சினிமா
Published:Updated:

மறைமுகக்குத்து மங்காத்தா!

மறைமுகக்குத்து மங்காத்தா!
பிரீமியம் ஸ்டோரி
News
மறைமுகக்குத்து மங்காத்தா!

‘நீ சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் எழுதினார்னு படிச்ச ஸ்கூலில சேக்கிழார் எழுதின கம்பராமாயணத்தை செல்ப்ல வெச்ச ஹெட் மாஸ்டர்டா நான்’,

இது லெஜண்டுகளின் காலம். அண்ணாச்சியே நடிக்க வந்து டார்ச்சர் கொடுத்துட்டாரே, அரசியல்வாதிகள் வராமல் இருந்தால் எப்படி? ஸ்டாலின் முதல் திருமாவளவன் வரை அவ்வப்போது சினிமாக்களில் தலைகாட்டியிருக்கிறார்கள். கமலும் உதயநிதியும் இப்போது சினிமாவில் ‘புதுசா ஒட்டிக்கிட்ட’ கூட்டணி. இதுபோக சரத்குமார் முதல் கருணாஸ் வரை டஜன் கணக்கில் அரசியல்வாதிகள். இருந்தாலும் எல்லா அரசியல்வாதிகளின் தேரையும் இழுத்துத் தெருவில் விடுவோமே...

மறைமுகக்குத்து மங்காத்தா!

ஸ்டாலின்: கெஸ்ட் ரோலில் ‘ஒரே ரத்தம்’, ‘மக்கள் ஆணையிட்டால்’னு ரெண்டு படங்களும், சன் டி.வி-யில் ‘குறிஞ்சி மலர்’னு ஒரு சீரியலிலும் நடிச்ச அனுபவம் இருக்கிறதால லெஜண்ட் போல் ‘ஒரு பயனும் இல்லை’ லெவலுக்கு இருக்கமாட்டார் என்பது உறுதி. ஆக, மாரி செல்வராஜின் மாமன்னன் க்ளைமாக்ஸில் உதயநிதிக்கு உதவி செய்யும் ஒரு உன்னதமான ரோலில் ஸ்டாலினை நடிக்க வைக்கலாம்.

வில்லனைப் பார்த்து, ‘‘வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு பேசாதே... நான் ஏற்கெனவே ‘ஒரே ரத்தம்’ பார்த்தவன். நீ இப்போ ஒரே குத்தைப் பார்க்கப்போறே” என்று பன்ச் பேச வைக்கலாம்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஆண்டு ஒன்றைக் கடந்தாலும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வராத காரணத்தால் ‘கண்டா வரச்சொல்லுங்க, உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் அக்கவுண்டில் போடச் சொல்லுங்க’ என்று உரிமை கீதத்தை ஓப்பனிங் சாங்காக வைக்கலாம். யாராவது இதைச் சுட்டிக்காட்டினால், படம் 50களின் பிற்பகுதியில் நடக்கிறது என்று காலத்தின் மீதும் காங்கிரஸ் ஆட்சியின்மீதும் பழியைப் போட்டுவிடலாம்.

‘ஹீரோவாதான் நடிச்சே ஆகணும்’னு நிலைமை வந்தா, ‘திராவிட மாடல்’ என்ற டைட்டில்ல ஒரு படத்துல ஹீரோவா இவரைப் பார்க்கலாம். படத்துல வில்லன் நடிகர் ஆர்யா. கதைப்படி சைக்கிள் ரேஸரான ஸ்டாலினை இன்னொரு சைக்கிள் ரேஸரான ஆர்யா குறுக்குவழியில தோற்கடிக்க நினைக்கிறார். மகாபலிபுரம் போறப்போ தண்டலம்கிட்ட ஆள் வெச்சு அடிச்சுத் துவைக்கிறார். ‘சூர்யா ஹாஸ்பிடல்’ல அட்மிட் ஆகி தீவிர சிகிச்சை எடுக்குற ஸ்டாலின் மெல்ல மெல்ல குணமாகி ரேஸ்ல கலந்துக்கிட்டு வில்லன்களை முட்டுக்காட்டுல வெச்சு முட்டியைப் பேக்குறாரு. எப்படி சைக்கிள் ரேஸ்ல வின் பண்றாருங்கிறதுதான் க்ளைமாக்ஸ்.

