சினிமா
தொடர்கள்
Published:Updated:

காக்கா சுட்ட கதை!

காக்கா சுட்ட கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
காக்கா சுட்ட கதை!

மிஷ்கின் படத்தோட பேரு ‘காக்கையும் நரிக்குட்டியும்.’ முன்னணி, பின்னணி, திருகாணின்னு எல்லா இசையும் இளையராஜா, ஸாரி மிஷ்கின்தான்.

ஒலக பேமஸான ஒரு வரலாற்றுக் கதையை நம்மூர் டைரக்டர்கள் படமா எடுத்தா எப்படி இருக்கும்னு பாப்போம். மொத, அந்த வரலாற்றுக் கதை என்னன்னு பாப்போம்.“ஒரு ஊருல ஒரு காக்கா, வடை சுடுற பாட்டிகிட்ட இருந்து வடையைத் திருடிக்கிட்டு பறந்து மரத்துல போய் உட்கார்ந்துக்கிச்சாம். அப்ப அங்க வந்த நரி காக்காய ஏமாத்தி வடையைப் பிடுங்குச்சாம்” இது ரொம்ப காலமா இருக்கும் கதைதானே. அதான் நான் இத வரலாற்றுக் கதைன்னு சொன்னேன்.

காக்கா சுட்ட கதை!

‘ஊழல் மட்டுமல்ல, எனக்கு உளுந்த வடையும் பிடிக்காது’ - எ பிலிம் பை ஷங்கர்

கதைப்படி கதை பூமிக்கு மிக அருகில் உள்ள நிலாவுல நடக்குது. நிலாவை செட் போட்டா பட்ஜெட் ப்ராப்ளம் வரும்னு விண்வெளியவே செட்டு போடுறார் ஷங்கர். சுத்தமான 22 காரட் தங்கத்தால் ஆன வடைச் சட்டில, பாட்டி கெட்டப்ல இருக்கும் ஐஸ்வர்யா ராய் வடை சுடுறாங்க. அப்ப ஸ்பேஷ் ஷிப்ல வர நம்ம ஹீரோ காக்கா, “ஊழல் மட்டுமல்ல, எனக்கு உளுந்த வடையும் பிடிக்காது”ன்னு சொல்லி, பாட்டி சுட்ட வடைய கவ்விட்டுப் போறாரு. நரியா நடிக்க நார்த் இந்தியன் ரைட்ஸ் நல்லா போகுற இந்தி ஹீரோவைக் கூட்டிட்டு வரார். இது தவிர ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக். அதுல ஒரு பாட்டுல சாட்டிலைட், பறக்கும் தட்டுக்கு எல்லாம் கலர் பெயின்ட் அடிச்சு, அதுல காக்காவும் நரியும் ஆடுறாங்க.

காக்கா சுட்ட கதை!

`கத்தாழங் காட்டு வழில ஒரு காக்காக் கதை’ - எ பிலிம் பை பாரதிராஜா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வாக்கப் பட்டுப் போகுது ஒரு காக்கா... மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலா சுத்தித் திரிஞ்ச இந்த கிராமத்துக் காக்கையின் வடை தேடிய பயணம்தான் இந்த செல்லுலாயிடு காவியம். குருவம்மா பாட்டி சுட்டு வச்சிருந்த வடைய அந்தக் காக்கா திருடிட்டுப் போகுது. `வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு... பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு...’ன்னு பாட்டி அழுது. மனோஜ கிராபிக்ஸ்ல நரியாக்கி, காக்காகிட்ட வடைய திருடுற கேரக்டர்ல நடிக்கச் சொல்றார். (ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வட்டாரத்துல யாருமே ஏற்று நடிக்காத கேரக்டர்). வடைய புடிங்கிட்டு மனோஜ் ஓடுறப்ப, சாரி நரி ஓடுறப்ப, வாக்கப்பட்டுப் போனா காக்கா ஏக்கப்பட்டுப் பாக்குது.

சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமேன்னு காக்கா ஒப்பாரி வைக்குது. அப்ப போடுறோம். எ பிலிம் பை பாரதிராஜா...

காக்கா சுட்ட கதை!

`காக்காவும் நரிக்குட்டியும்’ - எ பிலிம் பை மிஷ்கின்

மிஷ்கின் படத்தோட பேரு ‘காக்கையும் நரிக்குட்டியும்.’ முன்னணி, பின்னணி, திருகாணின்னு எல்லா இசையும் இளையராஜா, ஸாரி மிஷ்கின்தான். ராத்திரி 12 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்துல இருக்கும் ஒரு வடைக் கடையில் உட்கார்ந்து ஒரு பாட்டி, செவன் சாமுராய் படம் பாத்துட்டே வடை சுட்டுக்கிட்டிருக்கு. பக்கத்துலயே கண் தெரியாத ஒருதர் வயலின் வாசிச்சுட்டிருக்கார்.

