சினிமா
Published:Updated:

கிச்சுகிச்சு போராட்டம்!

கிச்சுகிச்சு போராட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கிச்சுகிச்சு போராட்டம்!

தி.மு.க-வில் உடன் பிறப்பு களுக்கு இது உற்சாக உய்யலாலா காலம். போராட்டம்னு வந்தா எப்படி இருக்கும் தெரியுமா?

இது போராட்டங்களின் காலம். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு என்றதும் தொண்டர்கள் படை குனியமுத்தூரில் குனிந்து உட்கார்ந்து, வெரைட்டி ரைஸும், ரோஸ்மில்க்குமாய் நிமிராமல் போராட்டம் நடத்திப் புது வரலாறு படைத்தார்கள். `என்னப்பா பிரியாணில பீன்ஸ் கிடக்கு. அப்போ இது வெஜ் பிரியாணியா..? சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணிலாம் கிடையாதா..? அடுத்தவாட்டி பார்த்துப்பண்ணுங்க சொல்லிப்புட்டோம் ஆமா!' என்று தொண்டர்கள் உரிமையாய் கோவிச்சுக்கிட்டதெல்லாம் தனிப்பெரும் வரலாறு. இதே ரேஞ்சில் போனால் எப்படி எப்படியெல்லாம் `உருமாறிய' போராட்டங்களை இனி தொண்டர்கள் பண்ணலாம் என்பதைச் சொல்கிறேன் வாங்க...

* விராலிமலையையே முதுகுல தூக்கிச் சுமக்கிறேன்னு சொன்னவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். `பார்த்தாலே பச்ச முகம்... பாலு வடியும் முகம்' என சிரித்தபடி நாளொரு பிரஸ்மீட், தனக்கென ஐ.டி விங் என பிஸியாய் இருந்த மனுஷன், ஆட்சி மாறியதும் சைலன்ட் மோடுக்குப் போயிட்டார். `ஆத்தீ ரெய்டு... ஆத்தீ ரெய்டு' என அ.தி.மு.க முகாமே கலகலத்துப்போய்க் கிடப்பதால் வான்டடாக அவர் தொண்டர்களே, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம்போல நூறுநாள் போராட்டத் திட்டத்தை ஷிப்ட் முறையில நடத்தலாம். `ஏலே... எங்களுக்கு சோலி கெடக்கு. ஒண்ணு ரெய்டு விடு... இல்லை அவர் வீடியோவுக்கு கமென்ட்ல ஃபயர் வுடு!' என தி.மு.க-வினரை எமோஷனல் டார்ச்சர் பண்ணவைக்கலாம். `எங்கள் புதுக்கோட்டை அரசர் புளியன் பிரியாணி தரமாட்டார்... சினங்கொண்ட சிறுத்தை அவர், சிக்கன் புலாவ்தான் தருவார்!' என்று பேட்டி தட்டச் சொல்லலாம். மஞ்ச சொக்கா ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களெல்லாம், `நாங்க வேணும்னா ஒன்றரை டன் பால்கோவாவை ரிட்டர்ன் தந்துர்றோம். அண்ணன் வீட்டுக்கு ரெய்டு விட்ராதீங்கப்பா!' என உருக்கமாக வாய்ஸ் கொடுக்கச் சொல்லலாம்.

கிச்சுகிச்சு போராட்டம்!

போன ஆட்சி முச்சூடும் பெஸ்ட் என்டெர்டெய்னர் அவார்டு வாங்கிய செல்லூர் ராஜு விசுவாசிகளெல்லாம், `புவி வெப்பமயமாதல் பிரச்னையால ஓசோன்ல ஓட்டை விழுந்துருக்கு. இன்னும் பத்து வருஷத்துல கடல் மட்டம் கால் மீட்டர் உயரப்போகுது. பூமா தேவி சிரிப்பா சிரிக்கப்போறா... அண்ணன் மாதிரியான சயின்டிஸ்ட்டுகளை ரெய்டு விட்டு அலைக்கழிக்காதீங்க. அவருக்கு நோபல் பரிசு கிடைக்க ஆவன செய்யணும் ஒன்றிய அரசோடு ஒன்றாத அரசு!'' என செல்லூரில் ஆரம்பித்து சோழவந்தான் வரை தெர்மாகோல் வைத்துப் புரட்சி செய்ய வைக்கலாம்.

* `கோவைக்குசும்பை எங்கிட்ட காட்டிட்டாய்ங்களே பரமா!' எனப் புலம்பும் கமல் தன் தொண்டர்கள் ஓடிப்போகாமல் இருக்க வித்தியாசமாகப் போராட்டம் பண்ணலாம்.``அடுத்தடுத்து ஓடும் துரோகிகளால் மக்கள் மீதி மய்யமாக அல்லாது மக்கள் பீதி மய்யமாக உருமாறி நிற்கும் நமது கட்சியில் இனி யாரும் ஓடிவிடாமல் இருக்கப் பல கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தப்போகிறேன். கட்சியில் இணையும் தொண்டர்களிடம் பத்து வருடங்களுக்கான ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி, குறைந்தபட்சம் ஒன்பது வருடங்கள் மய்யத்தில் உறுப்பினராக இருந்தே ஆக வேண்டும் என்று எழுதி வாங்கிவிடுவேன். கலைத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிக்பாஸிலும் மருதநாயகம் படத்திலும் பணிபுரியும் வாய்ப்பு வழங்குவேன். இனி யாரும் கட்சியை விட்டு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... டுப்புச்சிக்கு டுப்புச்சிக்கு பிக்பாஸ்!'' எனப் பேசவைக்கலாம். தொண்டர்கள் குறைந்துபோன கட்சியில் இவரைத்தவிர இப்போது யார் போராட்டம் கீராட்டம் பண்ணுவது?