“ஏய் ஆர்யா... நீ ஆரிய மாடல்னா நான் திராவிட மாடல்டா’’ன்னு குறியீடு டயலாக் பேச வைக்கலாம். க்ளைமாக்ஸ்ல ரேஸ்ல ஜெயிச்ச பிறகு, ‘‘எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு. நான் கிளம்புறேன்’’னு சைக்கிளை விட்டு இறங்கி சி.எம் கார்ல சைரன் ஒலிக்கக் கிளம்பிப் போறதையே சீன் வெச்சா ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு... அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்த மாதிரியும் ஆச்சு. புரியலலைல... ரெட் ஜெயிண்ட்கிட்ட கேளுங்க, புரியும்!

மறைமுகக்குத்து மங்காத்தா!

எடப்பாடி: வில்லேஜ் ரோல்ல இவர் நடிச்சா ‘என் ராசாவின் மனசில’ ராஜ்கிரணுக்கே டஃப் கொடுப்பார். ‘எனக்கு சிலுவையைச் சுமக்கவும் தெரியும். தக்காளி, சிலுவையால அடிக்கவும் தெரியும். ஏன்னா நானே சிலுவம்பாளையத்துக்காரன்தான்!’னு மாஸ் டயலாக்கைப் பேச வைக்கலாம்.

‘நீ சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் எழுதினார்னு படிச்ச ஸ்கூலில சேக்கிழார் எழுதின கம்பராமாயணத்தை செல்ப்ல வெச்ச ஹெட் மாஸ்டர்டா நான்’, ‘நீ நேர்ல பார்த்த துப்பாக்கிச்சூட்டை நான் டி.வி-யில் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்ட சி.எம்டா’, ‘விழுந்தாதான்டா எழ லேட் ஆகும். தவழ்ந்தவனுக்குத் தரையே சமுத்திரம்டா’ என்று பல மாஸ் டயலாக்குகளைப் படம் முழுவதும் பன்னீர் தெளிக்கலாம். ஸாரி, ஃபயர் விடவைக்கலாம்.

சின்னம்மாவைக் கொடுமைக்காரியாகக் காட்டும் டிரெண்ட் தமிழ் சினிமாவில் ஒழிந்துவிட்டதால் அதற்கு மீண்டும் உயிர் கொடுத்து, சின்னம்மாவின் கொட்டம் அடக்கும் சிங்க பேபியாக பழனிச்சாமி கலக்கலாம். ‘கல்யாணத்திலகூட வாசல்லதான்டா பன்னீர் இருக்கும். கட்சியில் எப்படிடா பதவியில் பன்னீர் இருக்கும்?’ என்று மறைமுகக்குத்து மங்காத்தா ஆடலாம்.

மறைமுகக்குத்து மங்காத்தா!

சீமான்: “ஒண்ணு விளங்கிக்கணும் தம்பி... நான் ‘மாயாண்டி குடும்பத்தார்’ல பிழியப் பிழிய நடிச்சிருக்கேன். எனக்கு ‘மாவீரன் வர்றான்’னு டைட்டிலை வையி. தினமும் அரைக்கிலோ ஆமைக்கறி சாப்பிட்டு ஜிம் போயி றெக்கையை வளர்க்குறேன். புஷ்பா மாதிரி பாட்டை வையி... இழுத்து இழுத்து ஆடுறேன். புஹுஹாஹாஹா...” என்று சீமான் தயார்தான், பார்க்க நீங்கள் தயாரா?