அப்ப, ஒரு காக்காவோட ரெண்டு கால் மட்டும் காட்டப்படுது. அந்தக் கால்கள் வடைக் கடைய நோக்கி நகருது. காக்கா ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், ஒரு வயலின் இசை நம்மள குத்திக் கிழிச்சுட்டுப் போகுது. அந்தக் கால்கள் வடைச் சட்டிக்கு அருகில் வந்துருச்சு. கேமராவ மேல தூக்குனா, கறுப்பு டிரஸ் போட்டுக்கிட்டு, மொட்டை அடிச்சிருந்த அந்தக் காக்கா, பாட்டி சுட்ட வடைய திருடிட்டுப் பறந்து போகுது. தூரமா உக்காந்து ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியோட சமையல் குறிப்புகள படிச்சுக்கிட்டிருந்த நரிக்குட்டி, இத எல்லாத்தையும் பாத்து பயந்து போய் உக்காந்திருக்கு. அந்தக் காக்கா முன்னால ரெண்டு மெழுகுவத்தி ஏத்தி வச்சு, நரிக்குட்டி தன்னோட ப்ளாஷ்பேக்க சொல்லுது. “ஒரு ஊர்ல ஒரு நரிக்குட்டி இருந்துச்சாம்... அதுக்கு வடைன்னா ரொம்ப உசுராம்... அப்டி ஒரு நாள்”னு நரிக்குட்டி சொல்ற கதையைக் கேட்டுக் கண்ணீர் விட்டு அழுத காக்கா, திருடுன வடைய நரிக்குட்டிகிட்ட கொடுத்துருச்சாம்.

காக்கா சுட்ட கதை!

`வடைன்னா என்னன்னு தெரியுமா?’ - எ பிலிம் பை மணிரத்னம்

குட்டி ப்ளாஷ்பேக்... ஹீரோ காக்கா பொறந்ததுமே அதோட அம்மா அந்தக் குட்டிக் காக்காவைப் பார்த்துச்சு, அது கறுப்பா இருந்தனால, அம்மா காக்காவுக்குப் புடிக்கல (அப்ப அம்மா காக்கா செக்க செவேல்னு இருந்துச்சான்னு கேக்கக்கூடாது. ஏன்னா, கதைக்கு கால் கெடையாது) அதனால அப்படியே குட்டி ஹீரோ காக்காவ விட்டுட்டுப் போயிடுச்சு.

அப்புறம் அந்தக் குட்டிக் காக்காவ ஒரு குயில்தான் வளர்த்துச்சு. ஒரு பெரிய ரவுடி காக்காவா வளர்ந்தது. அப்ப ஒரு நாள் ஒரு பாட்டி வடை சுடுறத காக்கா பாத்துச்சு. காக்கா பாட்டியோட வடைய திருடுச்சு. அதைப் பார்த்த நரி இந்த விஷயத்த பாட்டிகிட்ட போட்டுக் கொடுக்கல. ஃபீல் ஆன காக்கா வடைய கொடுத்து நரியோட ப்ரெண்ட் ஆகிடுது.

அந்த நரி - காக்கா ஏன் ப்ரெண்ட் ஆச்சுன்னு தெரியுமா? உங்களுக்கு நரின்னா என்னன்னு தெரியுமா? நட்புனா என்னன்னு தெரியுமா? வடைனா என்னன்னு தெரியுமா? மெதுவடைய திருடுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? மெதுவடைக்கு நடுல ஏன் ஓட்ட இருக்குன்னு தெரியுமா? ஏன்னா, நரி காக்காவோட நண்பன்.

காட்டுக்காக்கா மனசுக்குள்ள நல்ல நரி நட்புக்குள்ள பாடட்டா...

காக்கா சுட்ட கதை!

`ஓங்கியடிச்சா ஒன்னர டன் உளுந்த வடைவே’ எ பிலிம் பை ஹரி

தூத்துக்குடி மாவட்டம் நல்லூர்ல ஊருக்கே வடை சுடுகிற பாட்டி, ஐயனார் கோயிலுக்கு முன்னால் உட்கார்ந்து வடை சுடுறாங்க. அப்போ டாட்டா சுமோல வர மயில்வாகனம்ங்குற ஒரு காக்கா பாட்டியோட வடைய களவாண்டுட்டுப் போய்டுது. அதை விசாரிக்க வரார் போலீஸ் அதிகாரி துரை நரி. “அப்புத்தா... காக்கா எந்த கலர்ல இருந்துச்சு..? செகப்பா இல்ல மாநிறமா?”ன்னு பாட்டிக்கிட்ட துரைநரி கேக்க, “ஏலேய் ஐயா துர.. காக்கா நல்லா கறுப்பா இருந்துச்சுப்பா”ன்னு பாட்டி சொல்லுது. “அப்ப அது கண்டிப்பா ஆப்பிரிக்க காக்காவாதான் இருக்கும். நான் ஓங்கியடிச்சா ஒன்னர டன் உளுந்த வடைடா”ன்னு கத்திக்கிட்டே ஆப்பிரிக்காவுக்கு தூத்துக்குடி ஹார்பர்லேருந்து கப்பல்ல பறக்குறார் துரைநரி.

“பசிக்கு பீட்சா திங்கிறவனக்கூட மன்னிச்சுடலாம். ஆனா ருசிக்கு வடை திருடுறவன மன்னிக்கக்கூடாதுவே”ன்னு காக்காயோட றெக்கைய ஒடச்சு, தூத்துக்குடி நல்லூர் போலீஸ் ஸ்டேஷன்ல அடைக்குது துரைநரி.

ஆனா பாருங்க, திருடுன வடைய காக்கா ஒளிச்சு வச்சதால, அதக் கண்டுபிடிக்க திரும்ப ஆப்பிரிக்கா போறாங்க. இது செகண்ட் பார்ட் கதை.