
இதனால்தான் இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.
கொரோனாவை எதிர்த்து அல்லும்பகலும் போரிட்டுக்கொண்டிருக்கிறது மருத்துவத்துறை. கொரோனாவை அழிக்கும் முறைகள் குறித்து ஓய்வில்லாமல் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இன்னொருபக்கம் பொருளாதாரம் குறித்த பயங்கள் வேறு பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனால், இவற்றில் எதுகுறித்தும் கவலைப்படாமல் ஒரு கூட்டம், அண்ணன் சீமானின் ‘டைட்டானிக்கைத் துளைத்த என் தோட்டா’ பயணக்கட்டுரைகள், எஸ்.வி.சேகரின் ‘சிப்பால கெட்டேன் நானு’ சுயசரிதை ஆகியவற்றையெல்லாம் மிஞ்சுமளவிற்குக் கதைகளை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு பயந்து வாட்ஸப் நிர்வாகம் புதிது புதிதாய் ரூல்ஸ் போட்டாலும் அத்தனையையும் தாண்டி இன்பாக்ஸ் பூட்டை ஆட்டிக்கொண்டிருக்கிறது அந்தக் கூட்டம். அடுத்தகட்டமாக அவர்களின் லிஸ்ட்டில் இருக்கும் சில முக்கிய பார்வேர்டுகள் இதோ இப்படித்தான் இருக்கும்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதல் கொரோனா கேஸ் அதிகாரபூர்வமாக டிசம்பர் எட்டாம் தேதி பதிவானது. இந்தியாவில் பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்த நாள் மார்ச் 24. இரண்டுக்குமிடையே வித்தியாசம் 108 நாள்கள். 108 என்ற எண்ணுக்கு நிறைய சிறப்புகள் உண்டு. நம் உடலிலுள்ள மொத்த அழுத்தப்புள்ளிகள் 108, நம் உடல் தாங்கும் அதிகபட்ச வெப்பம் 108 ஃபாரன்ஹீட். மத்தியப்பிரதேசத்தில் எதிர்க்கட்சி ஆட்சியைக் கவிழ்க்க உதவிய எம்.எல்.ஏ-க்கள் 108 - இப்படிப் பல முக்கியத்துவங்கள் இருப்பதால்தான் பிரதமர் மோடி அந்தத் தேதியைத் தேர்வு செய்தார். இதனால்தான் இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

நம் சூரியக்குடும்பத்தில் மொத்தம் எட்டுக் கோள்கள் உள்ளன. 205 துணைக்கோள்கள் உள்ளன. மொத்தம் 213..! அதாவது 21 நாள்கள் மூன்றாவது மாதத்தில் வீட்டிற்குள் இருக்க வேண்டும். இந்தக் கோள்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பார்ப்பதற்கு பாபா ராம்தேவின் பாம்பு நடனம் போலவே இருக்கும். அப்படி நேர்க்கோட்டில் நிற்கும்போது ஒன்றோடொன்று ‘நல்லா இருக்கியா மாப்பிள?’ எனப் பரஸ்பரம் குசலம் விசாரித்துக்கொள்ளும். அந்த 12 எழுத்துகளிலிருந்து எழும் காஸ்மிக் எனர்ஜி இந்த 21 நாள்களில் மிக அதிகமாக இருக்கும். அதனால் கொரோனா பரவாது!
கமல் ஒரு தீர்க்கதரிசி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ‘நீ இல்லையென்றால் வெயிலுமிருக்காது, துளி மழையும் இருக்காது’ என டெலிபோன் மணிபோல் பாடலில் அவர் சொல்லும்போது, பின்னால் ஆஸ்திரேலியக் காட்டுக்குள்ளிருந்து கங்காரு துள்ளி ஓடும். இதன்மூலம் ஆஸ்திரேலியப் பெருநெருப்பைக் கணித்துச் சொன்ன அவர், தசாவதாரம் படத்தில் ஒரு கிருமி, இந்தியர், அமெரிக்கர், ஜப்பானியர் என அனைவரையும் மத, ஜாதி பேதமில்லாமல் பாதிக்கும் என்பதையும் கணித்துச் சொன்னார். அவர் சொன்னால் வழக்கம்போல் ‘புரியல ஆண்டவா’ எனச் சொல்லித் தமிழ்ச்சமூகம் தப்பித்துவிடும் என்பதால்தான் மல்லிகா ஷெராவத்தை ஆடவைத்து, ‘க... கறுப்பனுக்கும் ஒயிட்...வெள்ளையனுக்கும் பே... பேதமில்லை’ எனப் பாடலால் உணர்த்தினார்.

