சினிமா
Published:Updated:

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

டாஸ்க் டார்ச்சர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாஸ்க் டார்ச்சர்ஸ்!

ஏன் ஏன் நான் என்ன பாவம் பண்ணினேன்? என்னை வெச்சு இப்படியொரு படம் ஏன் எடுத்தீங்க?’ன்னு ‘அண்ணாத்தே’ டைரக்டருக்கே போன் போடச் சொல்லி டாஸ்க் கொடுக்கலாம்.

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

டாஸ்க் கொடுக்குறதுதான் இப்ப ட்ரெண்டு... ரஜினியில ஆரம்பிச்சு சித் ஸ்ரீராம் வரைக்கும் விதம்விதமா எப்படில்லாம் கஷ்டமான டாஸ்க் கொடுக்கலாம்... அதைச் செய்யலைனா ஸ்குய்ட் கேம் போல் சுட்ருவேன்னு பொம்மையை வெச்சு மிரட்டலாம்னு யோசிச்சபோது...

ஓசியில் படம் பார்க்க ஓ.டி.டி பாஸ்வேர்டு யார் கிட்டயும் கேட்கக் கூடாதுன்னும், அப்படி ஒரிஜினல் அக்கவுன்ட்ல காசு கட்டிப் படம் பார்க்குற தாலேயே தன்னை அகிரா குரோசோவா ரேஞ்சுக்கு நினைச்சுக்கக் கூடாதுன்னும் சினிமா ஆர்வலர்களுக்கு டாஸ்க் கொடுக்கலாம். இந்த டாஸ்க்கை மீறினா ஒரு ரூம்ல அடைச்சு வெச்சு பேரரசு படங்கள் மட்டும் பார்க்க வெச்சு நாம டார்ச்சர் பண்ணலாம்.

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

ஆண்களுக்கு இப்படின்னா குடும்பத்தலைவிகளுக்கு சீரியல் பார்க்காம வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை பொதிகை டி.வி-ல பார்க்கச் சொல்லி டாஸ்க் கொடுக்கலாம். துணிக்கடையில கட்டைப்பை கேட்கக் கூடாதுன்னு தடா போடலாம். டீனேஜ் பெண்கள் யாரும் யாரையும் சோஷியல் மீடியால பிளாக் பண்ணக்கூடாது என பசங்க சார்பாக டாஸ்க் கொடுக்கலாம்.

‘நான் சின்ன வயசுல குழந்தையா இருந்தேன்’னு சொன்னதும் கண்ல ஜலம் வெச்சுக்கும் டி.வி ரியாலிட்டி ஷோ ஜட்ஜுகளுக்கு துலா பாரம், பாசமலர், நல்லதங்காள் போன்ற நெகிழ வைக்கும் படங்களைப் போட்டுக்காட்டி அழச் சொல்லலாம். தாரைதாரையாக் கொட்டும் கண்ணீரை ராம்நாடுபக்கம் திருப்பி விட்டால் முப்போகம் விளையாதா?

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

சினிமால விஜய்க்கு இன்னிய தேதியில் கஷ்டமான டாஸ்க் ஒன்று உண்டெனில் அவங்க அப்பாவோட பேச வைக்குறதுதான். அப்பாவைக் கட்டிப்பிடிச்சு ‘அலைபாயுதே’ மாதவன் டயலாக்கை வேற மாதிரி பேச வைக்க டாஸ்க் கொடுக்கணும்.

‘‘நீங்க தப்பு பண்ணீங்கன்னு நினைக்கல. நானும் உங்கள காயப்படுத்தல. ஆனா, இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமாருக்கு. என்னை மன்னிச்சிடுங்கப்பா! மாநாடு படத்துல உங்களை சுட்டதைப் பார்த்தப்போ எனக்கே பாவமா இருந்துச்சு. இனிமே நாம ஃப்ரெண்ட்ஸ்!’’ எனப் பேச வைக்கலாம்.