* தி.மு.க-வில் உடன் பிறப்பு களுக்கு இது உற்சாக உய்யலாலா காலம். போராட்டம்னு வந்தா எப்படி இருக்கும் தெரியுமா?`அய்யாத்துரை! உங்க மகன் உதய்ணா அவர் தொகுதிய ஸ்டார் தொகுதியாக்கிக் காட்டுறேன்னு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில ஒரு எடம் விடாம அநியாயம் பண்றாருங்க. லெப்ட்ல சைடு எடுத்து ரைட்டுல திரும்புனா எதிர்த்தாப்புல கேமராமேன்கள் சகிதமா வந்து நிக்கிறாரு. ஷூட்டிங் நடக்கலைன்னு இங்கிட்டு புரொமோஷன் வீடியோ எடுக்க ஆள் அம்புகளோட சுத்துறாரு!' என ஸ்டாலினுக்கு உருக்கமாகக் கடிதமோ வாய்ஸ் மெசேஜோ போ(ரா)டலாம்.

* சீமானுக்கு வந்த வெயில்கால வேனக்கட்டியே தம்பிமாருங்க தான். `கக்கத்தில் கட்டியோடு வாழ்ந்திடலாம். ஆனா தம்பிமாருங்களோட ஒறண்டை களிலிருந்து தப்பிக்க முடியலையே ஒறவுகளே!' எனப் புலம்புகிறார் அண்ணன்.அந்த அண்ணனுக்குத் தம்பியாக இருப்பதே பாசப் போராட்டம்தான். உடும்புக்கறியில் ஆரம்பித்து புனுகுப்பூனை பிரட்டல் வரை வித்தியாசமான உணவுப் பழக்கங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தணும். களம் ஒண்ணுல சீமானைப் போட்டுப் பொளந்தாலும் களம் இரண்டுல, `அரசேந்திர சோழனுக்கு அரசு விழாவிற்கு உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி!' என கூலாக டீல் செய்யத் தெரிந்தால் போதும். `போராடடா... ஒரு வாயேந்தடா...!' மொமன்ட்தான்!

* தைலாபுரத் தோட்டத்துப் பக்கம் வண்டியை விட்டால், `இத்தனை வருசத்துல உனக்கு ஒரு நல்லது நடக்காமப் போச்சேப்பா!' என மகனைப் பார்த்துப் பார்த்துக் குலுங்கி அழுகிறார் பெரியய்யா. கூடவே சேர்ந்து அழுகிறார் சின்னய்யா.

`இனி ஒரு விதி செய்வோம். பாட்டாளி சொந்தங்களைப் போராட அழைப்போம்,' `அன்புமணி நம் செல்லமணி!', `அன்புமணி நம் தங்கமணி', `அன்புமணி நம் அறிவுமணி', `அன்புமணி 4 CM', `அன்புமணி நம் கடைசி நம்பிக்கை!' என அரசியலில் தனித்துக் களம் காண்போம். அன்புமணியை முதல்வராக்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என உறுதியும் லட்சிய வேட்கையும் கொண்டு எல்லோரும் போராடுங்கள்! நானும் என் குடும்பமும் தைலாபுரத் தோட்டத்திலிருந்து ஆதரவு தருகிறோம்!' என அலுங்காமல் குலுங்காமல் அறிக்கை விடுவார் அய்யா.

கிச்சுகிச்சு போராட்டம்!


* டபுள் புரொமோஷனில் வந்த படிப்பாளி பசங்களைப் போல, சீனியர்களை ஓவர் டேக் பண்ணி தடாலடி அரசியல் பண்ணும் பா.ஜ.க அண்ணாமலைக்கு எதிராகக் களம் காண்பது உங்கள் டான்ஸிங் ரோஸ் ஹெச்.ராஜா. `கடுப்பா இருக்காதாங்குறேன். காத்திருந்தவனை நேத்து வந்தவங்கெல்லாம் ஓட்டுறாங்க. எத்தனை எத்தனை மீம்ஸுகள், வம்பு வழக்குகளைச் சந்தித்திருப்பேன். இதுக்குத்தானா? இனி பொறுக்க மாட்டேன். நானும் காரைக்குடியில் இருக்கும் என் நண்பர்களும் இனி சாவர்க்கர் பாணியில் அமித்ஷா, மோடி, நட்டா என 3ஜிக்களுக்கும் மன்னிப்புக் கடிதம் எழுதப்போகிறேன். எப்படியாவது தலைமையோ அல்லது மத்திய அமைச்சரோ அல்லது கவர்னர் பதவியோ தரும்வரை நிபந்தனையின்றி மன்னிப்பு கோரிக்கொண்டே இருப்பேன். சத்தமில்லாமல் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக்காட்டுவேன். ஜெய் சாவர்க்கர்... வீர சாவர்க்கர்!’