நம் உடலிலிருந்து ஒவ்வொரு முறை கொட்டாவி, ஏப்பம் என வாயு வெளியேறும்போதும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடையே பாசிட்டிவ் ஆராவைப் பரவவிடுகிறது. அதனால்தான் நாம் கொட்டாவி விட்டால் அருகிலிருப்பவரும் கொட்டாவி விடுகிறார். ‘கோ கொரோனா... கொரோனா கோ’ என்ற மந்திரத்தை இப்படியாகக் கூட்டமாக நின்று வாய் ஒருபக்கம் வாங்கிக்கொள்ளும்வரை பாடினால் நாம் உமிழும் பாசிட்டிவ் ஆரா கொரோனாவின் நெகட்டிவ் எனர்ஜியோடு மோதி அதை நியூட்ரல் ஆக்கிவிடும். கிருமியும் கொசுவத்தி காயில் விளம்பரத்தில் வருவதுபோல காற்றிலேயே செத்துப்போய்விடும். இதனால்தான் வட இந்தியாவில் ஊரடங்கின்போதும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தெருவில் இதைப் பாடி கிருமியைக் கொல்கிறார்கள்.

கோவிட் 19 கிருமிக்கு உடல் முழுவதும் ஆன்டெனாக்கள் உள்ளன. இதன்மூலம்தான் அது தன் குடும்பத்துப் பெரியவர்களான சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட மற்ற கிருமிகளுக்குத் தகவல் கொடுக்கிறது. நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்தால் இந்த சிக்னல் தடைப்பட்டுவிடும். ஒருகட்டத்திற்கு மேல் இந்த மூத்தவர்களும் ‘காலாகாலாத்துல பயலுக்கு ஒரு கால்கட்டைப் போட்ருந்தா இப்படித் திரிஞ்சுருப்பானா?’ என்ற சலிப்போடு தேடுவதை விட்டுவிடுவார்கள். பரவ வழியில்லாமல் கோவிட் 19 போய்ச்சேர்ந்துவிடும்.
கொரோனா தோன்றிய வூகான் மாகாணம் இந்தியாவிற்கு வடகிழக்கில் உள்ளது. அது கேதுவின் திசை. நமக்கு ஆகாது. நாம் மொத்தமாக முன்னும்பின்னும் அசைவதால்தான் இந்தியா பேலன்ஸாகி ஒரே இடத்தில் இருக்கிறது. 21 நாள்கள் நாம் யாரும் முன்னே பின்னே அசையாமல் இருந்தால் மூவ்மென்ட்டே இல்லாத நம் நாடு அப்படியே இந்தியப் பெருங்கடலில் மிதந்து கீழே இறங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கண்டத்தட்டு நகர்ந்து வூகான் நமக்கு வடக்கே வந்துவிடும். வடக்கு புதனின் திசை. அதன்பின் எல்லாம் சுகமே!

நாடு முழுக்க இப்படி முடங்கும் நிலை வரும். மக்களிடம் பணம் இருந்தாலும் அதைச் செலவழிக்க முடியாது என்பதை முன்பே கணித்த பிரதமர் மோடி ‘பணம் இருந்தாத்தானே செலவு பண்ணுவீங்க?’ என்ற உயர்ந்த நோக்கில்தான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே பொருளாதாரத்தை மலையிலிருந்து கண்டமேனிக்குக் கீழே உருளும் பஞ்சரான டயர்போல வைத்திருக்கிறார். ஊரடங்கிற்கு முன்பு மக்கள் ஊரடங்கு என ட்ரையல் பார்த்ததைப் போலத்தான் இந்த பிராசஸுக்கு முன்னால் அவர் டீமானிட்டைசேஷன் என்ற ட்ரையல் பார்த்தார் என்றால் அது மிகையாகாது.

ஒருபக்கம் மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே ‘சூரிய வெளிச்சத்துல உம்முனு உட்கார்ந்திருந்தா கொரோனா வராது’ என்கிறார். மறுபுறம் பா.ஜ.க-வின் ஐ.டி விங் தலைவர் அமித் மாள்வியா கிண்டர்கார்டன் குழந்தைகளே கண்டு சிரிக்கும் ஃபேக் மெசேஜுகளையும் கூசாமல் பரப்புகிறார். இப்படி பா.ஜ.க தலைவர்கள் செய்வதற்குப் பின்னால் ஓர் உயர்ந்த நோக்கமுள்ளது. இந்தமாதிரி மானாவாரியாக ஃபேக் நியூஸ் பரப்பினால், ‘கழுத இப்படி நம்மள பத்தின கருமத்த எல்லாம் கேக்குறதுக்கு நாமளே தற்கொலை பண்ணிக்கலாம்’ என கொரோனாவே மூச்சைப் பிடித்து நம் ரத்தத்தில் மூழ்கி ஆத்மஹத்தி செய்துகொள்ளும். அதற்காக மட்டும்தானே தவிர மற்றபடி மக்களை ஏமாற்றவேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது.