சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

கே.கே.மகேஷ் - ஓவியங்கள்: சுதிர்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

செப்டம்பர் 18, 2021-ல் தமிழ்நாட்டு ஆளுநராகப் பதவியேற்ற ஆர்.என்.ரவி, உடனே வந்த தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாட முடியாமல் போய்விட்டதாம். எனவே, 2022 தீபாவளியையே தலை தீபாவளியாக அவர் கொண்டாடினால் எப்படியிருக்கும்? ஒரு கற்பனை. ஆயிரம் பத்திரிகை அடித்து, ‘24.10.22-ம் தேதி ராஜ் பவன் தோட்டத்துக்கு வரவும்... தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது!’ என்று ‘முத்து’ படத்து விசித்ரா மாதிரி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பிவைத்தார். “பேராவூரணியில ஒரு எம்.எல்.ஏ மொய் விருந்து நடத்துனாரு... மதுரையில ஒரு அமைச்சரு கல்யாணம்ங்கிற பேர்ல மாநாடே நடத்துனாரு... இது கவர்னரோட டேர்ன் போல!” என்று அவர்களும் கிளம்பிவந்துவிட்டார்கள்.

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

10 மணிக்கு வரச்சொன்னால், அதிகாலை 5 மணிக்கே வந்து விட்டார் ஓ.பி.எஸ். அழைப்பிதழ் இல்லாவிட்டாலும், அழுது அடம்பிடித்து உள்ளே வந்துவிட்டார் பன்னீர்.

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

அடுத்து வந்த எடப்பாடி, “என்ன சார்... எங்கள மட்டும் இன்வைட் பண்ணீங்கன்னு பாத்தா, ‘எக்ஸ் பங்காளி’ பன்னீரையும் கோத்து விட்ருக்கீங்களே” என்று கேட்க, “நான் எங்கஜி கூப்பிட்டேன். அவரே வந்துட்டாரு... செக்யூரிட்டிய விட்டுக்கூட தடுத்துப் பார்த்துட்டேன். சொந்த வீட்டு ஃபங்ஷனுக்கு இன்விட்டேஷன் எதுக்குன்னு சொல்லி நெஞ்ச நக்கிட்டாப்ல…” என்று வந்தது பதில்.

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

திடீரென்று எங்கிருந்தோ, ‘புஹஹஹாஹா...’ என்று சிரிப்புச் சத்தம் கேட்க, “எதாவது புதுரக பட்டாசாக இருக்குமோ?” என்று எல்லோரும் சத்தம் வந்த பக்கம் திரும்பினால்... அங்கே... ஆங்... அவரேதான்! “எங்க முப்பாட்டன், நரகாசுரன் நினைவு நாளை அரசு சார்பில் கொண்டாடுறதே தப்பு... இதுல விருந்து வேறயா?!” என்று ராஜ் பவன் வாசலில் உடலை முறுக்கி, உயிரைக் கொடுத்துக் கண்டன உரையாற்றிக்கொண்டிருந்தார் சீமான். ஆர்ப்பாட்டம் முடிந்த கையோடு “தோள்கள் தினவெடுத்தாலும் வகுறு பசியெடுக்குதுல்ல தம்பி... நமக்குச் சோறு முக்கியம்” என்றவாறு ஆளுநர் மாளிகையில் அவர் கைநனைக்க, “என்னண்ணே ‘சாதிக்கிறவன் சாவுக்கு பயப்படக்கூடாது’ன்னு சொன்னீங்க... ஆனா சாப்பாட்டு விஷயத்துல மட்டும் வீக்கா இருக்கீங்க?” என்று தம்பி ஒருவர் ஆதங்கப்பட்டார். “தம்பி, அண்ணனோட ராஜதந்திரம் உனக்குப் புரியல... ஒரு நாள்... (குரலை உயர்த்துகிறார்) இந்த மண் என் கையில் சிக்கும். தனித்தமிழ்நாட்டின் அதிபர் மாளிகையாக, இந்த ஆளுநர் மாளிகை மாறும். அப்ப எங்கே தோட்டம் போடுறது... மாடு கட்டுறது... எப்டி தற்சார்பு வாழ்க்கை வாழலாம்னு முன்கூட்டியே பார்க்க வேணாமா? புஹா... ஹா... ஹா...” என்று மீண்டும் சிரிக்க, அந்த அதிர்வில் மேஜைமேல் இருந்த தட்டு, டம்ளர்கள் எல்லாம் ஆடி அடங்கின.

