அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

‘இதுக்கொரு எண்டே இல்லீங்களா..?’ - பன்னீர் அணி நிர்வாகிகள் நியமன பரிதாபங்கள்!

பன்னீர் அணி
பிரீமியம் ஸ்டோரி
News
பன்னீர் அணி

- `பராசக்தி’ பரமன்

ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது கட்சி நிர்வாகிகள் பட்டியல், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் வெளியாகிறது என்றால், ஒட்டுமொத்த அ.தி.மு.க-வும் பரபரப்பாகிவிடும். மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய நிர்வாகிகளை அறிவிக்கும்போதும் களேபரமாகிறது... ஆனால், முற்றிலும் வேறு காரணத்துக்காக. ஒவ்வொரு முறையும் அவர் நிர்வாகிப் பட்டியலை வெளியிடும்போதும், ``நம்ம அணியில இத்தனை பேரா?’’ என பன்னீரைச் சுற்றியிருப்பவர்களே திகைத்துப்போகிறார்கள். சிலர் அடுத்த நாளே அணி மாறுகிறார்கள். இந்த பரபரப்பான(?!) சூழலில், ஓ.பி.எஸ் அணியில் நிர்வாகிகள் நியமனம் எப்படி நடக்கிறது என்று கிடைத்த தகவல்களைக் கற்பனைக் குதிரையின் முதுகில் ஏற்றி ஓட்டிப் பார்த்தோம்...

‘இதுக்கொரு எண்டே இல்லீங்களா..?’ - பன்னீர் அணி நிர்வாகிகள் நியமன பரிதாபங்கள்!

ஓ.பி.எஸ்: ஏம்ப்பா, இவ்வளவு செலவழிச்சு ஆபீஸ் போட்டு வெச்சுருக்கோம். ஏதாவது பண்ணணுமேப்பா... சும்மாவே இருந்தா என்ன பண்றது?

கோவை செல்வராஜ் (மைண்ட் வாய்ஸ்): சும்மா இருக்குறதைப் பத்தி யாரு பேசுறது... இதுக்குக்கூட காசு நீங்களா கொடுக்கப்போறீங்க?!

மனோஜ் பாண்டியன் (வேகமாக): ஐயா, நேத்து ஒரு விளையாட்டு விளையாடினோமே... அதையே இன்னைக்கும் பண்ணுவோமா?

ஜே.சி.டி.பிரபாகர்: ஏதோ ராஜா, ராணி விளையாட்டு விளையாடின மாதிரி சொல்ற... ஆனாலும் உனக்கு இவ்வளவு நக்கல் ஆகாதுய்யா!

‘இதுக்கொரு எண்டே இல்லீங்களா..?’ - பன்னீர் அணி நிர்வாகிகள் நியமன பரிதாபங்கள்!

வைத்திலிங்கம்: நிர்வாகிகள் நியமனத்தைத்தான்யா அவர் அப்படிச் சொல்றாரு. சரி, அந்த சீட்டு எல்லாத்தையும் எடுத்து வந்து குலுக்கிப் போடுங்க... இன்னைக்கு எந்தெந்த மாவட்டம் வருதுன்னு பார்ப்போம்.அந்த மாவட்டச் செயலாளர்கிட்ட நிர்வாகிகள் பட்டியலை வாங்கி, கொஞ்சம் கரெக்‌ஷன் பண்ணி அறிவிச்சு விட்டுருவோம்.

ஜே.சி.டி.பிரபாகர்: அண்ணே, ஏற்கெனவே அறிவிச்ச ஆட்களே முகம் தெரியாத பசங்களா இருக்காங்க. சும்மா போனவன், வந்தவன், அ.தி.மு.க கரைவேட்டி கட்டினவனுக்கெல்லாம் பொறுப்பு கொடுத்துக்கிட்டு இருக்கீங்க... நம்ம அணி மேல கொஞ்ச நஞ்சம் மரியாதை வெச்சுருந்தவனும் நாம போடுற நிர்வாகிகளைப் பார்த்து ‘பேக்’ அடிச்சிடுறான்.