நான் லீனியர், டார்க் ஹியூமர், சினிமா யுனிவர்ஸ் என்று பல புதுமைகளைப் பார்த்துவிட்ட தமிழ் சினிமாவுக்கு சீமான் அளிக்கும் புதிய உத்தி. ‘கதை பார்த்துப் படம் சொல்.’ சீமான் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் கதை சொல்ல, அது அப்படியே காட்சிகளாக விரியும். படம் பார்த்து நீங்கள் வெளியே வரும்போது ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலையாகி, நெய்தல் படை கச்சத்தீவை மீட்டுக் கருவாட்டு வியாபாரத்தைத் தொடங்கியிருக்கும் உணர்வு கண்டிப்பாக உங்களுக்கு வரும். அவ்வளவு ஏன், ‘என்னடா ரொம்பத்தான் கதை விடறாய்ங்க, கொஞ்சம்கூட லாஜிக் இல்லையே’ என்று நீங்கள் நினைக்கும்போது பச்சைமட்டையால் உங்கள் முதுகில் நாலு விளாசியதைப் போன்ற உணர்வு இருக்கும். கையை மோந்துபார்த்தால் ஆமை முதல் ஆக்டோபஸ் இறைச்சி வரை மசாலா வாசம் ஆளைத்தூக்கும்.

ஹீரோயின் என்றாலே சீமானுக்கு அலர்ஜி என்பதால் அதை மட்டும் தவிர்த்துவிடுகிறார். ஆனாலும் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்த காரணம், அண்ணனுக்குத் தம்பிகள் போன் செய்து கெட்டவார்த்தை பல்பு வாங்கிய உரையாடல் ஒலித்துணுக்குகளை ஆங்காங்கே லைவ் ஆடியோவாக இணைத்ததுதான்.

மறைமுகக்குத்து மங்காத்தா!

மோடி: ஏற்கெனவே ‘டன் கணக்குல பர்ஃபாமென்ஸ் பண்ணுவேன்’ எனச் சொல்லும் மோடியை பான் இந்தியா மாஸ் மசாலா ஹீரோவாக நடிக்க வைக்கலாம். தமிழில் குறள், ஆத்திச்சூடியெல்லாம் சொல்லி ஹோம் ஒர்க் செய்வதால் யாஷ், அல்லு அர்ஜுனுக்கெல்லாம் அல்லு விட்ரும். இந்த மோடிக்கேத்த ஜாடியாக நம்ம பாகுபலி டைரக்டர் ராஜமௌலி இருப்பார் என்பதால் அவரையே இயக்க வைக்கலாம்.

நம்ம விஜய் நடிச்ச பகவதி படத்தையே பெரிய சைஸ் வடையாகச் சுட்டு ரீமேக் பண்ணலாம். ரயில்வே ஸ்டேஷனில் டீக்கடை வைத்திருக்கும் மோடி, அதே ரயிலை வாங்கும் அளவுக்கு எப்படிப் பெரிய டான் ஆனார் என்பதே கதை. ரத்தம் ரணம் ரௌத்திரமாக இவரும் இவரின் நண்பர் அமித் ஷாவும் இந்தப் படத்தில் ஆக்‌ஷனில் மிரள வைப்பார்கள். அமித் ஷாவை சந்தான பாரதியின் உப்பிலியப்பனுக்குப் போட்டியாக ஆர்ம் ஸ்பெஷலிஸ்ட்டாகவும், மோடிக்கு வெப்பன் சப்ளையர் ரோலில் நடிக்க வைக்கலாம். அமித் ஷாவைவிட ஒரு உயிர் நண்பன் பாத்திரத்தில் அதானியைக் கெஸ்ட் ரோலில் காட்டினால், ‘பிசினஸ் டைகூன் அதானியின் முதல் சினிமா’ என வேர்ல்டு லெவலில் மார்க்கெட்டிங் செய்யலாம்.

மறைமுகக்குத்து மங்காத்தா!