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

இன்னொரு பக்கம் ‘அண்ணாமலை வகையறா’ அமர்ந்திருந்த டேபிளில்...

அண்ணாமலை: (போனில்) என்னது... ஆளுநர் மாளிகைக்கு வர்ற அமைச்சர் கார்ல கல் வீசப்போறீங்களா... வேணாம். ஆளுநர் வீட்டு மேலேயே வீசுங்க... அப்பதான், ‘விருந்துக்குக் கூப்பிட்டவரு வீட்டையே அவமதிப்பு பண்றதுதான் திராவிட மாடல் ஆட்சியா?’ன்னு நாம அரசியல் பண்ண முடியும்.

கரு.நாகராஜன்: அசத்திட்டீங்க தலைவரே... இதே வேகத்துல போனா, 2026 என்ன... 2024-லயே தமிழ்நாட்டு ஆட்சியையும் பிடிச்சிடலாம்!

நாராயணன் திருப்பதி: இப்படி உசுப்பேத்தி... உசுப்பேத்தித்தான், ஏற்கெனவே அண்ணாமலை மானத்தைப் படகு-ல ஏத்துனீங்க...

பாரிவேந்தர்: தேர்தல் வருது... இந்தவாட்டி என் மகனுக்கும் சேர்த்து, 2 சீட் தரணும்.

பிரேமலதா: எங்க குடும்பம் பெருசு... அதனால எனக்குப் பத்து!

அன்புமணி ராமதாஸ்: நமக்கு சீட் எண்ணிக்கைகூட முக்கியம் இல்ல... ‘அன்புமணியாகிய நான்’னு உறுதிமொழி எடுத்துக்க வசதியா முதல்வர் வேட்பாளரா அறிவிச்சாப் போதும்!

அண்ணாமலை: (ஆட்டுக்கறியைச் சுவைத்தபடி) அமைதி... அமைதி... ஆளுநர் மாளிகையில அரசியல் பேசக்கூடாது... கம்யூனிஸ்ட்காரங்க பார்த்தா, கோபப்படுவாங்க! ஆமா... நம்ம கொங்கு மண்டல புரவலர் வேலுமணி அண்ணா வரலையே... இன்வைட் பண்ணலையா?

ஆளுநர்: காலையில போன் பண்ணுனாரு. ‘ஸாரி ஜி... இன்னிக்கு நம்ம வீட்ல 100-வது ரெய்டு. கிராண்டா செலிபிரேட் பண்ணணும்னு தொண்டர்கள் ஆசைப்படுறாங்க. அதனால வர முடியாது!’ன்னு சொல்லிட்டாரு. ஆனா, இன்வைட் பண்ணாமலேயே வந்திருக்காரு நம்ம ஓ.பி.எஸ்...

அண்ணாமலை: அண்ணா... இந்த ஃபங்ஷனுக்கு நடுவுல... ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸுக்கு இடையே மியூசிக்கல் சேர் போட்டி வைப்போமா? ‘நடுவர்’ கிட்ட சொல்லி, ஒரு வாட்டி ஓ.பி.எஸ்ஸுக்கு சாதகமா மியூசிக்க நிப்பாட்டுவோம்... அடுத்து இ.பி.எஸ் உட்காரட்டும்... செம ஜாலியா இருக்கும்!

ஓ.பி.எஸ்: நீங்க எவ்வளவு அசிங்கப்படுத்துனாலும் நான் இங்கிருந்து போக மாட்டேன். உங்களுக்கு நெருக்கமா இருக்கிறதா காட்டிக்கிட்டாதான் இ.பி.எஸ்ஸுக்கு வயிறு எரியும்!

