சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ரொம்பத் துயரங்கள் மக்களே!

தினுசு தினுசா பிரச்னைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தினுசு தினுசா பிரச்னைகள்

இந்தத் தம்பிமார்கள் தொல்லைதான் இப்படின்னா, நிஜமான தம்பிமார்கள், அதான் 90ஸ் கிட்ஸ் வித்தியாசமாய் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க.

இப்பல்லாம் திரும்பின திசையெங்கும் கூட்டம் கூட்டமா தினுசு தினுசா பிரச்னைகள் வருது. அதையெல்லாம் சமாளிக்கிறதுதான் தமிழர்களின் ஆகப்பெரிய டாஸ்க் ஆகிப்போச்சு. வாங்க, என்னென்ன பிரச்னைகள் அணைகட்டுதுன்னு சொல்றேன்...

மழை பெய்யுது. அட, அதாச்சும் ஒழுங்கா கேப் விட்டுப் பெய்யிதா? விடாம அடிச்சுத் தொம்சம் பண்ணிட்டுப் போகுது. ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வந்துட்டுப் போனா பரவாயில்லை. வாரத்துக்கு ரெண்டுனா தாங்குவானா தமிழன்? இருக்குற எல்லா கலர்ல அலெர்ட் கொடுத்தாலும் வீட்டுலயா உட்கார்ந்திருப்பாங்க?

ரொம்பத் துயரங்கள் மக்களே!

2015-ல ‘அர்ஜெண்டா 100 பிரெட் பாக்கெட், 100 மெழுகுவத்தி தேவை’ன்னு #Verified போட்டு மெசேஜ் அனுப்பி உதவி செஞ்ச ஊராடா இதுன்னு ஆச்சர்யமாவும் எரிச்சலாவும் இருக்கு. இம்புட்டுப் பெரிய மழை பெய்ஞ்சிருக்கு, மட்டு மருவாதி வேணாம். தி.நகர் மேட்லி சப்வேல பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ஏழு கழுதை வயசுல நீச்சலடிச்சி விளையாடுறானுக... சரின்னு சோஷியல் மீடியா பக்கம் வந்தா மழை+இளையராஜா = டிவைன் ஸ்டேட்டஸையே ட்ரோல் பண்ணி இளையராஜா படகுல போன பழைய வீடியோவை வெச்சு சர்க்காஸம் பண்றானுக. சில பக்கிக 2004 சுனாமி வீடியோவையெல்லாம் சந்தடி சாக்குல அவுத்துவிட்டு அலறவிடுறானுக. அடேய், யார்ரா நீங்கெல்லாம்?

சரி, அரசியல்வாதிகளாச்சும் மழைல சரியா வேலை செய்யிறாங்களான்னு பார்த்தா, ஒருத்தரு போட்டோஷூட் பண்ணதையே வீடியோஷூட் எடுத்துப் போட்டு மீம் மெட்டீரியலா மாட்டிக்கிட்டாரு. இன்னொருத்தர் முட்டியளவு தண்ணியில ஆட்களை டியூப்ல உட்கார வெச்சு கூட்டிட்டு வந்து முட்டியளவு தண்ணிலயே ‘பத்திரமா' இறக்கி விட்டுட்டுப் போறாரு.

ரொம்பத் துயரங்கள் மக்களே!

‘உங்க ஆட்சியில போட்ட திட்டத்தாலதான் வெள்ளம் வடியாம நிக்குது’னு ஒரு குரூப்பும், ‘மழை வரும்னு தெரிஞ்சும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கல’ன்னு இன்னொரு குரூப்பும் சண்டை போட்டுக்குது. ‘‘அட போங்கடா, நாங்களே துணி துவைக்கலாமா வேணாமான்னு தவிச்சுக் கெடக்கோம். வாங்க...ஆத்து வெள்ளத்துல வீடு சரிஞ்சு விழுந்ததை செல்பி எடுத்துப்போட்டு மனசைத் தேத்திக்கலாம்’’னு செல்ப் ட்ரோல் பண்றான் தமிழன்.

