் அணிந்துவரும் ஆடைகள்..! ‘படிக்க வேண்டிய வயதில் நடிக்க வந்துவிட்டோம்’ என்ற ஏக்கம் உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஸ்கூல் பசங்க டிரெஸ்லாம் இப்ப போட்டுப் பாடாப் படுத்துறீங்களே இந்தியன் தாத்தா?

டேய் எப்புட்ரா?

உதயநிதி ஸ்டாலின்

உங்க பேரை ‘உதை'நிதின்னு மாத்திக்கலாமே ப்ரோ. ‘கலகத் தலைவன்’னு உங்க படத்துக்கு கரெக்டாதான் பேர் வெச்சிருக்கீங்க... இல்லையா பின்னே! படத்தை புரமோட் பண்ணப் போன இடங்களெல்லாம் பல பேரை டீபுரமோட் பண்ணிட்டீங்களே... வெள்ளந்தியா பேசுறேன்னு ஆர்யா, விஷால், மிஷ்கின் மேலெல்லாம் வெந்நீரை ஊத்தி வெளுத்துப்புட்டீங்களே ராசா? இனி நம்ம ஆர்யாவைப் பார்க்குறப்பல்லாம் பாவம் அந்த ஏலியன்தானே ஞாபகத்துக்கு வரும்!

இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு இரண்டாவது தடவையா தலைமை உங்களை அறிவிச்சிட்டாங்க... அதுக்கு மைக் நீட்டுனவங்ககிட்ட, ‘அப்படியா... நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்'னு சொன்னதெல்லாம் ‘இதைச் செங்கல்னு சொன்னா செங்கோட்டையே நம்பாது' தருணம்!

திருச்சி சூர்யா - டெய்ஸி சரண்

‘நான் வண்டைவண்டையா பேசினாலும் அது என் அக்கா தான்... நான் தரங்கெட்டுத் திட்டினாலும் அவன் என் தம்பிதான்'னு ஒரே ஆடியோவில் ஓஹோன்னு பாப்புலரானாங்க பா.ஜ.க-வின் கிழிப்பர் செல்ஸ் திருச்சி சூர்யா- டெய்ஸி சரண்.

தூங்கி எந்திரிச்சி பார்த்தா, பாசமலர் படம் ஓட்டி, ‘எங்களுக்குள்ளே பேசித் தீர்த்துக்கிட்டோம். கட்சித்தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிச்சிட்டோம்!'னு மிக்சர் தின்னுட்டே பயாஸ்கோப் ஓட்டுறாங்க. எந்த ஊர்ல இப்படி அக்கா - தம்பி ஆபாசமாப் பேசுறாங்க? ஆபாசச் சொற்பொழிவாளர் அணின்னு உங்க பா.ஜ.க-வில் ஆரம்பிச்சு ராதாரவி தலைமையில் பயிற்சி வகுப்பு நடத்துற ஐடியா இருக்கான்னு, ‘நாக்கை வெட்டுறேன்’னு மூக்கு உடைபட்டு நிக்கிற அண்ணாமலைகிட்ட கேட்டுச் சொல்லுங்க.

திடீர் ஃபிபா பேன்ஸ்!

ரொனால்டோ, மெஸ்ஸிய தவிர ஃபுட்பால்ல யாரையும் தெரியாது. ஆனா, ஃபிபா கால்பந்தாட்டப் போட்டிகளை வெச்ச கண்ணு வாங்காமப் பார்ப்போம்னு சீன் போட்றதெல்லாம் வெறித்தன வேற லெவல் அட்ராசிட்டி. அப்படி தினமும் குத்தவச்சு மேட்ச் பார்த்த ஒருத்தர், கடைசியா கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி... ‘இன்னிக்கு மேட்ச்சுல போர்ச்சுகல் எத்தனை பாயின்ட்டு?’ இதாவது பரவாயில்லை, இன்னொருத்தர் ‘பிரேசில் டீம் எத்தனை ரன் எடுத்துச்சு’ன்னு கேட்டார் பாருங்க, மீ பாவம்!

டேய் எப்புட்ரா?

இளையராஜா

‘காசிக்குப் போகும் சன்னியாசி... உன் குடும்பம் என்னாகும் நீ யோசி!' இந்தப் பழைய பாடலுக்கும் இளையராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தப்படுத்திக்கிட்டேன். ‘சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதருக்கு அவர் கங்கையில் மூழ்கி எழுந்தப்போ வீணை கொடுத்தாங்க சரஸ்வதி தேவி'ன்னு சொன்ன கதையை இந்தக் காலத்துல இத்தனூண்டு பொடிசுகூட நம்பாது. அதுக்கும் மேல போய் ‘அந்த வீணை இன்னும் அருங்காட்சியகத்தில் பத்திரமா இருக்கிறது'ன்னு சொன்னாரு பாருங்க... ‘நம்மளைவிட கதை விடுறாரே'ன்னு அமித்ஷாவும் மோடியும் யோகியும் ஆடிப்போயிருப்பாங்க ஆடி! இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோன்னு எல்லாம் உங்களை வியந்து வியந்து வானத்துல வெச்சிருந்தோம், ஆனா நீங்க ஒத்த ராஜ்யசபா எம்.பி பதவிக்கு இப்படி விழுந்து விழுந்து விழுந்துடுவீங்கன்னு யோசிக்கிறப்போ... முடியல ராசா!

டெல்லி அட்ராசிட்டி

சத்யேந்திர ஜெய்ன் என்ற டெல்லி ஆம் ஆத்மி மினிஸ்டரை ஊழல் வழக்குல புடிச்சி ஜெயில்ல வெச்சிருக்காங்க... ‘சிறை எங்கள் கட்டில், சிறைக்கம்பி எங்கள் பஞ்சு மெத்தை'ன்னு சொல்றதைத்தான் கேள்விப்பட்டிருப்போம். நம்மாளு நிஜமாவே ஜெயிலை ரிசார்ட் மாதிரி மாத்தி வெச்சி பிம்பிலிக்கி பிலாப்பி சொல்லியிருக்காரு.

‘சிறையில் வசதிகளே இல்லை. எனக்கு வசதிகள் செஞ்சு கொடுங்க'ன்னு கோரிக்கை மனுக் கையெழுத்து ஈரம் இன்னும் காயல... இப்ப மாட்டிக்கிட்ட அப்புறம்... ‘அது பிசியோதெரபி சிகிச்சை, ஜெயின் உணவுதான் ஜெயில்ல சாப்பிட்டேன்’னு இஷ்டத்துக்கு பீலா விட்ருக்காரு... முடியல!

டேய் எப்புட்ரா?

சத்தியமூர்த்தி பவன் சம்பவங்கள்

இவ்வளவு நாளாக ஸ்லீப்பிங் மோடில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வீறுகொண்டு எழுந்து வேட்டிகளைக் கிழிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.சந்தடிசாக்கில், ‘எனக்கு தலைவர் பொறுப்பு கிடைத்தால் சிறப்பாகச் செயல்படுவேன்!’ என்று பேட்டி தட்டியிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். கூடவே, ‘குழந்தை யின்மைக்கான சிகிச்சை வசதிகளை அரசு மருத்துவமனையிலும் கொடுக்க வேண்டும்!’ என்ற ஒரு பொதுநல மேட்டரையும் போகிறபோக்கில் டீல் செய்திருக்கிறார்.

“நெட்ப்ளிக்ஸ் சப்ஸ் கிரிப்ஷன்லாம் தீர்ந்து போகலை... நான் இப்ப முன்ன மாதிரி இல்லை... திருந்திட்டேன் நம்புங்க!” என்று சொல்லி ஷாக்கோ ஷாக் கொடுத்திருக்கிறார்.

டேய் எப்புட்ரா?

சீமான்

பரமக்குடியையும் இளையான் குடியையும் பக்கத்துப் பக்கத்துல வெச்சது யார் குற்றம்? ‘சலங்கை ஒலி’ படம் பார்க்க ரவி தியேட் டருக்கு வைகை ஆத்து மணலில் சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டுப் போனது என் குற்றமா? மணல் வாரிவிட்டு எதிரே வந்த அய்யா சீனிவாசன் அட்வகேட் அவர்கள் மீது இடித்தது என் குற்றமா..? இல்லை, நாங்கள் இருவரும் சேர்ந்து ‘சலங்கை ஒலி’ படம் பார்க்கப் போனதுதான் வரலாற்றுப் பிழையா? இதைச் சொன்னால் கிண்டலடிப்பது என்ன நியாயம்?

சீமானின் மேடைப்பேச்சில் இது புதுரகம். தாங்க முடியல குருநாதா!

டேய் எப்புட்ரா?

சில்லறை சின்ராசுகள்

யூட்யூப் வீடியோக்களில் கமென்ட் செக்‌ஷனில் உலாவும்போது ஒரு புது டிரெண்ட்டை உருவாக்கி வைத்திருக் கிறார்கள். குந்தாங்கூறாக வாழ்த்து சொல்லிக் குதூகலமாய் இருப்போர்தான் அவர்கள். இதோ சாம்பிளுக்குச் சில...

‘கட்டிலில் வலதுபக்கம் படுத்துக் கொண்டே வீடியோ பார்ப்போர் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துகள்!', ‘மாமாக்குட்டியின் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்', ‘மிச்சர் சாப்பிடும்போது கடலையை மட்டும் தேடிப் பொறுக்கிச் சாப்பிடுவோர் சார்பாக வாழ்த்துகள்!', ‘இந்தப்படம் வெற்றிபெற பாக்கியலெட்சுமி சீரியல் கோபி அங்கிள் சார்பாக வாழ்த்துகள்!', ‘கோயில் திருவிழாவில் பொண்ணுங்ககிட்ட நம்பர் கொடுக்காமல் வீட்டுக்கு வரும் 90s kids சார்பாக வாழ்த்துகள்!' - இப்படி எதையாச்சும் கமென்ட் பண்ணி, அதையும் பூராப்பயலுங்க லைக் பண்ணி முதல் கமென்டாக்கி வெச்சிருக்காய்ங்க. யாரு பாஸ் நீங்க?

கட்டக்கடைசியா, நியூஸ் சேனல்களின் லைவ் யூடியூப் வீடியோக்கள்ல கமென்ட் செக்‌ஷனில் பொழுதன்னிக்கும் குத்தவச்சு, ‘சாப்பிட்டீங்களா?' ‘தூங்குனீங்களா' என ஃபேக் ஐடிக்களிடம் கடலை வறுக்குறீங்களே...

டேய்... எப்புட்ரா?