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு சகிதம் முதல்வர் ஸ்டாலின் நுழைய, வாசலில் ‘ஹேப்பி தீவாளி’ என்ற இந்திக்கோலம் வரவேற்றது. “தலைவரே, ‘இந்தி திவாஸ்’ஸுக்குக் கூப்ட்டு நம்மள அசிங்கப்படுத்திட்டாங்க... வாங்க வந்த வழியே திரும்பிப் போயிடலாம்” என சேகர்பாபு கோபப்பட, “தம்பி... ‘ஹேப்பி தீபாவளி’யைத்தான் சமஸ்கிருதத்துல(?!) இப்டி சுத்திச் சுத்தி எழுதியிருக்காங்க...” என்றார் பொன்முடி.

“தீபாவளி கொண்டாடாத ஸ்டாலின், எதுக்கு கவர்னரோட தீபாவளி விருந்துக்குப் போனார்னு கேட்டா என்ன பண்ணுறது? காது கேட்காதது மாதிரி போயிடலாமா?” - இது சேகர் பாபு.

“ஓ... இன்னைக்கு தீபாவளின்னு எனக்குத் தெரியாது. ‘கவர்னர் அங்கிள் கூப்பிடுறாரு, அக்டோபர் கடைசியில கவர்மென்ட் ஹாலிடே எதாவது வருதான்னு பாரு’ன்னு பேரன் இன்பாகிட்ட சொன்னேன். அவன்தான், ‘அக் 24 லீவு தாத்தா’ன்னு சொன்னான். சோ, விடுமுறை நாள் கொண்டாட்டத்துக்குத்தான் ஆளுநர் மாளிகை போனோம்னு சமாளிச்சிடலாம்.”

“நான் கலைஞரின் மகன்னு அடிக்கடி சொல்வீங்களே... இப்பதான் அது உண்மைன்னு நிரூபிச்சிருக்கீங்க தலைவரே... எனக்கே புல்லரிக்குது” என்று ‘ஐஸ்’ வைத்த துரைமுருகன், அந்தப் பக்கமாக நடந்து வந்த ஜி.கே.வாசனிடம், “என்னங்க இந்தப் பக்கம்? சமீபத்துல செயல்பாட்ல இல்லாத 284 கட்சிகளோட பதிவ எலெக்‌ஷன் கமிஷன் ரத்து பண்ணுனாங்களே... அப்ப, உங்களோட ‘தன்னந்தனி காங்கிரஸை’ தடை பண்ணலையா?” என்று ஒரண்டை இழுத்தார்.

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ். எங்க கட்சி பேரு தமிழ் மாநில காங்கிரஸ்... எங்க சின்னம்கூட தென்னந்தோப்புதான்... தனிமரம் கெடையாது!” என்று கோபமாகச் சொல்லியபடி இடத்தைக் காலி செய்தார் வாசன்.

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!

திடீரென ஆளுநர் மாளிகை பரபரப்பாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, ‘ச்சும்மா ஸ்டைலா... கெத்தா’ நுழைகிறார்.

அண்ணாமலை: அண்ணா... ‘பொன்னியின் செல்வன்’ ஃபங்ஷன்ல உங்க ஸ்பீச் செம...

ஆளுநர்: அப்புறம் ஜி... அதே ஸ்டைல்ல நமக்காக கொஞ்சம் வாய்ஸ் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.

ரஜினி: யா... யா... டெபனட்லி... டெபனட்லி... வாய்ஸ் கொடுத்துரலாம் ஜி... இன்னைக்கு கரிநாள்... நாளைக்கு அமாவாசை... அதுக்கு அடுத்த நாள்...

ஆளுநர்: பி.ஜே.பி-க்கு வாய்ஸ் கொடுக்கப் போறீங்களா?

ரஜினி: ‘ஜெயிலர்’ ரீரிக்கார்டிங் இருக்கு... அதுக்கு வாய்ஸ் கொடுக்குறேன்னு சொன்னேன்... டாட்!

ஆளுநர் மாளிகையில் காமெடி தீபாவளி!