அஜித்துக்குத் தேரை இழுத்துத் தெருவுல விடுறமாதிரி ஒரு சினிமா புரொமோஷன் ஃபங்ஷன்ல பேசணும்ங்கி றதையே சிம்பிள் டாஸ்க்காகக் கொடுக்கலாம். அதைவிட சிம்பிள் டாஸ்க்னா V எழுத்துல ஸ்டார்ட் ஆகுற, ‘வீலிங் நாயகன் வீராச்சாமி’, ‘விக்கிர வாண்டியான்’, ‘விக்கல்’, ‘வினோதம்’, ‘விரோதம்’ போல ஒரு சுமார் டைட்டிலை தன் அடுத்த படத்துக்கு வெச்சுவிடச் சொல்லலாம். ‘அய்யா மிரட்டுறாங்கய்யா!’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் நம்மைப் போட்டுக்கொடுக்க வாய்ப்பும் இருக்கிறது. பீ கேர்ஃபுல்... நான் என்னைச் சொன்னேன்.

ரஜினிக்கு எல்லோரையும் எக்குத்தப்பாய்ப் பாராட்டும் வியாதி இருக்கு. மிஷ்கின் போல உல்லுல்லாயிக்காக தன்னோட படத்துக்கு ஓப்பனாக தானே விமர்சனம் பண்ணும் டாஸ்க் கொடுக்கலாம். அதை போன் போட்டு சம்பந்தப்பட்ட வர்களிடமே கழுவி ஊத்தச் சொல்லணும். ‘டெஃபனெட்லி இது செம மொக்கையான படம். ஏன் ஏன் நான் என்ன பாவம் பண்ணினேன்? என்னை வெச்சு இப்படியொரு படம் ஏன் எடுத்தீங்க?’ன்னு ‘அண்ணாத்தே’ டைரக்டருக்கே போன் போடச் சொல்லி டாஸ்க் கொடுக்கலாம்.

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

சிம்பிள் ஸ்டார் சிவகார்த்தி கேயனுக்கு இனி பொது மேடைகளில், ‘நான் உங்க படங்கள் பார்த்து வளர்ந்தேன். நீங்கதான் என் பெரிய இன்ஸ்பிரேஷன் சார்!’ எனப் பேசக்கூடாதுன்னு டாஸ்க் கொடுக்கலாம்.

சமந்தாவுக்கும் மாளவிகா மோகனனுக்கும் ஒரு மண்டலத்துக்கு தாறுமாறான காஸ்ட்யூமில் போட்டோஸ் எடுக்கக்கூடாதுன்னு டாஸ்க் கொடுக்கலாம்.

சித்த பிரம்மை பிடிச்சதைப் போலப் பாடும் சித் ஸ்ரீராமை, ஆலாபனை வரைக்கும் அவகாசம் கொடுக்காமல், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் பாடச் சொல்லி டாஸ்க் கொடுக்கலாம். தவறி, ‘ஏய்ய்ய்ய்ய்’ என இழுவையைப் போட்டால் சுடுமுத்தைத் தேய்ச்சு தொடையில் ஒரு இழுப்பு இழுக்கலாம்.

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

சீமானுக்கு ஒருநாள் முச்சூடும் மௌனவிரதம் இருக்கணும் என டாஸ்க் கொடுக்கலாம். ‘புஹுஹா புஹுஹா’ எனச் சிரிக்கவும் தடை போட்ரணும். அன்னிக்கு மட்டும் எக்கச்சக்க கன்டென்ட் அவரைச் சுற்றி நடக்க வெச்சு அவர் சைலன்ட் மோடில் திரிவதை தம்பிமார்களைப் பார்க்க வைக்கலாம். சிச்சு வேஷனே டெரரா இருக்கும்.