கோவை செல்வராஜ்: வைத்தி அண்ணா, உங்க கரெக்‌ஷன் என்னன்னு எங்களுக்கும் தெரியும். ஓ.பி.எஸ் அணிக்குள்ளேயே ஒரு சமூக அணியை உருவாக்கிடாதீங்க.

மனோஜ் பாண்டியன்: நம்ம சிம்புத்தம்பி யாரைக் காதலிச்சாலும் அவங்களுக்குக் கல்யாணம் ஆகிடுற மாதிரி... நம்ம ஓ.பி.எஸ் அண்ணன் யாரை நிர்வாகியா நியமிச்சாலும் அவங்களுக்கு இ.பி.எஸ் அணியில நல்ல பொறுப்பு கிடைச்சுடுது. அதனால, ‘எனக்கும் பதவி குடுங்க, ப்ளீஸ்’னு சொல்லி காலையில இருந்து ஒருத்தன் போன் பண்ணி டார்ச்சர் பண்றான் தலைவரே.

(அவசர அவசரமாக வந்த) பெங்களூர் புகழேந்தி: அண்ணன்... சேலத்துலருந்து பட்டியல் வந்துருச்சு... அறிவிப்பைப் போட்ருவோமா? (என ஓ.பி.எஸ்-ஸைக் கேட்க...)

‘இதுக்கொரு எண்டே இல்லீங்களா..?’ - பன்னீர் அணி நிர்வாகிகள் நியமன பரிதாபங்கள்!

கோவை செல்வராஜ்: புகழேந்தி, எந்த அடிப்படையில பார்த்தாலும் நீயே இப்போ கட்சியில கிடையாது. நீ யாருய்யா பட்டியல் தயார் பண்றதுக்கு?

(புகழேந்திக்கும் கோவை செல்வராஜுக்கும் வார்த்தை யுத்தம் வெடிக்கிறது.)

ஓ.பி.எஸ்: (‘ஆஹா... நம்ம அணியிலேயும் பதவிச் சண்டையெல்லாம் நடக்குது. நாமளும் பெரிய கட்சிதான்போல...’ என்று மனதுக்குள் மகிழ்ந்தவாறே) ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துங்கய்யா. ஆமா, செல்வராஜ்... உங்களுக்குக் கொடுத்த மாவட்டச் செயலாளர் பொறுப்பை வேண்டாம்னு சொல்லிட்டீங்களாமே... உங்களை நம்பி, ‘பத்து தொகுதியைப் பார்த்துக்கச்’ சொல்லி பெரிய பொறுப்பைக் கொடுத்தா இப்படிப் பண்றீங்களே?

கோவை செல்வராஜ்: பேப்பர்ல வேணா, ‘பத்து தொகுதி’ன்னு எழுதிப் பார்த்துக்கலாம்ணா... வேற ஒண்ணும் பண்ண முடியாது. எதுவுமே பண்ணாம வெறும் கைய வீசுனா யாருண்ணா வருவா... பர்ஸைத் திறந்து நாலு காசை எடுத்தாத்தான் காக்கா, குருவிகூட வரும்!

‘இதுக்கொரு எண்டே இல்லீங்களா..?’ - பன்னீர் அணி நிர்வாகிகள் நியமன பரிதாபங்கள்!

ஓ.பி.எஸ்: (‘ஆத்தி... இந்தாளு நம்ம பாக்கெட்லயே குறியா இருக்காரே... பேச்சை டைவர்ட் பண்ணாட்டி, நம்ம சொத்துக்கே ஆபத்து’ என்று மனதுக்குள் நினைத்தபடி) என்ன மருது, ஏன் ரொம்ப நேரமா அமைதியாவே இருக்கீங்க?

மருது அழகுராஜ்: கருவாடு மீன் ஆகுமா, கானல் நீர் கடலாகுமா... நானெல்லாம் அம்மா இருக்கும்போது எப்படி இருந்தவன்... நானும் கொ.ப.செ., இந்த புகழேந்தியும் கொ.ப.செ-வா?

கோவை செல்வராஜ் (மைண்ட் வாய்ஸ்): ம்க்கும்... இந்தப் பதவிக்குச் சண்டை வேறயா... இந்த மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் ஓ.பி.எஸ்-க்கு வாழ்வுதான்.

மனோஜ் பாண்டியன்: ஏங்க மருது... ஒண்ணுமே பண்ணாத ஜே.சி.டி-யும் துணை ஒருங்கிணைப்பாளர், நானும் துணை ஒருங்கிணைப்பாளரா இல்லையா... அந்த மாதிரி பல்லைக் கடிச்சுக்கிட்டு சகிச்சுக்க கத்துக்கோங்க.

ஜே.சி.டி.பிரபாகர்: தேவையில்லாம என்னை ஏன்யா வண்டியில ஏத்துற... நான் ஐயாவோட உண்மையான விசுவாசி!

கோவை செல்வராஜ் (மைண்ட் வாய்ஸ்): அவரு அவருக்கே விசுவாசி இல்லை. இதுல அவருக்கொரு விசுவாசியா... ச்சே... எல்லாம் காலக்கொடுமை!

ஓ.பி.எஸ்: (கையிலுள்ள பேப்பரைப் புரட்டியபடி) ஏன் வைத்திண்ணே... இந்த லிஸ்ட்டுல இருக்குற எல்லாரும் நம்ம கட்சிதானே... நீங்க காட்டுற இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டுட்டு இருக்கேன்... நாமபாட்டுக்கு தி.மு.க-காரன் யாருக்கும் பொறுப்பைக் கொடுத்து அசிங்கப்பட்டுறக் கூடாது.

வைத்திலிங்கம் (மைண்ட் வாய்ஸ்): எல்லாம் நம்ம பயலுகதான்... நாளைக்கே ஏதாவது பதவி தர்றேன்னு எடப்பாடி சொன்னா இவர்பாட்டுக்குப் (ஓ.பி.எஸ்) போயிடுவாரு... நம்ம நட்டாத்துல நிக்கக் கூடாது பாரு. அதுக்குத்தான் இந்த ஏற்பாடெல்லாம்...

(இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் மயிலை மாறன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆா் மன்றச் செயலாளா் பல்லாவரம் பா.ராஜப்பா, திருவள்ளூா் தெற்கு மாவட்டச் செய்தித் தொடா்பாளா் பொதிகை கே.பி.சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி அணிக்குத் தாவியதாகச் செய்தி வருகிறது.)

கோவை செல்வராஜ்: அண்ணே... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. நம்ம எப்படா ஏதாவது பொறுப்பு போடுவோம்னு பாதிப் பேரு காத்துக்கிட்டு இருக்காங்க... அடுத்த நாளே எடப்பாடியைப் பார்த்து, பூங்கொத்து கொடுத்து ஸ்கோர் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இன்னொரு குரூப்பு, ‘யோவ் எனக்கும் ஓ.பி.எஸ்-ஸுக்கும் என்னய்யா சம்பந்தம்... ஏன் எங்க பேரை லிஸ்ட்ல சேர்த்தீங்க?’னு போன் பண்ணி திட்டுறாங்க. அதுவும் நாமக்கல், கிருஷ்ணகிரிக் காரங்க கேட்க முடியாத வார்த்தைகளால அர்ச்சனை பண்றாங்க. இதுக்கொரு எண்டே இல்லீங்களா... கொஞ்சம் இதுக்கு ஃபுல்ஸ்டாப் வெய்ங்க ப்ளீஸ்!

ஜே.சி.டி.பிரபாகர்: இதுவும் இல்லைன்னா... தீர்ப்பு வர்ற வரைக்கும் பொழுது போக வேணாமா, சும்மா இருங்கண்ணே...

எனக் கூற அடுத்த நிர்வாகிகள் பட்டியல் தயாராகிறது!