ராகுல்காந்தி: ஹீரோவா செல்ஃப் எடுக்கல ஜி. ‘நல்லாத்தான் இருக்காரு... ஆமா நல்லாத்தான் இருக்காரு’ என வடிவேலு ஸ்லாங்கில் சொன்னாலும் ‘ஃப்ளாப் ஹீரோ’ என்ற அடைமொழியோடு சுற்றுகிறார். ‘‘மோடியை ஒண்ணுமே செய்ய முடியாது பப்பு. அவங்க எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களையும் வித்துட்டாங்க. இருக்குற எல்லா நீதி மற்றும் விசாரணை அமைப்புகளையும் கையில எடுத்துட்டாங்க பப்பு. நம்ம பப்பு இனி வேகாது பப்பு!’’ என்று சொல்லும் தன் கட்சிக்காரரை அறைஞ்சிட்டு குரூரமாகச் சிரிப்பார். “இனி பப்புன்னு சொன்னா சப்புனு அறைவேன்!” என்று கேமராவைப் பார்த்து முறைப்பார்.

ரெட் முதல் பில்லா 2 வரை நடந்து நடந்தே டயர்டு ஆன அஜித்தே இப்போதெல்லாம் நடையைக் குறைத்துவிட்டார். ஆனால் இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருக்கும் ராகுல் காந்தியின் படத்தில் கோஷ்டி மோதல்கள் ஹாலிவுட் ஆக்‌ஷன் காட்சிகளுக்கே சவால் விடும். ‘இவர்தான் கட்சித் தலைமையை ஏற்கப்போகிறார்’, ‘இவர்தான் குடியரசுத்தலைவர் வேட்பாளர்’ என்று படத்தில் ஏகப்பட்ட க்ளைமாக்ஸ்கள் உண்டு. ஒவ்வொரு க்ளைமாக்ஸிலும் ‘ஐயய்யோ நான் மாட்டேன்’ என்று ஆளாளுக்குத் தலைதெறிக்க ஓடி அழுவுணி குமார் ஜிகிர்தண்டாவுக்கே டப் கொடுப்பார்கள்.

மறைமுகக்குத்து மங்காத்தா!

அண்ணாமலை: எளிய விவசாயக் குடும்பத்து நாயகனாக நடிச்சு ராமராஜன் இடத்தை நிரப்புவார். ‘ஆத்தா ஆடு வளர்த்துச்சு... அந்த ஆடு அரசியலில் என்னை வளர்த்துச்சு!’ன்னு பன்ச் பேசும் இவருக்கு ஆசைவார்த்தை கூறி ஒரு எம்.எல்.எம் கம்பெனி மார்க்கெட்டிங் வேலைக்குச் சேர்த்துக்குது. விவசாயத்தை மறந்து வேலைக்குச் சேர்ந்த முதல்நாளிலிருந்து அதிரடியாக மிரட்டி உருட்டியே ஆள் புடிக்கிறார். ஆரம்பத்தில் பயந்து சேர்ந்த ஆட்கள் ஒரு கட்டத்தில் இவர்மீது செமக் கோபமாகி, கலகம் செய்து காலை வாரி விடுகிறார்கள். நடுத்தெருவுக்கு வந்தவர் திரும்பவும் விவசாயத்துக்கு வந்தாரா இல்லை எம்.எல்.எம் கம்பெனிக்காகவே வாழ்வைத் தொலைத்தாரா என்பதே அதிரிபுதிரி க்ளைமாக்ஸ்.

இவரிடம் கஞ்சி போட்ட காக்கி யூனிபார்ம் நிறைய பீரோவில் இருப்பதால், சிங்கம் சீரிஸின் கடைசி போணியாக இவரை வைத்தே ஹரி படம் பண்ணவும் வாய்ப்பிருக்கு! தீரன் அண்ணாமலை ஆர்மி சார்பாக ‘தீரன் அதிகாரம் 2’ படத்தையும் இவரை வைத்து எடுத்தால் போலீஸ் யூனிபார்மை மீண்டும் போட்டு ஏகத்துக்கும் சிலிர்த்துக் கொள்வார். ஆனால், சிரிப்புப்போலீஸாக திரையில் மாறாமல் பார்த்துக்கொள்வது இயக்குநர் கையில்தான் இருக்கு.