சரின்னு சினிமா பக்கம் ஒதுங்குனா, ‘குருன்னு பேரு வச்சியே மரு வச்சியா?' ‘அக்னி சட்டியை ஏன் காலண்டர்ல வெச்சே... அப்போ அது வன்மம்தானே ஜெஸ்ஸி'ன்னு ஒரு குரூப் களமாடுது. அடை மழை பேஞ்சு கெடக்கு. வீட்டுக்குள்ள உட்கார்ந்துகிட்டு முந்திரிக்காட்டு இதிகாசம் கணக்கா சூர்யாவுக்கு 10 கேள்விகள் கேட்டுக் கடிதம் எழுதுறாரு லவ்பெல். ‘கேள்வி ஒவ்வொண்ணும் சாட்டையடில்ல!'ன்னு கூவுறாய்ங்க ஒரு குரூப். சூர்யா பதிலுக்கு ‘புரிதலுக்கு நன்றி'ன்னு கடிதம் எழுதுறாரு...

‘அப்படின்னா கடைய சாத்திட்டுக் கெளம்புங்க!'ன்னு சொல்றாருய்யான்னு டீகோட் பண்றாய்ங்க நடுநிலை குரூப். அசிங்கப்பட்டாரு டாக்டருன்னு கூட்டமா ஈசல் புத்துலேருந்து கிளம்பி வந்தது கணக்கா ‘சூர்யாவை எட்டி உதைச்சா பணம், அஞ்சு போலீஸால என்ன பண்ண முடியும் தினம்'னு ஓப்பன் மிரட்டல் விட்டு வடநாட்டுக்கே டஃப் கொடுக்குறாய்ங்க! நிலவரம் கலவரம் ஆனதைப் புரிஞ்சுகிட்ட பெரியய்யா, ‘நான் அம்பாசிடர் கார் பேசுறேன்!' என வித்தியாசமாய் உருட்டி கவனத்தை வேறபக்கம் திருப்புறார்.

ரொம்பத் துயரங்கள் மக்களே!

போறபோக்கைப் பார்த்தா, ‘நான்தான் ஜெய்பீம் காலண்டர் பேசுகிறேன்'னு அதுவே வந்து பேசினாலும் பேசும். நடுவுல இரஞ்சித் பாசறைத் தம்பிங்க வேற, ‘ஜெய்பீம் அண்ணன் பா.இரஞ்சித் இழுத்த தேர். தொடர்ந்து வடம் பிடிப்போம்!' என அடம்பிடிக்குது. ‘அதெல்லாம் போங்கு... தமிழின் முதல் தலித்திய, அம்பேத்கரிய, மார்க்சிய, காந்திய சினிமா ஜெய்பீம்!' என வித்தியாசமாய் இன்னொரு குரூப் உருட்டியது. இது போதாதுன்னு, என் தசை அறுத்து எனக்கே பங்கான்னு ‘படத்துல எனக்கே தெரியாம என் இனத்தை அசிங்கப்படுத்திட்டாங்க.எலிவேட்டைன்னு இருந்த பேரு, ஜெய்பீம்னு மாறுனப்பவே நிலைப்படில நல்லா இடிச்சிக்கிட்டேன்!'னு ஒரு எழுத்தாளர் டயலாக் உருவாக்க, வாங்குன சம்பளப் பணத்தைத் திருப்பி அனுப்ப, ‘மண்டைமேல உள்ள கொண்டை இப்பதான் தெரியுது பாருங்க... எல்லாம் சாதிப்பெருமை பேசும் எழுத்து'ன்னு இன்னொரு குரூப் சிரிக்குது. வெள்ளத்துல தத்தளிச்ச தமிழன், `அய்யா, சீக்கிரம் ஜெய்பீம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வையுங்கய்யா!'ன்னு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கே கடிதம் எழுத ரெடி ஆனான்.

‘கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும், கிழவியத் தூக்கி மணையில வையி’ன்னு சொல்றமாதிரி சீமான் வேற மனையின்றி... அதான் வீடின்றித் தவிக்கிறாராம்.

‘நாட்டையே ஆளத் துடிக்கிற எனக்கு சொந்த வீடு இல்லை என்பது வரலாற்றில் எவ்வளவு பெரிய துயரம்'னு அண்ணன் சொன்னதும் ‘கருப்பன் குசும்புக்காரன், புது வீடு கட்ட உண்டியல் குலுக்கச் சொல்றான்'னு ஒரு குரூப் கிண்டல் செஞ்சது. இன்னொரு குரூப்போ, ‘நீ ஏண்ணே அழுறே... முப்பது லட்சம் தம்பி, தங்கைகளின் இதயத்துல உனக்கு இடம் இருக்குணே!'ன்னு ஆறுதல் சொன்னுச்சு.

இந்தத் தம்பிமார்கள் தொல்லைதான் இப்படின்னா, நிஜமான தம்பிமார்கள், அதான் 90ஸ் கிட்ஸ் வித்தியாசமாய் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டானுங்க. வேறென்ன... கிரிப்டோகரன்சி அட்ராசிட்டிதான். ‘மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான பிட்காயின் இன்னைக்கு எழுவதாயிரத்துக்கு வந்துடுச்சு. சிபா, இன், எத்திரியம், டோஜி, ஃப்ளோகி, டெதர் எதுலயாவது போட்டுருந்தா எடுத்துருங்கோ'ன்னு அலறுறாங்க சில பேர்! பில்லி, சூனியம் தெரியும். அதென்னடா எத்திரியம்னு கேக்குறீங்களா. தம்பிமாருகிட்ட இதைக் கேட்டா கடிச்சி வெச்சிருவாங்க... ரொம்பக் கவனமா இருங்க.

‘அண்ணே... ஏழையா பொறக்குறது தப்பில்லை... ஏழையா சாகுறதுதான் தப்பு!'ன்னு தத்துவம் நம்பர் 118-ல ஆரம்பிச்சு, ‘பணத்தை நீங்க தேடிப்போகலைன்னா அது உங்களைத் தேடி வராது!' அப்படினெல்லாம் மொக்கையப் போட்டு, எம்.எல்.எம் கம்பெனிக்காரன் மாதிரி பிட்காய்ன்ல இன்வெஸ்ட் பண்ண பிட்டு போடுவான். அந்த அளவுக்கு கிரிப்டோகரன்சி பித்தேறித் திரிகிறார்கள். ‘மார்க்கெட் டல்லா இருந்தாலும் இன்வெஸ்ட் பண்ணுவோம். ஏன்னா டிசைன் அப்படி’ன்னு குரூரமா சிரிக்கிறாய்ங்க.

ரொம்பத் துயரங்கள் மக்களே!

ஒருத்தன்லாம், ‘டோஜி காய்ன், எத்திரியம் காய்ன், பிட்காய்ன்'னு சொல்லிட்டுதான் பல்லு வெளக்கவே போறான். இப்போ மத்திய அரசு வேற, டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வரப்போகுதாம். பாதிப்பேரு ‘எள்ளு வய பூக்கலையே’ மோடுலயே திரியிறானுக. மீதிப்பேரு, ‘அட, இப்பத்தான் எல்லா பிட்காய்ன்லயும் பணத்தைப் போடணும். அதான் தொழில் ரகசியம். பி.ஜே.பி காரங்களே கிரிப்டோகரன்சிலதான் முதலீடு பண்ணி வெச்சிருக்காங்க! தடைலாம் வராது. ஜி.எஸ்.டி போட்டு முறைப்படுத்துவாங்க!' எனத் தெம்பாய்க் கிடக்கிறார்கள்.

ஜி.எஸ்.டின்னதும் இன்னொண்ணு ஞாபகம் வருது. அண்ணா யுனிவர்சிட்டில இனிமே சர்ட்டிபிகேட் வாங்க 18% ஜி.எஸ்.டியாம். மாணவர்கள் பொருமுறாங்க. போறபோக்கைப் பார்த்தா இனி குளிக்க, கழிக்க, தூங்கன்னு எல்லாத்துக்கும் ஜி.எஸ்.டி போட்டு விளையாடுவாங்க போல!

கடைசியாய் பி.ஜே.பி கட்சித் தொண்டனாய் இருப்பதுதான் எல்லாவற்றிலும் ஆகப்பெரும் துயரம். நேற்றுவரை ‘ஒரு கமாகூட வேளாண் சட்டத்துல யாராலும் மாத்த முடியாது. விவசாயிங்க மேல மோடி வெச்ச பாசத்தால விளைஞ்சது'ன்னு முட்டுக்கொடுத்த ஆட்களே, ‘மோடி தீர்க்கதரிசி. விவசாயிகள் நலனுக்காக சட்டங்களை வாபஸ் வாங்கிட்டார்'னு முரட்டு முட்டு கொடுக்குறாங்க. தட் இவரே பாம் வைப்பாராம்... இவரே எடுப்பாராம் மொமண்ட்!

கடைசியாய், அங்கங்கே சாயுதாம், உருளுதாம். ஆன்லைன் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் போராட்டம் பண்ணுறாங்க. ஆன்லைன்ல 90 மார்க்கும் ஆஃப்லைன்ல 30 மார்க்கும் வாங்குற மாணவர்கள்தான் உக்கிரமா உண்ணாவிரதம் இருக்காய்ங்க. நல்லா வருவீங்கய்யா!