ராமதாஸையும் அன்பு மணியையும் பார்த்து, ‘டைம் மெஷினில் உங்களை 2026-க்கு அனுப்பினால் என்னெல்லாம் பண்ணு வீங்களோ அதை இப்போ பண்ணிக்கோங்க!’ன்னு டாஸ்க் கொடுக்கலாம்.

ஒற்றைத் தலைமைக்கு யாரைப் பரிந்துரைப்பீர்கள் என்ற ஒற்றைக் கேள்வியைக் கேட்டு சாய்ஸ் கொடுக்காமல் அ.தி.மு.க பாய்ஸைக் கலாய்க் கலாம். பாவம் பாய்ஸ் பம்மிடுவாங்க பம்மி!

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்குத் தன்னைப் பற்றி வரும் மீம்களைக் காட்டி மார்க் போடச் சொல்லலாம். கர்நாடகச் சிங்கத்துக்கு நாடிநரம்பெல்லாம் நாக்குப் பூச்சி போல எட்டிப்பார்க்கும் அல்லவா?!

டி.டி.வி.தினகரனை சிரிக்காமல் சீரியஸாக ஒரு இன்டர்வியூ கொடுக்க வைக்க டாஸ்க் கொடுக்கலாம். சசிகலாவிடம் எடப்பாடி பற்றி பாசிட்டிவாகச் சில வார்த்தைகள் பேசச் சொல்லி டாஸ்க் கொடுக்கலாம். தீபா- மாதவனுக்கு ஜெயலலிதா- எம்.ஜி.ஆர் கெட்-அப் போட்டு ஒரு வாரம் போயஸ் கார்டனில் வாக்கிங் போக டாஸ்க் கொடுக்கலாம். அதே கெட்-அப்போடு அ.தி.மு.க செயற்குழு கூட்டத்துக்கு சும்மா போகச் சொல்லி டாஸ்க் கொடுக்கலாம்! சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

உதயநிதிக்கு, தாத்தா கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தைப் படித்து ஒப்பிக்கும் டாஸ்க் கொடுக்கலாம்.

கமலுக்குக் கொஞ்ச நாள்கள் சிவாஜி மடியில் தான் விளையாடிய கதையைப் பேசக்கூடாதுன்னும் டாஸ்க் கொடுக்கலாம்.

சரத்குமார், கார்த்திக்கை தூக்கத்தில் எழுப்பி அவங்க ஆரம்பிச்ச கட்சிப்பேரை டக்குனு சொல்லச் சொல்ல லாம். சரத்குமார் டாஸ்க்கில் பாஸாக வாய்ப்புகள் உண்டு. கார்த்திக் கண்டிப்பாக, ‘அது அது... வந்து’ என வெத்தலையைப் போட்டுக் குதப்பும் எஃபெக்ட் கொடுக்க வாய்ப்பு அதிகம்.

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

இதோடு ஸ்பெஷல் டாஸ்க்காக காலையில் ரோஜாப்பூப் படம் போட்ட குட்மார்னிங் மெஸேஜை தினமும் அனுப்பும் பூமர் அங்கிள்ஸையும், ‘நிம்மதிங்கிறது செல்லோ டேப் நுனியைத் தேடுவதுபோல... அவ்வளவு சீக்கிரம் கிடைத்திடாது’, ‘முயன்றதை செய்... அல்லது முயற்சியாவது செய்!’ போன்ற அரிய தத்துவங்கள் 56,985 சோஷியல் மீடியாவில் உதிர்க்கும் பூமர் பாய்ஸையும் லாக்டௌன் இல்லாத ஒருநாள் மத்தியானத்தில் மெரினா பீச்சை 100 ரவுண்டு சுற்றிவர டாஸ்க் கொடுக்கலாம்!

டாஸ்க் டார்ச்சர்ஸ்!

- அப்படியே இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு நாலுபேருக்கு ஃபார்வர்டு செய்யும் டாஸ்க்கையும் கொடுக்குறேன்.