அரசியல்
அலசல்
Published:Updated:

“வந்ததா... வந்ததா... வசந்தம் வந்ததா..? - அ.தி.மு.க-வில் அரங்கேறும் கடித களேபரங்கள்!

“வந்ததா... வந்ததா... வசந்தம் வந்ததா..?
பிரீமியம் ஸ்டோரி
News
“வந்ததா... வந்ததா... வசந்தம் வந்ததா..?

ஓவியங்கள்: சுதிர்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை சர்ச்சை ஓரளவுக்கு அடங்கும்போதெல்லாம், மத்திய அரசுத் தரப்பிலிருந்து வரும் கடிதம் மீண்டும் அ.தி.மு.க-வினரிடையே சண்டையை மூட்டிவிடுகிறது. அந்த வகையில், ‘பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என்று குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையமும், ‘ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்’ என்று மாநில தேர்தல் ஆணையமும் அனுப்பிய கடிதங்கள் ஒரு தரப்பை ஆனந்தக் கூத்தாடவும், மறு தரப்பை வயிறெரியவும் வைத்திருக்கின்றன. மாறி மாறி வரும் இந்தக் கடிதங்களைக் கையில் வாங்கிய பிறகு எடப்பாடி, பன்னீரின் ரியாக்‌ஷன் எப்படி இருந்திருக்கும்... ஒரு கற்பனை உரையாடல்...

நாள் : நல்ல நாள்

நேரம்: பட்டப்பகல் 12 மணி

இடம்: சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லம்.

“வந்ததா... வந்ததா... வசந்தம் வந்ததா..? - அ.தி.மு.க-வில் அரங்கேறும் கடித களேபரங்கள்!

எடப்பாடியின் உதவியாளர்: அண்ணே... நீங்க சொன்ன மாதிரியே சென்னைக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.

எடப்பாடி: (டிக்கெட்டைப் பார்த்த மறு நொடியே அதைக் கிழித்து எறிகிறார்.) என்னய்யா இது... வெறும் எடப்பாடி கே.பழனிசாமி-னு போட்டுருக்க... ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி’-னு டெல்லியே அங்கீகரிச்ச பிறகும், டிக்கெட்ல ஏன் அதை மென்ஷன் பண்ணாம விட்டுருக்க?

உதவியாளர்: அண்ணே... இந்த விசுவாசியை சந்தேகப்படாதீங்க. அவங்க சும்மா சும்மா லெட்டர் அனுப்பி ஏமாத்துறாங்க... அப்படி என்னையும் ஏமாத்தச் சொல்றீங்களா?

(கோபத்தில் எடப்பாடி, உதவியாளரை அடிக்கப் பாய, தற்செயலாக அங்கு வந்த தங்கமணி அவரைத் தடுக்கிறார்)

தங்கமணி : ஐயோ... அண்ணா என்னாச்சுங்கண்ணா...

எடப்பாடி: (கோபம் கொப்பளிக்க) என்னய்யா சொன்ன..?

தங்கமணி: `என்னாச்சுங்கண்ணா?’ன்னு சொன்னேன்...

எடப்பாடி: ‘பொதுச்செயலாளர் அண்ணா’-ன்னு சொல்லணும் புரியுதா..?

“ஆத்தீ.. என்னாச்சு இவருக்கு?’’ என்று தங்கமணி ஜெர்க் ஆக, விவகாரம் தெரியாமல் உள்ளே நுழைகிறார் வேலுமணி. (கையில், எடப்பாடியை `பொதுச்செயலாளர்’ என்று குறிப்பிட்டு வந்த கடிதத்தின் ஒரு லட்சம் காப்பி ஜெராக்ஸ்!)

வேலுமணி: பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் உருவாக்கி, தங்கத் தாரகை அம்மா கட்டிக்காத்த கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அண்ணா... இங்க என்ன பிரச்னை?

(இந்தத் துதியைக் கேட்டு கன்ட்ரோலுக்கு வருகிறார் பழனிசாமி)

எடப்பாடி: “நீயே சொல்லு வேலுமணி... இவங்களையெல்லாம்கூட வெச்சுக்கிட்டு நான் எப்படி கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆகுறது..?

வேலுமணி: (தனது குரலை உயர்த்தி)

பொ.செ.பு.த.உ.த.தா.அ.க.க பொதுச்செயலாளர் எடப்பாடியார் மனசு கோணுகிற மாதிரி யாரு என்ன தப்பு பண்ணுனீங்க?

உதவியாளர்: அண்ணே, ‘பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி’ன்ற பேருல ஃபிளைட் டிக்கெட் போடச் சொல்றாருண்ணே...

வேலுமணி: என்னது வெறும் பொதுச்செயலாளருன்னு போடணுமா... ‘பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் உருவாக்கி, தங்கத் தாரகை அம்மா கட்டிக்காத்த கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார்’-ன்னு பேரு போட்டு நான் உங்களுக்கு டிக்கெட் வாங்கித் தர்றேன் அண்ணா!

எடப்பாடி: அப்படிப் போடு வேலு... நீதான்யா என்னோட உண்மையான விசுவாசி.

வேலுமணி: ஜி20 ஆலோசனைக் கூட்டத்துல ‘இடைக்கால பொதுச் செயலாளர்’ன்னு சொன்னவங்க இப்ப பொதுச்செயலாளர்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியே மக்கள் மனசுலயும் பதியவெக்கணும்னா கட்சிக்காரங்க எல்லாரையும் டெய்லி நூறு தடவை உங்களை, ‘பொ.செ.பு.த.உ.த.தா.அ.க.க பொதுச்செயலாளர் எடப்பாடியார்’னு சொல்ல வைக்கணும்ணா!

(அந்த நேரத்தில் நெடுஞ்சாலை இல்லத்தின் போன் அடிக்கிறது. எடுத்துப் பேசினால், டெல்லியிலிருந்து யாரோ இந்திவாலா பேச ஆரம்பிக்கிறார்.)

“வந்ததா... வந்ததா... வசந்தம் வந்ததா..? - அ.தி.மு.க-வில் அரங்கேறும் கடித களேபரங்கள்!

எடப்பாடி: ஹான் ஜி... ஹமாரா ஏடிஎம்கே மே பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி ஸ்பீக்கிங் ஜி. போலோ ஜி... யூ செண்டிங் லெட்டர் ஜி... மே டெல்லிக்கு டிக்கெட் எடுக்குறான் ஜி!

தங்கமணி: யார்கிட்ட அண்ணா பேசுனீங்க..?

எடப்பாடி: (இப்போதும் ‘பொதுச்செயலாளரை’ விட்டுவிட்ட தங்கமணியை முறைத்துக்கொண்டே) சின்ன ஜி பி.ஏ பேசுனாரு. டிக்கெட்ல நிரந்தர பொதுச்செயலாளர்னு போட்டுக்கச் சொல்லியிருக்காராம்.

வேலுமணி: பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அண்ணா... இப்போ தெரியுதா உங்க வெயிட்டு என்னன்னு... சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு எம்ஜிஆர் பேரு வெச்ச மாதிரி, கூடிய சீக்கிரம் கோவை ஏர்போட்டுக்கே ‘பொ.செ.பு.த.உ.த.தா.அ.க.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமான நிலையம்’னு பேரு வெச்சுடலாம்.

எடப்பாடி: வேலு நம்ம அணியில் எல்லாருமே உன்ன மாதிரி இருந்துட்டா... நான் சீக்கிரமே சீஃப் மினிஸ்டர் ஆகிடுவேன்யா.

(‘இவரு இன்னுமா இதையெல்லாம் நம்புறாரு’ என்று உதவியாளரும் தங்கமணியும் ஜெர்க் ஆக, வாசலில் காலிங் பெல் அடிக்கிறது. வேலுமணி தாவிப் போய் அடுத்து என்ன கடிதம் வந்திருக்கிறது என்று பார்க்கிறார்.)

****

நாள்: சுமாரான நாள்

நேரம்: ஒளிமங்கும் மாலை நேரம்

இடம்: பெரியகுளம் வராக ஆற்றின் படித்துறை.

பன்னீர்: (சோகமாக) அண்ணே... உங்கள ஆலோசகரா போட்டா எல்லாம் சரியாகும்னு வைத்திலிங்கம் சொன்னாரு... ஆனா முன்னைவிட நிலைமை இப்ப ரொம்ப மோசமாகிட்டே போகுதே அண்ணே...

பண்ருட்டி: விடுப்பா பாத்துக்கலாம். இப்படித்தான் 1970-ல... (பழைய பஞ்சாங்கமாக மாறி கதை பேசத் தொடங்குகிறார் பண்ருட்டி. அதில் கவனம் செலுத்தாமல், தன் பேரக்குழந்தையின் சாக்பீஸால், ‘கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்’ என்று படித்துறையில் எழுதுகிறார் பன்னீர்.)

பண்ருட்டி: ஏங்க... நான் எவ்ளோ முக்கியமான விஷயத்தை சொல்லிட்டு இருக்கேன்...

பன்னீர்: அட விடுங்கண்ணே... எல்லாரும் பழசைச் சொல்லியே என்னை ஏமாத்துறாங்க. குஜராத்ல ஜி ஜெயிச்சப்போ முந்திக்கிட்டு போய் நான் வாழ்த்து சொன்னா, நிகழ்ச்சிக்கே போகாத அந்த ஆளுக்கு ‘பொதுச்செயலாளர்’னு போஸ்ட்டிங் மென்ஷன் பண்ணி மேலருந்து லெட்டர் அனுப்புறாங்க.

பண்ருட்டி: உங்க சோகம் புரியுது.

பன்னீர்: அட அவங்களாச்சும் வெளியூர் ஆளுங்க... போன வாரம் என் பங்காளி வீட்டுல காதுகுத்து. அவங்க வீட்டுப் பத்திரிகையிலகூட என்னை, `அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்’னு போடல. பக்கத்து கோயில் கும்பாபிஷேகத்துக்கு சொளையா 101 ரூபா நன்கொடை கொடுத்தேன்... வெறும் ஓ.பன்னீர்செல்வம்னு ரசீதுல எழுதுறான். எல்லாருமே என்னைப் புறக்கணிக்குறாங்கண்ணே! (குரல் உடைந்து அழும் நிலைக்குப்போகிறார் பன்னீர்)

பண்ருட்டி: அடேயப்பா... எதுக்கு அப்புட்டு எழுதுனீங்க... காசெல்லாம் பாத்து செலவு பண்ணுங்க தம்பி.

(அந்த நேரம் பார்த்து `டேடி, டேடி...’ என்று ஓடி வருகிறார் ஓ.பி.ரவீந்திரநாத்.)

பன்னீர்: ஐயோ இவனா, இவன் வேற நிலைமை புரியாம மத்திய மந்திரி ஆகணும்னு அடம்புடிப்பானே... அவனை அப்படியே போகச் சொல்லுங்கண்ணே!

ரவீந்திரநாத்: டேடி... உங்களுக்கும் தேர்தல் ஆணையம் லெட்டர் அனுப்பியிருக்கு.

(பன்னீரின் முகம் பிரகாசமாக, பண்ருட்டியார் அதைக் கையில் வாங்கிப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார்.)

பன்னீர்: என்ன போட்டிருக்காங்கண்ணே!

பண்ருட்டி: நல்ல செய்தி வந்திருக்கு. உங்களை ‘ஒருங்கிணைப்பாளர்’னு போட்டுருக்காங்க.

“வந்ததா... வந்ததா... வசந்தம் வந்ததா..? - அ.தி.மு.க-வில் அரங்கேறும் கடித களேபரங்கள்!

பன்னீர்: எங்க குடுங்க.. (வாங்கிப் பார்க்கிறார்) ம்க்கும்... நாசமாப்போச்சு!

ரவீந்திரநாத்: ஏன் என்னாச்சு டேடி?!

பன்னீர்: அட மங்குனி... இது மாநில தேர்தல் ஆணைய லெட்டர்டா. ஏற்கெனவே தி.மு.க `பி’ டீம்னு திட்டுறானுங்க. இதுல இதைவெச்சு என்ன பண்ணுறது?

பண்ருட்டி: அட இல்லாத வயித்துக்குக் கூழாவது கஞ்சியாவது... தம்பி ரவி, நீ என்ன பண்ணுற, இந்த லெட்டர்ல `ஒருங்கிணைப்பாளர்’னு போட்டிருக்குற இடத்தை மட்டும் ஜூம் பண்ணி ஒரு லட்சம் காப்பி பிரின்ட் எடுத்து ஊர் முழுக்க போஸ்டரா ஒட்டச் சொல்லு. குறிப்பா எடப்பாடி வீட்டுப் பக்கம் நிறைய ஒட்டச் சொல்லு... (என்றவாறே... தன் ஆலோசனையை பன்னீர் அணியின் வாட்ஸ்அப் குரூப்பிலும் போட்டு பாராட்டு வருமா என்று காத்திருக்கிறார் பண்ருட்டி.)